Monday, November 28, 2005

என்ன..? துபாயில பூகம்பமா?







நேற்று மதியம் மூன்று மணி அளவில் நண்பனிடமிருந்து தொலைபேசி ஒலிக்கிறது.


டேய் ஞானி பூகம்பம் வந்துச்சான்டா..உன் பகுதியில் வந்துச்சா...

- பதறியபடி கேட்கிறான்

துபாயில பூகம்பமா..யாருடா சொன்னது..போடா எவனோ கிண்டல் பண்ணியிருக்கிறான்டா. - நான் அலட்சியமாய் கூறினேன்

இல்லைடா நம்ம ரசூல் 2 தடவை தொலைபேசி செய்திருந்தார். துபாயில் ஷேக் செய்யது சாலை கொஞ்சம் ஆடியதாக சொன்னார்டா..அப்படி ஏதும் தகவல் கிடைச்சா எனக்கு சொல்லுடா..நான் ரூம்லதான் இருக்கேன்..மறந்திறாதடா..உன் சான்றிதழ் எல்லாம் இங்கதான் இருக்கு..-
பதட்டத்தோடும் கிண்டலோடும் பேசிவிட்டு வைத்தான்

எனக்கு குழப்பமாகவே இருந்தது. அவன் சொல்றது உண்மையாக இருக்குமோ..?

உடனே இணையத்தில் கல்ஃப் நியுஸ் பத்திரிக்கையை படித்தேன். ஈரானில் பூகம்பம் என்றும் துபாயில் சில பகுதிகளும் ஆட்டம் கண்டது என்றும் கடைசிச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்கள். பின் தினமலர் நாளிதழில் பார்த்தால் ஈரானில் பூகம்பம் மூன்று பேர் பலி என்று கடைசி செய்தி வெளியிட்டு இருந்ததார்கள்.

பின்னர்தான் மனதில் ஓர் நிம்மதி..சரி அந்த அளவிற்கு பாதிப்புக்குள்ளான பூகம்பம் இல்லை..ஈரானில் லேசான ஆட்டம்தான்.. ஆகவே துபாயும் லேசாக ஆடியிருக்கிறது.
என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் வதந்தி வேகமாய்ப் பரவியது. துபாயில் கட்டிடம் இடிந்து விழுந்தது. பயங்கர பூகம்பம் என்று.

துபாயில் ஆட்டம் கண்டதாக கூறப்படுகின்ற பகுதியில் வசிக்கும் நபரிடம் இருந்து என்னுடன் வேலைபார்க்கும் நண்பருக்கு தொலைபேசி வருகிறது. ஷேக் செய்யது சாலையில் மக்கள் எல்லாம் பீதியடைந்து பதறிப்போய் சாலையில் வந்து நிற்கிறார்கள் என்று.


துபாயில் ஷேக் செய்யது சாலைப்பகுதி துபாய் விமான நிலையத்திலிருந்து சிறிது தொலைவில் இருப்பதால் அங்கு உயரமான கட்டிடங்களாக இருக்கும். உலகத்தின் மிகப்பெரிய கட்டிடம் கட்டும் பணி கூட தற்பொழுது அந்தப்பகுதியில் நடந்துகொண்டிருக்கிறது.


பூகம்பம் எல்லாம் அந்தப்பகுதியில் வந்தால் உண்மையில்
22 வது மாடி
35 வது மாடி என்று அவ்வளவு உயரத்தில் தங்கியிருக்கும் மக்களுக்கு பயம் வராமல் இருக்குமா..?

துபாயின் சில பகுதிகளில் லேசான நடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. அதில் உயரமான் கட்டிடம் இருக்கும் இந்த ஷேக் செய்யது சாலையும் ஒன்று.

ஆகவே அந்தப்பகுதி மக்கள் பதறிப்போய் வெளியே வந்து நின்றிருக்கிறார்கள்.

துபாய் மட்டுமல்ல அமீரகத்தின் மற்ற உறுப்பு நாடுகளான சார்ஜா - ராசல்கைமா - அல்அய்ன் போன்ற பகுதிகளில் நிலநடுக்கத்தை மக்கள் அதிகமாகவே உணர்ந்திருக்கிறார்கள்.

ராஸல்கைமாவிலிருந்து சுமார்
120 கிலோமீட்டர் வடக்கே ஈரானில் கிஸ்யும் என்ற தீவு உள்ளது. அந்தப்பகுதிக்கு அடிக்கடி விசா மாற்றும் விசயமாக இந்தியர்கள் பெரும்பாலும் போவதுண்டு. ( நான் இரண்டு முறை சென்றிருக்கிறேன் ). அந்தத் தீவினில் பதிவாகியுள்ள பூகம்ப அளவுகோல் சுமார்
5.9 ரிக்டர் முதல்
6.9 ரிக்டர் வரை
இருக்கலாம் என்று தகவல்கள் கூறப்படுகின்றது.

அந்தப்பாதிப்பின் வேகம்தான் இங்கு கட்டிடங்களுக்கு மதியம்
2.15 மணிக்கு ஆட்டம் கொடுத்திருக்கிறது. துபாய் ,சார்ஜா மற்றும் ராசல்கைமா பகுதியில் உள்ள கட்டிடங்கள் சுமார் ஒரு நிமிடம் நீடித்திருக்கிறது. பெரும்பாலும் உயரமான கட்டிடங்களில் வசிப்பவர்கள் தங்களது அறையை காலி செய்துவிட்டு மற்ற பகுதிக்கு சென்று விட்டார்கள்.

அமெரிக்க பல்கலைகழகத்தில் பணிபுரியும் டாக்டர் அஸ்ம் அல் ஹமூதி ( பேராசிரியர்) கூறியிருப்பதாவது :

அரேபிய மற்றும் ஈரானிய பூமித்தகடுகளில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்கள் மிகவும் பயமுறுத்துகின்றது. அமீரகப்பகுதிகள் பெரும் நிலநடுக்கத்தை சந்திக்க நேரிடலாம்.
விஞ்ஞானிகள் அதனை உணர முடியாமல் கூட போகலாம் ஆனால் அடுத்த நிலநடுக்கம் மிக அதிகமாக இருக்கக்கூடும். அது இன்னும் 100 வருடம் கழித்து கூட நேரிடலாம் ஆனால் நேரிட்டால் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.


இந்த தகவல்கள் ஆச்சர்யமாகவே இருக்கிறது. இதுவரை நான் கேள்விப்படவில்லை.

எனது அலுவலகத்திற்கு வந்த ஒரு பாகிஸ்தானி ஓட்டுனர் பதறியபடி வந்து..
நான் சார்ஜாவில் இருந்து வருகிறேன். அங்கே நான் அறையில் இருக்கும்போது யாரோ அறைக்கதவை பலமாய் தட்டுவது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது என்று கூறிவிட்டு அந்த அனுபவத்தை யாருடனோ தொலைபேசியில் அழைத்து சொல்லிக்கொண்டிருக்கிறார்.

எதிர்தரப்பில் பேசுபவர் பதட்டப்படவேண்டும் என்றே நடந்த விசயத்தை கொஞ்சம் அதிகப்படியாகவே சொல்லிக்கொண்டிருக்கிறார். பின்னர்தான் உணர்ந்தேன் அவர் பாகிஸ்தானி என்பதால் சமீபத்தில் அங்கு நடைபெற்ற நிலநடுக்கம் அவரை பாதித்திருக்க கூடுமோ?
அப்பொழுது இந்தியாவில் இருந்து எனது அலுவலகத்தின் இன்னொரு நண்பருக்கும் தொலைபேசி வருகிறது.

இதர் ப்ராப்ளம் நகியே..அபி டிகே..டிகே என்று அக்கறையோடு நலம் விசாரித்த தனது குடும்பத்தினருக்கு பதில் அளித்துக் கொண்டிருக்கிறார். துபாயில் பயங்கர நிலநடுக்கம் என்று யாரோ அங்கே வதந்தியை கிளப்பி விட்டிருக்கிறார்கள்.

மாலையில் அலுவலகம் முடிந்து அறைக்குத் திரும்புகிறேன். ஆங்காங்கே வதந்திகள் இங்கே நில நடுக்கம்-அங்கே நில நடுக்கம் என்று.

எனக்கு அப்பொழுது சமீபத்தில் தாக்குதலுக்குள்ளான பாகிஸ்தான் நாடுதான் ஞாபகத்தினில் வந்தது. நில நடுக்க வதந்திக்கே நாம் இப்படி பீதியடைகிறோமே ஆனால் உண்மையிலேயே தாக்குதலுக்குட்பட்ட அவர்கள் எப்படி பீதியடைந்திருப்பார்கள்.?

நிலநடுக்கம் வந்ததை விடவும், வரப்போகிறதோ என்ற பீதிதான் மிகவும் கொடுமையானது என்று முதன் முதலாய் நான் தெரிந்து கொண்டேன்.

இரவு அறையில் நண்பன் சிராஜ் பதட்டத்தோடு கூறிக்கொண்டிருந்தான்.

டேய் இப்ப ராஸல்கைமாவிலிருந்து தொலைபேசி வந்தது.. ஒரு அரைமணிநேரத்திற்கு முந்தி கூட அங்கே நடுக்;கம் ஏற்பட்டிருக்காம்.. எங்க மாமா மாமி குழந்தைகள் எல்லோரும் வீட்டுல இருந்திருக்காங்கடா..

அவங்க வீடு ஒரு வில்லா மாதிரிதான்டா..பெரிய கட்டிடம் இல்லையே..அதனால பாதிப்பு இருக்காது என்று சமாதானப்படுத்தினேன்.

இல்லைடா..பக்கத்துல பெரிய பெரிய மரம் இருக்குது.. - கவலை தோய்ந்து கூறினான்.

அவன் ஏன் அவ்வாறு பயப்படுகிறான் என்றால் அவனுக்கு அவனுடைய மாமாவின் மகளைத்தான் நிச்சயம் செய்திருக்கிறார்கள். அந்தப்பெண்ணும் அவர்கள் மாமா வீட்டில் இருப்பதால் ரொம்ப பதட்டப்படுகின்றானோ எனத் தோன்றியது.

டேய் தெரியுன்டா நீ ஏன் இப்படி பயப்படுறேன்னு - என்று கிண்டலடிக்க

போடா அதெல்லாம் ஒண்ணுமில்ல..என்று வெட்கத்தோடு படுக்கையில் சாய்ந்தான்

ஆனால்
டேய் இரவுல தொலைபேசி வந்தா எழுப்பி விடுங்கடா,

நாம முதல் மாடியில் இருப்பதால் கட்டிடம் விழுந்தா அவ்வளவுதான் மேலுள்ள மூன்று மாடியும் நம்ம மேலதான்..
என்று புலம்பிக்கொண்டே இருந்தான்

அறையில் உள்ள நண்பன் நிஜாம் வேறு தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தான்
ஞானி..லேசான நடுக்கம் வந்தால் அதனைத் தொடர்ந்து பெரிய நடுக்கம் வரும்னு சொல்றாங்களே உண்மையா

எதுவுமே நிச்சயமா சொல்ல முடியாது..போய்ச்சேரணும்னு விதி இருந்தா போகத்தான் வேணும்..ஏன் இப்படி பயப்படற.. என்று வழக்கமான தத்துவம் விட்டேன்.

இல்லை ஒரு தகவலுக்குக்காத்தான் கேட்டேன் என்று மழுப்பினான் கண்களில் தெரிந்த பயத்தை மறைத்துக்கொண்டு.

அவன் கேட்டது வேறு சிராஜை மேலும் பயமுறுத்தியது. சிராஜ் துபாயில் உள்ள கோல்ட் சூக் ( தங்க மார்க்கெட் ) என்னும் இடத்தில் பணிபுரிந்து வருகிறான்.

சூழ்நிலையின் இறுக்கத்தை மாற்றுவதற்காக நான் அவனிடம்,

டேய்! சிராஜ் நாளைக்கு நிலநடுக்கம் வர்ற மாதிரி இருந்துச்சுன்னு வச்சுக்கோ..உடனே எனக்கு தொலைபேசி செய்..நான் உடனே ஒரு சாக்கு மூட்டையோட கோல்ட் சூக் வருகிறேன். நாம அங்குள்ள தங்கத்தையெல்லாம் அள்ளிக் கொண்டு வந்துவிடலாம் என்று கிண்டலடிக்க,

சிரிக்க ஆரம்பித்து விட்டான்

ஆமா செத்தபிறகு எதுக்குடா தங்கம் என்று சொல்லிக்கொண்டே புலம்பல்களுடனே தூங்கிப்போனான்.

இந்தியாவில் இருந்து நண்பர்களுக்கும் எனக்கும் நலம் விசாரித்த வண்ணம் தொலைபேசி வந்து கொண்டே இருந்தது.

டேய் உனக்கு தொலைபேசி வந்துச்சா

இல்லைடா

அப்படின்னா நாளைக்கே பேங்க்ல டிடி எடுத்து அனுப்பு ... என்ற நகைச்சுவை சம்பாஷணைகள் தொடர்ந்தது.

ஆனாலும் பயத்தில் அடிக்கடி ஜன்னலை திறந்து திறந்து பார்த்துக் கொண்டிருந்தான் நண்பன் சிராஜ்.

[நன்றி :கல்ஃப் நியுஸ் மற்றும் கலீஜ் டைம்]
சீமா சித்திக் : ( டிப்பா பகுதி )

நாங்கள் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தபொழுது திடீரென்று அறை நடுங்க ஆரம்பித்தது. அது சுமார் ஒரு நிமிட நேரமாவது நீடித்திருக்கவேண்டும்.ஆனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை..

அன்வர் சதாத் ( துபாய் நாஸர் ஸ்கொயர் )

நேற்று மதியம்
2.15 மணி அளவில் தொலைக்காட்சி பாரத்துக்கொண்டிருந்தபொழது தலை மாதிரியாக சுற்ற ஆரம்பித்தது அதனை தொடர்ந்து அறையில் லேசான நடுக்கம். தொலைக்காட்சி பெட்டி கீழே விழுந்து உடைந்து விட்டது. என்ன நடந்தது என்றே என்னால் உணர முடியவில்லை நான் மிகவும் பீதியடைந்துப் போனேன்.


பின்னர்தான் எனது ஃப்ளாட்டில் இருக்கும் அனைவரும் வேகமாக கீழே இறங்கி சென்றதை கண்டவுடன்தான் உணர்ந்தேன் இது நிலநடுக்கம் என்று

ஷெரிஃப் ( துபாய் மீடியா சிட்டி )

நான் துபாய் மீடியா சிட்டி அலுவலகத்தில் இருந்தபோது எனது அலுவலக கட்டிடம் லேசாக ஆடியதை உணர்ந்தேன். ஆனால் அது நிலநடுக்கமாய் இருக்கும் என்று உணரவில்லை. பிறகு பக்கத்து கட்டிடம் ஒன்றில் ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கும் எனது நண்பனிடமிருந்து தொலைபேசி வந்தவுடன்தான் உணர்ந்தேன் மக்கள் எல்லாம் பயத்தோடு வெளியேறிக்கொண்டிருப்பதை. பின்னர் நானும் பதட்டத்தோடு வெளியேறினேன்

ஷமீம் கரீம் ( சார்ஜா )

எங்களுடைய கட்டிடம் நிலநடுக்கத்தால் ஆட ஆரம்பித்தபொழுது நாங்கள் உடனே உயிர்தப்பிக்க வெளியே ஓடினோம். நாங்கள் மிகவும் பயந்து போனோம். எங்களால் இன்னமும் பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிர்ச்சேதத்தையே மறக்க முடியவில்லை. எங்களுக்கு பயமாக இருக்கிறது. இங்கு மட்டும் நிலநடுக்கம் ஏற்பட்டால் அதன் பாதிப்பு மிகக் கடுமையாக இருக்கும்

டாக்டர் அப்துல்லா ( சார்ஜா - அல் வஹ்தா வீதி )

நாங்கள் எல்லோரும் அறையை விட்டு கிழே இறங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டோம்.
முதன் முதலாக இதனை உணர்வதால் எல்லோருடைய முகத்திலும் உயிர்ப்பயம் இருந்தது


மற்றொரு அமீரக உறுப்பு நாடான உம்- அல்- கொய்னில் மதியம்
2.30 மணி அளவில் அடுக்கு மாடி கட்டிடங்களில் வசிக்கும் மக்கள் பதட்டத்தோடு வெளியே சாலையில் வந்து கூட ஆரம்பித்து விட்டார்கள்.

மக்கள் கூட்டம் சாலைக்கு வருவதை உணர்ந்து பாதுகாப்பு கருதியும் அவர்கள் பதட்டமடைந்து விடக்கூடாது என்றும் போலிஸார்கள் வரத்தொடங்கிவிட்டார்கள்.
அவர்கள் மக்களிடம் பதட்டமடைய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்கள். நிலைமை பதினைந்து நிமிடத்தில் சரிசெய்யப்பட்டுவிட்டது

டிப்பா என்ற பகுதியில் வசிக்கும் மக்கள் பக்கத்து மலைகளில்தான் குண்டு வைத்து பெயர்க்கிறார்கள் என்று நினைத்தார்களாம்.

ஆயிசா ஹஸன் : ( டிப்பா பகுதி )

நான் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்று பார்த்துக்கொண்டிருந்தபொழுது முதலில் தொலைக்காட்சிப் பெட்டி லேசாக ஆடியது. நான் வெளியில் ஒரு பெரிய டிரக் ஒன்று கடந்து செல்கிறது போல என்று நினைத்தேன். னோல் வெளியில் மக்கள் கூட்டத்தைப் பார்த்தபொழுதுதான் உணர்ந்தேன் அது நிலநடுக்கம் என்று

கமல் ( பர்துபாய் )

நான் ஒரு ஆப்டிகல் கடையில் பணிபுரிந்து வருகின்றேன். நிலநடுக்கம் வந்தபொழுது லேசாக என் தலை சுற்றியது. பின்னர் கடையில் உள்ள டேபிள் சேர் எல்லாம் நகர ஆரம்பித்ததைக் கண்டேன்

ஜெஸிலா ( துபாய் )

ஆளாளுக்கு திடீரென்று ஓடினார்கள் என்னவென்றுக்கூட சொல்லாமல். என்னப்பா என்ன ஆச்சு சொல்லிவிட்டு ஓடுங்கள். பாம்போ பல்லியோ என்றுதான் முதலில் நினைத்தேன், பின்புதான் ஒருவர் நின்று சொன்னார் பூகம்பம் நான் உணர்ந்தேன் என்றார். என்ன, சே! இல்லப்பா பக்கத்து கட்டிடத்தில் பைலிங் அல்லது டிரிலிங் போடுகிறார்களாக இருக்கும் என்று சொல்லி நகைத்தேன் வழக்கமான குறும்புடன். என் கணவருக்கு அழைத்து கேட்டேன் அப்படியா தெரியாதே என்றார்கள்.

நண்பர் ஆசிப்புக்கு அழைத்துக் கேட்டேன், சிரித்தார் உனக்கு வேலையே
இல்ல உங்க கட்டிடம் ஆடினால் ஊரே ஆடுதுனு சொல்லுவியே என்றார். என் அக்காவை அழைத்தேன் 'என்ன பூகம்பமா?' என்றாள் நக்கலாக.. எல்லாரும்
கிண்டலடித்தார்களே தவிர உணர்ந்ததாக தெரியவில்லை. அலுவலகத்தில்தான் நிறைய பேர் உணர்ந்தனர். என் நண்பர் ஒருவர் ஷார்ஜாவில் இருக்கிறார் அவர்களை
10.30 இரவில் வீட்டிலிருந்து வெளியேற கேட்டிருக்கிறார்கள். இரவு 12 வரை
பச்சக்குழந்தையுடன் முழித்திருந்துவிட்டு பின்பு வீட்டிற்குள்
போயிருக்கிறார்கள்.


மொத்தத்தில் பூகம்பம் ஒரு கலக்கல்.


சுசில் ( துபாய் )

இது மிகவும் எனக்கு புதிய அனுபவம். நான் என்னுடைய நண்பரோடு தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது திடீரென்று நான் அமர்ந்திருந்த நாற்காலி லேசாக நடுங்க ஆரம்பித்தது. எனது அலுவலகத்தின் பக்கத்தில் கட்டிட வேலைப்பாடுகள் நடப்பதால் அவற்றின் பாதிப்பு இது என நினைத்தேன்.

ஆனால் எனது அலுவலக கட்டிடமே இட வலமாய் நகர ஆரம்பித்ததும்தான் உணர்ந்து கொண்டேன் இது நில நடுக்கம் என்று. நான் தொலைபேசி செய்து கொண்டிருந்த எனது நண்பனிடம் கூறினேன். அவன் சிரிக்க ஆரம்பித்தான். பின்னர்தான் ஆங்காங்கே இருந்து வந்த செய்திகள் மூலமாய் தெரிந்து கொண்டேன் அமீரகம் நிலநடுக்கத்தில் ஆடியிருக்கிறது என்று.


ஆசிப் மீரான் (சார்ஜா )

நான் எதையும் உண்ரவில்லை
ஆனால் வீட்டில் உணர்ந்ததாக என் மனைவி சொன்னாள்
எந்தப் பகுதியிலும் பிரச்னை இல்லை


குணால் ( துபாய் )

நான் மதிய உணவு நேரத்தில்தான் லேசான நடுக்கத்தை உணர்ந்தேன். என்னுடயை மேலாளர் அவசரமாய் வந்து கூறினார் இது லேசான நிலநடுக்கம் என்று. நாங்கள் சரிக்க ஆரம்பித்தோம் அவர் கிண்டலடிக்கிறார் என்று நினைத்தோம்.
பின்னர் ஷேக் செய்யது சாலையில் வர்த்தக மையத்தில் பணிபுரியும் எனது சகோதரனுக்கு தொலைபேசி செய்தபோதுதான் புரிந்தது. அவனுடைய கட்டிடத்தில் உள்ளவர்கள் அனைவரும் வெளியேறிவிட்டதாக.
இதில் வேடிக்கை என்னவென்றால் ஸ்டாஃப் ரூமில் உள்ள ஆண்கள் மட்டும்தான் இதனை உணர்ந்தோம் பெண்கள் உணரவில்லையாம்..

( பூக்கள் உணருமா பூகம்பம்)

சுனித் ( துபாய் )

நான் கட்டிலில் படுத்துக்கொண்டே தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபொழுது என்னுடைய கட்டில் ஆட்டம் கண்டது. அது யாருடா ஆட்டுறது என்று கட்டிலில் கீழே குனிந்து பார்த்தேன். யாருமில்லை.பின்தான் உணர்ந்தேன் அது நில நடுக்கம் என்று.

சுல்தான் (துபாய் )

நான் டிராவல் அலுவலகத்தில் பணி புரிகின்றேன். ஒரு பயணியிடம் டிக்கெட் கொடுத்து விட்டு அவரின் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துவதற்காக கைளை நீட்டி குலக்கினேன். திடீரென்று நானே குலங்குவதாக உணர அவரிடம் ஏன் என்னை தள்ளுகிறீர்கள் என்று கேட்க அவரும் அதே கேள்வியை என்னிடம் கேட்க பின்தான் புரிந்தது குலங்கியது பூமி என்று.

பலர் இன்னமும் ஆச்சர்யமாக கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அப்படியா..பூகம்பமா..துபாயிலா..நான் உணரவில்லையே என்று.

சிலர் லேசாக உணர்ந்ததை பெரிதுபடுத்தி காட்டவேண்டும் என்பதற்காக வதந்திகளையும் பரப்பிகொண்டிருக்கிறார்கள்..

சிலர் நடுக்கம் தந்த அதிர்ச்சியில் வாந்தி வருகின்ற மாதிரியம் உணர்ந்திருக்கிறார்கள்.

அடுக்கு மாடியில் தங்கியிருப்பவர்கள் சமீபத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற பூகம்ப பாதிப்புகளிலிருந்து மீளாமல் இருப்பதால் மிகுந்த பதட்டத்துடனே இருக்கிறார்கள்.

ஆனால் அடுக்கு மாடிகளாய் கட்டிக்கொண்டிருக்கும் பலருக்கு இந்த பூகம்பம் அவர்கள் உடல் ரீதியான நடுக்கத்தை விடவும் மனதில் பெரும் நடுக்கத்தைக் கொடுத்திருக்கும் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

பூகம்பம் வருவதை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் வருவதை உணர்ந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். ஆனால் இங்கு என்ன பிரச்சனையென்றால் கட்டிடங்களிலிருந்து தப்பிப்பதற்காக வெளியே வந்து நின்றாலும் இன்னொரு கட்டிடத்தின் கீழ்தான் நிற்க வேண்டியது வரும் அந்த அளவிற்கு நெருக்கமாக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.
இங்கு வந்தால் அதன் பாதிப்பு மிக கடுமையாக இருக்கும். இறைவனிடம் பிராத்திர்ப்பதை தவிர வேறு வழியில்லை.

குஜராத் பூகம்பத்திற்காக நான் எழுதிய கவிதை வரிகள் ஒன்று ஞாபகம் வருகிறது.

ஏய் பூகம்பமே
இனிமேல் நீ
பூ கம்பத்தைக் கூட
அசைக்கக்கூடாது.


இதயம் பிரார்த்தனையுடன்,

- ரசிகவ் ஞானியார்

4 comments:

Anonymous said...

nalla vimarsanam..i enjoyed reading it...vaazththkkal

Anonymous said...

நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்.

வெயிலில் வெறும் சட்டையுடன் நிற்கும்
துபாய் வாசிகளைப் பார்க்க எனக்கு
பொறாமையாய் இருக்குது.பின்ன என்ன மைனஸ் குளிரில் நடுங்கிக்கொண்டிருக்கும் எனக்கு இருக்காதா பின்னே.

முத்துகுமரன் said...

நிலநடுக்கம் வந்ததாக சொன்னப்பட்ட நேரத்தில் நான் சாப்பிட்டு கொண்டிருந்ததால் என்னால் எதையும் உணர முடியவில்லை :-]

Gnaniyar @ நிலவு நண்பன் said...

அன்பு முத்துக்குமரா

பசியில் வயிறு குலுங்கியதால் பூமி குலுங்கியதை தாங்கள் உணரவில்லையோ..?

தேன் கூடு