Sunday, November 20, 2005

ஒரு கண்ணிய சோதனை




இன்று காலை சுமார் 8 மணி அளவில் துபாய் டெய்ரா பேருந்து நிலையம் அருகே பேருந்தில் வந்துகொண்டிருந்தபொழுது திடீரென்று ஒரு சவுதி அரபி ஒருவன் டிரைவரிடம் ஏதோ கத்துகிறான்.

என்னவென்று விசாரித்தால் அவன் தன்னுடைய பர்ஸை தவறவிட்டுவிட்டானாம் . பேருந்தில் தவறவிட்டானா இல்லை பேருந்து நிலைய கூட்டத்தில் தவற விட்டானா என்று தெரியவில்லை. ஒவ்வொரு இருக்கையாக வந்து சோதனையிடுகின்றான். அவனுக்கு கிடைக்கவில்லை.

பின்னர் மறுபடியும் டிரைவரிடம் சென்று சொல்லிவிட்டு போலிஸ்க்கு தொலைபேசி செய்கிறான். 5 நிமிடத்தில் போலிஸ் வருகிறது. இங்கே அப்படித்தான் தொலைபேசி செய்தவுடன் போதும் ஹாரன் சத்தம் காதை கிழிக்க பறந்து வருவார்கள்.


போலிஸ் வந்தவுடன் அந்த அரபி அவனிடம் ஓடிச்சென்று தன்னுடைய பர்ஸை அங்கு யாரோ எடுத்து விட்டதாகவும் ஆகவே கண்டுபிடித்து தருமாறும் முறையிட உடனே போலிஸ் வந்தது.

அவன் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகே வந்து அங்கே அமர்ந்திருந்த நபரிடம் கேட்டது. பின் அதன் எதிர்ப்புறத்தில் அமர்ந்திருந்த என்னை நோக்கி திரும்பி யாருக்காவது தெரியுமா ..யார் எடுத்தது என்பதை

"இந்தா சூஃப்..மீன் மீன் " என்று அரபியில் வினவ

நான் "மாஃபி மாலும்" (தெரியாது) என்க

அரபி மற்றவர்களுக்கு தெரியுமா தெரியாதா என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள். அரபியில் பேசிவிடுவார்கள் சூழ்நிலையை உணர்ந்து நாம்தான் புரிந்துகொள்ளவேண்டும்.

என்னை ஒரு மாதிரியாக பார்த்தான் . பின் check கரேகா ( கரேகா என்றால் பண்ணவா )

உடனே எல்லோரும் சரி என்று தலையாட்ட

எனது எதிர் சீட்டில் இருப்பவரின் முகம் லேசாக மாறியது. நான் சந்தேகமாய் பார்த்தேன் ஒருவேளை அவர் எடுத்திருப்பாரோ என்று?

இரண்டு போலிஸ்காரர்கள் பேருந்தின் முன்பகுதியில் இருந்து ஆரம்பித்தார்கள். பெண்களிடம் அவர்கள் கையிலுள்ள பேக்கை வாங்கி சோதனையிட்டார்கள். அதில் ஒரு பெண் அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டதாக போலிஸாரிடம் முறையிட அவர்களின் கைப்பையை சோதனையிட்டுவிட்டு உடனே அவர்களை விட்டுவிட்டார்கள்.

பின் ஆண்களின் பகுதிக்கு கொஞ்சம் கொஞ்சமாய் சோதனையிட்டு கொண்டே வந்தார்கள். ஒவ்வொருவரிடமும் சோதனை இடுவதற்கு முன்பு

"சாரி..

சாரி ...

சாரி..."


என்று சொல்லிக்கொண்டேயிருந்தது அவர்களின் மீது எனக்கு மிகுந்த மதிப்பை உண்டு பண்ணியது. இதே சம்பவம் நமது ஊரில் நடைபெற்றால் எப்படியிருக்கும் நினைத்துப் பாருங்கள்..

"என்னடா முறைக்கிற இறங்குடா முதல்ல..நீ எடுத்தியா பர்ஸை..உள்ள வச்சு பேத்துறுவேன் பார்த்துக்கோ..உண்மையை சொல்லுங்க இல்லைனா எவனையும் விடமாட்டேன்.."

என்று யாராவது ஒரு காவலர் கையில் லத்தியோடு மரியாதையில்லாமல் கத்திக்கொண்டிருப்பார். அதிகாரம் தனக்கு இருக்கிறது என்பதற்காக நாகரீகம் தவறிய வார்த்தைகளை அதிகமாய் பிரயோகிப்பார்கள்.

ஆனால் இவர்களைப் பாருங்களேன் எங்களை இவர்கள் திட்டினாலும் நாங்கள் எதுவும் செய்யப்போவதில்லை இருந்தும் மெதுவாக சாரி சொல்லிக் கொண்டே எங்களை சோதனையிடுகின்ற கண்ணியம் என்னை மிகவும் கவர்ந்தது.

என் இருக்கையை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். எனது எதிர் இருக்கையில் இருப்பவரின் முகம் வெளிறிக்கொண்டிருந்தது.

நான் கேட்டேன் அவரிடம்

ஆப் மலபாரியே ( நீங்க கேரளாவா..)

இல்லை ( அட தமிழ்தான் )

உடனே மொழிப்பற்றில் அவரிடம் கேட்டேன் ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க

இல்லை தம்பி என்கிட்ட பதக்கா இல்ல நான் கல்லிவல்லி விசா

பதக்கா என்றால் இங்கே வேலைபார்ப்பதற்கான அடையாள அட்டை.
கல்லிவல்லி விசா - எந்த கம்பெனியிலாவது வேலை பார்த்து பின் அவ்வேலை பிடிக்காமல் அந்த கம்பெனியிலிருந்து அவர்களுக்குத் தெரியாமல் தப்பித்து வந்து வேறு இடங்களில் சட்டத்தை மீறி வேலைபார்ப்பவர்களோ இல்லை.

அரபியின் வீட்டு வேலைக்கு என்று விசா எடுத்து பின் வேறொரு இடங்களில் வேலைபார்ப்பவர்களையோ கல்லிவல்லி விசாவில் இருப்பவர்கள் என்று அழைப்பார்கள்

நான் அவரிடம் கூறினேன் "இப்ப போலிஸ் பர்ஸ் எடுத்தது யாருன்னுதான் சோதனையிடுறாங்க அதனால் பதக்காவெல்லாம் இப்ப சோதனை பண்ண மாட்டாங்க..அதனால் முகத்தை பயந்த மாதிரி காட்டாதீங்க..அவங்க வந்தாங்கன்னா உங்க பர்ஸை எடுத்து காட்டுங்க..அவ்வளவுதான்"

என் பக்கத்தில் சோதனை செய்ய வந்தார்கள். நான் என்னுடைய பேண்டில் வைத்திருந்த பர்ஸ் மற்றும் அவ்வப்போது கவிதை எழுவதற்கு வைத்திருக்கும் காகிதங்கள் எல்லாவற்றையும் அவரிடம் கொடுத்துவிட்டு

ஹாண்ட்ஸ் அப் என்று போலிஸ் சொல்லும்போது கைகள் இரண்டையும் மேல் நோக்கி உயர்த்துவார்களே ( எல்லாம் சினிமாவில் பார்த்தது) அதுபோல கைகளை உயர்த்தினேன்.

அவர்கள்; என்னுடைய பர்ஸை சோதனையிட்டு பார்த்துவிட்டு திருப்பி தந்துவிட்டு பின் என்னுடைய சட்டை பேண்ட்டை சோதனை இட்டார் .

கிச்சு கிச்சு மூட்டுவதுபோல இருந்தது எனக்கு. நான் நெளிந்தேன். அவர் லேசாக புன்னகைத்து சாரி ..என்று சொல்லிவிட்டு குனிந்து கால்களை தடவிப்பார்த்தார் ஒருவேளை கால்பகுதியில் ஒளித்து வைத்திருக்கலாமோ என்று ?

சோதனையிட்ட பிறகு சாரி என்று கூறிவிட்டு அந்த எதிர் சீட்டில் உள்ளவரையும் சோதனையிட்டார்கள். நல்லவேளை பதக்கா பற்றி கேட்கவில்லை பின் கடைசிவரை சோதனையிட்டப் பிறகு பேருந்தின் கம்பிகளின் இடைவெளிகள் மற்றும் இருக்கையின் கீழ்ப்பகுதி என்று எல்லாம் சோதனையிட்டபிறகு ஒட்டு மொத்தமாக எங்களிடம் ஒரு சாரி கேட்டுவிட்டு அந்த டிரைவரிடம் பேருந்தை கிளப்ப சொல்லிவிட்டார்

சுமார் ஒரு மணிநேரம் தாமதமாகியது. அதற்குள் ஆங்காங்கே ஒவ்வொருவரிடமிருந்தும் செல்பேசி ஒலிக்கிறது

ஆபி ஆயகா சார் அபி ஆயகா..இதர் தோடா ப்ராபளம்
[(இப்ப வர்றேன் இப்ப வர்றேன் சார் இங்க கொஞ்சம் பிரச்சனை)]

இவிட பிரச்சனை சாரே..இப்ப எத்தும்..


டிராபிக்ல மாட்டிகிட்டேன்


ஐ வில் கம் - ஐ வில் கம் சார்

என்று மொழிகளின் கலப்பினத்தில் பேருந்து மீண்டும் கிளம்பிற்று.


ரசிகவ் ஞானியார்

10 comments:

மாயவரத்தான் said...

ஸாரி ரசிகவ் சார். உங்க ஊர் (?!) போலீஸை பாராட்டியது மிக சரி தான். ஆனால் அந்த இடத்திலும் நம்மூர் போலீஸை குறை சொல்ல வேன்டுமா? வீண் கம்பேரிசன் வேண்டாமே ப்ளீஸ்..! (பின் மற்றும் முன் குறிப்பு : எனது உறவினர்களோ, நண்பர்களோ, தெரிந்தவர்களோ யாரும் போலீஸ் துறையில் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்)

Anonymous said...

UAE முன்னேற இன்னம் நிறைய இருக்கு...

Prohibition
• entry to mosques;
• consumption of alcohol on public;
• taking pictures of goverment buildings, places, army areas & arabic women;
• to eat and drink on public from sunrise to sunset during the holy month of Ramadan.

ramachandranusha(உஷா) said...

தெருவை கிராஸ் செய்யும்பொழுது, போலீஸ் ஜீப் வந்தால் நின்று நம்மை போக சொல்வார்கள். இதை பல முறை கவனித்துள்ளேன். ஆண்களிடமும் பேசும் முறை மரியாதையாய் இருக்கும்.
மாயவரத்தாரே! பக்கத்து வீட்டு பையன் சமர்த்தாய் இருந்தால், என் பையனை அப்படி இருக்கக்கூடாதா என்று சொல்வது என் பிள்ளைகளின் மீது உள்ள அக்கறையின் காரணமே தவிர, அந்த பையனை உயர்த்தி சொல்வதாய் அர்த்தம் இல்லை. பொது மக்களிடம், அதுவும் ஏழை எளிய மக்களிடம் நம் போலீசார் நடந்துக் கொள்ளும் முறை... என்ன சொல்ல?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

ஆபிரகாம் அவர்களே எடுத்துக்கொள்ள அனுமதி இருந்தும் அனுமதியோடு எடுத்துக்கொள்ளலாமா என கேட்டிருப்பது நாகரீகத்தின் உச்சம்.
நன்றி தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள்

மாயவரத்தான் அவர்களே நான் உண்மையைத்தானே சொன்னேனே தவிர யாரையும் மட்டம் தட்ட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
மனதில் கைவைத்துச் சொல்லுங்கள் . நமது ஊர் காவலர்கள் அதிகாரத்துஷ்பிரயோகம் செய்யவில்லையா? நாகரீகம் மீறி நடக்கவில்லையா? அசிங்கமான வார்த்தைகளை பிரயோகிக்கவில்லையா? யோசித்துப்பாருங்கள்

அது என்ன? உங்க ஊர் எங்க ஊர் என்று பிரித்துப் பேசுகிறீர்கள்?
பிழைக்க வந்தாலும் என் பிணம் வரப்போவது அந்த ஊர்தானே?

( பின்குறிப்பு : எனக்கு போலிஸ்துறையில் நண்பர்கள் இருக்கிறார்கள் )

எனது சார்பாக பதிலளித்த சகோதரி ராமச்சந்திரன் உஷா அவர்களுக்கு நன்றி.

- ரசிகவ் ஞனியார்

மாயவரத்தான் said...

//பிழைக்க வந்தாலும் என் பிணம் வரப்போவது அந்த ஊர்தானே?//

அடச்சே... எது எதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு விவஸ்தையே இல்லையா? வாயை கழுவுங்க சார். பதிலுக்கு நெருப்புன்னா சுடுமான்னு கேக்காதீங்க!

நான் என்ன சொல்ல வர்றேன்னா, நம்மூர் போலீஸை குறை கூறுங்கள், குற்றச்சாட்டுகளை உரைக்கிற மாதிரி சொல்லுங்கள். தப்பேயில்லை. ஆனால் அதற்காக அடுத்த ஊர் போலிஸை பாராட்டுகிற இடத்தில் நம்மூரை குறைத்து பேச வேண்டாம் என்று தான். உஷா மேடமும் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

இந்த பதிலில் என்மீது தாங்கள் வைத்த பாசம் தெரிகிறது நன்றி நண்பா

குறைசொல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லை நண்பா..எனக்கு அந்த விசயத்தில் அனுபவம் உண்டு.
இருந்தாலும் தங்கள் கருத்துக்களுக்கு நன்றி

இதயம் நெகிழ்வுடன்

ரசிகவ் ஞானியார்

சிங். செயகுமார். said...

நாட்டுக்கு நாடு சட்டத்தின் தன்மையை பொருத்தே சகலமும் நடக்கின்றது.நம்மூரில் ஓர் மணி நேரம் தாமததில் எவ்ளோ பேர் அதே பஸ்ஸில் அசையாமல் அமர்ந்து இருப்பர் என்று சொல்லுங்கள்.
அவனவனுக்கு ஆயிரத்தெட்டு அவசரம்னு இறங்கி வேர பஸ் புடிக்க பாப்பான். இந்த சூழ் நிலையில
இந்த போலிஸ் இப்பிடிதான் இருக்கும்.பிக் பாக்கெட் அடிச்சவன் பின்னியும் ஒரு மணி நேரத்துல ஜாமீன்ல வந்துருவான் . உங்க துபாயில அப்பிடி முடியுமா? இடம் பொருள் பாருங்கோ!

சிங். செயகுமார். said...

நாட்டுக்கு நாடு சட்டத்தின் தன்மையை பொருத்தே சகலமும் நடக்கின்றது.நம்மூரில் ஓர் மணி நேரம் தாமததில் எவ்ளோ பேர் அதே பஸ்ஸில் அசையாமல் அமர்ந்து இருப்பர் என்று சொல்லுங்கள்.
அவனவனுக்கு ஆயிரத்தெட்டு அவசரம்னு இறங்கி வேர பஸ் புடிக்க பாப்பான். இந்த சூழ் நிலையில
இந்த போலிஸ் இப்பிடிதான் இருக்கும்.பிக் பாக்கெட் அடிச்சவன் பின்னியும் ஒரு மணி நேரத்துல ஜாமீன்ல வந்துருவான் . உங்க துபாயில அப்பிடி முடியுமா? இடம் பொருள் பாருங்கோ!

ramachandranusha(உஷா) said...

ஐயா, இங்கு சொல்லப்படுவது நம் ஊர் காவல்துறையினர் நடந்துக் கொள்ளும் முறையைப் பற்றி மட்டுமே! வார்த்தையில், செயலில்
பதவிக்கு ஏற்ற கண்ணியம் வேண்டும், அதற்கான பயிற்சி தர வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.

Anonymous said...

Ayya Abiramam, Dubai police also behaved like saudi police once upon a time. After 2K Dubai police learned politeness.

People who are living in emirates since 80's knows verywell about this fact.

Hope all the police in the world will learn politeness sooner...

தேன் கூடு