நேற்று நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தபொழுது பேய் பற்றிய ஒரு விவாதம் ஓடிற்று. ஆளாளுக்கு தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்கள்.
பேயைப்பற்றி திடீரென விவாதம் எப்படி ஆரம்பித்தது என்று நினைத்துப்பார்த்தேன்..? ஷாபிதான் முதன்முதலில் ஆரம்பித்தான். "அண்ணே ..அண்ணே எனக்கு ஒரு சந்தேகம் பேய் இருக்கா..?" என்று ரசூலிடம் கேட்க கட்டிலில் படுத்துக்கொண்டே புத்தகம் படித்துக்கொண்டிருந்த நான் திடுக்கிட்டுப் போனேன்.என்னடா இரவு நேரத்துல் பேயை பற்றி ஆரம்பிக்கிறான் என்று.
சரி என்னதான் பேசுகிறார்கள் என்று கவனிப்போம் என்று ஒரு பயமான ஆர்வத்துடன் காதைத் தீட்டினேன்.
பேயா அது இருக்கா இல்லையான்னு தெரியலைப்பா...? நானும் ரொம்ப கேள்விப்பட்டிருக்கின்றேன்.. சரி நீ எதனால் இப்படி கேட்ட..?
"ஒரு நாள் நானும் என்னுடைய தந்தையும் தூங்கிக்கொண்டிருக்கின்றோம். என்னுடைய பெரியப்பாவிற்கு பக்கத்து வீடு. அவரும் அவருடைய வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கின்றார்."
நடுநிசி நேரம்..என்று அவன் இழுக்கும்பொழுதே நான் பேப்பரையும் பேனாவையும் கையில் எடுத்துக்கொண்டேன் எழதுவதற்கு. உடனே ரசூல் கவனித்து விட்டார்..
"செத்தாண்டா!..ஞானியார் பேப்பரை கையில் எடுத்துட்டான்..நாளைக்கு அவன் வலைப்பதிவுல ஏதோ கூத்து நடக்கப்போகுது.. "என்று சொல்ல
நானோ நான் எழுதவதைக் கவனித்தால் ஒருவேளை மிகைப்படுத்தி சொல்லக்கூடும் அல்லது சொல்வதை குறைத்துக் கொள்வார்கள் என்று நினைத்து "ச்சே ச்சே நான் ஊருக்கு லட்டர் எழுதுறேன் பா..நாளைக்கு ஒருத்தன் ஊருக்குப் போறான்..." என்று சமாளித்து யோசித்து யோசித்து எழுதுவது போல நடித்துக்கொண்டே அவர்கள் பேசுவதையும் கவனிக்க ஆரம்பித்து விட்டேன்..
ஷாபி தொடர்ந்தான்
.."நடுநிசி நேரம் ஒரு குரல் கனிவா! கனிவா..என்று அழைக்கிறது. எனக்கு அந்தக்குரல் கேட்க நான் திடுக்கிட்டு விழித்தேன்..
அதே நேரம் என்னுடைய தந்தையும் விழிக்கின்றார்.. எனது பக்கத்துவீட்டில் தூங்கிக்கொண்டிருந்த எனது பெரியப்பாவும் விழித்து வீட்டிற்கு வெளியே வருகின்றார்..
நாங்கள் மூவரும் ஒரே நேரத்தில் விழித்தது ரொம்ப ஆச்சர்யமா இருந்தது எனக்கு..
எங்கப்பா பேரு ஹனியா..அவரை எல்லாரும் கனிவா.. கனிவான்னு தான் கூப்பிடுவாங்க..
எங்கப்பா சொன்னாரு.. அவரோட அப்பா அழைத்தது போல இருந்துச்சுன்னு.. எங்கப்பாவோட அப்பா இறந்து ரொம்ப நாளாச்சு .."
நான் கேட்டேன் "சரி அது உங்கப்பாவோட அப்பா குரல்தான் உனக்கு எப்படி தெரியும்..?"
"எனக்கு அது தெரியாதுண்ணே.. அவர் சின்ன வயசுலேயே இறந்துட்டாரு..ஆனா எனக்கும் அந்தச்சப்தம் கேட்டுச்சு.. எங்கப்பாதான் சொன்னாரு அது அவங்க அப்பாவோட குரல்னு.."
"சும்மா அது வெறும் பிரம்மையா இருக்கும்பா.." நான் பயம் கலந்த சமாதானத்தில் கூறினேன்.
"அட! நான் பொய் சொல்லைனே.. பிரம்மைனா எங்க 3 பேருக்கும் ஒரே நேரத்துல அந்தச் சப்தம் கேட்கணுமா..எனக்கும் எங்கப்பாவுக்கும் கேட்டிருந்தா பரவாயில்லை..
எங்க பக்கத்து வீட்டுல இருக்குற எங்க பெரியப்பாவுக்கும் அது கேட்டு அவர் வெளியே வந்தாருன்னா..அதை எப்படிண்ணே பிரம்மைன்னு சொல்ல முடியும்.."
"அதுமட்டுமல்ல எங்க வீட்டை நோக்கி ஒரு நாய் வேற குரைச்சிக்கிட்டு இருந்துச்சு...
அந்த நடுநிசி நேரத்து எங்க வீட்டு முன்னால ஒரு நாய் குரைச்சது..நாங்க 3 பேரும் ஒரே நேரத்துல சப்தம் கேட்டு விழிச்சுது எல்லாம் சேர்ந்து என்னை ரொம்பவம் பயமுறுத்திச்சுனன்னே.. என்று சொல்ல"
எனக்கு மட்டுமல்ல நிஜாம் மற்றும் ரசூலும் ஆர்வமாய் ( பயமாய் ) கவனிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
"அப்படியாடா..அது நிஜமா..?"
"ம் சத்தியமா சொல்றேண்ணே.. "என்று சொல்லிவிட நம்ம ரசூலும் ஆரம்பித்தார்.
"எனக்கும் இதே மாதிரி அனுபவம் ஒண்ணு ஏற்பட்டிருக்கு தெரியுமா.?"
"ஒருநாள் இரவு நம்ம தெருவுக்கு பின்னால ஒரு தெரு இருக்குதல டா.."
"அதான் அந்த அய்யர்மனைக்கு பக்கத்து தெரு..அங்க ஒரு வீட்டுல ஒரு கிழவி மட்டும் உக்காந்திருந்தா..நானும் என்னடா இந்த நேரத்துல இங்க வந்து ஒரு கிழவி உக்காந்திருக்கான்னு ஆச்சர்யம்..நண்பர்களோட போனதால தைரியமா போய்க் கேட்டேன்.. "
"என்ன பாட்டி இங்க உக்காந்திருக்கீங்க.. எங்க போவணும்..?"
"இல்லைப்பா கண்ணு சரியா தெரியல..நான் அய்யர்மனைக்குப்போவணும்.."
"சரி நான் அந்த ரோடு முனை வரைக்கும் வந்து விடவா.. "ன்னு கேட்க அந்தப்பாட்டி என் கையைப்பிடித்து நடக்க ஆரம்பித்தாள்..
உடன் வந்த நண்பர்களோ எரிச்சலோடு பார்க்க.. திடீரென்று அந்தப்பாட்டியின் அழுத்தம் அதிகமாகியது.. நான் அழைத்துச் செல்ல வேண்டியவள் என்னை அழைத்துச் செல்லுமளவிற்கு வேகமாய் நடக்க ஆரம்பிக்க..என் நண்பனோ கவனித்து
"பாட்டி கையை விடுங்க..கையை விடுங்கன்னு சொல்றேன்ல" என்று அவளிடம் சொல்ல..
அந்தப்பாட்டியோ என்னிடம் "வாப்பா..வா..அந்த அய்யர்மனைக்கு வந்து விட்டுட்டு போ" என்று சொல்ல..
என் நண்பன் கத்திவிட்டான்.."பாட்டி விடுறீங்களா? இல்லையா.."என்க அந்தப்பாட்டியும் கையை விட்டுவிட்டு என் நண்பனை முறைத்துப் பார்த்துவிட்டு வேகவேகமாய் சென்று கொண்டிருக்கின்றாள்..
அந்தப்பாட்டியின் அழுத்தம் வேறு கையில் வலியை ஏற்படுத்த நான் அதிர்ச்சியோடு கவனித்தேன்.
"அந்தப்பாட்டி பேய்தான்னு சொல்லமுடியாது..ஏதாவது கடுப்பிலே அப்படி நடந்திருக்கலாம்" நான் நம்பாதவனாய் அவனிடம் கூறினேன்..
அப்பொழுது நிஜாமும் தொடர்ந்தான்..எங்க எதிர்வீட்டு ஒருபையன் விபத்துல இறந்து போய்ட்டான்..
"ரசூல் உங்களுக்கு தெரியுமா..? பேப்பர்ல கூட வந்திச்சே..ஒரு பீடி கம்பெனி பையன் அடிபட்டு இறந்துட்டான்னு.."
"ஆமா ஆமா..ஞாபகம் இருக்கு.. - " ரசூல் தலையாட்ட
நிஜாம் தொடர்ந்தான். "அவன் விபத்துல இறந்த 2 நாள் கழிச்சி ஒரு நாள் வீட்டுல நான் எங்கப்பா - அம்மா - தங்கச்சி எல்லாரும் உறங்கி கொண்டிருந்தோம்.."
"திடீர்னு ஒரு சத்தம்..என்னன்னு முழிச்சுப் பார்த்தா தூரத்துல இருந்து ஒரு பெரிய உருவம்..எங்க வீட்டை நோக்கி வர்றது மாதிரி தெரிஞ்சது..கண்டிப்பா ஒரு உருவம்தான்டா..நான் எங்கம்மா என்னோட தங்கச்சி 3 பரும் பார்த்தோம்.. எங்கப்பா ஓதிட்டு படுத்ததனால் அவருக்கு முழிப்பு வரல.."
"கிட்ட நெருங்கி நெருங்கி வீட்டுக்குள் நுழைவது போன்ற உணர்வு.. எனக்கு பயம் அதிகரிச்சு ஓன்னு அலறிட்டேன்.."
எங்கம்மா உடனே என்கிட்ட "நிஜாம் ஓதிட்டு படுடான்னு சொல்லி அப்புறம் ஓதிட்டு படுத்தோம்.. இது நிஜமா நடந்தது டா..அல்லாவுக்கு பயந்து சொல்றேன்டா.. "
என்னால அந்த சம்பவத்தை இன்னமும் மறக்க முடியாது..
அப்புறம் இன்னொரு சம்பவம்..
"ஒருநாள் என்னாச்சு தெரியுமா.. "
"அந்த வாய்க்காபாலம் பக்கத்துல வச்சி நாங்க பேசிக்கிட்டு இருந்தபொழுது..அங்க ஒரு சோப் கம்பெனி இருக்குல.அதுல நைட் டூட்டி பார்க்குற என்னோட ப்ரண்டு ஒருத்தன் அந்த நைட்ல ஒரு பெண் நெற்றியில பட்டையோட..தலையை விரிச்சிப்போட்டுட்டு அந்த தெருவை நோக்கி போய்கிட்டு இருந்திருக்கா.. "
"என்னடா இந்த நேரத்துல ஒரு பொண்ணு இந்தப்பக்கம் போகிறான்னு அவன் சைக்கிளை எடுத்துட்டு பின்னால போயிருக்கான்..அந்த சந்து வரைக்கும் போயிருக்கான்..அவள ஆளைக் காணலையாம்..பதறிப்போய் சொன்னான் எங்ககிட்ட.. "
"பேய் இருக்கா இல்லையான்னு தெரியல..ஆனா இத மாதிரி சம்பவங்களை பார்க்கும்பொழுது என்னன்னு நம்ப முடியலைடா.. "
உடனே ஷாபி , "இது மாதிரி என்னோட ப்ரண்டு ஒருத்தனுக்கும் நடந்திருக்கு.. அவனுக்கு கால் ஊனம்..3 சக்கர வண்டி வச்சிருப்பான்..நாங்க ஒருநாள் ஸ்கூல் பக்கம் பேசிக்கொண்டிந்தபொழுது படு வேகமா வந்திட்டு இருந்தான் .. என்ன ஆச்சர்யம்னா அவன் சட்டை போடலை.. "
என்னடா சட்டையில்லாம வந்திட்டிருக்கான்னு பிடிச்சு விசாரிச்சப்போ அழுதுகிட்டே சொல்றான்..
ஆத்துப்பக்கம் ஒரு பொண்ணு தலையை விரிச்சிப் போட்டுட்டுகடந்து போகும் போது இவனைப் பார்த்து வெறிச்சி பார்த்துட்டு கடந்து போயிருக்கா..இவனும் பின்னாலயே போயிருக்கான்..இவனுக்கு ஏன் போறேன்னு உணர்வே இல்லையாம்...?
அவ நேரா போய்..ஒரு ஆலமரம் இருக்குதுல அதுபக்கம் போயி யாருக்கும் குளிக்காத பகுதியில ஆத்துல இறங்கியிருக்கா..
நம்மாளும் ஆசையில சட்டையை கழட்டிட்டு வண்டியை விட்டு இறங்கி தவழ்ந்து தவழ்ந்து போயிருக்கான்.. ஆத்துக்கிட்ட போகும்போதுதான் அவனுக்கு உணர்வு வருது..நாம ஏன் இப்படிப் போறோமுன்னு பார்த்திருக்கான்..அங்க ஆத்துக்கு அந்தப்பக்கம் தீ எரிஞ்சிகிட்டு இருக்கு.. இவன் பயந்து போய் வண்டியை எடுத்துட்டு வந்துட்டான்..
நானும் என்னுடைய சின்ன வயதில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைக் கூறினேன்.
"என்னோட ப்ரண்டு ஒருத்தன்டா.
நிஜாம் உனக்குத் தெரியும்ல.. முஜாகிதீனோட அண்ணன் ரஹ்மான்..இப்ப வக்கீலா இருக்கான்ல.. "
"ம். ஆமா.. "
"அவன் தூங்கிக்கிட்டு இருந்திருக்கின்றான் அப்போ காலைத்தொழுகை அதிகாலை சுமார் 4.30 மணி இருக்கும். "
அப்போ அவன வந்து அலி வந்து எழுப்பி , "டேய் எழுந்திரு தொழுகைக்கு நேரமாச்சுடான்னு சொல்ல.." அவன் அரைகுறைத்தூக்கத்தோடு வந்து தொழுகைக்கு போயிருக்கின்றான்.. அவன் வீட்டுத் திண்ணையை ஒட்டிதான் பள்ளிவாசல் இருக்கு..
அவன் நேராக போய் தொழுதிட்டு வந்து படுத்திட்டான்.. காலையில அலி கிட்ட கேட்டிருக்கான்.."என்னடா நீ வந்து எழுப்பினே..அப்புறம் தொழுகையில உன்னைய ஆளைக்காணோம்...எங்கேடா போன..?"
அலி ஆச்சர்யமாய் கேட்டான்.."நானா காலையிலேயா..நான் இன்னிக்கை தொழ வர முடியலைடா..தூங்கிட்டேன்..நீ என்ன உளர்ற என்று..?"
இவனோ அடித்து கூறுகின்றான்.."இல்லைடா நீதான்டா வந்து எழுப்பினே.. "
"இவன் மறுக்க ஆரம்பித்துவிட்டான்.. இந்த நிகழ்ச்சி அந்த நேரத்துல ரொம்ப ஆச்சர்யமாகவும் ..பரபரப்பா இருந்துச்சு எங்க நண்பர்கள் வட்டத்துல.. "
"பேய்க்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைதான்..ஆனா அந்தச் சம்பவம் எங்களை அந்த நேரத்துல ரொம்பவும் பயப்படுத்திச்சு..அதான் சொன்னேன்.. "
ரசூல் கூறினார்.. "எனக்கும் திடீர்னு தோணும்..யாரோ நெஞ்சுல உக்காந்து அழுத்துற மாதிரி..மூச்சு விடவே கஷ்டமா இருக்கும்..ஆனா என்னன்னு தெரியாது.."
"சிலர் இதமாதிரி சொல்லக் கேட்டுறுக்கேண்டா..ஆனா எந்த அளவு உண்மைன்னு தெரியாது.. ஆனா நம்ம கெட்ட ஜின்களிடமிருந்து ( சைத்தான் ) உங்களைப்பாதுகாத்துக் கொள்ளுங்கள் ன்னு குர்ஆன்ல சொல்லியிருக்குடா..
அதமாதிரி இருட்டுல ஒரு ஆளாக தனியா படுக்க கூடாதுன்னு சொல்வாங்க தெரியுமா..?" என்று நிஜாம் சொல்ல
"அப்படியா அப்படின்னா ரெண்டு பேரா சேர்ந்து படுத்தா தப்பு நடக்காதா.." என்று அந்த சீரியஸான விவாதத்திலும் கிண்டலடித்தான் ஷாபி..
"ஆமா பொண்ணுகளோட தனியா படுத்தா தப்பு நடக்கத்தான் செய்யும்..நான் அதைச் சொல்லலைடா..ஒரே வீட்டுல தனி ஆளா படுக்கறது பற்றி சொல்றேன்.. "என்று தொடர்ந்தான் நிஜாம்
"இருட்டின் தீமைகளிலிருந்து என்னை பாதுகாப்பாயாக" ன்னு குர்ஆன்ல ஒரு வசனம் வரும் தெரியுமா..? அப்படின்னா இருட்டுல நமக்கு ஒரு தீமை இருக்குன்னு தானே அர்த்தம்..
இப்படியாக பயத்துடன் கலந்த அந்தப்பேய்ப்பேச்சு நீண்டு கொண்டே இருந்தது.
விவாதத்திற்குப் பிறகு மனதில் மரணம் - பயம் - சுடுகாடு- தலைவிரிப்பெண் என்று மாறி மாறி வந்து கொண்டேயிருந்தது. நாளைக்கு வேலைக்கு போகவேண்டும் என்ற கவலையில் அதெல்லாம் மறந்து தூங்கிவிட்டேன்.
சைத்தான் - பேய் - ஜின் - தீய சக்திகள் என்று ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு விதமாய்ச் சொல்லுகின்றார்கள். ஆனால் ஏதோ ஒரு தீய சக்தி இருக்கிறது என்பது மட்டும் உண்மை. உங்களுக்கும் இதுபோல ஏதும் திகில் சம்பவம் ஏற்பட்டிருங்காங்க..?
வேப்பமர உச்சியில் நின்னு
பேயொன்னு ஆடுதுன்னு
விளையாடப் போதும்போது
சொல்லி வைப்பாங்க-உன்
வீரத்தைக் கொழுந்திலேயே
கிள்ளி வைப்பாங்க
அன்புடன்
ரசிகவ் ஞானியார்
5 comments:
//Raja said... இதிலிருந்து அனைத்து மதங்களும் மக்களுக்கு போதிப்பது ஒன்றே என தெரிகிறது. //
கடவுள் ஒன்றுதான்
மதங்கள்தான் பல பல
புரிதல் இருந்தால் ஒன்று சேரலாம்..
/கடவுள் ஒன்றுதான்
மதங்கள்தான் பல பல
புரிதல் இருந்தால் ஒன்று சேரலாம்../
ஆம் ஞானியார்!ஆறுகள் பல என்றாலும் கடைசியில் சேர்வது கடலில்தானே!!.
//ஆறுகள் பல என்றாலும் கடைசியில் சேர்வது கடலில்தானே!!. //
கடைசியில் சேருவது கடல்தான் என்றாலும் கடல்தான் முதலில் தோன்றியது
பேய்ல ஆரம்பிச்சு ஆன்மீக மார்க்கத்துக்கு போய்ட்டீங்களா?!!
ஞானியார், சமீபத்துல என் கதை ஒண்ணுல பேயை எப்படி குழப்பறதுன்னு எழுதி இருக்கேன்.. ராஜா கிட்ட கேட்டு தெரிஞ்சுக்குங்க.. உபயோகமா இருக்கும் :)
//பேய்ல ஆரம்பிச்சு ஆன்மீக மார்க்கத்துக்கு போய்ட்டீங்களா?!! //
எல்லாம் அறிந்தவன் ஞானி.. :)
//பேயை எப்படி குழப்பறதுன்னு எழுதி இருக்கேன்//
பேயைக் கண்டு குழம்புனீங்களா..? பேயே குழம்புச்சா..?
Post a Comment