1995 ம் வருடம் என நினைக்கிறேன். நண்பர்களோடு திருநெல்வேலி டவுணில் படம் பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டிருக்கிறேன்.
குசும்புகளும் குறும்புகளுமாய் திரிந்து கொண்டிருந்த பருவம் அது. எதிர் இருக்கையில் ஒரு வழுக்கை தலை பெரியவர் அமர்ந்திருக்கிறார் நாங்கள் சுமார் 6 அல்லது 7 பேர். சும்மாயிருக்குமா குசும்பு மனசு
"டேய் என்னடா கண் ரொம்ப கூசுது "- நான்
"இல்லடா எவனோ கண்ணாடியை கொண்டு வர்றான்னு நினைக்கிறேன் "- மற்றொருவன்
பின் லேசாக அவர் தலையில் ஒரு கொட்டு கொட்டி விட்டு எதுவுமே நடக்காததுபோல் அமர்ந்து கொண்டிருந்தோம்.
அவர் திரும்பி பார்த்து முறைத்துவிட்டு திரும்பிவிட்டார்
"என்னடா சொட்டைக்கு சொரணையே இல்ல"
"ஹா ஹா ஹா" - இளமை திமிரில் சிரிக்கிறோம்
அவர் இறங்குவதற்குண்டான நிறுத்தம் வந்துவிட அவர் இறங்கும் சமயத்தில்
"தம்பி நானும் உங்கள மாதிரிதான் முடியெல்லாம் அதிகமா எப்போதும் சீப்பும் கையுமா அலைவேன்...
ம் ... ம் .... இன்னிக்கு நான்.... நாளைக்கு நீங்க ...."
என முணுமுணுத்துக்கொண்டே இறங்கிவிட எனக்கு மனசு ரொம்பவும் கஷ்டமாகிவிட்டது
இந்த தருணத்தில் என்னுடைய கல்லூரி ஆசிரியர் கூறியது ஞாபகத்திற்கு வருகிறது
மனிதன் நல்லவன்தான்
மனிதர்கள் நல்லவர்களல்ல
- ஆசிரியர் ரபீக்
இயற்பியல் துறை - சதக்கத்துல்லா அப்பா கல்லூரி
நானோ அல்லது நீங்களோ தனியாக சென்றுபாருங்கள் மிகவும் அமைதியாய் சென்று வருவோம்..அந்த நேரத்தில் கிண்டல் கேலி எதுவுமே இருக்காது
அதுவே
கொஞ்சம் கூட்டம் சேர்ந்தவுடன் இரத்தம் முறுக்கேறி நண்பர்களுக்கு மத்தியில் ஒரு ஹீரோயிசத்தை காட்டுவதற்காக குசும்பு - கிண்டல்கள் செய்ய ஆரம்பிப்போம்.
ஆம் உண்மைதான்
மனிதன் நல்லவன்தான்
மனிதர்கள் நல்லவர்களல்ல
ஒரு
"கள்" சேரந்தவுடன்
போதை வந்துவிடுகிறதோ?
இப்பொழுது குளித்துவிட்டு தலைதுவட்டுகின்ற ஒவ்வொரு காலைப்பொழுதிலும் கையில்
உதிர்ந்து வருகின்ற முடிகளை பார்க்கும்பொழுதெல்லாம் அந்தப் பெரியவரின் குரல் வந்து ஒலிக்கிறது.
"ம் .. ம் .. இன்னிக்கு நான் நாளைக்கு நீங்க"
"இன்னிக்கு நான் நாளைக்கு நீங்க"
இதயம் நெகிழ்வுடன்
- ரசிகவ் ஞானியார்
2 comments:
பதிவு உண்மை பேசுகிறது...
மனிதன் நல்லவந்தான்
மனிதர்கள் நல்லவர்கள் இல்லை
விடலைப் பருவத்திற்கு ஒரு உதாரணம் தந்தது போல அரசியல் கும்பல் பற்றி ஒரு பதிவு தாருங்கள்
//
Go.Ganesh said...
பதிவு உண்மை பேசுகிறது...
மனிதன் நல்லவந்தான்
மனிதர்கள் நல்லவர்கள் இல்லை
விடலைப் பருவத்திற்கு ஒரு உதாரணம் தந்தது போல அரசியல் கும்பல் பற்றி ஒரு பதிவு தாருங்கள் //
அந்த அனுபவம் இல்லையே கணேஷ்...அனுபவம் ஏற்படும் என்ற நம்பிக்கையிருக்கிறது..
Post a Comment