Saturday, December 24, 2005

என்கூட கராத்தே வர்றியா..
1999 ம் ஆண்டு பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் விடுதியின் நான் , சேர்மன் நவாஸ்கான் மற்றும் பேய் ராஜா எல்லாரும் கூடியிருக்கிறோம்.

நான் விடுதியில் தங்கிப் படிப்பவன் அல்ல என்றாலும் மாணவர் பேரவை செயலாளராக இருந்ததால் அன்று நடைபெற்ற விளையாட்டு தினத்தைப்பற்றிய கலந்தாலோசிப்பதற்காக அன்று விடுதியில் தங்க நேர்ந்தது.

மூன்றாமாண்டு மாணவர்களுக்கு 3 வது மாடி ஒதுக்கப்பட்டிருந்தது. நாங்கள் பேசிக்கொண்டேயிருந்ததில் நேரம் இரவு 1 மணியை நெருங்கியது.

நான் ராஜாவிடம் கேட்டேன்

டேய் நம்ம சக்திவேல் அறை எங்கடா இருக்கு?

யாருடா.. கவிதையெல்லாம் எழுதுவானே..? அந்த சக்திவேலா..இதோ ரெண்டு அறை தள்ளிதாண்டா இருக்கு..ஏன்..? - ராஜா

இல்லடா! அவன் கராத்தே க்ளாஸ் படிக்கிறான்ல..அந்த திமிர்ல தினமும் நான் எதிரில் வரும்பொழுதெல்லாம் "டேய் ஞானி என்கூட கராத்தே வர்றியா..ஆ..ஊ" அப்படின்னு ஆக்சன் காட்டுறான்டா...சும்மா கையை பிடிச்சு முறுக்குறான்..அதான் அவன இன்னிக்கு தூங்க விடக்கூடாது - நான்

டேய் வேண்டாம் அப்புறம் நாளைக்கு சேர்மன் செகரெட்டரி எல்லோரையும் ஒட்டு மொத்தமா கம்ப்ளைன்ட் பண்ணிருவாங்க.. -
-சேர்மன் நவாஸ்கான் பதறினான்

அதெல்லாம் ஒண்ணும் நடக்காதுப்பா..கவலைப்படாத..
- நான் லேசான பயத்தை மறைத்துக் கூறினேன்

சரிடா என்ன பண்ணப்போற - பதறியபடி கேட்டான் ராஜா

நீ எங்கூட வாடா..அவன் அறைய காட்டு
- அவனை இழுத்துக்கொண்டு சென்றேன்

அவன் அறை வாசலில் போய் நின்று..
சக்திவேல்..யப்பா..சக்தி..டப்..டப்..டப்..டப்.. - பலமாகத் தட்டினோம்

படித்துக்கொண்டிருந்திருக்கிறான் போல உடனே கதவைத்திறந்து விட்டான்
எங்களைப்பார்த்தவுடன் அவனுக்கு ஆச்சர்யம்!.."என்னடா இவன் இந்த நேரத்துல இங்க வந்திருக்கான்" என்று..

டேய் சக்திவேலு! என் கூட கராத்தே வாடா..ஆ..ஊ என்று அவனைப்போலவே கத்தி குடித்தவன் போல உளறினேன்.

அவன் நிஜமாகவே நம்பிவிட்டான்..
டேய் ஞானி போடா..நாளைக்குப் பேசிக்கலாம்டா..போடா
என்று கெஞ்சினான்

அதற்குள் பக்கத்து அறை மாணவர்கள் சத்தம் கேட்டு கதவை திறக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அவர்கள் எனக்கும் சக்திவேலுக்கும் ஏதோ சண்டை என நினைத்துவிட்டார்கள்.சக்திவேலுக்கு தர்மசங்கடமாகிப் போய்விட்டது..

டேய் வாடா எங்கூட கராத்தே பண்ண வாடா..காலையில் நீ கூப்பிட்டல்ல..இப்ப நான் கூப்புடுறேன் ..வர்றியா கராத்தே..
விடமாட்டேன் டா உன்னய..
என்று நான் கத்தி ஆக்சன் காட்ட,

ராஜாவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.. என் காதில் முணுமுணுக்கிறான்..

டேய் ஓவரா ஆக்சன் காட்டாத கண்டுபிடிச்சுடுவான்..நாளைக்கு எல்லா ஸ்டூடண்டும் போய் கம்ப்ளைண்ட் பண்ணிருவாங்கடா..பார்த்துக்கோ..என்க

சக்திவேலோ மிரண்டு போய் ராஜாவிடம் ,
டேய் ராஜா இவன கூட்டிட்டு போடா..எல்லாரும் பார்க்குறாங்கடா..நாளைக்கு பிரச்சனையாயிடும்..என்று கெஞ்சினான்

இல்லடா ஓவரா ஏத்திக்கிட்டான் இவன்..என்று அவனிடம் சமாதானம் சொல்லி

பின்னர் தடுமாறும் என்னை கைத்தாங்கலாக அழைத்துச் செல்வது போல ராஜாவும் நடிக்க நேராக நாங்கள் அறைக்குத் திரும்பினோம்..

அறையில் சென்றதும் ராஜா நடந்த விஷயத்தை சேர்மன் நவாஸ்கானிடம் சொல்லி விழுந்து விழுந்து சிரிக்கின்றான். அப்படியே தூங்கிப்போனோம்..

மறுநாள் காலையில் சக்திவேலை கல்லூரி வராண்டாவில் பார்த்தேன். எதிரில் நடந்து வந்துகொண்டிருந்தான்.

டேய் குட்மார்னிங்டா என்று நான் கூற அவன் ஒரு விதமாய் என்னைப் முறைத்துக்கொண்டே, "இவன் நேத்து நடந்தது தெரியாத மாதிரி நடிக்கிறானா..இல்லை உண்மையிலேயே தெரியலையா.."என்று நினைத்துக்கொண்டே ,

ம் ம் குட்மார்னிங் என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.

அதிலிருந்து நானும் ராஜாவும் அவனை கல்லூரியில் காணும் போதெல்லாம்..டேய் கராத்தே போடலாம் வர்றியா ....என்று கத்தி கிண்டல் செய்யுவோம் .

கராத்தே செய்பவர்களைக் தொலைக்காட்சியில் காணும்போதெல்லாம் எனக்கு அந்த சக்திவேல் ஞாபகம்தான் வரும்.

- ரசிகவ் ஞானியார்

2 comments:

Anonymous said...

nalla gnapagangal thoza...naan ennoda college life-ku poytean..nanri nanba..

eppothume college life irukkakoodatha enru yenkugirean

நிலவு நண்பன் said...

நன்றி பெயர் குறிப்பிடாத புண்ணியவான் அவர்களே

தேன் கூடு