Saturday, April 30, 2005
காதலரை காணவில்லை
பெயர் : தன் பெயரை மறந்தவர்
வயது : ஒரு பெண் காதலித்து ஏமாற்றும் வயது
முகவரி : அவள் நிழல்
காணாமல் போகும்போது
இவர்
இதயத்தை தொலைத்திருந்தார்
- ரசிகவ் ஞானியார்
அர்த்தம்
ஒரே ஒரு வாய் சாப்பிடுடா
தொந்தரவு பண்ணாத போம்மா'
- உதறிவிட்டு ஓடினேன்
சென்னை வீதியில்
வேலை தேடி
வெற்று வயிற்றோடு
சுற்றித்திரியும்பொழுதுதான்
அம்மா நீ
கொஞ்சியதன் அர்த்தம்
கொஞ்சம் புரிகிறது
- ரசிகவ் ஞானியார்
Thursday, April 28, 2005
பிகு
புதிதாய் வாங்கும்
பேனாக்கள் எல்லாம்...
உன் பெயர் எழுதி
அழகு பார்ப்பதும்...
நிலவைப் பார்க்கும்
நிமிடங்களில் எல்லாம்
நீ வந்து
நினைவைக் கலைப்பதும்.
என் வீட்டுத் தோட்டத்தில்
ரோஜாவாய் வந்த...
உன் வருகையும்.
தினம் தினம்
நீ கொடுத்த கடிதத்தை
படித்து ,படித்து கண்கலங்குவதும்
என் பழைய டைரியில்
உன் புதிய புகைப்படம்..
ஒளித்துவைப்பதும்
பீச்சில்...பார்க்கில்
ஜோடிகளைக்
காணும்பொழுதெல்லாம்
தனியாய் செல்லும் நான்..
தவித்த தவிப்பும்
எவனோ...எவளோ...
பைக்கில்
பக்கம் அமர்ந்து
செல்லும்பொழுது
நான் பதறிய பதறலும்
மாறிப்போன உன்
முகவரியைக் கண்டறிய...
உன்
பக்கத்து வீட்டுக்காரனை
பிராண்டிய பிராண்டலும்
நண்பர்களின் காதலிகள் பற்றி
கிண்டலடித்து விளையாடும்பொழுது நீ
அடிக்கடி என் இதயத்தில்வந்து...
சடுகுடு ஆடிச்செல்வதும்
இப்படி
அவஸ்தை நிமிடங்களிலையே...
ஆயுள் கழிவதைவிட
நீ காதலை சொல்லியபொழுதே
பிகு செய்யாமல்
உன்னை...
காதலித்துத் தொலைத்திருக்கலாம்.
- ரசிகவ் ஞானியார்
Wednesday, April 27, 2005
அம்மாவுக்கு ஒரு கடிதம்
கடலும் கண்ணீரும் தாண்டி - என்னை
நினைத்துக்கொண்டிருப்பவளே !
கருவறை முதலாய்
என்னை காதலிப்பவளே அம்மா !
நான் கருப்பையில்
விக்கியபோதே
நீ தண்ணீர் குடித்தாய் !
என்மீது
ஈக்கள் மொய்த்தால்கூட
நீ கண்ணீர் வடித்தாய் !
என் கைகளில் குத்திய
ஊசியின் வலியை
மூளை உணர்த்தும் !
என் வயிற்றில் வருகின்ற
பசியின் நிலையை
நீயே உணர்வாய் தாயே !
என் இரண்டாம் மூளையே !
நான் பசியோடு படுத்தால்
உணவுக்குழாயுக்குள் வந்து
ஊட்டி விடுவாய் !
எனக்கு காய்ச்சல் என்றால்
நீயுமல்லவா
கஞ்சி குடிப்பாய் !
என்னை
தடவிக்கொடுக்கின்ற
எல்லாகைகளுமே
விரல்நுனியில் ...
விஷத்தை வைத்திருக்கிறது !
உன் விரல்கள் மட்டும்தானம்மா -
இந்தப் பாலையில்
என் பாதம் பொசுங்குமுன்னே...
தோலாய் வந்து நிற்கிறது !
உன் சமையலை
குறைகூறியே சாப்பிட்ட நான்
இங்கே
குறைகளை மட்டுதானம்மா சாப்பிடுகிறேன்
தயவுசெய்து
நீ அனுப்புகின்ற கடிதத்தில்
ஒரே ஒரு சோற்றுபருக்கையாவது ஒட்டு !
நானும் ஒரு
அன்னப்பறவைதானம்மா
ஆம்
நீ அனுப்புகின்ற
இனிப்பு பொட்டலங்களிலிருந்து - உன்
இதயத்தை பிரித்தெடுக்கிறேன் !
உன் கருப்பை மூலம் எனக்கு
இரப்பை கொடுத்தவளே !
உன் மீது வெறுப்பை கொடுக்குமுன் - இறைவன்
எனக்கு இறப்பை கொடுக்கட்டும் !
ஆம் நான் இறைவனிடம்
பிரார்த்திப்பதும் அதுதான்.
நான் கேட்டு
நீ மறுத்த நாட்களை
நான் சந்தித்ததேயில்லை...
அதுபோல
நீ கேட்டு
நான் மறுக்கும் நாளொன்றில்
என் பெயர் பிணம் !
- ரசிகவ் ஞானியார்
குப்பைகள் - I
எய்ட்ஸீம்ஒன்றுதான்
எய்ட்ஸ்
கொஞ்சம்
கொஞ்சமாய்கொல்லும்
என்னவள்
கொஞ்சி
கொஞ்சியேகொல்வாள்
-----------------
கவிஞர்கள் எல்லோரும்
காதலிப்பதில்லை
ஆனால்
காதலிப்பவர்கள் எல்லோரும்
கவிஞர்கள்தான்.
------------------------
தன்னைத்தானே சுற்றுகிறது
காற்று நிறைந்த பூமி – நான்
உன்னைத்தானே சுற்றுகிறேன்
உங்கம்மா எனக்கு மாமி
------------------------
காதலர்களின் பார்வையில்
பற்றுகின்ற நெருப்பில்
சிக்கன் வைத்தால்
கூடசீக்கிரம் வெந்துவிடும்
------------------------
அவளுக்கு
புரியாத மொழியை
யாராவது கற்றுக்கொடுங்களேன்
அவளிடம்
காதலை சொல்ல வேண்டும்.
இதயம் நெகிழ்ந்து,
ரசிகவ் ஞானியார்
மறக்கமுடியாத ஆட்டோகிராப்
அவள் எழுதுவதற்காக பேனாவை எடுத்து எழுத முற்படும் சமயம் பேனா நழுவி கீழே விழுந்து விட்டது. உடனே நான் எனது பேனாவை நீட்டினேன். அவள் எழுதினாள் இப்படி :
நழுவிப் போனது பேனா மட்டுமல்ல
நீ கூடத்தான்
- ரசிகவ் ஞானியார்
Monday, April 25, 2005
ஓடுவதற்கு முன் ஒரு நிமிஷம்
சைக்கிளிலேயே செல்லும்
என் தந்தை
என்னைப்
பக்கத்து தெருவிற்குக் கூட
பைக்கில் போக சொல்லுகிறார்
இவரை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?
தேர்வு சமயங்களில்
இரவு முழுவதும்
படித்துக்கொண்டிருப்பதோ நான்
விழித்துக் கொண்டிருப்பதோ என் தாய்!
அவளை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?
அலுவலகம் செல்லும் அண்ணன்
மடித்து வைத்த சட்டையை
வெட்டியாய் ஊர்சுற்ற போகும் நான்
அணிந்துகொண்டாலும் ஆனந்தப்படுவானே?
அவனை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?
நான் செலவுக்கு
பணம் கேட்கும்பொழுது – தான்
நகை வாங்க வைத்திருக்கும் பணத்தை கூட
புன்னகையோடு தருவாளே
என் தங்கை!
அவளை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?
கோபத்தில் தம்பியை அடித்துவிட
அது அப்பாவரும் நேரம் என்பதால்
என்னை காட்டிக்கொடுக்காமல்
அழுகையை அடக்கி கொள்வானே
அவனை விட்டுவிட்டா
உன்னோடு ஓடிவருவது?
இப்படி
எனக்காக அழுவதற்கு
எத்தனையோ இதயங்களிருக்க
என்னை அழவைக்கும்
நீ எனக்கு வேண்டாமடி!
- ரசிகவ் ஞானியார்
Sunday, April 24, 2005
மாறுவேடங்கள்
மாறுவேடத்தொடு...
சொந்தங்கள்
யோசித்து யோசித்து அழுதது
இவனுக்கு
இவ்வளவு தூரம் அழுவதா ?
மதியசினிமாவின் டிக்கட்டை...
மறைத்துவைத்துவிட்டு
உயிர் நண்பன் சடலம்காண...
ஓடி வந்தான் ஒருவன்!
கொசுக்கடியாம்
கூட்டம் மெல்ல மெல்ல...
குறைய ஆரம்பிக்கிறது!
சீரியலுக்கு நேரமாச்சோ
சிலரின் முணுமுணுப்புக்கள்
அழுகையின்
அத்தனை அரத்தங்களோடும் ...
ஒரே ஒரு ஜீவன் மட்டும் நினைத்தது!
இறந்துபோன மகன்
இரவுச் சாப்பாட்டுக்கு
என்ன செய்வானோ?
ரசிகவ் ஞானியார்
Saturday, April 23, 2005
ஞானி
என் இதயம் தவிர நீ வசிக்கும் இடம்
நீ சூடுகின்ற பூவின் வாசைனை
நீ வருகின்ற பேருந்து எண்
எந்த வழியாக உன் பயணம்
உன் அண்ணன்களின் எண்ணிக்கை
உன் நெருங்கிய தோழி
நீ பேசி சிரிப்பவனுடனெல்லாம் உனக்குள்ள உறவு
ஒருநாளைக்குஎத்தனை முறை சிரிப்பாய்
இவற்றிக்கான ஆராய்ச்சியை
படிப்பில் காட்டியிருந்தால்...
விஞ்ஞானியாகியிருப்பேன்!
இப்பொழுது பார்!
வெறும் ஞானியாகியிருக்கிறேன்...
- ரசிகவ் ஞானியார்
மத ஒற்றுமை
சூலம் சுமந்த சிவனின் தோள்கள்
சிலுவை சுமக்கட்டும்
ஏசுநாதரும் மாதமிருமுறை
ஏகாதசி விரதம் இருக்கட்டும்
எல்லா உயிரிலும் அல்லா இருப்பதாய்
ஆழ்வார் பாடட்டும்
அரனும் அரியும் சிறந்தவரென்று
அப்துல்லா கூறட்டும்
- பெயர் தெரியா மாணவி
துரோகம் கவிதைக்கு பதில் கவிதை எழுதிய நண்பி
( ஞானியாரே..(ரசிகவ்)...உங்கள் கவிதை வாசித்ததும் இப்படி எழுத வேண்டும் என்று தோன்றியது....அவ்வளவுதான்... "அன்பு' படம் பார்த்தீர்களா? ..காதலோடு இருக்கும் போது மட்டும் கொஞ்சும் கெஞ்சும் வார்த்தைகள் பிறகு இப்படி தேள் கொட்டுவதா?....நேசித்தவனோஇ நேசித்தவளோ எங்கிருந்தாலும் அவள்ஃஅவன் நலம் நாடும் மனமே காதல் மனம்...உங்கள் கவிதைக்காக சொல்லவில்லை!.. காதல் தோற்றுவிட்டதென்று புலம்பி..இப்படி கண்ணீரால் கத்திசெய்யும் அத்தனை பேருக்குமாக சொல்லுகிறேன்.. நன்றி.... என்றென்றும் நட்புடன்உங்கள். விஜி.செ )
உங்கள் பார்வையில் பிரியமில்லாதவளாகிப்போனவள் இதயம் எனக்கேஎனக்கென்று தந்ததால் இன்று இதயம் இல்லாதவனாகி விட்டீர்களா?!..
இதயம் இல்லாதவனா இரங்கற்பா எழுதுவது?எத்தனை உயர்ந்தவன் நீ!
நலமா? என் நல்லவனே நலமா? அன்று வைத்த நேசத்தின் வாசத்தில் தான் இன்றும் தொடர்கிறது என் சுவாசம்
உங்களால் இப்படியேனும் புலம்ப முடிகிறது!..கை அலம்பினாலும் விரலிடுக்கிலும்நகமுடுக்கிலும் சிக்கி கொள்ளும் கீரைபோல இன்னமும் நரைக்காமல் நுரை பொங்கி இருக்கிறது உங்கள் ஞாபகங்கள்!..
உடைந்து போனது முதுகெலும்பா? இப்படி எல்லாம் பேச எப்படி கற்றுக்கொண்டீர்கள்?
வீம்புக்காய் நான் செய்யும் சிணுங்கல் கூட பொறுக்காத உங்கள் மனமா இப்படி பொருமுவது?!..
ஒடிந்து போனது நீங்கள்- அன்றே முடிந்து போனது நான் விரும்பிய அத்தனையும்!
நெருக்கத்தில் இருக்கையில்தான் காதலியா? விலகியிருந்தால் விரோதியா? என்னை நேசித்தவனா! நான் நேசித்தவனா??!!இந்த விஷம் கக்குவது?
கல்லூரியில் தூண் மறைவில் எனை நோக்கும் விழிகளுக்காக நான் ஒதுங்கி கொண்டதுண்டு!.. அந்த விழிகள் கண்டலல்வா என் நாளே விடியும்!..
இதய அறைகள் நான்கிலும் நீங்கள் !.நீங்கள்!..நீங்களேதான்
உங்கள் தடங்கள் ஒவ்வொன்றிலும் அல்லவா சுழல்கிறது என் உயிர் மூச்சு?
எனக்காக எல்லாமே மாற்றினீர்கள் நிஜம்தான்!..ஆனால் உங்களுக்காக நான் என்னை அல்லவா ஏமாற்றிக்கொண்டேன்!?!
காதல்!..என் காதல் இன்னமும் காதலாகதான் இருக்கிறது!..
உங்கள் கைசேரவில்லை என்பதால்!.. நம் காதலை கல்லறைக்கா தள்ளுவது? !..
வெறும் வாசனைக்காகவா வார்த்தைகள் மொழிந்தேன்!..அவையெல்லாம் இதயத்தில் ஓசைகள் அல்லவா?
மடிசாய்ந்ததும் !.. மாலை எல்லாம் உங்களால் சோலை ஆனதும்!... எதையும் நான் மறக்கவில்லையடா!
தீர்மானம் இல்லாமலா?!.அப்படி கேட்டேன் அன்று?
நம் குழந்தை நமக்கே நமக்கான குழந்தை என்று அள்ளிக்கொள்ளூம் காலம் வரும் என்று நினைத்திருக்க!...
அந்த நினைப்பில் நான் திளைத்திருக்க!.. விதியா சதியா? !..சொல்லத்தெரியவில்லை!.
நீ வளர வேண்டுமெனில் நான் தேய்வேன் என்று காதலோடு நாம் பேசுவதுண்டு!..அது நிஜமாகி போனதடா!..
உண்மை சொன்னால் நீ துவண்டு விழுவாய்!..துடித்து எழுவாய்!..நீ வேண்டும்!..வாழ வேண்டும் என்பதற்காய் என்னை மன்னிக்கும் உன்இதயம் என்று நானறிந்து கொண்டதினால்!...
இன்று! இன்று உன் முன் துரோகியாய்!...மன்னித்துவிடு!..
எனக்குத்தெரியும் எனை கீறும் உன் ஒவ்வொரு வார்த்தைகளூம் உன் இதயத்தை கிழித்துக்கொண்டே வரும் என்று!.
.ஓ!..அதனால் தான் இதயம் இல்லாதவன் என்று எழுத தொடங்கினாயா? ... அன்பனே!..என்னை மன்னித்துவிடு!..
உன் பெயரைத்தவிர எதுவும் நினைவில் இல்லை எனக்கு!!!!!!!! என்றென்றும் நட்புடன்
உங்கள்.
விஜி.செ
துரோகம்
என்மீது
ப்ரியம் உள்ளவள் போல நடித்த...
ப்ரியமில்லாதவளுக்கு...
இதயமில்லாதவன் எழுதும்...
இரங்கற்பா !
என்
முதுகெலும்பை முற்றிலுமாய்
ஒடித்துவிட்டு
நான் சாய்ந்து உட்கார...
சாய்வு நாற்காலி தருகிறாயே...?
உன் பிறந்தநாளில்
அஸ்திவாரம் போட்ட
நம் காதல்
உன் திருமணநாளில்
அஸ்தியாகிவட்டது!
உன்னை கல்லூரியின்
தூண் மறைத்தால்கூட...
துடித்துப்போகும் என்னை
ஏன் மறந்தாய் பெண்ணே...?
வீட்டில் ஆளில்லாதபோது...
வரச்சொல்லியிருந்தாய் !
ஆனால்
இதயத்தில் ...
ஆளை வைத்துவிட்டு
விரட்டிவிட்டுவிட்டாய்!
உன் வீட்டின்
அடுப்படிவரை
அனுமதித்துவிட்டு...
உன் இதயத்தின்
அடி படியிலையே
நிறுத்திவிட்டாயே...?
உனக்காக
புத்தகத்தின் அட்டையை மாற்றி...
சட்டையை மாற்றி...
தலைமுடி மாற்றி...
தேகம் மாற்றி...
இப்படி எல்லாம் மாற்றி
கடைசியில் நீயும் ஏமாற்றி...
எனக்கு
எதையெல்லாமோ
கற்றுக்கொடுத்தாய்!
ஏழையாய் வாழ...
தாடி வளர...
கவிதை எழுத...
அவமானப்பட...
அதற்கு
குருதட்சணையாகத்தான்
என்
காதலை பறித்துக்கொண்டாயோ...?
மௌனம் சம்மதத்தின் அறிகுறி!
ஆனால்
உன் மௌனமோ
என்...
காதலின் சவக்குழி!
ஒரு
மாலைவேளையில் என்
மடிசாய்ந்து நீ கேட்டது
ஞாபகமிருக்கிறதா...?
நமக்கு குழந்தை பிறந்தால்
என்ன பெயர் வைக்கலாம் ?
இப்படி கேட்டவளா
துரோகம் செய்தாய்...?
நீ என்றேனும்
இந்த கவிதையை
பார்க்க நேர்ந்தால்...
உன்பெயர் குறிப்பிடாமல்...
மெயில் அனுப்பு!
எனக்கு துரோகம் செய்த காரணத்தை...
- ரசிகவ் ஞானியார்
தருமபுரி வாலாபாக் படுகொலை...
அழுது கொண்டே
ஆரம்பியுங்கள்
இது கவிதையல்ல கண்ணீர்!
பேருந்தோடு சேர்த்து
கொளுத்தப்பட்டது
மாணவிகள் மட்டுமல்ல
மனிதமும் தான்
எனது தமிழனுக்கு
சிரித்து விளையாடுவதை விட
எரித்து விளையாடுவதுதான்
பிடித்திருக்கிறது போலும்
எரிதழல் கொண்டு வா தோழி
பாரதியே நீதானே பாடியது
இங்கே பார்
பேருந்துக்குள் எத்தனை எரிதழல்கள்
விவசாயக் கல்லூரி மாணவிகளை
அறுவடை செய்த
அரசியல்வாதிகளால்...
பாரதம் இங்கே
பர்தா அணிந்து கொண்டது
தமிழ்க்கலாச்சாரம்...
தலை குனிந்து விட்டது
காந்தியின் சுநந்திரம்...
காட்டுமிராண்டியானது
திருக்குறள் வாசகங்கள்...
துருப்பிடித்துப் போயின.
அவளுக்குத் தெரியாது - தான்
இன்று கல்லூரிப்பாடமல்ல
கல்லறைப்பாடம் படிப்போமென்று
அவளுக்குத் தெரியாது
இந்தப் பயணமே...
இறுதிப் பயணமென்று
அவளுக்குத் தெரியாது
தனக்குப் பாடமெடுக்க
எமன் வருவானென்று
அவளின் அந்த நேரத்து
அலறல் சத்தம்
ஆ ... ஆ
காந்தியின் கல்லறைக்குப் போய்
கதவு தட்டியிருக்கும்
சுதந்திர பூமி
சூடுபட்டதையெண்ணி -காந்தி
சுருண்டு படுத்திருப்பார்
அவளின் அந்த நேரத்து
அலறல் சத்தம்...
ஆ எரியுதே
பாரதியின்
காதுகளுக்கு எட்டியிருக்கும்
கல்லறைக்குள்ளே பாரதி
கவிதை எழுதுவான் கண்ணீரோடு
மேனி மீது நெருப்பு வந்து
பற்றிக் கொண்ட போதிலும்...
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையெ
இனி தருமபுரியில் பிறக்கும்
குழந்தைக்கெல்லாம்
தீப்பட்டதடயங்கள் இருக்கட்டும்
காரணம் கேட்டால்
மாணவிகளின் நினைவுச் சின்னமென்று
மறைக்காமல் சொல்லுங்கள்
தருமபுரியிலே
தருமத்திற்கு...
தட்டுப்பாடு
இனி புரட்சி செய்வோம்
இல்லை இல்லை
இனி ஒரு பேருந்து செய்வோம்.
அதையாவது
எரியவிடாமல் காப்போம்.
இனி எரிக்கும் சப்தம்...
எங்கேயாவது கேட்டால்
ஆகஸ்ட் - 15 முதல்
அழுது கொண்டேதேசியகீதம் பாடுங்கள்
- ரசிகவ் ஞானியார்
Wednesday, April 20, 2005
வியர்வைக்கும் நிறமுண்டு
வியர்வையொடு தந்தை............
சமையல்கட்டில்
சாம்பல்புகையில்
வியர்வையோடு தாய்........
புதுப்படக்கூட்டத்தின்
புழுக்கம் தாங்காமல்
வியர்வையோடு மகன்..........
ஆம்
வியர்வைக்கும் நிறமுண்டு
- ரசிகவ் ஞானியார்
துபாய் விசா - புலிக்கதை
தான் துபாய் போனால் தினமும் இரண்டு ஆட்டிறைச்சிகளை ஏசி அறைக்குள் இருந்துகொண்டு உண்ணலாம் மேலும் அங்கே தங்குவதற்கான நிரந்தர விசாவும் கிடைத்துவிடும் என்கிற மகிழ்ச்சியில் புலி தலைகால் புரியாமல் ஆடியது.
புpறகு துபாய் சென்று அடைந்தவுடன் முதல்நாள் அதனுடைய கூண்டினுள் அழகிய முறையில் வடிவமைக்கப்பட்ட ஒரு பெரிய பொட்டலம் ஒன்று வைக்கப்பட்டது. அதனை ஆர்வத்தில் திறந்து பார்த்த புலி அதிர்ச்சி அடைந்தது. அதனுள் பருப்பு கொட்டைகள் மட்டும்தான் இருந்தது.
பின் சுதாரித்து நினைத்துக்கொண்டது தான் வயிற்றுவலியால் அவதிப்பட்டதாலும் தான் ஆப்ரிக்காவிலிருந்து வந்த புதிய விருந்தினர் என்பதாலும் தன்மீது கொண்ட அக்கறையின் காரணமாகத்தான் அவர்கள் முதல் நாள் பருப்புகொட்டைகளை கொடுத்துள்ளார்கள் என நினைத்தது.
பின்னர் இரண்டாம் நாள் மூன்றாம் நாள் என் அதே பருப்புகொட்டைகள் வந்துகொண்டேயிருக்க புலி கடுப்பாகிவிட்டது.
"நான்தான் காட்டின் ராஜாவாகிய புலி . நான் இறைச்சி மட்டும்தான் சாப்பிடுவேன் என தெரியாதா? ஏன்ன ஆயிற்று உங்களுக்கு? இது என்ன முட்டாள்தனமாக இருக்கிறது ? ஏன் தினமும் பருப்பு கொட்டைகளை கொடுக்கிறீர்கள்.?"
மிகுந்த கோபத்துடன் உணவுப்பொட்டலம் வைக்க வந்தவனிடம் கடுமையாக கேட்டது.
பின்னர் அந்த உணவு வழங்குபவன் அமைதியாக கூறினான். :
"புலியாரே! நீங்களதான்; காட்டின் ராஜா - நீங்கள் இறைச்சி மட்டும்தான் சாப்பிடுவீர்கள் எனவும் எனக்குத்தெரியும். ஆனால்......
நீங்கள் இங்கே வந்திருப்பது குரங்கு விசாவில் அல்லவா ?"
திரும்புமா நிலாக்காலம்....?
( ஈராக் போரில் இரு கை இழந்து பாதிக்கப்பட்ட
ஒரு சிறுவனின் அழுகுரல்)
அன்புள்ள ஜார்ஜ்புஷ்
அங்கிளுக்கு
பாதிக்கப்பட்டவன் எழுதும்...
மன்னித்துக் கொள்ளுங்கள்
எழுதமுடியாமல்...
அழுகின்ற கடிதம் இதோ
எங்கள் ஏழை வீட்டுக்கேன் ...
ஏவுகணையை அனுப்பினீர்கள் ?
எங்கள்ரத்தத்திலா......
ரசாயான ஆயுதம் தேடுவது?
திருப்பித்தரமுடியுமா அங்கிள்...?
என் தாயின்
கழுத்தைதழுவியபடி தூங்க...
வேலைக்குச் செல்லும்
தந்தைக்குடாட்டா காட்ட...
ஒவ்வொரு ரம்ஜானிலும்
மருதாணி போட...
கடற்கரையில் தங்கையின்
மணல்வீட்டை கலைக்க...
வாரவிடுமுறையில்...
கிரிக்கெட் விளையாட...
டாக்டர் கனவுகளை எண்ணி
கையெழுத்துப்போட்டு கிறுக்க...
எனது கைகளை......
திருப்பித்தருவீர்களா அங்கிள்?
அதுசரி
கைகள் திரும்பவந்தால்கூட
டாட்டா காட்ட தந்தையோ...
கழுத்தைசுற்றி விளையாட தாயோ...
மணல்வீடு கட்ட தங்கையோ...
உயிரோடு இல்லையே...?
எனக்கு மீண்டும்
அந்தநிலாக்காலத்தை...
திருப்பித்தருவீர்களா அங்கிள்?
- ரசிகவ் ஞானியார்
Tuesday, April 19, 2005
தூக்கம் விற்ற காசுகள்
இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை
வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ
அயல்தேசத்து ஏழைகளின் ..
கண்ணீர் அழைப்பிதழ் !
விசாரிப்புகளோடும்
விசா அரிப்புகளோடும் வருகின்ற ...
கடிதங்களை நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது !
நாங்கள் பூசிக்கொள்ளும்
சென்டில் வேண்டுமானால்...
வாசனைகள் இருக்கலாம்!
ஆனால்
வாழ்க்கையில்...?
தூக்கம் விற்ற காசில்தான்...
துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலேயே...
இளமை கழிக்கின்றோம்!
எங்களின்
நிலாக்கால நினைவுகளையெல்லாம்...
ஒரு
விமானப்பயணத்தூனூடே விற்றுவிட்டு
கனவுகள் புதைந்துவிடுமெனத் தெரிந்தே
கடல் தாண்டி வந்திருக்கிறோம் !
மரஉச்சியில் நின்று ...
ஒரு
தேன் கூட்டை கலைப்பவன் போல!
வாரவிடுமுறையில்தான்..
பார்க்க முடிகிறது
இயந்திரமில்லாத மனிதர்களை!
அம்மாவின் ஸ்பரிசம் தொட்டு
எழுந்த நாட்கள் கடந்து விட்டன!
இங்கே
அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்து விட்டன!
பழகிய வீதிகள்
பழகிய நண்பர்கள்
கல்லூரி நாட்கள்
தினமும்
ஒரு இரவு நேர
கனவுக்குள் வந்து வந்து
காணாமல் போய்விடுகிறது!
நண்பர்களோடு
ஆற்றில் விறால் பாய்ச்சல்
மாட்டுவண்டிப் பயணம்
நோன்புநேரத்துக் கஞ்சி
தெல்கா - பம்பரம் - சீட்டு - கோலி என
சீசன் விளையாட்டுக்கள் !
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையாய் எதிர்பார்த்து...
விளையாடி மகிழ்ந்த
உள்ளு@ர் உலககோப்பை கிரிக்கெட் !
இவைகளை நினைத்துப்பார்க்கும்போதெல்லாம்...
விசாவும் பாஸ்போட்டும் வந்து...
விழிகளை நனைத்து விடுகிறது.!
வீதிகளில் ஒன்றாய் வளர்ந்த
நண்பர்களின் திருமணத்தில் !
மாப்பிள்ளை அலங்காரம் !
கூடிநின்று கிண்டலடித்தல் !
கல்யாணநேரத்து பரபரப்பு!
பழையசடங்குகள் மறுத்து போராட்டம் !
பெண்வீட்டார் மதிக்கவில்லை எனகூறி
வறட்டு பிடிவாதங்கள் !
சாப்பாடு பரிமாறும் நேரம்...
எனக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை!
மறுவீடு சாப்பாட்டில்
மணமகளின் ஜன்னல் பார்வை!
இவையெதுவுமே கிடைக்காமல்
"கண்டிப்பாய் வரவேண்டும் " என்ற
சம்பிரதாய அழைப்பிதழுக்காக...
சங்கடத்தோடு
ஒரு
தொலைபேசி வாழ்த்தூனூடே...
தொலைந்துவிடுகிறது
எங்களின் நீ..ண்ட நட்பு!
எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நாங்கள்
அயல்தேசத்து ஏழைகள்தான்!
காற்றிலும் - கடிதத்திலும் வருகின்ற
சொந்தங்களின்...
நண்பர்களின் ...
மரணச்செய்திக்கெல்லாம்
அரபிக்கடல் மட்டும்தான்...
ஆறுதல் தருகிறது!
ஆம்
இதயம் தாண்டி பழகியவர்களெல்லாம்...
ஒரு
கடலைத்தாண்டிய கண்ணீரிலையே... கரைந்துவிடுகிறார்கள்;!
" இறுதிநாள் " நம்பிக்கையில்தான்...
இதயம் சமாதானப்படுகிறது!
இருப்பையும் - இழப்பையும்
கணக்கிட்டுப் பார்த்தால்
எஞ்சி நிற்பது
இழப்பு மட்டும்தான்...
பெற்ற குழந்தையின்
முதல் ஸ்பரிசம் ...
முதல் பேச்சு...
முதல் பார்வை...
முதல் கழிவு...
இவற்றின் பாக்கியத்தை
தினாரும் - திர்ஹமும்
தந்துவிடுமா?
கிள்ளச்சொல்லி
குழந்தை அழும் சப்தத்தை...
தொலைபேசியில் கேட்கிறோம்!
கிள்ளாமலையே
நாங்கள் தொலைவில் அழும் சப்தம்
யாருக்குக் கேட்குமோ ?
ஒவ்வொருமுறை
ஊருக்கு வரும்பொழுதும்...
பெற்ற குழந்தையின்
வித்தியாச பார்வை...
நெருங்கியவர்களின்
திடீர்மறைவு ...
இப்படி புதிய முகங்களின்
எதிர்நோக்குதலையும்...
பழையமுகங்களின்
மறைதலையும் கண்டு...
மீண்டும்
அயல்தேசம் செல்லமறுத்து
அடம்பிடிக்கும் மனசிடம்...
தங்கையின் திருமணமும்...
தந்தையின் கடனும்...
பொருளாதாரமும் வந்து...
சமாதானம் சொல்லி
அனுப்பிவிடுகிறது
மீண்டும் அயல்தேசத்திற்கு!
- ரசிகவ் ஞானியார்
துபாய்