Sunday, November 27, 2005

2. என்னைக் கவர்ந்தவர்கள்




மரக்கடை மாரி

அந்த மரக்கடை மாரி. எனக்கு விவரம் தெரியாத வயசில் அவன்தான் என்னுடைய உயிர் சிநேகிதன்.

எங்கள் தெருவிற்கு பக்கத்தில் அவன் ஒரு சிறிய விறகுக்கடை வைத்து பிழைத்து வந்தான்;. நான் பள்ளி போகும் போதும் சரி பள்ளி விட்டு வரும்போதும் சரி எப்போதும் அவன் கடையில்தான் விளையாடுவேன்.

வெளியில் எங்கேயாவது செல்ல விரும்பினால் அவன் என்னை கடையில் வைத்து விட்டுத்தான் செல்லுவான். ஆனால் நேரத்திற்கு வடை, பஜ்ஜி, தேநீர் என்று பக்கத்து உணவகத்திலிருந்து எனக்கு வரச்செய்துவிடுவான்.

நான் வாடிக்கையாளர்கள் வந்தால் அவன் வெளியே போயிருக்கிறான் என்று சொல்லுவதுதான் என் வேலை அப்போது. மிகவும் தெரிந்தவர் வந்தால் மட்டும் அவர்கள் கேட்கும் விறகை ஒவ்வொரு கட்டையாக தராசு தட்டில் வைத்து எடை போட்டு கொடுத்து

நீங்க எவவ்வளவு கொடுப்பீங்க என்று அவர்களிடமே கேட்டு காசு வாங்கி கல்லாவில் போட்டுக் கொள்வேன்.

அவனுக்கு தெரிந்து சிலமுறை...
தெரியாமல் பல முறை ...
அவன்
கல்லாபெட்டிக் காசுகள்
என் உணவுக்குழாயுக்குள்
தஞ்சம் புகுந்திருக்கிறது

நான் பள்ளிக்கு செல்வதற்கு முன்பு அவன் கடைக்குத்தான் செல்வேன் பத்து காசு இல்லையென்றால் நாலணா எனக்காக கடையினுள் உள்ள ஒரு சுவற்றின் பக்கவாட்டில் வைத்திருப்பான்.

நான் அதனை எடுத்துக்கொண்டு பள்ளிக்குச் செல்வேன் சிலநேரம் நான் போகும்போது அவன் இல்லாவிட்டால் கூட நான் ஏமாந்து திரும்பிச் சென்று விடுவேனோ என்று எனக்காக மறக்காமல் காசு வைத்துச் செல்வான் .

பக்கத்து வீட்டு குழந்தைகள் எல்லாம் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடுவதைக் கண்டு எனக்கும் வேண்டும் என்று வீட்டில் கேட்பேன் வீட்டில் தரவில்லையென்றால் நேராக அவன் கடைக்குத்தான் ஓடுவேன். அவன் எனக்கு வாங்கித்தருவான்.

அவனுடைய வருமானத்திற்கு அதுவெல்லாம் மிகப்பெரிய விசயம் என்று எனக்கு அப்பொழுது தெரிந்திருக்கவில்லை.

ஒருநாள் பள்ளிக்கு செல்வதற்கு முன்பு வழக்கமாக அவன் கடைக்குச் செல்ல அவன் எனக்கு ஐம்பது பைசாவோ அல்லது அதற்கு அதிகமாகவோ கொடுத்துவிட்டு எப்போதும் இல்லாமல் கண்ணீரோடு முத்தம் கொடுத்தான்.

அந்த வயதில் எங்கே அந்த செண்டிமென்டெல்லாம் புரியப்போகிறது. நானும் அதிகமாய் காசு கிடைத்த மகிழ்ச்சியில் சந்தோசத்தில் செல்ல கடைக்கு வெளியே வரை வந்து என்னை பார்த்துக்கொண்டிருந்தான நான் புள்ளியாய் மறையும் வரை. நான் திரும்பி டாட்டா காட்டிக்கொண்டே சென்றேன்.

மாலை பள்ளி விட்டு வந்து கொண்டிருக்கிறேன். அந்த மாரியின் கடைக்கு முன்னால் கூட்டமாக நிற்கிறது. என்னால் அந்த கூட்டத்தில் வேடிக்கை கூட பார்க்க முடியவில்லை. சின்னப்பையன் என்னை யாருமே ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.

ஒரு பெரிசு வேறு கத்தியது..

ஏல அங்கிட்டு போல..நீ வேற தொணதொணன்னு வந்துகிட்டு..சின்னப்பையன் எல்லாம் இங்க வரக்கூடாது..போ..போ என்று

எட்டி எட்டி பார்த்துவிட்டு என்ன நடக்கிறது என்று தெரியாமல் வீட்டுக்குச் சென்றுவிட்டேன்.

சிறிது நேரம் கழித்து அவன் கடைக்கு வந்தால் அவன் கடை பூட்டியிருக்கிறது. கூட்டம் கலைக்கப்பட்டு விட்டது. ஆங்காங்கே மனிதர்கள் இரண்டு பேர், மூன்று பேராய் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

பின்னர்தான் விசயம் தெரிந்தது. அந்த மாரி கடன் தொல்லையால் கடைக்குள்ளேயே தீக்குளித்து கொண்ட செய்தி. நான் திகைத்துப் போய்விட்டேன். எனக்கு கண்ணீர் வருகிறது.

மாரி இறந்து போன பாதிப்பில் கண்ணீர் வந்ததா? இல்லை இனிமேல் காசு கொடுப்பதற்கு யாரும் இல்லையே ? என்ற வருத்தத்தில் கண்ணீர் வந்ததா தெரியவில்லை. ஆனால் அழுதேன் அந்தக் கடையைப் பார்த்துக்கொண்டே..

பின் பள்ளிக்கு செல்லும்போதும் வரும்போதும் அந்த மரக்கதவுகளுக்கு இடையே கன்னம் வைத்து எனக்குண்டான காசு இருக்கிறதா என்று எப்போதும் பார்த்துக்கொண்டே செல்வேன்.

இந்த விசயம் என் வீட்டிற்கு தெரிந்தது. யாரோ சமூக சேவகர் ஒருவர் எனது வீட்டில் கோள் மூட்டியிருக்கின்றார்.

உங்க பையன் அந்த மாரியோட கடையையே பார்த்துட்டு நிற்கிறான் என்று

எனது வீட்டில் அந்தக் கடைப்பக்கம் போகக்கூடாது பேய் இருக்கிறது என்று பயமுறுத்தினார்கள். கொஞ்ச நாள் கழித்து அந்த கடை இருந்த இடத்தை அழித்து ஒரு காம்ப்ளெக்ஸ் கட்டிவிட்டார்கள்.

ஆனால் எனக்கு ஒரு விசயம் மட்டும் தொண்டையில் சிக்குண்ட முள்ளாய் உறுத்திக்கொண்டே இருக்கிறது இதுவரை..

தினமும் காசு கேட்டு விதவிதமான திண்பண்டங்கள் வாங்கி கேட்டு அவனை தொந்தரவு படுத்தியிருக்கிறேன். அவன் கடன் தொந்தரவால் மாட்டியதுக்கு கூட நானும் ஒருவகையில் காரணமோ என்று..?

இதயம் சோகமுடன்

- ரசிகவ் ஞானியார்

2 comments:

சிங். செயகுமார். said...

இதய நெகிழ்வுடன்
இன்றொரு நாள்
இரவல் போனதே
மலரும் நினைவுகள்
மனசை கிள்ளியதே
எட்டனா காசு
இனி எப்போ கிட்டும்?
பட்டணம் போனாலும்
வட்டமான எண்ணங்கள்
வகையாய் வரிசையாய்
வாருங்கள்
வாசிக்க நான் இங்கே!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

என்னைக் கவர்ந்த விமர்சனங்களில் தங்களையும் சேர்த்துவிடவேண்டியதுதான்
நன்றி ஜெயக்குமார்

தேன் கூடு