Sunday, September 11, 2005
நீ செத்தே பிறந்திருக்கலாமடா..
அவன் செத்துப்போயிட்டான்பா உனக்குத் தெரியாதா..? ஒரு ஆக்ஸிடெண்ட்ல உடம்பு நசுங்கி செத்துப்போயிட்டான்பா
- அவர் சொல்லியபோது நொறுங்கிப்போய்விட்டேன் எனக்குள்.
-
எனது நண்பனின் தந்தை அவருக்கு வயது 55 இருக்கும். இங்கே துபாயில்தான் சம்பாதித்துக்கொண்டு இருக்கிறார்.. ஊரில் இருக்கும் அவர் மகன் பற்றி தற்செயலாய் விசாரிக்கும் போது இப்படி கூறினார்.
என்னடா இவர் இப்படி சொல்றார்.. உடன் வந்திருந்த நண்பர்களைப்பார்த்தேன்.அவர்களும் புரியாமல் பார்த்தனர்.
ஒரு தந்தை உயிரோடு இருக்கும் தன் மகனைப்பற்றி இவ்வளவு காட்டமாக சொல்கிறாரென்றால் அந்த தந்தைக்கு அவன் எந்த அளவிற்கு பாதிப்பை கொடுத்திருக்கக்கூடும்?
என்ன ஆச்சு? ஏன் இப்படி சொல்றீங்க.. - நான் புரியாமல் கேட்டேன்
பின்ன என்னப்பா..? இங்க நான் நாயா உழைச்சி கண்டவனிடம் எல்லாம் திட்டு வாங்கி சம்பாதிச்ச பணத்துல ஒரு சுமோ வாங்கி கொடுத்து அத வச்சி சம்பாதிக்கச் சொன்னால்.....
அந்த சுமோ எடுத்து உல்லாசமா ஊர்சுத்துறது..கண்டவன் கைளில் கொடுத்து அத பாதிக்கு பாதி விலைல வித்துட்டு..தண்ணி - கெட்ட சகவாசம்னு மோசமா போயிட்டான்பா ..? இப்;ப பெங்களுர்ல எங்கேயோ சம்பாதிக்கிறான்..
இதுவரைக்கும் எந்த தகவலும் வரல..பெங்களுர்ல இருக்கிற அவங்க அக்கா வீட்டுக்கு கூட போகல இதுவரைக்கும்...
அந்த நாய் உருப்படவே மாட்டான்பா..நாசமா போகப்போறான் பாரு..எனக்கு அவன் எப்பவோ செத்துபோயிட்டான்..நான் வாங்கி கொடுத்த சுமோவுல அடிபட்டே செத்துட்டான்.
- வயிறு எரிந்து சொல்கிறார்
ஒரு பைத்தியம் மாதிரி அவர் புலம்புவதை பார்த்தால் பரிதாபமாக இருந்தது.
இந்த சின்னப்பையன்களுக்கு முன்னால் அழுதுவிடுவதா என்ற நாகரீகம் கருதி கண்களில் வரத்துடித்த கண்ணீரை பட்டென்று துடைத்து கண்களை கசக்குவதுபோல நடித்த அவரின் நிலை கண்டு வருத்தப்படத்தான் முடிந்தது.
நாங்களும் அவர்மீது பரிதாபப்படுவதாய் காட்டிக்கொண்டால் அவர் இன்னமும் உடைந்துவிடக்கூடுமோ இந்த சின்னப்பையன்களுக்கு முன்னால் அவரின் என நினைத்து ஒரு வெற்று புன்னகையை உதிர்த்து
சரிப்பா என்ன செய்ய..அவன் நேரம்..எப்படியும் அவன் திருந்தி வந்துறுவான்;..
ஆறுதல் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டோம்;.
பாவம் அவர் இந்த ஓய்வெடுக்கக்கூடிய வயதிலும் இன்னமும் உழைத்துக்கொண்டு இருக்கிறார்.வாழ்க்கையின் முக்கால் பகுதியை அயல்தேசத்திலேயே கழித்துவிட்டார்..
உடலுக்கு நோன்பு..
உண்ணாமல் இருப்பது!
இதயத்திற்கு நோன்பு..
சொந்தங்களை - உறவுகளை விட்டு பிரிந்திருப்பது!
ஆம் அவர்
நோன்பு இருந்திருக்கிறார்..
அவர்
பட்டினி போட்டது
வயிற்றை அல்ல..
இதயத்தை!
அவர் எவ்வளவு காலம்தான் சம்பாதிப்பது..? மனித உடம்புக்கு ஒரு குறிப்பிட்ட நாள்வரைதான் இறைவன் கியாரண்டி கொடுத்திருக்கிறான். மனித உடல் இயந்திரத்தை ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் உழைக்க வைத்துவிட்டு - குறிப்பிட்ட நாட்களுக்குப்பிறகு அந்த இயந்திரத்தின் ஓட்டத்திற்கு ஓய்வு கொடுக்கின்றான். அந்த ஓய்விற்கு மகனை நம்பிய காலம் போய் இப்பொழுது இன்சூரன்ஸ் கம்பெனியை நம்ப ஆரம்பித்துவிடார்கள்.
அந்த தந்தையின் மனநிலை எப்படியிருக்கும் தெரியுமா..? எனக்கு என் நண்பரின் கவிதை ஒன்று ஞாபகம் வருகிறது.
நான் இறந்தபிறகு
கொள்ளியை
தலையில் வைக்காதே மகனே
வயிற்றில் வை...
- சேஷாத்திரி
முதியோர் விடுதிகள் அதிகமாய் இருப்பதற்கு காரணம் இது போன்ற மகன்களால்தான்.
ஒவ்வொரு தந்தையும் மகன்களாக இருந்தவர்கள்தான்...
ஒவ்வொரு மகன்களும் தந்தையாக போகிறவர்கள்தான்...
அதை யாருமே புரிந்து கொள்ள மாட்டேன்கிறார்களே..?
எல்லா நோய்க்கும் மருந்து கண்டுபிடித்துவிடலாம்..ஆனால் மருந்து கண்டுபிடிக்கவே முடியாத ஒரே நோய் முதுமைதான்.
மனிதன் கண்டுபிடித்த காகிதப்பணம் மனிதனுக்கே எதிரியாகி விட்டது.
அவர் கஷ்டப்பட்டு சம்பாதித்து சேர்த்த பணத்தை அந்த ஊதாரி மகன் அழித்துவிட்டான்.
இப்போது பணத் தட்டுப்பாடு வந்தவுடன் தான் மட்டும் தப்பித்து விட்டான் குடும்பத்தின் சுமைகளைத்தாங்காமல்.
தந்தை உரிய நேரம்வரை சம்பாதிக்கவேண்டும் ஒரு குறிப்பிட்ட வயது என்று வரும்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு தான் சம்பாதித்து தனக்கு பாதுகாவலாய் இருந்த பெற்றோர்களுக்கு அவன் பாதுகாவலாய் இருக்க வேண்டாமா அந்த மகன்..?
தாயை கருவறையிலும்
தந்தையை தெருவறையிலும்
மிதித்த வித்தியாசமான மகன் இவன்
இப்படி சுயநலமாய் தப்பித்து ஓடிய மகனை செத்துவிட்டான் என்று கூறிய அந்த தந்தையின் மீது தவறேயில்லை. அந்த சுயநலக்கார மகன்..
உழைத்து வளைந்த
தந்தையின்
முதுகெலும்பில் அல்லவா
ஊஞ்சல் கட்டி ஆடியிருக்கிறான்!
படுபாவி. அப்படிப்பட்ட மகன்களுக்கெல்லாம் தூக்கு தண்டனை கொடுத்தால் தான் என்ன..?
என்னிடம்
பணம் வாங்குவதற்கான
உன்
ஒவ்வொரு கைநீட்டலும்...
என்
கண்ணீரை கானலாக்க என
நினைத்தேன்!
ஆனால்
கண்ணீரின் காரணமாகிவிட்டாயடா..?
நான்
தடுமாறி விழும்போது - நீ
தாங்குவாய் என நினைத்தேன்!
ஆனால்
தள்ளிவிட்டுவிட்டல்லவா நீ
தூங்குகிறாய்?
என்னைச்
சாகடிக்கப் பிறந்தவனே!
நீ
செத்தே பிறந்திருக்கலாமடா..?
இதயம் சோகமுடன்
ரசிகவ் ஞானியார்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
"ஆம் அவர்
நோன்பு இருந்திருக்கிறார்..
அவர்
பட்டினி போட்டது
வயிற்றை அல்ல..
இதயத்தை!"
அருமையாக இருந்தது.
நன்றி
Un Sogathodu naanum kaikokiromlay...
Un Kavithai kandu nirya ullangal thirunthumaa... ? Thirunthanum..
Post a Comment