Thursday, March 01, 2007

ஒரு நாடு கடத்தப்பட்டவனின் தன் வரலாறு(தொடர் 9 )

இதில் கடினமான உரைநடை எங்கள் உணவுக்கான ஏற்பாடுதான். முதல்நாள் வந்த உணவைப்பார்த்து சிரிப்பு வந்தது. மறுநாள் கோபம் வந்தது. மூன்றாம் நாள் அழுகை வந்தது.

காலையில் ஒரு பிருமாண்டமான கருப்பு நிற வாலிபன் தட்டில் எதையோ ஊற்றிவிட்டுப் போவான் அதுதான் காலை உணவு. அதன் பெயர் லப்ஸி. பின் பகல் நேரத்தில் ஒரு தகரக்கிண்ணத்தில் அரிசிச் சோறு துவரம் பருப்பு புளிக்கரைசல் கீரை . இதுதான் அந்தி நேரத்திலும்.


நாங்கள் உணவுக்காக எவ்வளவோ போராடியும் சர்க்காரின் விதிப்படி இதுதான் தரப்படவேண்டும் என்று கூறப்பட்டது.

நாங்கள் இன்னொரு வழியிம் கண்டுபிடித்தோம். காசு கொடுத்தால் சிறையில் எல்லாமே கிடைக்கும். சிறைக்காவலாளிக்கும் சமையல்காரனுக்கும் காசு கொடுத்துவிட்டால் சோத்துக்குள்ளிருந்து கோழி மீன் வருவலும் தலைப்பாகையிலிருந்து வெற்றிலை சுருட்டும் வெளிவருவதைப் பார்த்திருக்கின்றேன்.


ஒரு அறையில் இருப்பவர்கள் மற்ற அறையில் இருப்பவர்களோடு பேச அனுமதி மறுக்கப்பட்டது. ஆகவே நாங்கள் சத்தம் போட்டு பேசுவோம் இதனை காவலாளிகள் கண்டு கொள்ளவில்லை பின்னர்தான் காரணம் தெரிந்தது காவலாளிகளின் காதுகளை எங்கள் நண்பர் பணத்தால் அடைத்துவிட்டார் என்று.

அப்பொழுது சிஜடிகளின் தொந்தரவு சிறைக்குள் அதிகரித்து விட்டது. எங்கள் புரட்சி இயக்கம் வங்காளத்தில் மட்டும்தானா அல்லது நாட்டின் மற்ற பகுதிகளிலுமா என்று துளைத்து துளைத்து கேட்டார்கள்.

நாங்கள் உடனே சும்மா ஏதாவது மதராஸி பெயரையும் மராத்திப் பேரை சொல்லிவிட்டால் அவர்கள் அவர்களைத் தேடி நாடு முழவதும் அலையட்டுமே என்று மராத்தி பெயராக புருஷோத்தம் நாட்டோகாரையும் குஜராத் பெயராக கிஷன்ஜி பாவுஜி அல்லது அதுபோன்ற ஒரு பெயரையும் தயார் செய்தோம். பின் மதராஸி பெயருக்கு என்ன செய்வது ?


பத்திரிக்கைகளில் சிதம்பரம் பிள்ளையின் பெயர் அடிபட்டு வந்தது. ஆகவே அந்தப்பெயர் தொடர்பாக விசுவம்பரம் ன்னு ஒரு பெயர் ஏன் இருக்க கூடாது? அதோட பிள்ளைக்குப் பதிலா ஒரு கிள்ளையைச் சேர்த்துட்டாப் போகுது. விசுவம்பரம் கிள்ளை.


எங்களுக்கு திடீரென்று நல்ல காலம் பிறந்து விட்டது. எங்கள் எல்லோரையும் ஒரே அறையில் அடைத்தார்கள். என்னைப்போன்ற அரைவேக்காடுகள் எல்லோரையும் ஒரு அறையிலும் சில சீரியஸ் மனிதர்களை மட்டும் தனியாக இன்னொரு அறையிலும் வைத்தார்கள்.

நாங்கள் ஆட்டம் ,பாட்டம் ,கூத்து, கேலி ஒருவரை ஒருவர் கிள்ளிக்கொள்ளுதல் என்று விளையாட ஆரம்பித்தோம். எங்களுடன் உல்லஸ்கரும் இருந்ததால் மிகவும் ஜாலியாக நாட்கள் கழிந்தன. வீட்டைத் துறந்து வந்து சிறையில் அடைபட்டுகிடக்கின்றோம் என்கிற உணர்வு இல்லாமலையே நாட்கள் நகர்ந்தன .


சிறையின் உணவு கூட எங்களின் போராட்டத்திற்குப் பிறகு பழங்களும் திண்பண்டங்களும் வழங்கப்பட்டது.

எங்களுடன் இருப்பவர்களின் வீடுகளிலிருந்து மாம்பழம் பலாப்பழம் திண்பண்டங்கள் அரிசி நெய் மசாலாப்பொருட்கள் என்று வர ஆரம்பித்தன.

அந்தி நேரமானால் பாட்டுக்கச்சேரி தொடங்கிவிடும். ஹேம்சந்திரன் ,உல்லாஸ்கர் ,தேவவிரதன் ஆகியோர் நன்றாக பாடுவார்கள். ஆனால் தேவவிரதன் சீரியஸ் தன்மை கொண்ட ஆள் என்பதால் அதிகம் பாடமாட்டான்.ஒருநாள் எல்லாரும் வற்புறுத்த அவனே இயற்றிய தேசபக்தி பாடல் பாடினான்.


எழுந்து நின்றாள் தாய்

ஓங்கரித்து நின்றனர் கோடி கோடி மக்கள்

சிவந்த சூரியன் இரத்தத்தில் இருண்டது

சந்திரனும் தாரகைகளும் ரத்தத்தில் சிவந்தன

ரத்த நிறக் காணிக்கை ரத்த நிற ஆரத்தி

வீர ரத்தத்தில் தோய்ந்த பூமி என்ன அழகு ஆகா



பாடல் எங்களுக்குள் வீரத்தை ஊன்றியது. தாழ்வு, பயம், சாவு இவையெல்லாம் எங்களை ஒரு போதும் அணுக முடியாதென்று உண்ர்ந்தோம்.


சுசீன்சென் என்பவன் நன்றாக பாடுவான். சின்ன சின்ன சேட்டைகள் வேறு செய்வான்.


பலமாக கத்துவது

குதிப்பது

பாட்டுப்பாடுவது

பிறர் தோள் மீது ஏறுவது

மாம்பழம், பலாப்பழம் திருடுவது போன்ற செய்கைகளால் எங்களை மட்டுமல்ல சிறை அதிகாரிகளையே தவிக்க செய்துவிட்டான்.


இரவு நெடுநேரம் பாடிக்கொண்டிருப்பதை பார்த்து ஒரு வயதான ஜெயிலர் எங்கள் மீது மிகவும் பரிதாபம் கொண்டார். அவருக்கு நான்காம் தடவையோ ஐந்தாம் தடவையோ திருமணம் செய்திருந்தார்.

அவர் அமைதியாக இருக்கும்படி எங்களிடம் வந்து அமைதியாக சொன்னார். இரவில் மனைவியும் கொசுக்களும் செய்யும் தொந்தரவோடு இவனுடைய தொந்தரவையும் அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லையாம். கண்ணியமான குடும்பத்தை சேர்ந்த நாங்கள் இப்படி கஷ்டப்படுவதை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எங்களுக்காக அனுதாபப்பட்டார்.


ஒவ்வொருவரும் பொழுதை ஒவ்வொருவிதமாக கழித்தார்கள்.

(தொடரும்)
- ரசிகவ் ஞானியார்

No comments:

தேன் கூடு