Saturday, September 10, 2005

விக் வைக்கப்பட்ட இதயம்




நேற்று 09-09-2005 மதியம் நான் எனது ப்ளாட்டிலிருந்து இறங்கி வந்துகொண்டிருக்கிறேன்.. கீழ் ப்ளாட்டிலிருக்கும் நண்பர்கள் முன்னால் சென்று கொண்டிருக்கிறார்கள்..

யாருக்கும் தெரியாதுடா...

- அந்த 30 வயது மதிக்கத்தக்க வழுக்கை தலை இளைஞன் நண்பனிடம் கூறிக்கொண்டே முதல் மாடியிலிருந்து இறங்குகிறான்.

அதுவும் என் காதுகளுக்கா கேட்க வேண்டும்..? உற்றுக்கேட்டேன்..

(இப்பொழுதெல்லாம் யார் பேசினாலும் உற்று கவனிக்க ஆரம்பித்து விடுகிறேன்..தயவுசெய்து என் பக்கம் வரும்போது பேச்ச குறைங்கப்பா.. பேச்ச குறைங்கப்பா..இல்லையென்றால் என் பேனா பிரசவமடைந்துவிடுகிறது.)

அந்த இளைஞன் தொடர்கிறான் பக்கத்தில் வந்துகொண்டிருக்கும் தனது நண்பனிடம்..

இல்லைடா பொண்ணுவீட்டுல போட்டோ கேட்டாங்க நான் தலையில விக் வச்ச போட்டோவை கொடுத்தேன்...அவங்களுக்கு அது விக்குன்னே தெரியல..

( நீ வைத்த
விக்கில்..
வீக்காகிப்போனதடா
அந்தப் பொண்ணின் இதயம்! )


டேய் என்னடா சொல்ற..அந்தப்பொண்ணுக்காவது தெரியுமாடா..
- அந்த நண்பன் ஆர்வமாய் கேட்கிறான்

( கல்யாணத்துக்கு முந்தைய நாளே தெரிஞ்சா ஓடியிருப்பாளே?..)

கேளுடா முதல்ல..நான் பொண்ணுகிட்ட கல்யாணம் முடிஞ்ச முதல்நாள் வழுக்கைதலையோட உள்ள போட்டோவை காட்டுனேன்டா..அவ உடனே யாருங்க இதுன்னு என்கிட்டேயே கேட்டா

(நல்லவேளை இந்த அங்கிள் யாருன்னு கேட்காம விட்டாளே..)

அந்த நண்பன் சிரிக்கிறான்....அப்புறம்..சொன்னியா இல்லையாடா..?

எனக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை..அடப்பாவி ஏமாத்தியாடா கல்யாணம் கட்டியிருக்க? மனசுக்குள் புலம்பினேன்..

( மனசுக்குள்தான்பா புலம்ப முடியும்..அதை அவன்கிட்ட கேட்டா அடிதான் விழும் )

அப்புறம் என்ன கொஞ்ச நேரம் ஒரு மாதிரியா இருந்தா..அப்புறம் சமாதானமாயிட்டா..ஆனா அவங்க வீட்டுல யாருக்கும் தெரியாதுடா..என்று கூறிக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறார்..

( நீ
விக் வைத்தது
உன்
மண்டையில் அல்லடா
மணப்பெண்ணின் நம்பிக்கையில்.. )

இதுக்குமேலும் அவர்களை ஒட்டி செல்வது பின்தொடர்;வதும் நாகரீகமில்லை..-என்று நினைத்து அவசர அவசரமாய் அவர்களை முந்திக்கொண்டு சென்றுவிட்டேன்.

( முந்திச் சென்றாலும் என் நினைவுகள் பின்னோகிச் சென்று அவன் வழுக்கைத் தலையில் அமர்ந்து விவாதிக்கத் தொடங்கிற்று )

கல்யாணம்ங்கிறது எவ்வளவு பெரிய விசயம். கடைசிவரை ஒருவருக்கொருவர் நம்பிக்கையோடு வாழவேண்டிய வாழ்க்கையல்லவா? ஆரம்பமே வழுக்கலா..? இப்படி ஈசியா ஏமாத்துறாங்களப்பா..? ச்சே அந்தப்பொண்ணோட மனசுல எந்த அளவிற்கு கற்பனை இருக்கும்..

அந்த இளைஞன் கல்யாணத்திற்கு முந்தியே சொல்லியிருக்கவேண்டும். கல்யாணத்திற்கு பிறகு சொன்னால் அந்த பெண்ணால் ஏதும் செய்யமுடியாது - அவள் நம்மை விட்டு போகமுடியாது என்ற திமிரில் இருந்துவிட்டானோ..?

இல்லை அந்த வழுக்கைதலையால் அவமானப்பட்டு சொல்லமுடியாமல் தன்னம்பிக்கை இழந்து துடித்துப்போய்; கல்யாணம் முடிந்தபிறகு மனசாட்சிக்குப்பயந்து சொல்லியிருக்கிறான்.. அவன் மீதும் பரிதாபமாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய..?

ஆனால் அந்தப்பெண்ணின் நிலையை நினைத்துப்பாருங்கள்..தன் கணவனாக வரப்போகிறவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கற்பனையில் இருந்தவளின் மனம் எந்த அளவிற்கு துடித்துப்போயிருக்கும்..?

சரி வேறு என்ன செய்ய..? கல்யாணம் முடிந்துவிட்டது நம் தலைவிதி அவ்வளவுதான் என நினைத்து சமாதானப்பட்டிருப்பாளோ..?

வயது ஆக ஆக முடி குறைந்து கொண்டே வருவது இயற்கைதானே. அது ஒவ்வொருவரின் பாரம்பரிய முடிகளின் தன்மையைப்பொறுத்தது சிலருக்கு இளமையிலையே வந்துவிடுகிறது. இளவயதில் தலை வழுக்கை அடையும்பொழுதுதான் சமூகத்தின் - நண்பர்களின் ஏளனப் பேச்சுக்களின் காரம் தாங்க முடியாமல் அந்த இளைஞன் தன்னம்பிக்கையை இழக்க ஆரம்பிக்கிறான்..

( ஒவ்வொருநாள் குளியலின் போதும் உதிர்ந்து துண்டில் ஒட்டிக்கொண்டிருக்கும் முடிகளை நினைத்தால் பயமாக இருக்குப்பா..முடி எல்லாம் உதிர்ந்து போறதுக்குள்ளே கல்யாணத்தை முடிச்சிறனும்)

நம்மை போன்ற இளைஞர்கள் விஜய் ஸ்டைல் , அஜீத் ஸ்டைல் என்று ஹேர் ஸ்டைலை மாற்றிக்கொண்டு வரும்போது நமக்கு மட்டும் முடி இப்படி மொட்டையாகிப்போய்விட்டதே என்று வருத்தப்பட ஆரம்பிக்கிறான்..

( என்னுடைய ஹேர்ஸ்டைல் ரஜினி மாதிரி , சத்யராஜ் மாதிரி இருக்குன்னு பாஸிடிவ்வா நினைச்சு அவன் சமாதானப்பட்டுக்கொள்ள வேண்டியதுதானே? )
( கிளம்பிட்டாங்கப்பா ரஜினி ரசிகர்கள்)

ஆனால் அதற்காக இப்படி ஏமாற்றிதான் திருமணம் செய்யவேண்டுமா..? உண்மையை சொல்லி திருமணம் முடித்திருக்கலாமே..? ஏனென்றால் அந்த கணவன் - மனைவிக்கிடையே சச்சரவுகள் வரக்கூடிய நேரத்தில் அந்த மனைவி நீங்க என்னய ஏமாத்திதானே கல்யாணம் பண்ணிகிட்டீங்க..என்று சொல்லிகாட்ட ஆரம்பித்தால் அவமானம் யாருக்கு..?

அதுசரி அந்த பெண்வீட்டாருக்கு தெரியாமலா போகப்போகிறது?..ஒருநாள் தெரிந்துதானே ஆகவேண்டும். அப்போது அவன் முகத்தை எங்கே கொண்டு போய் வைப்பதாம்..?

( கல்யாணம் முடிக்கிறதுக்கு முன்னே முடி இருந்துச்சுங்க..உங்க பொண்ண கல்யாணம் பண்ணியதற்கு பிறகுதான் இப்படி ஆயிட்டேன்னு கதை விடவேண்டியதுதான்)

தன்னம்பிக்கை இழந்துபோன அந்த இளைஞனை நினைத்து பரிதாப்படுவதா..? ஏமாந்து போன வந்த அந்தப் பெண்ணை நினைத்து வருத்தப்படுவதா..? எனக்குத்தெரியவில்லை..

எப்படியோ அந்த இளைஞன் அந்தப்பெண்ணிடம் மட்டுமாவது உண்மையைச்சொன்னானே..?

( பின்னே கண்டிப்பா சொல்லியாவணுமே..சண்டையில் அவன் மனைவி முடிவு சொல்லுங்க முடிவு சொல்லுங்க முடிய பிடிச்சி ஆட்டும்போது முடி மட்டும் தனியா வந்துச்சுன்னா கஷ்டம்ல..அவமானமா போயிரும்ல அவனுக்கு )

முடி பற்றிய முடிவை அடி வாங்கும்முன் சொல்லிவிட்டான் அந்த இளைஞன். அதற்காகவாவது பாராட்டலாம் அவனை.

எனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது. ஐஸ்வர்யா ராயிடம் ஒரு பேட்டியின் போது கேட்டார்கள்.

தாங்கள் அழகாய் இருப்பதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்..?

அழகு என்பது என்னுடைய திறமை அல்ல..அது என் இறைவன் படைத்த முக அமைப்பு. அதற்காக நான் பெருமைப்படமுடியாது..யாரேனும் என்னிடம் வந்து நீங்கள் அழகா இருக்கிறீர்கள் என்று கூறினால் என்னால் என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை..தேங்க்ஸ் என்று கூறி நகர்ந்து விடுகிறேன்...என் திறமையைக் கண்டு பாராட்டினால் சந்தோசப்படுவேன்..தயவுசெய்து அழகை கண்டு பாராட்டாதீர்கள்.


(நானும் அப்படித்தான் ஜொள்ளுவேன்..சாரி சொல்லுவேன்..ஹி ஹி ஹி )

பாருங்கள் எவ்வளவு அழகான பதில் இது. அதுபோலத்தான் அந்த இளைஞனும் அவனுக்கு வழுக்கைதலையாக இருப்பது அவனின் குற்றமல்ல..அவனுடைய குறையைச் சொல்லி ஏளனம் செய்வதை விட அவனுடைய திறமையைச் சொல்லி பாரட்டலாமே?

மனிதத்தை இழந்த
மாப்பிள்ளைகளுக்கு மத்தியில்
முடியைத்தானே இழந்தான் அவன்!

- - - - - - - - - - - - - - - - - -



இந்த நேரத்தில் எனக்கு ஞாபகத்தில் வருகின்ற சம்பவம் ஒன்று.

1995 ம் வருடம் என நினைக்கிறேன். நண்பர்களோடு திருநெல்வேலி டவுணில் படம் பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டிருக்கிறேன். குசும்புகளும் குறும்புகளுமாய் திரிந்து கொண்டிருந்த பருவம் அது. எதிர் இருக்கையில் ஒரு வழுக்கை தலை பெரியவர் அமர்ந்திருக்கிறார் நாங்கள் சுமார் 6 அல்லது 7 பேர். சும்மாயிருக்குமா குசும்பு மனசு

டேய் என்னடா கண் ரொம்ப கூசுது - நான்

இல்லடா எவனோ கண்ணாடியை கொண்டு வர்றான்னு நினைக்கிறேன் - மற்றொருவன்

பின் லேசாக அவர் தலையில் ஒரு கொட்டு கொட்டி விட்டு எதுவுமே நடக்காததுபோல் அமர்ந்து கொண்டிருந்தோம்.

அவர் திரும்பி பார்த்து முறைத்துவிட்டு திரும்பிவிட்டார்

என்னடா சொட்டைக்கு சொரணையே இல்ல

ஹா ஹா ஹா
அவர் இறங்குவதற்குண்டான நிறுத்தம் வந்துவிட அவர் இறங்கும் சமயத்தில்

தம்பி நானும் உங்கள மாதிரிதான் முடியெல்லாம் அதிகமா எப்போதும்
சீப்பும் கையுமா அலைவேன்...ம் ம்
இன்னிக்கு நான் நாளைக்கு நீங்க

என முணுமுணுத்துக்கொண்டே இறங்கிவிட

எனக்கு மனசு ரொம்பவும் கஷ்டமாகிவிட்டது

இந்த தருணத்தில் என்னுடைய கல்லூரி ஆசிரியர் கூறியது ஞாபகத்திற்கு வருகிறது

மனிதன் நல்லவன்தான்
மனிதர்கள் நல்லவர்களல்ல
- ஆசிரியர் ரபீக்
இயற்பியல் துறை

நானோ அல்லது நீங்களோ தனியாக சென்றுபாருங்கள் மிகவும் அமைதியாய் சென்று வருவோம்.. அந்த நேரத்தில் கிண்டல் கேலி எதுவுமே இருக்காது

அதுவே கொஞ்சம் கூட்டம் சேர்ந்தவுடன் இரத்தம் முறுக்கேறி நண்பர்களுக்கு மத்தியில் ஒரு ஹீரோயிசத்தை காட்டுவதற்காக குசும்பு - கிண்டல்கள் செய்ய ஆரம்பிப்போம்.

ஆம் உண்மைதான்

மனிதன் நல்லவன்தான்
மனிதர்கள் நல்லவர்களல்ல

ஒரு
கள் சேரந்தவுடன்
போதை வந்துவிடுகிறதோ?


இப்பொழுது குளித்துவிட்டு தலைதுவட்டுகின்ற ஒவ்வொரு காலைப்பொழுதிலும் கையில் உதிர்ந்து வருகின்ற முடிகளை பார்க்கும்பொழுதெல்லாம் அந்தப் பெரியவரின் குரல் வந்து ஒலிக்கிறது.

ம் ம்

இன்னிக்கு நான் நாளைக்கு நீங்க

இன்னிக்கு நான் நாளைக்கு நீங்க



-ரசிகவ் ஞானியார்-

3 comments:

தாணு said...

`ஆயிரம் பொய் சொல்லியாவது' ஒரு திருமணத்தை நடத்திடணும்னு காலம் காலமா பொய் சொல்லுவதை தார்மீகக் கடமையாக செய்துகொண்டிருப்பவர்கள் இந்த `சின்ன' விஷயத்தை சீக்கிரம் மறந்து மன்னித்துவிடுவார்கள். கல்லானாலும் கணவன்னு அந்த பெண்ணும் சகித்துக் கொண்டு வாழ்ந்துவிடுவாள்.
கன்ணுக்கு முன் தெரியும் குறைகள் பரவாயில்லை. எத்தனை எயிட்ஸ் மற்றும் இருதய நோயளிகள் வியாதியை மறைத்து மணம் முடித்து விரைவில் கைம்பெண்/மனைவி இழந்தவர்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறார்கள். திருமணத்துக்கு பொய் சொல்லும் வழக்கமே ஒழிய வேண்டும்.

துளசி கோபால் said...

ரசிகவ்,

நீங்க சொன்னதுபோல பெண்ணை ஏமாத்திய சம்பவம் ஒண்ணு நடந்தது நினைவுக்குவருது.

முதலிரவில் இவர் 'விக்' இல்லாமல் உக்கார்ந்திருக்க அறைக்குள் வந்தபெண் யாரோ என்று எண்ணி அலறியது எல்லாம் கதை அல்ல, நிஜம்.

Anonymous said...

Ha Ha Ha..

Thulsi Gopal...

தேன் கூடு