Monday, August 15, 2005
என் கல்லூரி ஆலமரமே!
உன்னைப்பற்றி
கவிதை எழுத நினைத்தால்
இதயத்தில் இருந்து
வார்த்தைகள்
பூமிக்குள் வந்து விழுகிறது ..
உன் விழுதுகளாட்டம்!
நாங்கள் அடித்த கிண்டலுக்கு
எங்களோடு சேர்ந்து
தலையசைத்துக்கொண்டே...
ரசித்திருக்கிறாய்?
மழைநின்ற பொழுதும் உன்
இலைகளில் சேமித்த
சொட்டுகளினால் எங்களுக்கு...
சொர்க்கம் தந்திருக்கிறாய்!
கல்லூரி தேர்தல் ரகசியங்களையும்...
சில வதந்திகளின் ரகசியங்களையும்...
பிட்டின் ரகசியங்களையும்...
நாங்கள் உன்
விழுதுகளோடுதானே
விவாதித்திருக்கிறோம்?
உன்
விழுது வலிக்கும் அளவுக்கு
தொங்கி விளையாடினாலும்...
சிலநேரம்
சிறுநீரை பரிசாக தந்திருந்தாலும்..
கோபப்படாமல்
நீ எங்களுக்கு
காற்றை மட்டுமே தந்திருக்கிறாய்!
எங்களின்
ஒவ்வொரு...
காதல் காத்திருப்புகளையும் நீ
சகித்துக்கொண்டு இருந்திருக்கிறாய்!
பரிட்சை நேரத்து
பரபரப்பான சூழலில்...
ஒரு தாயின் சேவையாய்
தாலாட்டி தாலாட்டி
படிக்க வைத்தாய்!
காதல் தோல்லி
பரிட்சை தோல்வி
காதலியின் தாமாதம்
இப்படி எல்லாவற்றிற்கும்
எங்கள்
மனசோடு நீயுமல்லவா...
மௌனம் அனுஷ்டித்திருக்கிறாய்!
நேரம்போக்குக்கு காதலிப்பவர்களுக்கு கூட
நீ
நிழல் கொடுத்திருக்கிறாய்!
உன் மடியில் உட்கார்ந்து
கும்மாளமிட்டவர்கள்
தனித்தனியே
அழுதுவிட்டு போகிறோம்!
உன்
தோள்களைத் தோண்டி...
எங்கள்
பெயர்கள் எழுதினாலும்..
பொறுத்துக்கொண்டாயே?
பிரிந்து சென்ற
கடைசிநாளில்
கண்ணீர் தரமுடியாமல்...
நீ
இலைகளை உதிர்த்துக்கொண்டே வழியனுப்பியது...
இன்னமும் ஞாபகத்திலிருக்கிறது!
கல்லூரிக்கு
மீண்டும் ஒருநாள் வருகின்றபோது
கண்டிப்பாய் காட்டுவேன் என்
காதலியிடம்..
அவளைவிடவும் ஆழமாய்
நீ
உன் இதயத்தில்
என்னை எழுதிவைத்திருக்கிறாய் என்று!
உன் நிழலில் காதல் வளர்த்த
என் நண்பனின்
கலைந்து போன காதல்
இன்னமும் என்
இதயம் விட்டு அகலவில்லை
ஆகவே
கடைசியாய்
ஒரே ஒரு வேண்டுகோள் தாயே!
யாரையும்
காதலிக்க விட்டுவிடாதே!
காற்றடித்து..
கலைத்து விட்டுவிடு!
-ரசிகவ்ஞானியார்-
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
காதல்மேல் ஏன் அத்தனை வெறுப்பு?? கவிதைக்கு வாழ்த்துக்கள்.
Post a Comment