Monday, March 05, 2007

ஒரு நாடு கடத்தப்பட்டவனின்தன் வரலாறு ( தொடர் 12 )

பின் அரசாங்க ஆணைப்படி 6 வாரங்களுக்குப் பிறகு அந்தமானுக்கு அனுப்பப்பட்டோம் கடைசியாக சிறையிலிருந்து செல்வதற்கு முன் தாய்நாட்டைப் பார்த்துக் கொண்டேன்.

ஒருநாள் அதிகாலையில் எங்களை கைவிலங்கிட்டு ஒரு வண்டியில் ஏற்றினார்கள். இருபுறமும் இரண்டு சார்ஜெண்டுகள் உட்கார்ந்து கொண்டார்கள். வண்டி கிதர்பூர் கப்பல்துறையை நோக்கி விரைந்தது,


எங்களை கப்பலில் ஏற்றிய ஒரு சார்ஜெண்ட் கேலியாகச் சொன்னார்.


"இப்போ சொல்லிடு தாய்நாடே விடைபெறுகிறேன்னு "


நாங்கள் சொன்னோம் " Au Revoir" ( பின்னால் பார்ப்போம்) இப்படிக் கூறினாலும் திரும்பி வருகின்ற நம்பிக்கையே இல்லை எங்களுக்கு.


அந்தக்கப்பலில் நானும் சுதீரும் மட்டும்தான் அரசியல் கைதிகள். கப்பலின் கீழ்தட்டில் நாங்கள் இன்னொரு அறையில் மற்ற கைதிகள் அடைக்கப்பட்டனர்.


கப்பல் ஊழியன் ஒருவன் எங்களை புகைப்படம் எடுத்தான் இங்கிலாந்து பத்திரிக்கை ஒன்றில் பிரசுரம் செய்வதற்காக. இதைக் கேட்டதும் நான் என் தலைப்பாகையை நன்றாகக் கட்டிக்கொண்டேன். பின்னே செலவில்லாமல் பெரிய மனிதன் ஆகமுடிந்தால் நல்லதுதானே . :)


3 நாள் 3 பகல் அவலைத்தின்றுகொண்டே பயணம் செய்ய வேண்டும் என்றதும் சுதீர் கலக்கமடைந்தான். அவனுக்கு யானை போன்ற உடம்பு. ஆகவே அவல் மட்டும் போதாது.


அப்பொழுது ஒரு முஸ்லிம் ஹவில்தார் அவனிடம் சொன்னார். "பாபு உனக்கு நாங்க சமைச்ச சோற்றைச் சாப்பிட ஆட்சேபம் இல்லைனா கொடுக்கிறோம். "


முஸ்லிம்கள் இரக்கமுள்ளவர்கள். தங்கள் சோற்றைக் கொடுத்து இந்துக்களின் சாதித்தூய்மையைக் கெடுக்கும் ஆசையும் அவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சம் உண்டு.


நாங்கள் சொன்னோம். "ரொம்ப நல்லது எங்க சாதி ரொம்ப உறுதியானது எவர் கையிலே சொறு தின்னாலும் அது உடைஞ்சு போகாது "


அங்கே சீக்கிய ஹவில்தார்களும் இருந்தனர் நாங்கள் பசிக்கொடுமையால் உயிர்விடவும் துணிந்துவிட்டோம் என்று அனுதாபப்பட்டு எங்களுக்கு சோறு கொடுக்க முன்வந்தார்கள்.


முஸ்லிம்களின் உணவையும் சீக்கியர்களின் உணவையும் தயக்கமின்றி வாங்கிச் சாப்பிட்டு எங்களின் வயிற்றுத் தீயை தணித்துக்கொண்டோம்.


வங்காளி பாபுக்கள் புத்திசாலிகள்தான் ஆனால் அவர்களுக்கு பாவம் புண்ணிம் ஒண்ணும் கொஞ்சம் கூடத் தெரியல என்று சீக்கியர்கள் நினைத்தார்கள்.


எங்கள் மதம் பிழைத்ததோ இல்லையோ என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால் இரண்டு பருக்கை சோறுதின்னதால் நாங்கள் பிழைத்துக்கொண்டோம்.


கப்பலில் இருந்த சில முஸ்லிம் மாலுமிகள் சமைத்த பூசணிக்காய் கூட்டு அமிர்தமாக இருந்தது.


எப்படியோ 3 நாள் கப்பலில் கழித்துவிட்டு 4ம் நாள் போர்ட்பிளேர் போய் சேர்ந்தோம். தூரத்தில் இருந்து பார்க்கும்பொழுது அழகாய் தெரிந்தது. வரிசையாய் தென்னை மரங்கள் ஆங்காங்கே துரைமார்களின் பங்களாக்கள் இந்தக் காட்சி ப்ரேம் போடப்பட்ட படம் மாதிரி இருந்தது.


ஒரு சிப்பாய் தொலைவில் இருந்த பிரமாண்டமான 2 மாடி கட்டிடத்தைக் காட்டி "அதுதான் ஜெயில் அங்கேதான் நீங்க இருக்கணும்" என்று சொன்னான்.


கப்பல் துறைமுகத்தில் இறங்கியதும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டோம். நாங்கள் சிறைக்குள் நுழைந்ததுமே கட்டையாய் குட்டையாய் தவளைக்கு பேண்ட் போட்டதுபோல ஒரு அதிகாரி இருந்தார் . அவர் பெயர் ஸ்ரீமான் பேரி முதன்மை அதிகாரி.


பிற்காலத்தில் அவரைப் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். ஏனென்றால் சுமார் 11 ஆண்டுகள் அவர் நிர்வாகத்தின் கீழ் சிறையில் இருந்தேன்.

அவர் ரோமன் கத்தோலிக்கர். வருடம் முழுவதும் பாவம் செய்துவிட்டு கைதிகளைத்துன்புறுத்திவிட்டு பாவத்தின் மூட்டைகளை கிறிஸ்துமஸ் அன்று மாதா கோயிலில் பாதிரியாரின் காலில் இறக்கி வைத்துவிட்டு வந்திடுவார். அன்று மட்டும் ஒரு கைதியையும் துன்புறுத்த மாட்டார். மற்ற 364 நாட்களுடம் யமனே உருவெடுத்து வந்ததுபோல கைதிகளை கொடுமைப்படுத்துவார்.


கைதிகள் ஏதாவது தவறு செய்துவிட்டு கடவுளின் பெயரால் மன்னிப்பு கேட்டால் ஸ்ரீமான் பேரி சொல்லுவார் "இந்த ஜெயில் என்னோட ராஜ்யம் இங்கே கடவுளோட அதிகாரம் செல்லாது நான் முப்பது வருஷமா இந்த போர்ட்ப்ளேரில் இருக்கேன். ஒருநாள் கூட கடவுள் இங்கே வந்து பார்த்ததில்லை."

இது பேரியின் கூற்றுதான் எனினும் முற்றிலும் உண்மை.


கைதிகள் சிறைக்கு நுழைந்ததுமே அவர்கள் பிராமணராக இருந்தால் பூணூல்கள் அறுக்கப்பட்டன. ஆனால் முசல்மானின் தாடியிலோ சீக்கியனின் தலைப்பாகையிலோ அவர்கள் கை வைப்பதில்லை. ஏனென்றால் அவர்கள் பிடிவாதக்காரர்கள்.

(தொடரும்)

- ரசிகவ் ஞானியார்

No comments:

தேன் கூடு