Saturday, December 17, 2005

மின்னஞ்சலில் வந்த பொட்டுவெடி




பாராளுமன்றத்தில் வெடிகுண்டுப்புரளி - அடிக்கடி தலைப்புச் செய்திகளில் உலாவரும் செய்திதான் என்றாலும் சென்ற முறை பாராளுமன்றத்தில் நடைபெற்ற தாக்குதல் நடந்த தினங்களை ஒட்டி இந்த வெடிகுண்டுப் புரளி வந்ததால் எல்லோருக்கும் பயம். மறுபடியும் அதுபோல ஏதேனும் அசம்பாவிதம் நடந்திடுமோ என்று..?

என்ன நடந்திருக்கிறது..?

16.12.05 காலை பதினொரு மணிக்கு சபாநாயகரிடம் பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டதான தகவல் தெரிவிக்கப்படுகிறது. பேசிக்கொண்டிருந்த - பேச முற்பட்ட தூங்கிக்கொண்டிருந்த..தூக்க கலக்கத்தில் உள்ள உறுப்பினர்களும் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வருகிறார்கள்.

பாதுகாப்பு படைகளுக்கு அவசர அவசரமாய் தகவல் தெரிவிக்கப்படுகின்றது. வழக்கமான நாய்களின் துணையோடு பாராளுமன்றம் சோதனையிட்டபிறகு வெடிகுண்டு இல்லை என உறுதி செய்யப்பட்டப்பிறகுதான் அனைவருக்கும் நிம்மதியாயிற்று

அனைத்து உறுப்பினர்களும் கோபத்தில் துடிக்கிறார்கள் . கண்டிப்பாய் புரளிக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்று ஆணைகள் பறக்கின்றன.

புரளி மின்னஞ்சலில் வந்திருக்கின்றது. எவனோ ஒரு புத்திசாலி முட்டாள் அனுப்பியிருக்கிறான். கணிப்பொறியில் அரைகுறை ஞானம் உடையவன் செய்த செயல் இது.


கணிப்பொறியின் ஐபி முகவரி மற்றும் மின்னஞ்சல் விவரங்களை வைத்து அந்த மின்னஞ்சல் தமிழ்நாட்டிலிருந்து தான் அனுப்பப்பட்டுள்ளது எனத் தெரிந்தவுடன் முதலில் சென்னைக்கு தகவல் பறக்கின்றது. சென்னை சைபர் க்ரைமுக்கும் பாதுகாப்பு படைகளுக்கும் ஆணைகள் பறக்கின்றது.

நமது புத்திசாலி சென்னை சைபர் கிரைம் கண்டுபிடித்துவிட்டது எங்கிருந்து அனுப்பப்பட்டது என்று.? அது திருநெல்வேலி யில் உள்ள பாளையங்கோட்டைப்பகுதியில் இருந்து வந்திருக்கிறது
பாளையங்கோட்டையில் முருகன் குறிச்சி என்ற பகுதியில் உள்ள செல்வின் ப்ராட்பேண்ட் என்ற ப்ரவுசிங் சென்டரிலிருந்து அனுப்பப்பட்டிருக்கிறது.


எவ்வளவு வேகமாய் இருக்கிறார்கள் நமது சைபர் கிரைம்.? சமீபத்தில் மொபைல் தொலைபேசி தொலைந்து போனதை 24 மணி நேரத்தில் கண்டுபிடித்துக் கொடுத்தார்களாம். ம் பரவாயில்லை..இப்படியே சென்றால் மக்களுக்கு தேச பாதுகாப்பின் மீது நம்பிக்கை வலுக்கும்.

அந்த மின்னஞ்சல் சிபி என்ற இணைத்தளத்திற்கு சொந்தமானது. அந்த இணையதளத்தில் உள்ள டேட்டாபேஸை ஆராய்ந்தால் எப்பொழுது - எங்கிருந்து - எந்த முகவரியில் அந்த மின்னஞ்சல் ஆரம்பிக்கப்பட்டது என்று அந்த மின்னஞ்சல் பற்றி புட்டு புட்டு வைத்துவிடும். ஆனால் அந்த மின்னஞ்சலுக்கு சொந்தக்காரன் தவறான தகவல் கொடுத்திருக்கக் கூடும்.

அவ்வாறே தவறான தகவல்கள் கொடுக்கப்பட்டாலும் அவன் அனுப்பிய கணிப்பொறியின் சில இரகசிய தகவல்களைப் பயன்படுத்தி எந்த இடத்திலிருந்து அனுப்பப்ட்டது என எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.

சரி ப்ரவுசிங் சென்டர் என்பது பப்ளிக் பூத் மாதிரி யார் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் வரலாம். யார் எனக் கண்டுபிடிப்பது கடினமல்லவா..? அதற்கும் ஒரு வழி இருக்கிறது

ப்ரவுசிங் சென்டர் உரிமையாளரை ( அவரை அடித்து துன்புறுத்தாமல் ) முறையாக விசாரித்து-

  • அவரிடம் ஞாபகப்படுத்தச் சொல்லி - அந்த குறிப்பிட்ட நாளில் - அந்த மின்னஞ்சல் வந்த பத்து மணியிலிருந்து பதினொரு மணிக்குள் யார் யாரெல்லாம் வந்தார்கள் என்று விசாரிக்கலாம் .
    அவ்வாறு அவருக்கு முகங்கள் மறந்து போனாலும் வந்தவர் எப்பொழுதும் வருபவரா இல்லை புதிதாக வருhவரா என்று தெரிந்து கொள்ளலாம்..( இரண்டு நாள் தானே ஆகியிருக்கிறது ..அதெல்லாம் மறக்குமா என்ன..?


    அந்த ப்ரவுசிங் சென்டருக்கு வழக்கமாக யார் யாரெல்லாம் வருவார்கள் என்று ஒரு பெரிய பட்டியல் தயார் படுத்த வேண்டும்?


    அந்தப்பட்டியலில் இருப்பவர்களில் பள்ளி கல்லூரிக்குச் செல்பவர்கள் யார் யார் ? சும்மா இருப்பவர்கள் யார் யார் என்று பகுதிப்படுத்த வேண்டும். ஏனென்றால் அந்த மின்னஞ்சல் பத்து மணியிலிருந்து பதினொரு மணிக்குள் வந்திருப்பதால் பள்ளி கல்லூரி மாணவர்களாய் இருக்காது.


    அப்படியே பள்ளி கல்லூரி மாணவர்களாய் இருந்தால் என்ன காரணங்களுக்காய் பள்ளி கல்லூரிக்கு விடுப்பு எடுத்திருக்கிறார்கள் என்று தகவல்கள் திரட்ட வேண்டும்.


    இப்படி வடிகட்டி எடுத்த பட்டியலைக் கையிலெடுத்துக்கொண்டு அவர்களின் புகைப்படத்தோடு அவர்களை அந்த ப்ரவுசிங் சென்டர் உரிமையாளர் முன் நிறுத்தினால்போதும் அவர் எளிதாக கண்டறிந்துவிடக்கூடும்.


இன்னமும் சில நாட்களில் கண்டிப்பாய் அந்த நபரை எப்படியும் கண்டறிந்துவிடக்கூடும். ஆனால் அப்பாவிகள் யாரும் மாட்டிவிடக்கூடாது.

சில வருடங்களுக்கு முன்பு கூட முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு கொலைமிரட்டல் மின்னஞ்சலில் வந்திருக்கின்றது. அனுப்பியது யாரென்று விசாரித்ததில் அதுவும் திருநெல்வேலிப் பக்கம்தான்.நாகர்கோவில் பகுதியைச்சார்ந்த ஒரு கல்லூரி மாணவி அனுப்பியதாக கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டிருக்கிறாள்

அதிலிருந்து சைபர் க்ரைம் உஷராகி ஒவ்வொரு ப்ரவுசிங் சென்டருக்கு வருபவர்களிடமும் பெயர் முகவரி வாங்கி வைத்துக்கொண்டுதான் ப்ரவுசிங் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். ஆனால் அந்த விதிமுறைகளும் கொஞ்சம் கொஞ்சமாய் சரியான கட்டுப்பாடுகள் இன்றி தளர்த்தப்பட்டுவிட்டன.

சைபர் க்ரைம் காவலர்கள் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள ப்ரவுசிங் சென்டரில் வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒருமுறை விசிட் செய்து அந்த மாதம் முழுவதும் வந்த நபர்களின் தகவல்களை திரட்டி வைத்திருக்க வேண்டும். இப்படி அவர்களது கண்காணிப்பில் வைத்திருந்தால் குற்றங்கள் குறைய வாய்ப்பு உண்டு.


முன்பெல்லாம் ரவுடிகள் - கொள்ளைக்கூட்டக்காரர்கள் என்று பழைய படங்களில் ஒரு கதாபாத்திரத்தைக் காட்டுவார்கள்.

எப்படியென்றால் அந்த கதாபாத்திரத்தின் கைகளில் ஒரு கத்தியை கொடுத்து விடுவார்கள். முகத்தில் அல்லது நெற்றியில் ஒரு வெட்டுக்காயம் - முறுக்கி வைத்த மீசை - கழுத்தில் கசக்கி கட்டப்பட்ட கைக்குட்டை என்று தோற்றமளிக்குமாறு இருக்கும்.

இப்பொழுதெல்லாம் கைக்குட்டைக்குப் பதிலாக டை...கைகளில் கத்திக்குப் பதிலாக லேப்டாப் என்று ரவுடிகளும் விஞ்ஞான யுகத்தில் வளர்ந்து விட்டார்கள்

பாருங்களேன். அறிவியல் முன்னேறற்றம் ஆக்கத்தை விடவும் அழிவுக்கும் அதிகமாகவே பயன்படுகின்றது

- ரசிகவ் ஞானியார்

2 comments:

Anonymous said...

பாராளுமன்றம் ஒரு லைவ் ரிப்போர்ட் நன்றாக இருந்தது.

Anonymous said...

Uruppadaadha Vailai Idhuda Vunakku

தேன் கூடு