Monday, February 26, 2007

ஒரு நாடு கடத்தப்பட்டவனின் தன் வரலாறு ( தொடர் 4)

இப்படி ஒவ்வொருவராக கைதுசெய்யப்பட்டு வந்தனர். பல இளைஞர்கள் சிறை சென்றுவிட்டனர் . இந்த நிலையில்தான் பாரீந்திரன் சொன்னான்

இந்த மாதிரி நம்ம சக்தியை வீணடிக்கிறதுல எந்த லாபமும் இல்லை.சொல்லம்புகளாலையே சர்க்காரை வீழ்த்திவிட முடியுமென்று தோணல்லே..ஆகவே நாம் பிரசுரம் பண்ணிக்கிட்டு வந்ததை செய்ல்படுத்தி காட்டணும் என்று முடிவெடுத்ததில் வந்ததுதான் மாணிக்தலா தோட்டத்தின் பிறப்பு.


ஜுகாந்தர் பத்திரிக்கையின் பொறுப்புகளை புதியவர்களிடம் ஒப்படைத்து விட்டு சில இளைஞர்களை பொறுக்கி எடுத்து மாணிக்தலாவில் பாரீந்திரனுக்கு சொந்தமான ஒரு தோட்டத்தில் குடி புகுந்தோம்.


குடும்ப பிண்ணனி இல்லாதவர்கள் குடும்பத்தை அநாயசமாக உதறுகின்ற இளைஞர்கள்தான் தேவை. ஆனால் மதரீதியான பயிற்சி இல்லாமல் இதுபோன்ற இளைஞர்கள் கிடைப்பது கடினம். ஆகவே பாரீந்திரன் ஒரு நல்ல துறவயை தேடி அலைந்தான். நானும் துறவியாய் இருந்தவன் என்றாலும் என்மீது அவனுக்கு நம்பிக்கை இல்லை.


பின் கடுமையாக அலைந்து 1857 ல் சிப்பாய் கலகத்தில் ஜான்சிராணியுடன் இணைந்து பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராய் போரிட்ட ஒரு துறவியை பிடித்தான். அவருக்குள் உள்ள வெறியை மீண்டும் வெளியே கொண்டு வந்தான். அந்த துறவி இவன் மீது மிகுந்த பாசமாய் இருந்தார். ஆனால் அவர் நோய்வாய்ப்பட்டு இறந்து போனதால் இன்னொரு துறவியை பிடித்து மாணிக்தலா தோட்டத்தில் ஆசிரமம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டான்.


மாணிக்தலா தோட்டத்தில் ஆசிரமம் தொடங்கப்பெற்ற சமயத்தில் அங்கே நாலைந்து இளைஞர்களுக்கு மேல் இல்லை.கையில் பைசா இல்லை. எல்லா இளைஞர்களும் வீட்டை விட்டு ஓடி வந்ததால் அவர்கள் வீட்டில் இருந்தும் பணம் எதிர்பார்க்க முடியாது . எப்படியிருந்தாலும் அவர்களுக்கு 2 வேளை சோறு கொடுப்பதற்காகவாவது பணம் வேண்டும். சிலர் தந்த உதவியினாலும் தோட்டத்தில் பழம் காய்கறி வளர்த்து அதன் மூலம் வருகின்ற வருமானத்திலும் காலங்கள் கழிந்தன.


பின் வருமானத்திற்கு கோழி வளர்த்தான் பாரீன். ஆனால் கோழிகள் நாளுக்குநாள் குறைந்தது கொண்டே இருந்தன. சிலவற்றை நரிகளும் சிலவற்றை மனிதர்களும் திருடிக்கொண்டு செல்ல, கோழி வளர்ப்பை கைவிட்டான்


நாங்கள் செய்த ஒரே வீண் செலவு டீ குடிப்பதுதான். அது மட்டும் இல்லாவிட்டால் வாழ்க்கையே நிலையற்றதாக வெறுமையாகப் போயிருக்கும் எங்களுக்கு. பாரீன் டீ தயாரிப்பதில் சூரன். அவனுடைய டீயைக் குடித்தே பாரத விடுதலைக்கு எஞ்சி உள்ள நாட்களை கழித்துவிடலாம் போல தோன்றும்.


நாமே சமைத்துக்கொள்ள வேண்டும் என்று பாரீன் உத்தரவு பிறப்பித்து விட்டதால் சமைப்பதற்கு பயந்து சில இளைஞர்கள் ஓடிவிட்டார்கள். எஞ்சியுள்ளவர்கள் சமையலைக் கற்றுக்கொண்டு சமைத்து சாப்பிட்டோம்.


கொஞ்சம் கொஞ்சமாக வங்காளத்தின் பல பகுதிகளிலிருந்தும் பல இளைஞர்கள் சேர ஆரம்பித்தினர்; . சிலருக்கு கல்விப்பயிற்சி. சிலருக்கு வேலை.


கல்விப்பயிற்சி என்றால் மத அரசியல் வரலாறு இவற்றைப் பயிலுவது

வேலை என்றால் புரட்சிக்கு தயார் செய்வது.


ஆசிரமத்திற்கு தகுந்த இன்னொரு இடத்தை தேர்வு செய்வதற்காக நானும் தேவவிரதனும் பொறுப்புகளை பாரீனிடம் ஒப்படைத்து விட்டு கிளம்பினோம்.


அலகாபாத்தில் விந்திய மலை, சித்திரக் கூடம், அமர்கண்ட் என்று புணிததலங்களாக சுற்றினோம். அமர்கண்டக்கில் நாற்புறமும் 20 - 25 மைல்கள் வரை காடுகளில் சுற்றியபொழுது தாழ்ந்த இனத்தாரின் குடியிருப்புகளில் வளர்க்கப்படுகின்ற நாய்கள் துரத்தியதால் 2 மைல் தொலைவு ஓடினோம் . ஆற்றங்கரை பக்கமாக ஓடி வந்து கொண்டிருந்தபொழுது அங்கு புலியின் காலடித்தடங்களும் இரத்தக்கறைகளும் கண்டோம்.


பிற்காலத்தில் நான் அந்தமான் சிறைக்கு அழைத்துச்செல்லப்படுவேன் என்று அப்போதே தெரிந்திருந்தால் அந்த இடத்திலையே புலி வருவதற்காக உட்கார்ந்திருப்பேன். ஆசிரமத்திற்கான இடம் எங்கேயும் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் பாரீனிடமிருந்து கடிதம் வந்தது. உடனே திரும்புங்கள் என்று.
(தொடரும்)

-ரசிகவ் ஞானியார்

No comments:

தேன் கூடு