Tuesday, March 21, 2006

ஒரு பேச்சுலரின் சமையல் கலாட்டா

"நம்ம சேக்பாய் அபுதாபிக்கு போய்ட்டாருடா அதனால முடிஞ்சா நீ இன்னிக்கு கறி வைக்கிறியாடா" என்று நண்பன் தொலைபேசியில் கேட்டபொழுதே இணையத்தில் சமையல் குறிப்பை தேட ஆரம்பித்தேன்.

இறுதியில் வெப்உலகம் என்ற வெப்சைட்டில் சமையல்குறிப்புகளை தேடிப்பிடித்து எனக்குப் பிடித்த மட்டன் குருமா செய்முறைகள் கண்ணில் படவே உடனே செய்முறைகளை பிரிண்ட் அவுட் எடுத்தேன்.


இரவு அறைக்குத் திரும்பியவுடன் கலீலிடம் சொன்னேன்.

"டேய் இன்னிக்கு மட்டன் குருமாவை செய்யாம விடக்கூடாதுடா..நெட்டுல இருந்து பிரிண்ட் அவுட் எடுத்துட்டு வந்திருக்கேன். "

"அப்படியா..எங்க நம்ம பாளையங்கோட்டையில ஒரு ஹோட்டல்ல சாப்பிட்டோமே அது மாதிரிதானே.. "

"ம் அதுமாதிரி இருக்கணும்னு முயற்சி பண்ணுவோம்..நம்ம வைக்கறதுதான்டா குருமா..சும்மா வைப்போம் என்னதான் நடக்குதுன்னு பார்ப்போமே.. "

"சரிடா.. ரெடி ஆரம்பிப்போம்.. "

அந்தச் சமையல் குறிப்பில் 100 கிராம் மட்டனை வைத்து மட்டன் குருமா செய்முறைகளை விளக்கியிருந்தார்கள். நாங்கள் 1 கிலோ மட்டன் வாங்கி வைத்திருக்கிறோம்.

"டேய் என்னடா 100 கிராமுக்கு 5 மிளகாய் போட்டிருக்கானுங்க..அப்படின்னா 1 கிலோவுக்கு 50 மிளகாய்தானேடா போடணும்.. "- நான் புத்திசாலித்தனமாய் கேட்க

"50 மிளகாயா..? என்னடா நாளைக்கு எல்லாரும் வேலைக்கு போக வேண்டாமா.. "
- கலீல் பதறிப்போய் சொன்னான்

"பின்ன என்னடா என்னோட கணக்குச் சரிதானே..100க்கு 5 மிளகாய்னா..1 கிலோவுக்கு 50 தானடா வரும்..டேய் நான் மேத்ஸ் குருப்புடா.. சரி சரி ஒரு 6 மிளகாய் போடுவோம்டா.. "- இறுதியில் ஒரு முடிவுக்கு வந்து 6 மிளகாய் என்னு தீர்மானித்தேன்

"சரி சரி போடுவோம்..அந்த சமையல் குறிப்பை ஏண்டா கையிலயே வச்சிருக்க..ஓரத்துல வையுடா..மறந்து போனா பார்க்கலாம்.. "- கலீல் திட்டினான்

"இல்லைடா..கவனமா இருக்கணும்ல..எதையுமே மறக்க கூடாது.. "என்று சொல்லிவிட்டு அந்த சமையல் குறிப்பை அடுப்புக்கு மேலேயே வைத்தேன்..அட மடையா நெருப்பை கொஞ்சம் கூட்டும்போது எரிஞ்சிறக்கூடாதுல்ல என்று மனசாட்சி வந்து மண்டையில் தட்ட உடனே அதனை எடுத்து பக்கத்தில் உள்ள ஒரு பாத்திரத்தின் மீது வைத்தேன்.

வேலையை ஆரம்பித்தோம். தில்சத்தும் கலீலும் வெங்காயத்தை வெட்டினார்கள். நானும் மட்டனை எடுத்து கழுவிக்கொண்டே

"முதல்ல என்னடா போட்டிருக்கு பாருடா..? "- கலீலிடம் கேட்டேன்

"மட்டனை நன்கு சுத்தம் செய்யவும் ன்னு போட்டிருக்குடா
முதல்ல மட்டனை கழுவுடா.. "
- கலீல்

"அதெல்லாம் கழுவி வச்சாச்சுடா.. அடுத்து என்ன ?"

சுத்தம் செய்த மட்டனுடன் உப்பு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து பிரஷர் குக்கரில் வேக வைக்கவும்

"டேய்! என்னடா உப்பும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் போட்டு ப்ரஷர் குக்ரல் வைக்கச் சொல்லியிருக்குடா.." - கலீல் படித்துச் சொன்னான்

"சிட்டிகைனா என்ன ஒரு ஸ்பூன்தானே..?" - திடீரென்று தில்சாத் குழப்பி விட்டான்

"நானும் ஆமா சிட்டிகைனா ஒரு ஸ்பூன்தான் நானும் எவ்வளவு சமையல்குறிப்பு டிவியில பார்த்திருக்கேன் "என்று வீரமாய் சொல்லிவிட்டு ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் எடுத்து மட்டனோடு கலப்பதற்கு முயல

கலீல் உடனே தடுத்துவிட்டான். "டேய் டேய் நில்லுடா..சிட்டிகைன்னா ஸ்பூன் இல்லைடா ஸ்பூன்ல ஒரு சிறிய அளவு.. நான் சில நாட்டுமருந்து கடைகளிலே பார்த்திருக்கேன்.. "

"கொஞ்சம் இரு தமிழ் - தமிழ் டிஷ்னரில சிட்டிகைன்னா என்ன போட்டிருக்குன்னு பாரு.. "

"டேய் அந்த டிஷ்னரி இல்லைடா... "- கலீல் தேடிப்பார்த்துவிட்டு சொன்னான்

"சரி ஆக்ஸ்போர்டை எடுத்துப்பாரு ஸ்பூனுக்கு என்ன எழுதியிருக்குன்னு பாரு"
- நான் கிண்டலடிக்க

"டேய் எனக்குத் தெரியுண்டா சிட்டிகைன்னா ஒரு சின்ன அளவுதாண்டா.. "
- கலீல் உறுதியாய் சொல்ல

ஒரு ஸ்பூனில் சிறிதளவு மஞ்சள் தூள் எடுத்து மட்டனோடு கலந்தேன். பின்னர் கொஞ்சம் உப்பும் கலந்து நன்றாக கையால் கலந்து வைத்தேன்.

பின் அவற்றை குக்கரில் வைத்து அடுப்பில் ஏற்றினேன்.

"டேய் எத்தனை விசில்டா.. "

அவனும் யோசித்து "ஒரு 6 விசில் வைப்போம்டா.. "

"ம்..சரி எனக்கு மறந்திடும்டா..நீதான் கணக்கு வச்சிக்கணும்" என்று சொல்லிவிட்டு அடுத்த வேலையை ஆரம்பித்தோம்

"டேய் கலீல் எப்படி அரைக்கணும்னு பாருடா... "

பாதி வெங்காயத்தை இஞ்சி பூண்டு புதினா முதலியவைகளை நன்கு மையாக அரைக்கவும்

அதிலுள்ளதை அப்படியே வாசித்துக் காட்டினான்.

"டேய் கொஞ்சம் வெங்காயத்தை எடு..மிக்ஸியில் போடுடா.. வெங்காயம் முடிஞ்சுது "

"அடுத்து இஞ்சி - பூண்டைப் போடுடா.. "

பின்னர் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அரைக்க ஆரம்பித்தோம். அரைபட மறுத்து அடம்பிடித்தது மிக்ஸி. கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மறுபடியும் அரைக்க ஆரம்பித்தோம்.

"டேய் மையாக அரைக்கணும்னுனா..என்னடா.. கொஞ்சம் மையை ஊத்தணுமா?"
- நான் கிண்டலடிக்க

"4 வது பாய்ணட்ல வச்சி வேகமா அரைக்கணும்னு அர்த்தம்.. – "
- கலீல் புத்திசாலித்தனமாய் கூறினான்

நான் வேகத்தை அதிகரிக்க இஞ்சி பூண்டின் சில துளிகள் கண்ணில் தெறிக்க ஆரம்பித்தது. பின் வேகத்தைக் குறைத்தேன்


"டேய் டேய் பாருடா இதுபோதுமா..மையாக அரைச்சாச்சு.. "

"ம் போதும்டா..அடுத்து அடுப்புல பாத்திரத்தை வைடா..தாளிக்கணும் "

எண்ணெயில் மீதி பாதி நறுக்கிய வெங்காயம் தக்காளியை பொன்னிறமாக வதக்கவும்


"ஆமாடா அப்படித்தான் எழுதியிருக்கு.. "

பாத்திரத்தை அடுப்பில் வைத்த உடனையே எண்ணையை ஊற்றினேன்.

"டேய் டேய் கொஞ்சம் வெயிட் பண்ணுடா..பாத்திரம் காயந்தவுடன்தான் எண்ணையை ஊத்தனும்.. "- பதறிப்போய் கூற

"சரிடா என்ன செய்ய ஊத்தியாச்சுல்ல..விடுடா.. "என்று சொல்லி விட்டு எண்ணையில் கடுகைப் போட்டேன்

கரண்டியால் கிண்டிக்கொண்டிருக்க கடுகு கரிந்து போன வாசம் வர ஆரம்பித்தது.

"டேய் என்னடா கடுகு கரியுற மாதிரி தெரியுது.."நான் சந்தேகமாய் கேட்க

"தீயை குறைடா..தீயை குறைடா..வெங்காயத்தை போடுடா.. "என்று அவன் அவசர அவசரமாய் தீயை குறைத்தான்

வெங்காயம் மற்றும் தக்காளியைப்போட்டு வதக்க ஆரம்பித்தேன்.
"டேய் பொன்னிறமா வதங்குற வர விடக்கூடாது.. "

"பொன்னிறம் சொல்லிட்ட கரி நிறம் ஆக்கிறாதடா.. "கலீல் கிண்டலடித்தான்

ஷ்ஷ்ஷ்ஷ்...

மட்டன் வேக வைத்த குக்கரில் இருந்து முதல் விசில் வர ஆரம்பித்தது.

"டேய் கணக்கு வச்சிக்கோடா.. "- கலீலிடம் சொன்னேன்

கரண்டியால் பாத்திரத்தை கிளறிக்கொண்டிருக்க.."பொன்னிறம் வரவே மாட்டேங்குதுங்க..என்ன செய்ய..? "கிளறிக் கொண்டேயிருந்தேன்..

இப்பொழுது மறுபடியும் குக்கரில் இருந்து அந்த சப்தம் ஷ்ஷ்ஷ்ஷ்... திடீரென்று குக்கரில் இருந்து அதிகமான தண்ணீர் பொங்கி வெளியே வர..சத்தம் பலமாய் கேட்டது

குக்கரிலிருந்து தண்ணீர் வெளியே வந்த வண்ணமும் சத்தம் அதிகரித்த வண்ணமும் இருக்க எனக்கு பயம் வந்து விட்டது. ஒருமுறை குக்கர் வெடித்ததை நேரில் கண்டிருக்கின்றேன்..ஆகவே பயத்தில் கலீலையும் தில்சாத்தையும் பார்த்து

"டேய் ஓடுங்க..ஓடுங்கடா.குக்கர் வெடிக்கப்போகுது.. "- என்று பதறியபடி கூறிவிட்டு நானும் கதவை நோக்கி ஓட

"டேய் பயப்படாதே டா..தண்ணீர் அதிகமாகிடுச்சு..அவ்வளவுதான் "என்று சொல்லியபடி குக்கரை அடுப்பில் இருந்து இறக்கி வைத்தான்.

பதறியபடி சென்ற நான் மறுபடியும் திரும்பிவர தில்சத்தும் கலீலும் சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். "டேய் ஏண்டா இப்படி பயப்படுற.. "

"இல்லைடா ஒரு தடவை சென்னையில வச்சு குக்கர் வெடிச்சிருக்கு எனக்கு..அதான் பயம்.. "என்று சொல்லியபடி குக்கரின் விசிலை எடுக்க முயன்றேன்.

டேய் அவசரப்படாதே முதல்ல ஆவி வெளியில போகட்டும் ..இல்லைனா கை வெந்துடும்டா.. - கலீல் அறிவுறுத்தினாhன்

உடனே ஒரு கத்தியை எடுத்து பயந்த படியே அதன் முனையால் விசிலை மெதுவாக தூக்கி ஆவியை வெளியே போக வைத்தேன்.

"ஹாஹாஹா..ஹா..ஹா "

அதனைப்பார்த்து தில்சத் சிரித்துக்கொண்டே சொன்னான்..

"வெடியை தரையில வச்சிட்டு பத்தவைக்கவா வேண்டாமான்னு பதறுவாங்களே அத மாதிரி இருக்கு நீங்க பண்றது..என்ன வெடியா போடுறீங்க.."என்று கிண்டலடித்தான்


நாங்களும் சிரித்துக்கொண்டே விசிலை மெதுவாய் வெளியே எடுத்து மட்டனை சுவைபார்க்க மெதுவாய் மிக மெதுவாய் வெந்திருந்தது மட்டனும் கைகளும் .

இதற்கிடையில் கிளறிக்கொண்டிருந்த வெங்காயம் பொன்னிறத்தையும் தாண்டி ஏதோ ஒரு நிறத்திற்கு மாறிக்கொண்டிருக்க

உடனே கலீலிடம்
"டேய் வெங்காயத்தை கிண்டுடா! அடியில் பிடிச்சிற போகுது" என்று சொல்லிவிட்டு மட்டனை எடுத்து அப்படியே அந்த கிளறிக்கொண்டிருந்த வெங்காயத்தோடு கலந்து அந்த குக்கர் தண்ணீரை ஊற்றினேன்.

பின்னர் கிளறிக்கொண்டிருக்கும்போதுதான் ஞாபகம் வந்தது.

"டேய் மிளகாய் போடாம எப்படிடா காரம் வரும்.?" என்று புத்திசாலித்தனமாய் கேட்க ,

இப்பொழுது என்ன செய்ய என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே கலீல் சொன்னான்.

"டேய் மிளகாய் ஏலக்காய் பட்டை எல்லாம் போட்டு தனியாக தாளித்து ஊற்றுவோம் "என்று முடிவெடுத்து அவ்வாறு செய்தோம்.

"டேய் எப்படி வரப்போகுதோ தெரியல?" சந்தேகமாய் கேட்டபடி கேசரி பவுடரை ஒரு நீர்க்கரைசலில் கரைத்து ஊற்றினேன்

"டேய் கலர் அதிகமாக போடாதடா..அப்புறம் கேசரி மாதிரி ஆகிவிடும் "என்று சொல்லியபடி அடுத்த குறிப்பை படிக்க ஆரம்பித்தான்


வதக்கிய தக்காளி வெங்காயத்துடன் மையாக அரைத்த மசாலாவுடன் கொஞ்சம் தண்ணீர் விட்டு வெந்த மட்டனையும் சேர்த்து 15 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்


"டேய் என்னடா அரைத்த மசாலாவுடன் அப்படின்னு எழுதியிருக்கு. நம்மகிடை மசாலா இருக்கு..நாம எங்கேடா மசாலா அரைச்சோம்.?".என்று சொல்லியபடி பாட்டிலை எடுத்து மசாலாவை மட்டனோடு கலக்க முயல


"டேய் டேய் குருமாவுக்கு மசாலா போட மாட்டாங்கடா.. "

"அப்படின்னா இதுல மசாலான்னு எழுதியிருக்கேடா.... "

"அது மசாலா இல்லைடா..நாம மிக்ஸியில் இஞ்சி பூண்டு அரைச்சி வச்சிருக்கோம்ல அந்த கலவையைத்தான் மசாலான்னு போட்டிருக்கான்டா.."என்று விளக்கினாhன்

அப்பொழுதுதான் ஞாபகம் வந்தது. உடனே அரைத்த வைத்த இஞ்சி பூண்டை மட்டனோடு கலந்து மூடி வைத்தேன்.

"டேய் 15 நிமிசம் அப்படியே இருக்கட்டும்டா" என்று சொல்லிவிட்டு அந்த சமையல் குறிப்பை கையில் எடுத்துக்கொண்டு பெட்டில் வந்து அமர்ந்தேன்

டேய் இண்டர்நெட்டுல வந்த இந்த சமையல் குறிப்புல ஒரு தப்பு பண்ணிட்டான்டா..
- என்று கலீலிடம் சொல்ல

"என்னடா.." - அவன் சீரியஸாய் கேட்க

"குக்கர்ல இருந்து சவுண்ட் கொஞ்சம் வித்தியாசமாவந்தா கதவைத்திற்ந்திட்டு ஓடிடுங்கன்னு இதுல சொல்லலையேடா "
- என்று கிண்டலடிக்க

தில்சத்தும் கலீலும் சிரிக்க ஆரம்பித்துவிட்டனர்.

பின்னர் 10 நிமிடம் கழித்து கொதித்துக் கொண்டிருக்கும் மட்டனை கரண்டியால் ஒரு கிளறு கிளறிவிட்டு அந்த சமையல் குறிப்பிலிருந்த

தேங்காயை நன்றாக அரைத்துக் கொள்ளவும் என்ற அடுத்த செய்முறையை வாசித்தேன்.

"டேய் தேங்காய் பொடி போடவா..இல்லை..அரைத்த பவுடரை போடவா ?" என்று கேட்டுவிட்டு தேங்காய்ப்பொடியை மிக்ஸியில் போட்டு அரைக்க ஆரம்பித்தேன்.

பின்னர் மட்டனில் கொதி வந்துகொண்டிருக்க

"டேய் இப்பவே ஊற்றவா.. "

"ஆமாடா..இப்பவே ஊற்றி இன்னும் 10 நிமிசம் கொதிக்க வையுடா..அப்படித்தான் எழுதியிருக்கு பாரு "- கலீல் அந்த செய்முறையை நீட்ட


மட்டன் நன்கு வெந்து கொதித்தவுடன் அரைத்த தேங்காயை சோர்த்து இன்னும் 10 நிமிடம் கொதிக்க விடவும்


உடனே தேங்காயை ஊற்றி பாத்திரத்தை மூடிவைத்தோம். கலீலிடமிருந்த சமையல் குறிப்புகளை பிடுங்கி கசக்கி குப்பைத்தொட்டியில் எறிந்துவிட்டு சொன்னேன்

"இப்ப இது அவசியமில்லை.. இதயத்தில பதிஞ்சிருச்சுடா.. "

என்று கிண்டலடித்தேன்.

பின்னர் 10 நிமிடம் கழித்து பாத்திரத்தை திறந்து லேசாக சுவைபார்க்க

"டேய் டேஸ்ட் சூப்பரா இருக்குடா..இங்க பாரு" - அவனுடைய கைகளிலும் லேசாக ஊற்றினேன்.

"அட..பரவாயில்லைடா..சக்ஸஸ்..நல்லா வந்திருக்கு "- என்று மகிழ்ச்சியில் கூறினாhன்

பின்னர் அவற்றை எடுத்து இறக்கி வைத்து நண்பர்களுடன் சாப்பிட்டேன். சிராஜ் மட்டும் நம்பிக்கையில்லாமல் கேட்டுக்கொண்டே இருந்தான்

"டேய் சூப்பரா இருக்குடா..யார்டா சமைச்சது..? "

"நாங்கதாண்டா சமைச்சோம்..இன்னிக்கு நெட்டுல இருந்து பிரிண்ட் எடுத்து வந்தேண்டா.." என்று பெருமையாய் கூறினேன்.

நண்பர்கள் ரசித்து ரசித்து சாப்பிடுவதை கண்டும் அவங்க டேய் சூப்பரா இருக்கடா என்று பாராட்டுவதைக் கண்டும் மனதுக்குள் ஓர் இனம்புரியாத ஆத்ம திருப்தி..மனம் ரொம்ப குஷியாக இருந்தது..

உண்மையில் நாம சமைச்சதை சாப்பிடுபவர்கள் பாராட்டும்போது மனம் குளிரத்தான் செய்கின்றது

நினைத்துப்பார்த்தேன்..வீட்டுல அம்மா சமைத்ததற்கு நான் என்னிக்காவது பாராட்டியிருக்கேனா..

"என்னம்மா ரசம் வச்சிருக்கே.."

"ச்சே...கறி ரொம்ப காரமா இருக்கு "

"போம்மா..பருப்பு கசக்குதும்மா.. "

என்று குறைச் சொல்லிக்கொண்டே இருப்பேன்..


உன் சமையலை
குறை கூறியே சாப்பிட்ட நான்
இங்கே
குறைகளை மட்டும்தானம்மா சாப்பிடுகின்றேன்.


என்று கூட அம்மாவுக்கு ஒரு கடிதம் என்ற கவிதையில் எழுதியிருக்கின்றேன்.


என் விழிகளுக்குள் லேசாக கண்ணீர் திரள ஆரம்பித்து விட்டது. நண்பர்களின் இந்த பாராட்டைப்போல நானும் எனது அம்மா சமையலை பாராட்டியிருந்தால் எந்த அளவுக்கு மனம் குளிர்ந்து போயிருப்பார்கள்.

இப்பொழுது மனம் வருந்துகின்றேன். ஒரு பொருளின் மதிப்பு அது இல்லாமல் இருக்கும்பொதுதான் தெரியவருகிறது. அம்மாவின் சமையல் மதிப்பு அது கிடைக்காமல் இருக்கின்ற இந்த பாலை வாழ்க்கையில்தான் தெரிகின்றது


அம்மாவின் சமையலை குறை சொல்லியே சாப்பிட்டு பழகிய நான் தற்பொழுது விடுமுறைக்கு சென்றபொழுது கூட எனது அம்மாவின் சமையலை ஒரு குறை கூட சாப்பிடாமல் சாப்பிட்டதைக் கண்டு

"என்னடா இவன் எப்போதும் ஏதாவது குறை சொல்லுவான் இப்ப ஒண்ணுமே சொல்லமாட்டேன்கிறான் "என்று என் அம்மா ஆச்சர்யப்பட்டு

"என்னடா உடம்பு சரியில்லையா..சாப்பாடு நல்லாயில்லையா "என்று பரிவோடு கேட்டார்கள்

"அதெல்லாம் ஒண்ணுமில்லையா..சாப்பாடு ரொம்ப நல்லாயிருக்கு.. அதனாலதான் ரசிச்சி சாப்பிடுகிறேன்" என்று கூறியபொழுதுதான் நிம்மதி அடைந்தார்கள்.

நண்பர்களே! நீங்கள் அம்மாவின் சமையலோ அல்லது மனைவியின் சமையலோ நன்றாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை . ஒப்புக்காகவாவது பிடித்திருக்கிறது என்று ஒரு வார்த்தைச் சொல்லுங்கள். நமக்காக கஷ்டப்பட்டு சமைத்த அவர்களின் மனது குளிர்ந்து போகட்டுமே..

இல்லையென்றால் வீட்டுக்குள்ளையே அடைந்து கிடந்து சமையலையே பொழுதுபோக்காக்கி கஷ்டப்பட்டு சமைத்து தந்தது வீணாகிப்போய்விட்டதோ என்று அவர்கள் மனம் வருந்தி விடுவார்கள். ஆகவே சாப்பிடும்பொழுது மைக்ரோ அளவு முகசுளிப்புக்கு கூட இடம் கொடுத்துவிடாதீர்கள்.

பாராட்ட முடியாவிட்டாலும் குறைசொல்லிப் பழகாதீர்கள்.அர்த்தம்

"சாப்பிடுடா சாப்பிடமாட்டேன்''
ஒரே ஒரு வாய் சாப்பிடுடா
தொந்தரவு பண்ணாத போம்மா'

- உதறிவிட்டு ஓடினேன்

சென்னை வீதியில்
வேலை தேடி
வெற்று வயிற்றோடு
சுற்றித்திரியும்பொழுதுதான்

அம்மா நீ
கொஞ்சியதன் அர்த்தம்
கொஞ்சம் புரிகிறது

http://nilavunanban.blogspot.com/2005/04/blog-post_111487369917103329.html
- ரசிகவ் ஞானியார்

12 comments:

Naveen Prakash said...

சரியாகச்சொன்னீர்கள் ஞானி !
கண்ணீர்மல்க ஹாஸ்டல் சாப்பாட்டை சாப்பிடும் பொழுது அடைந்த ஞானத்தை நீங்களும் அழகாக உருவேற்றியிருக்கிறீர்கள் !

நிலவு நண்பன் said...

//சரியாகச்சொன்னீர்கள் ஞானி !
கண்ணீர்மல்க ஹாஸ்டல் சாப்பாட்டை சாப்பிடும் பொழுது அடைந்த ஞானத்தை நீங்களும் அழகாக உருவேற்றியிருக்கிறீர்கள் ! //
ம் நன்றி நவீன்

ஹாஸ்டல் சாப்பாடுன்னா எல்லா இடத்திலையும் அப்படித்தான்பா..

anniyan said...

//சென்னை வீதியில்
வேலை தேடி
வெற்று வயிற்றோடு
சுற்றித்திரியும்பொழுதுதான்

அம்மா நீ
கொஞ்சியதன் அர்த்தம்
கொஞ்சம் புரிகிறது//

very touching article rasikav...

ammavukku respect kodukathevangalai adikkanum..

கைப்புள்ள said...

//ஒரு பொருளின் மதிப்பு அது இல்லாமல் இருக்கும்பொதுதான் தெரியவருகிறது.//

100% உண்மை. அனுபவத்தில் தெரிந்து கொண்டது. இப்பதிவில் எனக்கு கிடைத்தது
1. மட்டன் குருமா சமையல் குறிப்பு
2. சிரிக்க கொஞ்சம் நக்கல்ஸ்
3. கடைசியா நச்னு ஒரு மெஸேஜ்.

இதப் போலவே நம்ம கதையையும் இங்க பாருங்க.
புல்லைத் தின்னும் காலம்

Anonymous said...

Nanum ithupol samaithirukarean gnani.So atilirunthu amma sapata kurai sonnathea illai.

Jegan

நிலவு நண்பன் said...

// கைப்புள்ள: 100% உண்மை. அனுபவத்தில் தெரிந்து கொண்டது. இப்பதிவில் எனக்கு கிடைத்தது
1. மட்டன் குருமா சமையல் குறிப்பு
2. சிரிக்க கொஞ்சம் நக்கல்ஸ்
3. கடைசியா நச்னு ஒரு மெஸேஜ்.//


அத மாதிரி செய்து பாருங்க உங்க வீட்டுல..
( மருத்துவ செலவுக்கு நான் பொறுப்பு கிடையாது)

நிலவு நண்பன் said...

//Nanum ithupol samaithirukarean gnani.So atilirunthu amma sapata kurai sonnathea illai.

Jegan //
ம் நல்லபிள்ளைதான்..

கைப்புள்ள said...

அடுத்த வாரம் துபாய் பெரிய பஸ் ஸ்டாண்ட் பக்கம் விவேகானந்தர் குறுக்கு தெரு கிட்ட ஒரு சின்ன வேலை இருக்கு...நீங்க மட்டன் குருமா செஞ்சு கொண்டாருவீங்களாம்...நான் சாப்ட்டு பாத்துட்டு உங்க நண்பர்களைப் போல பாராட்டுவேனாம்...சரியா?

அன்புத் தோழி தயா said...

ரகசிவ் வணக்கம்!!! நீங்க சமையல் செய்யும் நிமிடங்கள் ஐ ரொம்ப ரசித்தே இருக்கேங்க என்று புரியுது.நானும் என்னென்ன தவறுகள் புரிந்திருக்கேன் என்று என்னக்கு புரிய வைத்தமைக்கு நன்றி நண்பனே!
இணையத்தோழி
-தயா

நிலவு நண்பன் said...

//அன்புத் தோழி தயா said...
ரகசிவ் வணக்கம்!!! நீங்க சமையல் செய்யும் நிமிடங்கள் ஐ ரொம்ப ரசித்தே இருக்கேங்க என்று புரியுது.நானும் என்னென்ன தவறுகள் புரிந்திருக்கேன் என்று என்னக்கு புரிய வைத்தமைக்கு நன்றி நண்பனே!
இணையத்தோழி
-தயா //

நன்றி தயா..

என்னுடைய சமையல் குறிப்பை பார்த்து செய்திட்டு ஏதாவது ஒண்ணு ஆச்சுதுன்னா நான் பொறுப்பில்லை அம்மணி.. :)

அன்புத் தோழி தயா said...

ஐயோ நான் அந்த வீம்புக்கே போகவில்லை. பாதித்தது சமையல் குறிப்பு இல்லை கடைசியில் நீங்கள் சொன்ன வார்த்தைகள்.

""நண்பர்களே! நீங்கள் அம்மாவின் சமையலோ அல்லது மனைவியின் சமையலோ நன்றாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை . ஒப்புக்காகவாவது பிடித்திருக்கிறது என்று ஒரு வார்த்தைச் சொல்லுங்கள். நமக்காக கஷ்டப்பட்டு சமைத்த அவர்களின் மனது குளிர்ந்து போகட்டுமே..""

இந்த தவறை நானும் செய்து இருக்கேன். இப்போ புரியுது

நிலவு நண்பன் said...

// tya said...

இந்த தவறை நானும் செய்து இருக்கேன். இப்போ புரியுது /

நன்றி

ஒரு பொருள் இல்லாமைதான் அதன் இருப்பை உணர்த்தும்..

புரிஞ்சிகிட்டா சரிதான்

தேன் கூடு