Wednesday, May 04, 2005

இதய உதிர் காலம்

இது
கனவா நிஜமா
அட அவளேதான்

நீ
அடுத்தவன் மனைவியாகிவிட்டபோதிலும்
உன்னை
ஒரேஒரு முறை
என்னவளே என
அழைத்துக்கொள்கிறேன்
"என்னவளே"
என்னவளாக இருந்தவளே

உன்
பழைய சான்றிதழ் வாங்க
கல்லூரிக்கு வந்திருந்தாய்
உன் கணவனுடன்

தயவுசெய்து உன் கணவனை
அந்த
ஆலமரம் பக்கம்
அலையவிட்டுவிடாதே
நம் பெயர்கள்
பொறிக்கப்பட்டிருக்கலாம்

அதோ அதோ
தூரத்தில் ஓர் காகிதம்
என்
கனவுகளைப்போலவே
காற்றில் படபடத்துக்கொண்டிருக்கிறது
ஒரு வேளை
நான் எழுதி
நீ கிழித்துப்போட்ட
காகிதத்துண்டுகளாய் இருக்குமோ?
"திருமணத்திற்குப் பிறகு
மீண்டும் இதே கல்லூரிக்கு
வருவோமா"
மூன்றாவது மாடியிலிருந்து
கோபத்தில் நீ வீசியெறிந்த
என்னுடைய பேனாவைப் போலவே
மண்ணுக்குள் புதைந்து விட்டது
நீ கூறிய அந்த வார்த்தைகள்...

ஞாபகமிருக்கிறதாடி அந்த
குப்பைத்தொட்டி ?
நீ
அசைத்து அசைத்து
என் கவனம் திருப்புவாயே
அந்த குப்பைத்தொட்டி
ஞாபகமிருக்கிறதா?

அதனருகே இதோ
உன் கணவன் செல்கிறான்
அட
உன்னைப் போல்தான் அவனும்

நீ
அதில் என் இதயம் எரித்துப்போட்டாய்
அவனோ
சிகரெட் சாம்பலைப் போடுகிறான்

குப்பைத்தொட்டியை அசைத்து என்
மனதில் விழுந்தாய்
அது ஏனடி
என் மனதைப் பிடுங்கி
குப்பையில் எறிந்தாய்?

உன் வாகனம்
நின்ற இடத்தையெல்லாம்
உன் கணவனுக்குக் காட்டுகிறாய்

உன் இதயம் சென்ற இடத்தை
காட்டமறுத்துவிட்டாயோ?
நம் இருவருக்கும்
காதல் என்று
பறைசாற்றிய அந்த
கேன்டீன் கிறுக்கல் கவிதைகளை
உன் கணவன்
உற்றுநோக்குகிறான்
அந்த
தமிழ் வாத்தியாரைப்போலவே

அய்யோ
கீழே எழுதப்பட்டுள்ள
நம் பெயரைப் பார்த்துவிடுவானோ?.

பார்த்தேவிட்டான்...
நல்லவேளை
என் பெயர் மட்டும்தான்..
உன் பெயர் இல்லை

அவனுக்கெப்படி தெரியும்
உன் கல்யாண பத்திரிக்கை
கண்ட அன்றே
ஓடி வந்து
கண்ணீராலும் தண்ணீராலும்
உன்பெயர் நான் அழித்த கதை

பெயரை அழித்ததால் நீ
பிழைத்துக்கொண்டாய்

உன் பெயர் மட்டும்தானடி
இப்பொழுது என்னை
பிழைக்கவைத்துக்கொண்டிருக்கிறது

நீண்டநேரத்திற்குபிறகு
நீ என்னை
உற்றுநோக்குகிறாய்

நானும் நோக்குகிறேன்

நாம் இருவரும் திரும்பி
அதோ
நாம் ஒன்றாய் சென்ற
கல்லூரி வராண்டாவை
நோக்குகிறோம்

அங்கே
யாரோ உன்னைப்போல
யாரோ என்னைப்போல

யார்வருவாரோ
உன் கணவன்போல..?

வெயிலில் நின்று
நெடுநேரமாய்ப் பிச்சையெடுத்த
காசுகள் எல்லாம்
செல்லாதவை என அறிந்து
கதறும் பிச்சைக்காரனைப்போல்தான்
உன்னை இழந்து
நான்படும் அவதிகளும்

மறுபடியும்
நினைப்பதில் நியாயமில்லை
மறப்பதற்கும் மனசுமில்லை

ஆகவே
ஒரு
ஆறுதலுக்காக
அடிக்கடி வந்துகொண்டேயிருப்பேன்
இந்த கல்லூரிக்கு

நாம் பேசிச் சிரித்த
அந்த
ஆலமரத்தின்
அத்தனை இலைகளும்-கூடவே
என் இதயமும்
உதிர்ந்து போகும்வரை...

- ரசிகவ் ஞானியார்

8 comments:

Muthu said...

ரசிகவ்,
கவிதையைப் பார்த்தால் நடந்ததெல்லாம் நிஜம்போல் தோன்றுகிறது :-).

Muthu said...

ரசிகவ்,
அழகியே தீயே படத்தில் நடித்திருப்பது நீங்கள்தானா ? , உங்கள் போட்டோ அந்த கதாநாயன் மாதிரியே இருக்கிறது அதுதான் கேட்கிறேன்.

பத்ம ப்ரியா said...

Hi Rasigav,
Dont name your autobiography as a poem. I agree what muthu said regarding your poem .

Anonymous said...

Hi Rasigav,

Yes.. it's really awesome awesome... u r grt Man..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Muthu said...

ரசிகவ்,
கவிதையைப் பார்த்தால் நடந்ததெல்லாம் நிஜம்போல் தோன்றுகிறது :-)//

நிஜம்தான் ஆனால் என் வாழ்க்கையில் அல்ல முத்து

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// Muthu said...
ரசிகவ்,
அழகியே தீயே படத்தில் நடித்திருப்பது நீங்கள்தானா ? , உங்கள் போட்டோ அந்த கதாநாயன் மாதிரியே இருக்கிறது அதுதான் கேட்கிறேன்.//

he is my cousin brother.....

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//siragugal said...

Hi Rasigav,
Dont name your autobiography as a poem. I agree what muthu said regarding your poem .//

:) same reply what i replied to Muthu...

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// Silambarasan MCA said...

Hi Rasigav,

Yes.. it's really awesome awesome... u r grt Man..//

thanks simbhu,, :)

தேன் கூடு