Tuesday, April 18, 2006

வந்தார்கள்-பெற்றார்கள்- அனாதையானார்கள்80 வயதான ஒரு தந்தை அதிகம் படித்த தனது 40 வயதான மகனுடன் வீட்டில் அமர்ந்திருக்கின்றார். அப்பொழுது ஜன்னலின் அருகே ஒரு காகம் பறந்து வந்து உட்காருகிறது.

அந்த தந்தை மகனிடம் கேட்கின்றார் "என்ன இது"

"அது காகம் -ப்பா" - மகன் பதிலளித்தான்

கொஞ்ச நேரம் கழித்து அந்த தந்தை மறுபடியும் மகனிடம் கேட்கின்றார் "என்ன இது?"

"அப்பா! நான் இப்பத்தான் சொன்னேன்..அது காகம் என்று" - மகன் மறுபடியும் பதிலளித்தான்

பின் சிறிது நேரம் கழித்து 3வது தடவையாக அவர் மறுபடியும் மகனிடம் கேட்கின்றார்
"என்ன இது"

இந்த முறை மகன் எரிச்சலுற்று கடுமையான உச்சரிப்பில் சொல்லுகின்றான்
"இது காகம்பா..இது காகம்.."

கொஞ்ச நேரம் கழித்து 4 வது முறையாக தந்தை மகனிடம் கேட்கின்றார். "என்ன இது"

மகன் இப்போது கோபமடைகின்றான்

"ஏம்பா இப்படி திரும்ப திரும்ப கேட்டு உயிரை எடுக்குறீங்க..எத்தனை தடவைதான் சொல்றது..அது காகம் என்று.. ஏன் உங்களுக்கு காது கேட்கலையா.." என்று தந்தையை நோக்கி கத்த ஆரம்பித்து விடுகின்றான்.

அதன்பிறகு அந்த தந்தை அமைதியாகி தனது அறைக்குள் மெதுவாகச் சென்றார். தனது பழைய கிழிந்து போன டைரி ஒன்றை எடுத்து வந்தார் .
அதில் ஒரு பக்கத்தை திருப்பி தனது மகனிடம் வாசிக்கச் சொன்னார்.
மகன் அந்த டைரியை வாசித்தான் :


இன்று என்னுடைய 3 வயது குழந்தை என்னுடன் சோபாவில் அமர்ந்திருந்தான். அப்பொழுது ஒரு காகம் வந்து ஜன்னல் அருகே உட்கார என்னுடைய மகன் ஆச்சர்யமாய்க் கேட்டான்

"அப்பா அப்பா இது என்னப்பா.. "

"அது வந்து மே..லே பறக்கிற பறவை..அது பேர் காகம்" என்று கூறினேன்

அவனுக்குப் புரியவில்லை மறுபடியும் கேட்டான். நானும் அதேமாதிரி விளக்கமளித்தேன்.


அவன் மறுபடியும் மறுபடியும் கேட்டுக்கொண்டே இருந்தான். கிட்டத்தட்ட 23 தடவையாவது கேட்டிருப்பான். நான் ஆச்சர்யப்பட்டுப் போனேன்.

எனக்கு அவன் ஒவ்வொரு முறை கேட்கும்போதும் அவனுடைய ஆர்வத்தை எண்ணி சந்தோஷப்பட்டும் அவன் அப்பாவியாய் கேட்பதை கண்டு மிகுந்த பாசத்துடனம் அவனைக் கட்டித் தழுவியபடி பதில் சொல்லிக்கொண்டே இருந்தேன்.

இந்த அனுபவம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. என் வாழ்க்கையில் இப்படிப்பட்ட சந்தோஷத்தை நான் அனுபவித்ததே இல்லை..


பாருங்களேன் இந்த மகன் தனது தந்தை 4 தடவை கேட்டவுடனையே கோபப்பட்டு எரிச்சலுற்று கத்துகின்றான்.

இது வெறும் கதையல்ல அன்றாடம் நமது அல்லது பக்கத்து வீடுகளில் நடைபெறுகின்ற சம்பவம்தான். இப்படிப்பட்ட நிலைமைதான் இன்று எல்லா இடங்களிலும். வயதானவர்களின் உணர்வுகளை மதிப்பதற்கு தவறி விடுகின்றனர். முதியோர் இல்லங்களின் வளர்ச்சிகள் மனிதர்கள் மனிதத் தன்மையை இழந்து வருவதற்கான அத்தாட்சிகள்.

முதியோர் இல்லங்களின்
முகவரிப் பட்டியலில்
உனது பெயரும்
ஒருநாள் வரக்கூடும்..

எனது ஊரில் வீடுகள் வரிசை வரிசையாக ஒன்றைச் சார்ந்து மற்றொன்று என்று கடைசி வரைக்கும் நீளும். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு திண்ணைகள் அமைக்கப்பட்டிருக்கும். அந்தத் திண்ணைகள் கடைசி நாட்களில் வீட்டுத்தலைவனின் வருகைக்காகவே காத்திருப்பது போல காத்திருக்கும்.

அந்தத் திண்ணையின் மூலையில் அமர்ந்து கொண்டு வெத்தலை சாப்பிட்டுக்கொண்டும் ஒரு படுக்கையை விரித்துக் கொண்டும் தங்களுடைய வாழ்நாளைக் கழித்து வருவார்கள். தினமும் அவர்களுக்கு சாப்பாடு நேரத்திற்கு வந்து விடும். அவர்களுக்கு உணவு கொடுத்து காப்பாற்றுவார்கள். ஆனால் அவர்களின் உணர்வுகளைக் காப்பாற்ற தவறி விடுகிறார்கள்.அவர்களுக்கு உரிய மரியாதைகள் கிடைக்காது.


அதே முதியோர் இல்லம்.
அன்று என் அப்பா!
இன்று நான் அப்பா!!

- பிரதீப் குமார்

பொருளீட்டும் பொறுப்பு தனக்கு வந்து விட்டது என்பதற்காக அதிகாரத் தோரணையில் அவர்களிடம் கருத்துக்கள் ஆலோசனைகள் கேட்பதையே விட்டு விடுகிறார்கள். ஒரு உணர்வுகளற்ற ஜடமாக்கி விடுகிறார்கள்.

வயதானவுடனையே பெற்றோர்களின் கருத்துக்களை அலட்சியப்படுத்தி ஒதுக்கிவிடும் பழக்கம் நகரச் சூழ்நிலைகளில் கூட நிறைய குடும்பங்களில் வழக்கமான நடைமுறைகளாகி விட்டது.


எப்படி குழந்தைப் பருவத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வயதான பருவத்திற்கு நம்முடைய வளர்ச்சி இருக்கிறதோ அதுபோல வயதாக வயதாக குழந்தைத்தனமாக உணர்வுகள் அவர்களுக்கு வரத் தொடங்கி விடுகின்றது

தனக்கென்று எதுவுமே சேர்த்து வைக்காமல் குழந்தைகளுக்காக உழைத்து படிக்க வைத்து பின் தாங்கள் ஓய்வு நிலைக்கு வந்தவுடன் குழந்தைகளைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலைமையில் இருக்கும் பெற்றோர்கள் நிறைய வீடுகளில் அவமானப்படுத்தப்படுகிறார்கள்.

இதில் படித்த இளைஞர்களின் பங்கு அதிகமாக இருக்கின்றது என்பதற்கு கிராமங்களை விடவும் நகரங்களில் இருக்கின்ற அதிகமான முதியோர் இல்லங்கள்தான் சான்று.

குழந்தைகள் ஒரு நிலைக்கு வரும்வரையிலும் எப்படி தனது பெற்றோர்களைச் சார்ந்து இருக்கிறார்களோ அதுபோல நாம் பெற்றோர்களுடைய உணர்வுகளை அவர்களுடைய மரியாதைகளை அவர்கள் சம்பாதிக்கும் காலத்தில் கொடுத்த மதிப்பைப் போல கடைசிக் காலம் வரையிலும் கொடுக்க வேண்டும். அதுதான் ஒவ்வொருவரும் தம் பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய அவசியமான கடமையாகும்.


வீட்டின் பெயரோ
அன்னை இல்லம்
அன்னை இருப்பதோ
முதியோர் இல்லம்


- தமிழ்மாங்கனி

சார்புகள் என்பது காலத்தின் கட்டாயம். வாழ்க்கையே ஒரு சீரான சுழற்சிகளில் தான் பணயப்பட்டுக்கொண்டிருக்கின்றது. ஆகவே சார்ந்திருப்பது ஒன்றும் கேவலமான செயல்கள் அல்ல. பெற்றோர்களின் சார்புதான் ஒவ்வொரு குழந்தைகளின் எதிர்காலமாக இருக்கின்றது.

நீ நாளைய பெற்றோர் - உன் பெற்றோர் நேற்றைய குழந்தைகள் என்ற சார்புகளின் சுழற்சியைப் புரிந்து கொண்டு கருவிலும், தோளிலும் சுமந்தவர்களை தெருவிலும் ,திண்ணையிலும் விட்டுவிடாதீர்கள் இளைஞர்களே!

தயவுசெய்து தங்களுடைய பெற்றோர்கள் வயதாகும் பொழுது அவர்களை சுமை என்று தனியே ஒதுக்கி வைத்துவிடாதீர்கள். அவர்களிடம் அன்பாக அமைதியாக வார்த்தைகளை கடினமாக உபயோகிக்காமல் பேசுங்கள்.


இன்று முதல் ஒரு உறுதி மொழி எடுத்துக் கொள்ளுங்கள் :

"என்னுடைய பெற்றோர்களை எப்போதும் நான் மகிழ்ச்சியாக வைத்திருப்பேன்.

நான் குழந்தையாக இருக்கும்போது என்னை அக்கறையோடு கவனித்துக் கொண்டதுபோல , சுயநலமில்லாத அன்பை என்மீது காட்டியது போல , நானும் மிகுந்த அக்கறையோடும் அவர்கள் மீது அதிகமான அன்பையும் காட்டுவேன்

அவர்கள் தங்களுடைய சோகங்களையும் துன்பங்களையும் நமக்குத் தெரியாமல் தங்களுக்குள்ளையே மறைத்துக்கொண்டு, நம்மை கஷ்டம் தெரியாமல், வறுமைதெரியாமல் , வளர்த்து படிக்க வைத்து எப்படி சமுதாயத்தில் நமக்கு ஒரு அந்தஸ்து கொடுத்தார்களோ அதுபோல அவர்களுக்கும் எந்த விதமான துன்பத்தையும் கொடுக்காமல் அவர்களை குழந்தையைப் போல பாதுகாப்பேன். "


"இறைவா! என்னுடைய பெற்றோர்கள் நான் குழந்தையாக இருக்கும்பொழுது எப்படி என்மீது பாசம் காட்டினார்களோ அதுபோல நீயும் அவர்களிடம் பாசம் காட்டு
நான் என்னுடைய பெற்றோர்களுக்கு என்றும் எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் மனம் கோணாதபடி நடந்து கொள்ளும் பக்குவத்தைக் கொடுப்பாயாக "

நிச்சயமாய் சொல்கிறேனப்பா
உன்
வியர்வை மட்டும் இல்லாவிட்டால்
நான் இப்பொழுது
பாரீனில் இருக்கமாட்டேன்
ப்ளாட்பாரத்தில்தான்...

ஒரே ஒரு வேண்டுகோள் அப்பா
வீடு...
நிலம் ...
பணம் ...
சொந்தம்...
உலகக் காரணிகள் எவையும்
நம்மைப் பிரித்துவிடக்கூடாது
இறைவனுக்கு மட்டும் விதிவிலக்கு!

அன்புடன்

ரசிகவ் ஞானியார்

13 comments:

kettabaiyan said...

நல்ல பதிவு ரசிகவ். வாழ்த்துக்கள்

Karthik Jayanth said...

நிலவு நண்பன்

2 நாளுக்கு முன்னால உங்க 'தப்பித்துவிடு தமிழே'ங்கிற பதிவுல ஒரு கமென்ட் போட்டேன். அதை இன்னும் நீங்கள் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். அதை பார்த்து கொஞ்சம் ரீலிஸ் பண்ணூனா நல்லா இருக்கும்

நிலவு நண்பன் said...

//நிலவு நண்பன்

2 நாளுக்கு முன்னால உங்க 'தப்பித்துவிடு தமிழே'ங்கிற பதிவுல ஒரு கமென்ட் போட்டேன். அதை இன்னும் நீங்கள் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். அதை பார்த்து கொஞ்சம் ரீலிஸ் பண்ணூனா நல்லா இருக்கும் //

நானும் பார்த்தேன் நண்பா.. ஆனால் விவாதங்கள் நீண்டு கொண்டே போகும் என்பதால் அதனை அப்படியே நிறுத்திவிட்டேன்.. தங்களுடைய மெயில் முகவரியைத் தாருங்கள். நான் விளங்கங்கள் அனுப்புகின்றேன்

நிலவு நண்பன் said...

//kettabaiyan said...
நல்ல பதிவு ரசிகவ். வாழ்த்துக்கள் //


கெட்ட பையனாக இருந்தாலும் நல்லபையனாய் வாழ்த்தியதற்கு நன்றி

SK said...

'தருமி'யிடம் 'நக்கீரன்' சொன்னது போல,
"உங்கள் கதையில் பிழை இருக்கிறது!"

முதல் பகுதியில், "தந்தை" மகனைக் குடாய்கிறார்.
அவன் பொறுமையுடன் திரும்பத் திரும்ப 'காகம்' என்று சொன்ன போதும் தந்தை மீண்டும் மீண்டும் அதே கேல்வியைக் கேட்கிறார்.
மகன் பொறுமை இழந்து கத்துகிறான்!

இரண்டாவது கதையில்,"மகன்" தந்தையிடம் ஆர்வமாய்க் கேட்கிறான்;
தந்தை சளைக்காமல் பதில் சொல்லி மகிழ்கிறார்!
ஏனெனில், அவ்ர் வள்ளுவம் படித்தவர்!
"தம் மக்கள் மழலைச் சொல்" கேட்கிறார், மகிழ்கிறார்!

இது இரண்டும் எப்படி ஒன்றாகும்?

இது பற்றி நான் ஒரு வில்லுப்பாட்டு படைத்திருக்கிறேன்.

விரைவில் என் 'ப்லாக்'இல் வலையேற்றுகிறேன்.

நல்ல கருத்தைச் சொன்னதற்கு நன்றி!

Sivabalan said...

Good one !!

நிலவு நண்பன் said...

//SK said...
'தருமி'யிடம் 'நக்கீரன்' சொன்னது போல,
"உங்கள் கதையில் பிழை இருக்கிறது!"

நல்ல கருத்தைச் சொன்னதற்கு நன்றி! //

முதலில் குறை சொன்னீர்கள்

பின்பு பாராட்டுகிறீர்கள்

ஆகவே தங்களது விமர்சனத்திலும் குறை இருக்கின்றது தோழா..நெற்றிக்கண்ணைத்திறப்பினும் குற்றம் குற்றமே..

நன்றி பாராட்டுக்கு

பொன்ஸ்~~Poorna said...

SK,
//மீண்டும் மீண்டும் அதே கேல்வியைக் கேட்கிறார்.
மகன் பொறுமை இழந்து கத்துகிறான்!//
பையனும் சின்ன வயசுல அதாங்க பண்ணரான்.. அவனுக்கும் தான் நியாபக சக்தி இல்லை... ஆர்வமாகக் கேட்டாலும், திருப்பித் திருப்பித் தானே கேக்கறான்!!!

அப்புரம்,
//"தம் மக்கள் மழலைச் சொல்" கேட்கிறார், மகிழ்கிறார்!//
வள்ளுவர் பண்ண தப்பு இது தாங்க.. வயசானவங்களும் குழந்தைகள் மாதிரி தான்னு எழுத விட்டுட்டாரு... இப்போ எவ்வள்வு சொன்னாலும் யாருக்கும் புரிய மாட்டேங்குது!!!

jansi said...

nice

நிலவு நண்பன் said...

//பொன்ஸ் said...
SK,
பையனும் சின்ன வயசுல அதாங்க பண்ணரான்.. அவனுக்கும் தான் நியாபக சக்தி இல்லை... ஆர்வமாகக் கேட்டாலும், திருப்பித் திருப்பித் தானே கேக்கறான்!!!

அப்புரம்,
வள்ளுவர் பண்ண தப்பு இது தாங்க.. வயசானவங்களும் குழந்தைகள் மாதிரி தான்னு எழுத விட்டுட்டாரு... இப்போ எவ்வள்வு சொன்னாலும் யாருக்கும் புரிய மாட்டேங்குது!!! //
கை கொடுக்கும் கை..நன்றி பொன்ஸ்..
உங்களுக்குத்தான் பொற்கிழி தரவேண்டும்..

யாரங்கே..பொன்ஸ்க்கு பொற்கிழி கொடுங்கள்..

நிலவு நண்பன் said...

//jansi said...
nice //நன்றி

Anonymous said...

Very nice article

-shamsulhaq

நிலவு நண்பன் said...

//Very nice article

-shamsulhaq //

நன்றி சம்சு..

தேன் கூடு