Tuesday, November 08, 2005

தயவுசெய்து பேனா கேட்காதீர்கள்





நான்

தொலைத்தப் பேனாக்கள் பற்றி

தொலையாத பேனாவால் எழுதுகிறேன்!

இதயத்தை...

தொலையுங்கள்!



இதுவரை எந்தப்பேனாவும் - தான்

சாகும்வரை என்

சட்டைப்பையில் இருக்க...

சம்மதித்ததேயில்லை !



சில பேனாக்கள்

அனுமதியோடு எடுக்கப்பட்டு...

அனுமதியில்லாமல் போகிறது!



சில பேனாக்கள்

பைக்கில்

தாறுமாறாய் செல்லும்போது...

தற்கொலை செய்து கொள்கிறது!



சில பேனாக்கள்

கவிதை எழுதிய களைப்பில்...

காணாமல்போகிறது!



இந்தக்கவிதையைக்கூட...

இரண்டு பேனாவால்தான்

எழுதியிருக்கிறேன்!



சிலபேனாக்கள்

காதலன் ஏமாற்றியதால்...

கண்ணீர்தெரியாமல் அழுகின்ற

பெண்கள்போல...

கசிந்து கசிந்தே

கை நழுவிப்போகிறது!



சிலபேனாக்கள்

சிரித்தப்பெண்கள்

யாரேனும் கேட்டால்...

திரும்பிவர மறுக்கிறது!



சிலபேனாக்கள்

இரயில் நிலையத்தில்

பயணம் செல்பவர்களின்..

விண்ணப்பம் நிரப்ப வாங்கப்பட்டு

கடைசியில்.......

சென்றுவிடுகிறது..

அவர்கள்

பயணம் செய்த ஊருக்கே!



சிலபேனாக்கள்

நான்

பிட் எழுதிய

அவமானம் தாஙகாமல்...

அழிந்துபோகிறது!



சிலபேனாக்கள்

கல்லூரி மாணவனைப்போல..

பேருந்தின் படிக்கட்டில்

தொங்கியபடியே...

தொலைந்துவிடுகிறது





நான்

சுட்டபேனாக்கள்

மீண்டும் என்னிடமிருந்தே...

சுடப்படுகிறது !



இப்படி

எந்தப்பேனாவும் -தான்

சாகும்வரை என்...

சட்டைப்பையில் இருக்க

சம்மதித்ததேயில்லை!



இந்தக்கவிதையை எழுதிய

பேனாகூட...

எங்குதொலைந்ததோ

தெரியவில்லை?



கவிதை வாசிப்பவர்களின்

கண்ணில்பட்டால்...

கண்டுபிடித்துக் கொடுங்கள் !

இன்னொரு கவிதை...

எழுதமாட்டேன் !



"எக்ஸ்கியுஸ்மி

கொஞ்சம் பேனா தரமுடியுமா?"


எங்கிருந்தோ ஒரு குரல்

இதோ

அடுத்த கவிதையின் கரு ...







-ரசிகவ் ஞானியார்

7 comments:

Anonymous said...

//சிலபேனாக்கள்
கல்லூரி மாணவனைப்போல..
பேருந்தின் படிக்கட்டில்
தொங்கியபடியே...
தொலைந்துவிடுகிறது//

தொலைஞ்சு போகட்டும்... தொலைவோம்னு தெரிஞ்சுதானா தொங்குதுக? (நான் பேனாவச் சொன்னேன்)

//சிலபேனாக்கள்
சிரித்தப்பெண்கள்
யாரேனும் கேட்டால்...
திரும்பிவர மறுக்கிறது!//

-ம்... இது என்னா?. வேற உதாரணம் சொல்லியிருக்கலாம்.

Madhu said...

ஞானியார் அவர்களே,

கவிஞர் 'முகுந்த் நாகராஜன்' கூட தனது 'அகி' என்ற கவிதை தொகுப்பில் "ஃப்வுண்டன் பேனா தினங்கள்" என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறார் ... வாய்ப்புக் கிடைத்தால் படித்துப் பாருங்கள் ...

p'z : நல்ல முயற்சி :)

பத்மா அர்விந்த் said...

இப்போதெல்லாம் என்னிடம் நிறைய பேனாக்கள் இருக்கின்றன. யாரேனும் கேட்டால் இலவசமாக கொடுத்துவிடுகிறேன். அழகான கவிதை

சினேகிதி said...

\சில பேனாக்கள்

அனுமதியோடு எடுக்கப்பட்டு...

அனுமதியில்லாமல் போகிறது\\

Anonymous said...

சில பேனாக்கள் குப்பையாகக் கவிதை எழுதுபவர்களைக் குத்தப் பயன்படும்.

b said...

கவிதை நன்றாக இருந்தது ஞானியார்.

Agathiyan John Benedict said...

நல்ல கவிதை.

தேன் கூடு