Saturday, April 23, 2005

தருமபுரி வாலாபாக் படுகொலை...

( தருமபுரியில் 3 மாணவிகள் எரித்து கொல்லப்பட்டதன் பாதிப்பில் வந்த அழுகை இது )

அழுது கொண்டே
ஆரம்பியுங்கள்
இது கவிதையல்ல கண்ணீர்!

பேருந்தோடு சேர்த்து
கொளுத்தப்பட்டது
மாணவிகள் மட்டுமல்ல
மனிதமும் தான்

எனது தமிழனுக்கு
சிரித்து விளையாடுவதை விட
எரித்து விளையாடுவதுதான்
பிடித்திருக்கிறது போலும்

எரிதழல் கொண்டு வா தோழி
பாரதியே நீதானே பாடியது
இங்கே பார்
பேருந்துக்குள் எத்தனை எரிதழல்கள்

விவசாயக் கல்லூரி மாணவிகளை
அறுவடை செய்த
அரசியல்வாதிகளால்...
பாரதம் இங்கே
பர்தா அணிந்து கொண்டது

தமிழ்க்கலாச்சாரம்...
தலை குனிந்து விட்டது

காந்தியின் சுநந்திரம்...
காட்டுமிராண்டியானது

திருக்குறள் வாசகங்கள்...
துருப்பிடித்துப் போயின.

அவளுக்குத் தெரியாது - தான்
இன்று கல்லூரிப்பாடமல்ல
கல்லறைப்பாடம் படிப்போமென்று

அவளுக்குத் தெரியாது
இந்தப் பயணமே...
இறுதிப் பயணமென்று

அவளுக்குத் தெரியாது
தனக்குப் பாடமெடுக்க
எமன் வருவானென்று

அவளின் அந்த நேரத்து
அலறல் சத்தம்
ஆ ... ஆ
காந்தியின் கல்லறைக்குப் போய்
கதவு தட்டியிருக்கும்
சுதந்திர பூமி
சூடுபட்டதையெண்ணி -காந்தி
சுருண்டு படுத்திருப்பார்

அவளின் அந்த நேரத்து
அலறல் சத்தம்...
ஆ எரியுதே
பாரதியின்
காதுகளுக்கு எட்டியிருக்கும்
கல்லறைக்குள்ளே பாரதி
கவிதை எழுதுவான் கண்ணீரோடு

மேனி மீது நெருப்பு வந்து
பற்றிக் கொண்ட போதிலும்...
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையெ

இனி தருமபுரியில் பிறக்கும்
குழந்தைக்கெல்லாம்
தீப்பட்டதடயங்கள் இருக்கட்டும்
காரணம் கேட்டால்
மாணவிகளின் நினைவுச் சின்னமென்று
மறைக்காமல் சொல்லுங்கள்

தருமபுரியிலே
தருமத்திற்கு...
தட்டுப்பாடு

இனி புரட்சி செய்வோம்
இல்லை இல்லை
இனி ஒரு பேருந்து செய்வோம்.
அதையாவது
எரியவிடாமல் காப்போம்.

இனி எரிக்கும் சப்தம்...
எங்கேயாவது கேட்டால்
ஆகஸ்ட் - 15 முதல்
அழுது கொண்டேதேசியகீதம் பாடுங்கள்

- ரசிகவ் ஞானியார்

No comments:

தேன் கூடு