Saturday, May 07, 2005
காலம் கடந்த வலி
நான்
தவழ்ந்து எழுந்து
நடக்க முயற்சித்து
தோல்வியுறும்பொழுதெல்லாம்..
நீயும்நடக்க முயன்று
தடுமாறி விழுந்து
பாசாங்கு செய்தாயம்மா?
அந்த பாசாங்குக்காகவாவது...
----------------------
அடுத்த வீட்டு பையனை
அடித்துவிட்டேனென்று
புகார் கேட்டு வந்த
பூலான்தேவிகளிடமெல்லாம்
வக்கீலாய் மாறி
வக்காலத்து வாங்குவாயம்மா..?
அந்த வக்காலத்துக்காகவாவது...
----------------------
திருமணக்கூட்டம் ஒன்றில் - நீ
சபையில் அமர்ந்திருந்த சமயத்தில்...
உன் முகத்தில்
மூத்திரம் கழித்தபோது
முகம் சுழிக்காமல்
மழைபெய்தது போல ரசித்தாயம்மா?
அந்த ரசிப்புக்காகவாவது...
----------------------
நான்
அடுப்பங்கரையில் ஒருநாள்
ஆய் கழித்ததற்காய்..
அடித்த அப்பாவிடம்
இரண்டு நாள்
பேசாமல் இருந்தாயம்மா?
அந்த மௌனத்திற்காகவாவது...
----------------------
சின்ன சின்ன சிறுபிள்ளை
தவறுக்கெல்லாம்
அடித்துவிட்டுஅரவணைப்பாய!;
சிலசமயம் செல்லமாய்
அரவணைத்துக்கொண்டே
அடிப்பாய்!
அந்த அரவணைப்புக்காகவாவது...
----------------------
ஓர் வெயில் நேர
ரேஷன்கடை வரிசையில்,
உன் பாதம்
எனக்கு செருப்பாகவும்...
உனக்கு செருப்பாய்
பூமியையும் அணிந்துகொண்டு...
சர்க்கரை வாங்குவதற்காய்
காத்திருந்தாயே ஞாபகமிருக்கிறதா?
அப்பொழுது
சர்க்கரையை விடவும்
எனக்கு இனித்தது
உன்நெற்றி வியர்வைதான் தெரியுமா?
அந்த வியர்வைக்காகவாவது...
----------------------
குடம் ஒரு கையும்
குழந்தை ஒரு கையுமாய்
சுமந்துகொண்டு
தெருகுழாயுக்கும் - வீட்டிற்கும்
தெண்டுல்கரைவிடவும் அதிகமாய்
தெருவில் நீ எடுத்த
ரன்களின் வலியை..
அந்த இரவில் - உன்
விரல்களுக்கு கூட தெரியாமல்
கால்வலியில் துடித்தாயே
அந்த துடிப்பில்
அறிந்து கொண்டேன்.
அந்த துடிப்பு
இருபத்தாறு வருடம் கழித்து
இபபொழுது வலிக்கிறதம்மா..?
அந்த துடிப்புக்காகவாவது...
----------------------
உன்
பிரசவ கதறலை
பக்கத்து வீட்டு அம்மா
கதையாய் சொன்னபோது..
குடும்பக்கட்டுபாடு செய்தவனின்
தலைப்பிள்ளை...
தற்கொலை செய்ததைபோல,
எத்துணை வருத்தப்பட்டேன் தெரியுமா?
உனக்கு
வலிக்குமென தெரிந்திருந்தால்
நான்
விழித்திருக்கவேமாட்டேனேம்மா...?
அந்தவலிக்காகவாவது...
----------------------
இத்தனை "காகவாவது"
உன்னை
கடைசிவரை காப்பாற்றுவேன் அம்மா!
----------------------
நான்
தாய் - தந்தையரை மதியேன்
என கூறிய
ஜோதிடன் வாக்கை நம்பாதே!
தாயின் பிடியிலிருக்கும் குழந்தை
தான் நழுவிவிடமாட்டோம் என
எத்துணை நம்பிக்கையாயிருக்கிதோ?
அந்த நம்பிக்கை
என் மீது வை அம்மா!
----------------------
என்சுவாசத்திற்கு
வாயுமண்டலத்திலிருந்து
காற்று கிடைக்கும் வரையிலும்
கண்கலங்காமல்
உன்னைகாப்பாற்றுவேன் அம்மா!
----------------------
ரசிகவ் ஞானியார்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
excellent... no other word is there to say about this poem.
//siragugal said...
excellent... no other word is there to say about this poem. //
நன்றி சிறகுகள்..
அற்புதமான படைப்பு. பாராட்டுவதற்கு வார்த்தை இல்லை.
Post a Comment