Thursday, August 11, 2005



(சில வருடங்களுக்கு முன்பு தமிழ்மணி என்ற சிறுவன் சென்னை மண்ணடியில் உள்ள ஒரு குழியில் தடுமாறி விழுந்துவிட்டான். பின் தீயணைப்பு துறையினர் வந்து குழிக்குள் ஆக்ஸிஜன் கொடுத்து அந்த குழியினை அகலப்படுத்தி ஒரு வழியாக அச்சிறுவனை மீட்டனர் )


குழி வெட்டிகள்


குழிக்குள் விழுந்துவிட்ட அவனைப்பற்றி
குமுறிப்போய் எழுதுகிறேன்

மண்ணடியில் மாட்டிக்கொண்ட தமிழை
கென்னடி வந்தா மீட்டுப்போவது?

தள்ளி விட்டார்களா?
தடுமாறி விழுந்தானா?


எது கை அது
எங்கே எனத்தெரியவில்லை
ஆனால்
கண்ணுக்கெட்டிய தூரத்தில்
கதறிக்கொண்டிருக்கிறான்

தோண்டியவன் குற்றவாளியா? - சரியாகத்
தோண்டாதவன் குற்றவளியா?


தடுக்கி விழுந்தவன் மீதும்...
தவறில்லை!
குழிவெட்டியவனிடமும்..
குற்றமில்லை!
ஆனால்
மீட்கமுடியாதவனை மட்டும்..
மன்னிக்க மாட்டேன்!

அக்கறையோடு சில பாரதிகள்
ஆக்ஸிஜன் கொடுப்பதாலே
உயர்தமிழ் இன்னமும்...
உயிர் வாழ்கிறான்!

அரசாங்கமும் ஆங்கிலத்தில்
ஆணையிட்டுக்கொண்டுதானிருக்கிறது
தமிழைக்காப்போம்
தமிழைக்காப்போம் என்று!

புதமைக்குழிக்குள்
புதையுண்டுப்போகின்ற
துமிழை
தயவுசெய்து காப்பாற்றுங்கள்

நான்
கல்தோண்டி மண்தோண்டி மீட்ட
தமிழ்மணியைப்பற்றி பேசவில்லை!
கல்தோன்றா மண்தோன்றா காலத்து...
தமிழைப்பற்றி பேசுகின்றேன்!

இதயம் நெகிழ்வுடன்

ரசிகவ் ஞானியார்

No comments:

தேன் கூடு