Sunday, May 15, 2005

பானிபட் இதயங்கள்

[நானும் எனது நண்பன் ராஜாவும் வெளியிட்ட பானிபட் இதயங்கள் புத்தகங்களிலிருந்து இந்தக் கவிதை.
புத்தகத்தின் தலைப்பாகிப்போன இந்தக்கவிதையை மட்டும் இருவரும் இணைந்தே எழுதுவது என முடிவெடுத்து எழுதப்பட்டது ]


பெண்ணே!

நேற்று நடந்த பட்டமளிப்புவிழா - என்
நினைவினை விட்டகலவில்லை

இருவரும் சந்திப்போம்
என்று தெரிந்தே
இனம்புரியாத வேகத்தோடு வந்துவிட்டு
எங்கோ ஒரு மூலையில்
என்றோ ஒருநாள்
பழகியவர்கள் போல
போலியாய் நடிக்கிறோமே?

எத்தனை யுகங்கள் கடந்தாலும்
உன்
மௌனப்படலத்திற்கு
மரணமொன்று கிடையாதா?

இரண்டாண்டுகள் ஆகியும் - உன்னுள்
இம்மியளவும் மாற்றமில்லையேஎ

என்னைப்பார் எத்தனை மாற்றங்கள்?

அன்று
உல்லாச பட்சியாய் திரிந்தவன்
இன்று
உதிரிப்பூவாய் உதிர்கிறேன்

அன்று
இமயம் போல்இருந்தவன்
இன்று
ஈசல்போல் மடிகிறேன்

என் எண்ணக்குதிரையின்
கடிவாளத்தை நின்
காந்தக்கண்களால் அவிழ்த்துவிட்டவளே

எத்தனை எதிர்பார்ப்புகளோடு
உன்னை எதிர்கொண்டேன்?
எல்லோரிடமும்
ஏதேதோ விசாரித்தவளே!
எனக்கு மட்டும்
ஏனடி விழிகளால் புதிர்போடுகிறாய்?

"இன்னும் உயிருடன்தான்
இருக்கிறாயா ?"
என்று
என்னிடம் ஒருநிமிடம்
விசாரித்திருக்கலாமே?

நாம் நண்பர்களோடு
சிரித்து மகிழ்ந்த
அந்த ஆலமரத்தடி...

நம் நண்பர்களின்
நாலுவரி கவிதைகளான
கேண்டீன் கிறுக்கல்கள்...

சீனப்பெருஞ்சுவரை விட
சிறப்பு வாய்ந்த
கல்லூரி வராண்டா சுவரில் - உன்னை
சிம்ரன் என் அழைத்து
சிலிர்த்து கொண்ட நாட்கள்...

பேசாத...பழகாத...
நம் காதலுக்கு
பரிணாம வளர்ச்சி கொடுத்த
அந்த கல்லூரி நூலகம்...

நம் காதலை கலந்து
எதை உருவாக்குவது
என்று ஆராய்ந்த
அந்த கெமிஸ்ட்டிரி லேப்...

ஜாவை புரோகிராமை விட
சக்திவாய்ந்த உன்விழிகளின்
புரோகிராமால் வினா தொடுத்த
அந்தகம்ப்யூட்டர் லேப்...

பிரிவு உபச்சார நாளில்
உன்
தோழியின் தோளில் சாய்ந்தபடி
தேம்பி தேம்பி அழுதாயடி!

அன்று
எத்தனை முறை
என்

பூ இதயம்
பூகம்பத்தை சந்தித்திருக்கும்?

நாம்
சீண்டிப்பார்த்து
சிரித்துக்கொள்ளும் அந்த
சிடுமூஞ்சி க்ளார்க்கின்
கடைசிக் கவுண்டர்!

உன்னுடைய பிறந்தநாளுக்கு
உனக்கே நான்
சாக்லெட் கொடுத்த
அந்த சைக்கிள் ஸ்டாண்ட்...

நான் கஷ்டப்பட்டு
கடலை வறுத்துக்கொண்டிருந்த
நாளொன்றில்
உரிமை கலந்தவளாய் நீ
முறைத்து சென்ற
மூன்றாவது வராண்டா!

நாங்கள் தொங்கிக்கொண்டே வரும்
கல்லூரிப் பேருந்தின்
பின்படிக்கட்டு!

அறுபது பேருக்கு
இருபது டிக்கெட் போட்டுவிட்டு
விழிக்கும்
அந்த அப்பாவி கண்டக்டர்!

இப்படி
ஒவ்வொன்றாய்
ஏக்கத்தோடு பார்த்துவிட்டு
எதிர்பாராமல் விழுந்த
கண்ணீர்த் துளியைத்
துடைத்துவிட்டு
யாரும் பார்க்கவில்லை
என திருப்திப்பட்டவளே!

நான் பார்த்ததை மட்டும்
நீஅறிந்திருக்க முடியாதே?

தூரத்துச் சிறுவர்களுக்கு
கைகாட்டும்
இரயில் பயணிகளின் சிநேகத்தைப்போல...

நம் உறவும்
அர்த்தமில்லாத
அனர்த்தமாகிப்போனதடி!

உள்ளங்களில் நயாகரா வீழ்ந்தாலும்...
உதடுகள் சகாராவாகிப்போனதில்...
உனக்குள்ளும் எனக்குள்ளும்
இப்படி சின்ன சின்ன ஞாபகங்களில்
ஒரு
பானிபட் யுத்தம்
நடந்து கொண்டுதானிருக்கிறதடி!

- ரசிகவ் ஞானியார்


1 comment:

kulakaddan said...

ரசிகவ் நன்றாக எழுதுகிறீர்கள் தங்கள் ஆக்கம் அனைத்தையும் படிப்பேன் . தொடருங்கள்.....................

தேன் கூடு