Monday, May 09, 2005

வலி

சமுதாயத்தின்
சம்மட்டி வார்த்தைகளில் ...
இதயம்
கொஞ்சம் கொஞ்சமாய்
நொறுங்கும்பொழுது...

அந்த வார்த்தைதான்
ஆன்மாவிற்குள் ...
அமிர்தாஞ்சன் தடவுகிறது !
-----------------
''அவசரப்படாதீங்க சார்
என்ன கலெக்டர்
வேலைக்கா போறீங்க''
துணி தேய்ப்பவன் ...
மனசையும்
தேய்த்து விடுகிறான் !
சட்டை கசங்காமல் ...
இதயம் கசங்கியபடி ...

-----------------
'"சீக்கிரம்
ஷேவ் பண்ணுப்பா''

''ஆபிஸுþக்கு நேரமாச்சோ ''

கிண்டலடித்தபடியே ...
இதயத்தையும் வெட்டினான்
சலூன் கடைக்காரன்!
விழுந்துவிட்டது
மயிரும் ...மனசும் ...

-----------------

''தண்டச்சோறு ''
அப்பாவின்
தாரகமந்திரம் வேறு...
தர்மசங்கடமாக்குகிறது!
-----------------
இப்படி
சமுதாயத்தின்
சம்மட்டி வார்த்தைகளில் ...
இதயம்
கொஞ்சம் கொஞ்சமாய்
நொறுங்கும்பொழுது...

அந்த வார்த்தைதான்
ஆன்மாவிற்குள்.........
அமிர்தாஞ்சன் தடவுகிறது !

-----------------
டிவியின் ரிமோட்டில் .....
விரல்கள்
விளையாடிக்கொண்டிருக்கும்பொழுது,
''ஒரு சானல்ல
வையேண்டா
சும்மா இருந்தாலே இப்படித்தான் ''
தங்கையும் விளையாட்டாய்.....
தாக்குகிறாள்!
-----------------

''உன் மகன் கவர்மெண்ட்லயா
வேலை பார்க்குறான்''
தன்மகனின்
சுயசரிசை பாடுவதுபோல் - என்னைச்
சுடுகிறது சொந்தங்கள் !
-----------------
''நான்மட்டும்
உழைக்கிறேனடா '
'குத்திக்காட்டுகிறான்......
கூடப்பிறந்தவன்!
-----------------
நேர்முகத்தேர்வு ஆலோசனை
நண்பர்களிடம் கேட்டால் ,
''வெள்ளிவிழா எப்போதுடா ?''
வெட்கப்பட வைக்கிறார்கள்!
-----------------
இப்படி
சமுதாயத்தின்
சம்மட்டி வார்த்தைகளில் ...
இதயம்
கொஞ்சம்கொஞ்சமாய் நொறுங்கும்பொழுது...

நான் சம்பாதிக்காவிட்டாலும் -
வெயிலில் வேலை தேடி
சலித்து வருகின்ற என்னிடம்
நீ கேட்கும் ...
''சாப்பிட்டியாடா'' என்ற
வார்த்தையில்தானம்மா நான்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன் !
-----------------
ஆம்
இந்தியப் பட்டதாரிகளுக்கு
வேலையை விடவும் ...
அறுதல் அவசியம்!
-----------------
அகவே
அப்ளிகேஷனுக்காக ....
அப்பாவின் பாக்கெட்டைத்
திருடும் அம்மா!
-----------------
நீ
அடிக்கடி
கேட்டுக்கொண்டேயிருப்பாயா
''சாப்பிட்டியாடா'' என்று?
நான் அழாமல் இருப்பேன்

- ரசிகவ் ஞானியார்

1 comment:

Anonymous said...

காசுவேண்டுமா? எனக் கேட்டு
குத்தவில்லையா காதலி?

தேன் கூடு