Monday, January 16, 2006

யதார்த்தம் - திரைப்பட விமர்சனம்
மிக அழகான மனதின் உள்ளுணர்வுகளை படம்பிடிக்கின்ற கதை இது. முதல்பாதி முழுவதும் கல்லூரி குறும்புகள் கலாட்டாக்கள் என்று கலகலப்பாய் நகர்கின்றது. பின் பாதி முழுவதும் வாழ்க்கையின் யதார்த்தங்களோடு நடைபெறுகின்ற போராட்டங்களைப்பற்றி சொல்லுகிறது.

உண்மையில் இப்படிப்பட்ட கதையை தைரியமாய் மக்கள் முன் வைத்த இயக்குநரை பாராட்டாமல் இருக்க முடியாது.

கதையின் ஆரம்பமே ஒரு கல்லூரியில் நடைபெறுகின்ற போராட்டத்தோடு கேமிரா நகர்வதைக் காட்டியிருக்கின்றார். போராட்டத்தின்போது சாலை விளக்குகளை கல்லெறிந்து உடைப்பது, பேருந்தை வழிமறிப்பது ,என்று பொதுச்சொத்தை சேதப்படுத்தும் மாணவர்கள் உப்புச் சப்பில்லாத விசயத்துக்கெல்லாம் போராடுகின்ற ஒரு யதார்த்தமான போராட்டத்தை அழகாய் படம்பிடித்துள்ளார் இயக்குநர்.

கேமிரா சுழன்று எல்லா மாணவர்களின் யதார்த்தத்தையும் முக உணர்சிகளையும் காட்டிக்கொண்டே இருப்பது சென்னையிலோ, மதுரையிலோ எங்கோ ஒரு கல்லூரியில் நடைபெறுகின்ற நிஜமான போராட்டத்தைக் காட்டுகின்றது.

இதற்காக இயக்குனர் செய்த தந்திரம் என்ன தெரியுமா? நிஜமாகவே திருநெல்வேலியில் உள்ள ஒரு கல்லூரிக்குச் சென்று அங்குள்ள மாணவர்பேரவை தலைவரிடம் கலந்தாலோசித்து சில மாணவர்களின் உதவியோடு உண்மையான கல்லூரிப்போராட்டத்தையே காட்டியிருக்கிறார். அங்கு படப்பிடிப்பு நடக்கிறது என்று யாருக்குமே தெரியாது கல்லூரி மாணவர்பேரவை தலைவருக்கும் , ஒரு சில மாணவர்களையும் தவிர.

கதை இரண்டு மாணவர்களுக்குள் நடைபெறுகின்ற கைகலப்புகள் , அவர்கள் வகுப்பறையில் செய்கின்ற குறும்புகள் என்று மிகவும் ஜாலியாய் போகிறது கதை.

இவர்களின் அத்துமீறிய குறும்பில் அவமானம் தாங்காமல் அழுதுவிடுகின்ற அந்த தமிழ் ஆசிரியர் ஒரு கட்டத்தில் "என்னுடைய பதவிக்கு நீங்க மதிப்பு கொடுக்க வேண்டாம்பா..எனக்கு உங்க அப்பா வயசு இருக்கும். அந்த வயசுக்காவது மதிப்பு கொடுங்கப்பா "என்று கூறி கண்கலங்கும்போது மாணவர்கள் மொத்தமாய் எழுந்து நின்று மன்னிப்பு கோருகின்ற காட்சி மிகவும் உணர்ச்சிமயமான காட்சி.

மாணவர்கள் இளமையின் துடிப்பில் சேட்டைகள் செய்தாலும் அவர்களுக்குள்ளும் ஒரு நல்ல உணர்வுகள் உறங்கிக்கொண்டிருக்கிறது என்பதை அழகாய் விளக்கும் காட்சி அது.


அந்த சூரஜ் மற்றும் கோபி என்ற இரண்டு மாணவர்களுக்குள்ளும் கல்லூரியில் இடம் கிடைப்பது முதல் - படிப்பு விளையாட்டு காதல் என்று எல்லா விசயத்திலும் மோதல் ஏற்பட்டுக்கொண்டு இருக்கும்

சூரஜ் எப்போதுமே தன்னுடைய கொள்கையில் விடாப்பிடியாக இருப்பான். தான் நினைத்ததை அடைந்தே தீரவேண்டும் என கடுமையாக போராடுபவன்.
ஆகவே அவன் எல்லா விசயத்திலும் வெற்றிப்பெற்றுக்கொண்டே இருப்பான். இன்னொரு மாணவன் கோபிக்கு அதனால் அவன் மீது பொறாமை

கல்லூரியில் படிக்கும் நிஷா வின் மீது இருவருக்குமே காதல் வர அந்தப்பெண்ணோ சூரஜ்ஜை விரும்புகிறாள்.

தன்னுடையை காதல் விசயத்திலும் சூரஜ் நம்மை ஜெயித்துவிட்டானே என்று கோபிக்கு அவன் மீதான கோபம் - வெறுப்பு மேலும் அதிகமாகியது.

சூரஜ் - நிஷாவின் காதல் காட்சிகளும் மிகவும் யதார்த்தமாய் படம் பிடிக்கப்பட்டிருக்கும் தயங்கி தயங்கி நிஷாவிடம் அவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லுவது,

அவளுக்கு குட்மார்னிங் சொல்வதற்காகவே அவள் வருவதற்கு முன்பே கல்லூரிக்கு வந்து அவள் வரும் பாதையில் யதேச்சையாய் நிற்பதுபோல் நின்று குட்மார்னிங் சொல்வது,

நிஷா தன் குடும்பத்தோடு சினிமா தியேட்டருக்கு வருகிறாள் என்று தெரிந்து அந்த தியேட்டருக்கு வந்து இடைவேளையில் அவள் குடும்பத்துடன் அறிமுகமாவது,

கல்லூரி விடுதியில் குடித்துவிட்டு அவள் பெயரை சொல்லி உளருவது என்று படு யதார்த்தமான காட்சிகள். இந்தப்படத்திற்கு வசனகர்த்தாவே யதார்த்தம்தான்.

அவர்களுடைய கல்லூரி வாழ்க்கை முடிந்து அவர்கள் வாழ்க்கைக்குள் நுழைகிறார்கள். சூரஜ் பெரிய தொழில் அதிபராகின்றான். கோபியோ ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிகின்றான்.

சூரஜின் வளர்ச்சியை எப்படியாவது தடுத்த நிறுத்த வேண்டும் என நினைத்து அவனுடைய அலுவலகத்தின் முக்கிய தகவல்கள் உள்ளடக்கிய கணிப்பொறியில் வைரஸைப் புகுத்தி விடுகின்றான்.

இப்படியான சின்ன சின்ன முயற்சிகளில் சூரஜ் ஜெயித்துவிட, பின்னர் அவனுடைய தொழில் முறை எதிரிகளோடு கைகோர்த்துக்கொண்டு அவனுடைய வெற்றிக்கு காரணம் அவனுடய தன்னம்பிக்கையை காயப்படுத்துவது என்று திட்டமிட்டு அவனுடைய தன்னம்பிக்கையை - முயற்சியை எப்படி மனரீதியாக அவனை சிதைக்கின்றான் என்பதுதான் கதை.


தன்னம்பிக்கை இழந்து மனரீதியாக ஒடிக்கப்பட்ட அவனுக்கு அவனுடைய காதலி நிஷா கொஞ்சம் கொஞ்சமாய் அவனுக்கு தைரியம் கொடுத்து அவனுக்கு வெற்றிகள் தேடிக்கொடுப்பாள். இதிலிருந்து இயக்குனர் காதல் தன்னம்பிக்கையைத் தரும் என்று மறைமுகமாக சொல்லியிருக்கிறார்

காதலி - சூரஜ்க்கு ஒரு கதை சொல்லுவாள் அந்த கதை மிகவும் சுவாரசியமானது.

ஜெயிலில் இருந்து தப்பி வந்த கைதி ஒரு போலிஸைக்கண்டதும் வழியில் கிடக்கும் சைக்கிளை எடுத்துக் வேகமாய் ஓட்டிச்செல்ல செல்லும் வழியில் ஒரு கணம் அந்தக் கைதி தனக்கு சைக்கிள் ஓட்டத்தெரியாதே எப்படி நாம் சைக்கிள் ஓட்டுகிறோம் என்று உணரும்போது சைக்கிள் ஓட்டமுடியாமல் தடுமாறி கீழே விழுந்து போலிஸாரிடம் மாட்டிக்கொள்வான்.

அவனுடைய லட்சியமும், எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்ற வெறியும் அவனை சைக்கிள் ஓட்டவைத்தது என்ற கதையின் மூலம் மறுபடியும் சூரஜ்க்கு புத்துணர்ச்சி கொடுத்து அவனை கொஞ்சம் கொஞ்சமாய் எப்படி வெற்றியடையச்செய்கிறாள் என்பதை திரையில் காணுங்கள்.


திருப்பிக் கொடுப்போம்
திருப்பிக்கொடுப்போம்
இறைவன் தருகின்ற சொர்க்கம் கூட
திருப்பிக் கொடுப்போம்

திரும்பி வருவோம்
திரும்பி வருவோம்
இன்னொரு ஜென்மமும் இங்கேயே
திரும்பி வருவோம்.

என்று வகுப்பறையில் வைத்து கல்லூரி மாணவர்கள் பாடும் பாடல் அனைவர்களுக்கும் தங்களது கல்லூரியை ஞாபகபடுத்தும்.

கதையில் பாடல்கள் கதையின் சூழலோடு அமைந்துள்ளது. கல்லூரி கலை விழாக்களில் பாடுகின்ற பாட்டு, கல்லூரிப்போரட்டத்தின் போது மாணவர்கள் பாடுகின்ற கானா பாட்டு, மற்றும் வகுப்பறையில் பாடுகின்ற பாட்டு என்று 3 பாட்டுக்கள்தான்.

அரிவாள் துப்பாக்கி களுக்கு மத்தியில் தன்னம்பிக்கையை முறியடித்து தோல்வியுற வைப்பது என்பது ஒரு வித்தியாசமான சிந்தனை. கண்டிப்பாய் பார்க்க வேண்டிய படம்


யதார்த்தம் ஒரு பதார்த்தம்.

- ரசிகவ் ஞானியார்

5 comments:

கீதா said...

"தன்னம்பிக்கையை முறியடித்து தோல்வியுற வைப்பது என்பது ஒரு வித்தியாசமான சிந்தனை"

இது ஒரு ராணுவ யுக்தி. கொரியன் போரில் தம்மிடம் சிக்கிய அமேரிக்க வீரர்களை இந்த முறையில்தான் கொரியர்கள் அழித்தனர்.

negativity kills.

அமேரிக்க கைதிகளை கொரியர்கள் துன்புறுத்தவில்லை.. மாறாக

1. அமேரிக்கர்களுக்குள் ஒற்றுமையில்லாமல் இருக்கச்செய்தனர்.
2. துக்க செய்திகள் தவிர வேறு எதையும் சொல்வதில்லை.
3. confessing the mistakes they did. இதனால் அவர்களின் வட்டத்துக்குள்ளேயே அவர்களின் நன்மதிப்பு மேலும் குறைந்தது. ஒருவர் மேல் ஒருவருக்கு வெறுப்பு வளர்ந்தது.

இப்படி வாழ்க்கையில் எந்த பிடிப்புமே இல்லது போக, தன்னம்பிக்கை குறைந்து, வாழும் எண்ணம் அற்று அமேரிக்கர்கள் தாங்களாகவே தங்கள் மரணத்தை தேடிக்கொண்டனர்.

சமீபத்தில் ஒரு புத்தகத்தில் படித்தேன். பிரம்மிப்பாக உள்ளது.

"how full is your bucket" - tom & donald

அன்புடன்
கீதா

நிலவு நண்பன் said...

நன்றி கீதா..

பின் குறிப்பு : இந்தக்கதை இன்னும் படமாக்கப்படவில்லை . என் மனசாட்சிதான் இயக்குநர். ஆகவே நல்ல இயக்குநர்கள் அணுகவும்..இந்தக்கதையை தயவுசெய்து சுட்டுடாதீங்கப்பா..? :)

கீதா said...

"என் மனசாட்சிதான் இயக்குநர்."

ரொம்ப நல்ல இயக்குனர். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

"இந்தக்கதையை தயவுசெய்து சுட்டுடாதீங்கப்பா"

அதுக்கு உத்திரவாதம் கிடையாதுங்க.. ஓடிட்டிருக்கும் படத்துலயே கதையை சுடறாங்க...

அன்புடன்
கீதா

G.Ragavan said...

அட இப்படியொரு படமா? இத எங்க பாக்குறதுங்க...இதெல்லாம் பெங்களூருல வந்த மாதிரியே தெரியலையே! இங்க ரங்க ஷங்கரான்னு ஒரு நல்ல நாடக மன்றம் இருக்கு. அங்க பலதரப்பட்ட நாடகக் கம்பெனிகள் நல்ல நாடகங்கள் போடும். அதில் நான் பார்த்து மகிழ்ந்த ஒரு நாடகம் கடைசி ஒத்திகை (The Final Rehearsal). அது நடிகனாக முயன்று தோற்றுப் போன ஒரு தன்னம்பிக்கையற்றவனின் கதை. அதுவும் தனிநபர் நடிப்பு. மிகச் சிறப்பாக இருக்கும். அதை உருவாக்கி நடிக்கும் பவன் குமார் இப்பொழுது கொஞ்சம் பிரபலமாகியிருக்கிறார் (நாடக வட்டத்தில்).

நிலவு நண்பன் said...

//ரொம்ப நல்ல இயக்குனர். வெற்றி பெற வாழ்த்துக்கள்.//


நன்றி கீதா

உங்களையெல்லாம் நம்பிதான் இந்தப்படத்தை எடுக்கப்போகிறேன் ஆதரவு கொடுக்கணும் என்ன..?

யாராவது டைரக்டர் இருந்தா என்கிட்ட அணுகுங்கபா...?


//அட இப்படியொரு படமா? இத எங்க பாக்குறதுங்க...இதெல்லாம் பெங்களூருல வந்த மாதிரியே தெரியலையே!//

அட நீங்களும் ஏமாந்துட்டிங்களா..இந்தப்படம் இன்னும் வெளி வரவே இல்லை ராகலா..

முன்பதிலைப்படிங்க கொஞ்சம்

தேன் கூடு