1999 ம் வருடம் சதக்கத்துல்லா கல்லூரியில் நான் கல்லூரியின் மாணவர் அணி செயலாளராக இருந்த சமயம்.
ஒரு மாலை நேரம்... தேவதைகள் முன்னால் சென்றுகொண்டிருக்க..அவர்களின் நிழலை அடித்து விரட்டி விட்டுவிட்டு நாங்கள் பின்தொடர்ந்துகொண்டிருக்க...
டேய் ஞானி எப்படிடா இருக்க - குமார்
நல்லாயிருக்கேன்..ஆமா உனக்கு ஹாஸ்டல்தானே..இங்க எங்கடா வர்ற ? - நான்
கேண்டீன் வரைக்கும் போகனும்டா- குமார்
கையிலிருந்து ஒரு கருவியை எடுத்தான்.
டேய் இத ப்ரஸ் பண்ணுடா
என்னடா இது
ப்ரஸ் பண்ணேண்டா
நான் ப்ரஸ் பண்ண அது கத்தியது...
ஐ லவ் யு - ஐ லவ் யு
- தேவதைகள் எல்லாம் திரும்பி சிரித்தார்கள்.
என்னடா இது
ஆமாடா அப்படித்தான் கத்தும்...சரிடா நான் வர்றேன்.
ஒரு பெண்ணை நோக்கி செல்கிறான் சைக்கிளில் விரட்டிக்கொண்டு.
-------------
அண்ணே உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் - ஜுனியர் மாணவன்
என்னடா சொல்லு
அண்ண அந்த பி.ஏ லிட் படிக்கிறான்ல குமார் அவன் எங்கக்ளாஸ் பொண்ணு பெனா..கிட்ட லவ் லட்டர் கொடுத்திருக்கான்..நேற்று அவ வீட்டுக்கு போகும்போது பின்னாலயே போயிருக்கான். ஐ லவ் யு - ஐ லவ் யு கத்தியிருக்கான்
கொஞ்சம் கண்டிச்சு வைங்கன்ன ( அவன் கொடுத்த லவ் லட்டரையும் கொடுக்கிறான் அது இன்னமும் பிரிக்கப்படவேயில்லை)
-
( அடப்பாவி என்கிட்ட போய் சொல்றியாடா..அந்த நாய் குமார் இதுக்குத்தான் என் பின்னால வந்து அந்த கருவிய ப்ரஸ் பண்ணச் சொன்னானா? மாட்டிவிட்டுட்டான்டா பரதேசி )
சரிடா நான் கண்டிச்சு வைக்கிறேன்.நீ யாருகிட்டயும் சொல்லாதே - மாணவர் செயலாளர் என்ற கடமையில் பொறுப்பாய் பதில் அளித்தேன்.
---------------- -------------
மறுநாள் குமாரிடம்
டேய் நீ ஒரு பொண்ணுகிட்ட லவ் லட்டர் கொடுத்ததா அவங்க க்ளாஸ் பையன் வந்து என்கிட்ட சொன்னான்.. அந்த பொண்ணு பிரின்ஸ்பால்கிட்ட கம்ப்ளைன்ட் பண்றதா சொல்லுறா..அதனால விட்டுடுடா..சரியா..
டேய் அவள நான் லவ் பண்றேன்டா - குமார் வருத்தத்துடன்
அதுசரிடா நீ ஏண்டா அவளுக்கு உன்னை பற்றி அறிமுகம் கிடைக்கிறதுக்கு முன்னால அவ பின்னால போய் கத்துறது- லவ் லட்டர் கொடுக்கிறது.. இப்படி பண்ணினா உன்னைய பத்தி தப்பான அபிப்ராயம்தான் தோணும். நீ அவசரப்பட்டுட்டடா..சரி பார்த்து நடந்துக்கடா
அவனும் கண்ணீரோடு தலையாட்டிக்கொண்டே சென்றுவிட்டான்.
----------------------- -------------
பழைய கடிதங்களை புரட்டியபோது அவள் படித்திருப்பாள் என்று இன்னமும் அந்த குமார் நம்பிக்கொண்டிருக்கும் அந்தக் கடிதத்தை என் கைகளில் எடுத்தேன்..கைகள் நடுங்கியது..
ஒருவேளை இந்தக் கடிதத்தை படித்திருந்தால் அவள் அவனை காதலித்திருப்பாளோ..?
ஒருவேளை அந்தபெண்ணிடம் நான் சென்று ஏதாவது சொல்லியிருந்தால் அவனது காதல் நிறைவேறியிருக்குமோ?
கண்ணீர் வந்தது...
இதோ அவன் எழுதிய கடிதம்..
ஹலோ பெனா.....
உங்ககிட்ட பேசணும் என்று ரொம்ப நாளாக ஆசைப்பட்டுக் கொண்டிருந்தேன். பட் பேசறதுக்கு முடியல. நான் 2 வாரத்துக்கு முன்னாடி ஒரு தடவை சைக்கிள்ல போய்ட்டு இருக்கும்போது நம்ம காலேஜ் கேட் பக்கத்துல நான் ஏ கொஞ்சம் நில்லு என்று சொன்னேன். மறுநாள் உங்களோட பீலிங்ஸ் எல்லாம் என்னை திட்டினதாவே இருந்தது. நான் அப்படி சொன்னதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ப்ளீஸ் வெரி சாரி..
நியு இயர்க்காக கிரீட்டிங்ஸ் உங்களோட ப்ரண்ட்ஸ் பேக்ல வைச்சிருந்தேன். அதுல கெஸ் மி ன்னு எழுதியிருந்தேன். நீங்க கெஸ் பண்ணுணீங்களா? பண்ணியிருப்பீங்கன்னு நினைக்கிறேன். கடைசியா நான் கேட்பது உங்களிடம் ஒருமுறையாவது பேசணும் என்பதுதான். எனக்கு ஒரு சான்ஸ் தருவீங்களா? நீங்க என்னிக்கு டிசைட் பண்றீங்களோ அன்னிக்கே பேசிக்கலாம். உங்ககிட்ட பேசறதுக்காக பலதடவை டிரை பண்ணிப்பார்த்தேன். பட் உங்களோட பீலிங்ஸ் என்னைப் பேசவிடாமல் பண்ணிவிட்டது. எனக்கு உங்ககிட்ட பிடிச்சதே உங்களோட கண்கள் மற்றும் அந்த கிரீன் கலர் சுடிதார்தான். அந்த டிரஸ்ல நீங்க ரொம்பவே அழகா இருக்கீங்க. என் நேம் என்னன்னு உங்களுக்கு தெரியாது. ஆனால் இப்ப என்னோட நேம் எழுதியிருக்கிறேன். ப்ளீஸ் நான் அன்னிக்கு சொன்னதுக்கு மறுபடியும் உங்ககிட்ட சாரி கேட்டுக்கறேன்.
எனக்காக ஒரு சான்ஸ் உங்ககிட்ட பேசறதுக்கு தருவீங்கன்னு நினைக்கிறேன். எங்கிட்ட சொல்ல உங்களுக்கு ஏதாவது ப்ராபளம் இருந்தா உங்களோட போன் நம்பர் தாங்க இல்ல என்னோட போன் நம்பர் 540405 நாளைக்கு 6 மணிக்கு மேல் உங்களோட போனுக்காக காத்துக்கொண்டிருப்பேன். நீங்க பேசினால் எனக்கு ஒரு சான்ஸ் இருக்குன்னு நினைத்து கொள்ளுவேன். ப்ளீஸ் எனக்காக என்கிட்ட ஒருமுறை பேசுங்க இல்ல பேசுறததுக்கு ஒரு சான்ஸ் தாங்க.
கே. குமார்
இப்போது அந்தப்பெண்ணிற்கும் திருமணம் முடிந்துவிட்டதாக கேள்விப்பட்டேன்.அந்த குமாரைப் பற்றிய தகவல்தான் இன்னமும் எனக்கு கிட்டவில்லை..
இலக்கியம் படிக்க வந்து எவளது
இதயத்தையோ பறிக்கச் சென்றவனே?
எங்கிருக்கிறாய் நண்பா..?
உன் இதயத்திற்குள்ளும்
அறை நண்பர்களுக்குள்ளும்
ஒளித்தே வைத்துவிட்டாயோ உன் காதலை..?
உன்
கடிதம் பிரிக்கவே ஆசைப்படாதவளின்
இதயம் பிரிக்க ஆசைப்பட்டுவிட்டாயோ..?
அவளிடம் பேசுவதற்கு நீ
தேதி கேட்டாய்..?
தேவதைகள் எப்போதும்
தேதி கொடுப்பதில்லை நண்பா!
நீதான்
தேடிச்சென்றிருக்கவேண்டும்!
அவளுக்குத்தெரியாமல்
அவள் கைப்பையில்
கடிதம் வைக்கத் தெரிந்தவனே!
அவள் இதயத்தில்
காதல் வைக்க தெரியவில்லையடா?
நீ
சுற்றிக்கொண்டேயிருந்திருக்கிறாய்
அவள் பின்னாலும்
அவள்
தொலைபேசியில் அழைப்பாள்
என்ற நம்பிக்கையில்
விடுதியின் தொலைபேசி அறை வாசலிலும்
உனக்கு
எவ்வளவு வலித்திருக்கும்
காலும் காதலும்?
அவள் இதயம்வாங்கும் முயற்சியை
நீ
படிப்பில் காட்டியிருந்தால்
பட்டமாவது வாங்கியிருக்கலாமடா..?
இப்பொழுது
அரியர்ஸ் எல்லாம்
எடுத்துவிட்டாயா நண்பா..?
காதலில் கேட்கவில்லை
படிப்பை கேட்கிறேன்?
நான் எத்தனை முறை கவனித்திருக்கிறேன் தெரியுமா?
அவள் சாலை கடந்து செல்லும்போதெல்லாம் அவளைவிடவும் உன் கண்கள்தான் சாலையின் இருபக்கமும் பார்க்கும் ஏதாவது வாகனம் வருகிறதா இல்லையா என்று?
அவள் அந்த
மண்சாலையில்
மறைந்து செல்லும் வரையிலும்...
உன்
கண்கள் அந்த சேலையில்தானடா
ஒட்டிக்கொண்டேயிருக்கும்!
என்னால் மறக்கவே முடியாதடா! விடுதியில் கடைசி நாளில் நீ தனியாய் அமர்ந்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாய் நண்பா..
அதை உனக்குத்தெரியாமல் ஜன்னல் வழியே பார்த்து கண்ணீர்விட்டவர்களுள் நானும் ஒருவன்... நீ எங்கிருக்கிறாய்..?
காதல் கிடைக்கவில்லை என அழுதாயா?
நண்பர்களை பிரிகிறோமே என அழுதாயா?
உனக்கு அவள் கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட்டுக்கொண்டிருந்தால் உன் வாழ்க்கை வீணாகிவிடும் நண்பா! நீ காதலித்த அந்த பெண் மீது நீ வைக்கப்போகும் பாசத்தை விடவும் அதிகமாய் பாசம் வைக்க உலகில் எவனையோ இறைவன் தேர்ந்தெடுத்துவிட்டான் என்ற சந்தோஷத்தில் சமாதானப்படுத்திக்கொள் உன் இதயத்தை!
உன்னிடம் ஆட்டோகிராப் வாங்குவதற்குத்தான் உன் விடுதிக்கு வந்தேன்.. நீ ஆட்டோகிராப் எழுதியிருந்தால் கூட அந்த காகிதங்கள் தொலைந்து போயிருக்கலாம்..ஆனால் உன் கண்ணீரை என் இதயத்தில் ஆட்டோகிராப்பாக்கிவிட்டாய்!
நீ அவளுக்கு எழுதிய காதல் கடிதம் என்னிடம் இருப்பது நியாயமல்ல
இந்தக் கடிதம் உன்னிடம் இருப்பதுதான் மரியாதை.ஆகவே உனக்காக பாதுகாத்து வைத்திருக்கிறேன் ... ஆட்டுமந்தைகளை மீண்டும் கூட்டிற்கு அழைத்துவந்து பாதுகாப்பாய் அடைத்துவைக்கும் மேய்ப்பானைப்போல..
உன்னை வாழ்க்கையின் எந்தப்பகுதியிலாவது சந்தித்தால் கண்டிப்பாய் ஒப்படைத்துவிடுவேன். உன்னை என்று காண்பேனோ..?
நம்புகிறேன்.நீ கண்டிப்பாய் மறக்கமாட்டாய்...அந்த கடிதத்தையும் அவளையும்.
நீ துரத்தி சென்ற அந்த சைக்கிள் தடத்தில் எத்தனை பாதங்கள் பதிந்தாலும் இன்னமும்
உன் இதயத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஈரமண்ணில் பதிந்து போன லாரியின் தடம்போல.
காத்திருக்கிறேன் நண்பா பண்டிகைநாளில் உண்டியல் உடைக்க காத்திருக்கும் குழந்தைகளைப்போல.. என்று வரப்போகிறாய் நீ?
இதயம் அழுகையோடு
ரசிகவ் ஞானியார்
1 comment:
உங்கள் கவிதைகள் எல்லாம் நன்றாக இருக்கு. வாழ்த்துக்கள்.
Post a Comment