Saturday, August 20, 2005

நிலாக்கால ஞாபகங்கள்

பம்பரம்

கத்தரிக்கா தோட்டம் என்ற ஒரு இடத்தில் பம்பரம் விளையாடி தோற்றவனின் பம்பரம் மீது ஆக்கர் அடித்து அவனது பம்பரத்தை சேதப்படுத்துவது எங்களின் வழக்கம். ஓருநாள் மன்சூரின் பம்பரத்தை சேதப்படுத்த அவன் என்னை அடித்துவிட உடனே கோவத்தில் என்ன செய்வது என தெரியாமல் அவனது வீட்டு வாசலில் நின்றுகொண்டு அவனது வீட்டில் மண்ணை அள்ளி வீசிவிட்டு ஓடிச்சென்று என் அம்மாவின் முந்தானையில் ஒளிpந்து கொள்வது ஞாபகம் வருகிறது.

ஐஸ்வண்டிக்காரன்
ஒவ்வொரு பெருநாளைக்கும் முக்கிய பொழுதுபோக்கே ஐஸ் சாப்பிடுவதுதான். வழக்கமாய் வருகின்ற அந்த ஐஸ்காரரிடம் சென்றவருடம் வாங்கியதற்காக இப்பொழுது காசு கொடுத்து வரச்சொன்ன அம்மாவை நினைத்து பெருமையடைவதா? இல்லை மகிழ்ச்சியில் வேண்டாம் என மறுத்து இலவசமாய் ஒன்று கொடுத்த அந்த ஐஸ் தாத்தாவை நினைத்து பெருமையடைவதா? இல்லை தங்கைக்கு வாங்கி கொடுடா என்று காசு கொடுத்த அப்பாவையும் தங்கையும் ஏமாற்றி ஐஸ்கிரீமை நான் முழவதுமாய் சாப்பிட்டுவிட்டு கடைசி துண்டை தங்கையிடம் கொடுத்த என்னை நினைத்து சிறுமையடைவதா?


தட்டான்பூச்சி வேட்டை

டவுசர் போட்டுத்திரந்த அந்த நிலாக்காலத்தில் முடசெடிகள் உடலைக்காயப்படுத்தினாலும் பொருட்படுத்தாது கலர் கலராய் தட்டாம்பூச்சிகளை போட்டிபோட்டு கொண்டு பிடித்து அதன் சிறகுகளைபறித்து ஒரு பாட்டிலில் அடைத்து அதன் தவிப்பை ரசிப்போம். இப்பொழுது நான் தனிமையிலும் உறவுகளின் ஏக்கத்திலும் தவிக்கும் தவிப்பு அந்த தட்டாம்பூச்சிகளை ஞாபகப்படுத்துகிறது.



மூன்றுசக்கர சைக்கிள் சிநேகிதன்

வாடகைக்கு சைக்கிள் எடுத்து டபுள்ஸ் வைத்து ஆத்துக்கு சென்று குளித்துவிட்டு வருவோம். பண்டிகை சமயங்களில் ஒரு குறிப்பிட்ட அளவில் முறுக்கை கட்டி அதை சைக்கிளில் வந்தபடியே கடிக்க வேண்டும் என்ற போட்டியிட்டு கொண்டு ஒருவருக்கொருவர் நெருக்கி முட்டி மோதி முறுக்கை கடிக்கும் போட்டி ஆள் கடிக்கும் போட்டியாக கூட சில சமயம் மாறிவிடும்.



தோழர்படை

சின்னவயசில் தோழர்படைகளை சேர்த்துக்கொண்டு இரயில்வே பாலங்களில் காதுவைத்து கேட்பது - தடங்களில் நடந்து செல்வது - முட்புதர்களுக்குள் நாய்குட்டிகள் வளர்த்து ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருநாள் பால் திருடிக்கொண்டு வந்து ஊற்றுவது - இலந்தை பழம் பறிப்பதற்கு சுடுகாட்டுக்குச் செல்வது - மாங்காய் பறித்துதோட்டக்காரனிடம் ஓட்டப்பயிற்சி எடுத்தது - ஆற்றில் யார் சோப்பையோ உபயோகித்துவிட்டு பொசுக்கென்று விறால் அடித்துக்கொண்டு பாய்ந்து சென்று தண்ணீரிலையே மூழ்கிக்கிடப்பது - கிரிக்கெட் விiளாயாடும்போது எதரி அணியோடு தோற்றுவிடப்போகிறோம் என தெரிந்தவுடன் ஆட்டததை ஏமாற்றுவது இப்படி பல பல



படிக்கட்டில் பயணம்

இது கல்லூரி காலத்தை ஞாபகப்படுத்தும். படிக்கட்டில் தொங்கியபடியே பேருந்தில் வந்துகொண்டிருக்கும்போது பாளைங்கோட்டை பேருந்து நிலையத்தை நெருங்கும்போது மட்டும் தலையை உள்ளிளுத்துக்கொண்டு சீப்பு கொண்டு தலைவாரி அழகுபடுத்திக்கொண்டு மறுபடியும் படிக்கட்டுக்கு வந்து அந்த கல்லூரிப்பெண்களை கண்டுகொள்ளாதது போல ஓடும் பஸ்ஸில் இருந்து இறங்கி பின் பஸ் கிளம்பி செல்லும்போது அவர்களை பார்த்து வளப்பம் காட்டிவிட்டு செல்வது.படிக்கட்டில் தொங்கி புத்தகம் கொடுத்து கொடுத்தே சில பெண்களின் இதயத்தில் இடம் பிடித்ததுபடிக்கட்டில் தொங்கியபடியே வந்து உச்சத்தில் பஸ்ஸின் கூரை மீது ஏறி ஆட்டம்போட அதைக்கண்டு ஆத்திரத்தில் டிரைவர் வண்டியை போலிஸ்நிலையத்திற்கு கொண்டு சென்று புகார் கொடுத்தது.
இப்படி ஒவ்வொரு கல்லூரி மாணவர்களுக்கும் படிக்கட்டுப்பயணம் மறக்க முடியாதது.




கடைக்கண் தவம்

பேருந்து திருநெல்வேலி பேருந்து நிலையத்திலிருந்து பாளையங்கோட்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.வண்ணாரப்பேடடையை நெருங்கும்போது அந்த பள்ளி மாணவி ஏறுகிறாள்.
டேய் மஸ்தான் அந்த பொண்ணையே முறைத்து பார்த்துகிட்டு இருப்போம் சரியா - நான்

எதுக்குடா - மஸ்தான்

பாருடா என்ன நடக்குதுன்னு பார்ப்போம் - நான்

விடாமல் பார்க்க ஆரம்பித்தோம் கண் இழந்தவன் இருட்டை மட்டும் பார்த்துக்கொண்டிருப்பது போல.
அந்தப்பெண்ணோ பார்வையை எங்கெல்லாமே திருப்பிவிட்டு எங்களை காணும்போது நாங்கள் அவளையே கவனித்துக்கொண்டிருப்போம். அவளின் முகமெல்லாம் சிவந்துவிட்டது. ஒரு கட்டத்தில் அவளால் எங்களின் பார்வையை சமாளிக்க முடியவில்லை. அழுகின்ற நிலைக்கு வந்துவிட்டாள். அட இதோ கண்ணீரே வந்துவிட்டது.கைக்குட்டையால் கண்ணீரை யாருக்கும் தெரியாமல் துடைக்க ஆரம்பித்துவிட்டாள்

டேய் நிலைமை ரொம்ப மோசமாவுதுடா..நாம அடுத்த ஸ்டாப்புல இறங்கி டீ குடிச்சிட்டு அடுத்த வண்டியபுடிப்போம்டபா..அந்த பொண்ணு அழ ஆரம்பிச்சுடா...

அவசர அவசரமாய் இறங்க ஆரம்பித்தோம்.



மெல்லிய மீசையின் சிநேகிதன்

மீசை வளர ஆரம்பித்த கல்லூரி பருவத்தில் நண்பன் ஒருவன் என்னிடம் டேய் நீ மீசையை எடுடா உனக்கு நல்லாயிருக்கும் என கூறியதை கேட்டு மீசையை அவசரத்தில் எடுத்துவிட அதுவரை மீசையோடு பார்த்த என் கல்லூரி தோழர்கள் - தோழிகள் மீசையில்லா முகத்தை கண்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். வுகுப்பளையில் நான் நுழையம்போது கூட கைக்குட்டையால் முகத்தை துடைப்பது போன்ற பாவனையிலையே உள்ளே நுழைந்தேன்.அந்த செய்கைவேறு அவர்களின் சிரிப்பை மேலும் தூண்டிற்று.
வழக்கமாய் பார்க்கும் அந்த சிநேகிதி என் மீசையில்லா முகத்தை பார்த்துவிடக்கூடாதே என்ற பயத்தில் அவளுடைய கண்களில் இருந்து தப்பித்துக்கொண்டேயிருக்க மதியவேளையில் வராண்டாவில் எதிரில் தோன்றினாள். அவள் சிரித்துவிடக்கூடாதே என்ற பயத்தில் மணி எத்தனை என்று கேட்டு வழிந்தேன். என் மீசையில்லா முகத்தைவிடவும் நான் அசடு வழிந்ததை பார்த்து பார்த்து அவள் சிரித்துக்கொண்டே சென்றாள்.

ரசிகவ் ஞானியார்

6 comments:

ஏஜண்ட் NJ said...

//அந்த பொண்ணையே முறைத்து... விடாமல் பார்க்க ஆரம்பித்தோம்... அவளால் எங்களின் பார்வையை சமாளிக்க முடியவில்லை. அழுகின்ற நிலைக்கு வந்துவிட்டாள்... // - You said.

//என்னையையும் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சிபடுத்துவதே என் தலையாய பணி //

????????

Gnaniyar @ நிலவு நண்பன் said...

அது நிலாக்காலம் நண்பா

இதயம் நெகிழ்வுடன்

ரசிகவ் ஞானியார்

ஏஜண்ட் NJ said...

//... தட்டாம்பூச்சிகளை... பிடித்து அதன் சிறகுகளைபறித்து ஒரு பாட்டிலில் அடைத்து அதன் தவிப்பை ரசிப்போம். இப்பொழுது நான் தனிமையிலும் உறவுகளின் ஏக்கத்திலும் தவிக்கும் தவிப்பு அந்த தட்டாம்பூச்சிகளை ஞாபகப்படுத்துகிறது. //

தெய்வம், நின்று கொல்கிறதாகவே தோண்றுகிறது!

ஏஜண்ட் NJ said...

சரி அதெல்லாம் விடுங்க,

எப்போ கல்யாணம், ஆயிடுச்சா, இல்ல ஆகனுமா!

ஒன்னுமில்ல, கஷ்டகாலம் எப்பவரும்னு தெரிஞ்சுக்கத்தான்!

;-)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

தெரிஞ்சே தீராத துன்பத்தில விழ நான் தயாராக இல்லை

இதயம் நெகிழ்வுடன்

ரசிகவ் ஞானியார்

ஏஜண்ட் NJ said...

கவிஞர் ஆச்சே...
பெண் கொடுக்க மாட்றாங்கன்னு எவ்ளோ நாசூக்கா சொல்றீங்க!!

:-)))

தேன் கூடு