Tuesday, August 09, 2005

கண்ணகிகளை இடிக்காதீர்கள்



( மூன்று வருடங்களுக்கு முன்பு சென்னையில் கண்ணகி சிலை தகர்க்கப்பட்டது ஞாபகமிருக்கிறதா..? ஆனால் இக்கவிதைக்கும் அந்த சம்பவத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை )


பம்பரம்(?); விடுகின்ற
பாண்டிய மன்னன்களின் வீதியிலே...
ஹேர்பின் மாட்டிய
கண்ணகிகள் வந்து...
நீதி கேட்கிறாhர்கள்!
கையில் ஈவ்டீசிங் புகார்...


நாங்கள்
மண்ணில் பார்வை ஊன்றி
மௌனமாய் சென்றால்
திமிர்பிடித்தவள் என்று
தூற்றுகிறீர்கள்!

சரி பரவாயில்லை!
உங்களைப் பார்த்து
சிரித்துவிட்டுப்போனாலோ
அயிட்டம் என்று
அழைக்கிறீர்கள்!

படிக்கட்டில் தொங்குவதால்
பரிதாபப்பட்டு
புத்தகம் வாங்கி வைத்துக்கொண்டால்...
காதலிப்பதாக நினைத்து
கடிதம் கொடுக்கிறீர்கள்!

சரி!
புத்தகம் வாங்க மறுத்து..
தலைதிருப்பிக்கொண்டாலோ
ஆசிட் ஊற்றி
ஆசி கொடுக்கிறீர்கள்!

பஸ்ஸ்டாண்டு பார்வையாளர்பகளே!
எங்களுக்கு
இட ஒதுக்கீடு
தேவையில்லை
தயவுசெய்து
இடைஒதுக்கீடு செய்யாதீர்கள்!


எங்களின்
எதேச்சை பார்வைகண்டு
ஏதேதோ நினைத்துவிட்டு
கடைசியில்
ஏமாற்றிவிட்டாள் என்று
எகத்தாளம் பேசாதீர்கள்!


உங்களை
காதலிப்பவளெல்லாம்
கண்ணகிகள்!
மறுத்தவர்கள் எல்லாம்
மாதவிகளா..?


உங்களுக்கு
நேரமில்லையென்றால் எங்களை
நேசித்துவிட்டுப்போங்களேன்!
ஆனால் எங்களையும்
காதலிக்கச் சொல்லி
கட்டாயப்படுத்தாதீர்கள்!


சவரம் செய்ய
சில்லறையில்லை என்றால்
சொல்லியிருக்கலாமே?
அதைவிட்டுவிட்டு
அவள்
துரோகத்தில் வளர்ந்த தாடி என
திரித்து கூறாதீர்கள்!

காற்று வீசுவதற்காய்
காத்திருங்கள்!
விருப்பமில்லையா?
விசிறி வைத்துக்கொள்ளுங்களேன்!
மீறினால்
புயலோடு ...
போராடவேண்டியதிருக்கும்!


நீங்கள்
கண்ணகிகளை எதிர்பார்க்கிறீர்கள்..
கிடைத்துவிடுகிறார்கள்!
ஆனால்
ராமனை எதிர்பார்த்த
எங்களுக்கோ
கோவலன்களே கிடைக்கிறார்கள்!

அதற்காக உங்களை
ராமனாகச் சொல்லவில்லை!
ஆனால்
கண்ணகிகளை குறைகூறாதீர்கள்!

ஏற்கனவே நாங்கள்
இடிந்து போயிருக்கிறோம்! (?)

-ரசிகவ் ஞானியார்-

2 comments:

aathirai said...

appada ,
oruvaravadhu pengal paarvayil kavidahi ezhudhiyadharku nandri.

Maravandu - Ganesh said...

Dear rakashiv ..

I have also written a poem about kannaki statue ..
Click here

தேன் கூடு