Tuesday, March 06, 2007

ஒரு நாடு கடத்தப்பட்டவனின் தன் வரலாறு( தொடர் 14 )

ஒரு நாள் நான் திட்டு வாங்கிவிட்டு கவலையோடு உட்கார்ந்திருந்தபொழுது ஒரு காவலாளி அறிவுரை சொன்னான். திட்டு வாங்கி மனம் குமுறிப்போறவங்க, ஒண்ணு பைத்திமாயிடுவாங்க இல்லை முரண்டு பிடிச்சிகிட்டு தூக்கிலே சாவாங்க கடவுள் கிருபையால இந்த நாள் எப்போவும் இருக்காது என்று அவன் கூறியது இனிமையாக இருந்தது.

தேங்காய் மட்டைகளை அடித்துக் கொண்டும் சேப்ப இலைக்கறியை சாப்பிட்டுக்கொண்டும் திட்டுக்களை வாங்கிக் கொண்டும் காலம் கடத்தினோம். ஆனால் அவர்களின் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரிக்க வாழ்க்கை வெறுத்துப் போய்விட்டது.


எதற்கெடுத்தாலும் கைதிகள் துன்புறுத்தப்டுவது வாடிக்கையாகிவிட்டது


வரிசையில் ராம்லால் கோணலா உட்கார்ந்திருக்கான் அவன் கழுத்திலே 2 அடி கொடு,

முஸ்தபாவை கூப்பிட்டதும் அவன் எழுந்திரிக்கல அவனோட மீசையை புடுங்கி எறி,

பகாவுல்லா கழிப்பறையிலேயிருந்து திரும்பி வர நேரமாச்சு அவன் குண்டியில 3 அடி வை.


இப்படி கொடுமைகள் அதிகரித்து வந்தன. காக்க வேண்டியவனே கொடுமை செய்தால் உயிர் பிழைக்க எங்கே போவது?

பின் எங்களுக்கும் செக்கிழுக்கும் வேலை தரப்பட்டது. ஒரு நாளைக்கு பத்து பவுண்டு அல்லது முப்பது பவுண்ட் தேங்காய் எண்ணெய் தயாரித்துக் கொடுக்கவேண்டும். முரட்டு பயில்வான்கள் கூட திணறுவார்கள். எங்களால் எப்படி முடியும்? ஆனால் ஒன்றும் செய்ய முடியாது. ஆபிசர்கள் வைத்ததுதான் சட்டம்.


செக்கிழுக்கும் அறைக்குள் நுழைந்தவுடனையே அங்குள்ள முரட்டு ஆசாமி முஷ்டியை முகத்திற்கு நேராக வைத்து வேலையைச் சரியா செய்யலைன்னா ஒரு குத்திலே மூக்கை சப்பையாக்கிவிடுவேன் என்று மிரட்டுவான். ஆனால் மூக்கின் எதிர்காலம் பற்றியெல்லாம் எங்களுக்கு கவலையில்லை.


அது வேலையில்லை மல்யுத்தம் மாதிரிதான். பத்து நிமிடங்களுக்குள் நாக்கு உலர்ந்து போய்விட்டது. கையும் காலும் களைத்துப் போய்விட்டது.


எங்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. வாய் விட்டு சத்தம் போட்டு அழுதாலாவது துக்கம் குறையும் என்றால் அழுவதற்கு வெட்கமாக இருந்தது. அழவும் முடியவில்லை.


வேலையை முடிக்கும்பொழுது கையெல்லாம் கொப்புளம். கண் பார்வை மங்கிப் போயிருந்தது.


கொடுமை தாங்காமல் பேசாமல் கழுத்தில் கயிறு மாட்டி தூக்குப் போட்டுக் கொள்ளலாமா என்று கூடத் தோன்றியது. ஆனால் எனக்கு துணிவு ஏற்படவில்லை. ஆகையால் முடிந்தவரை சர்க்காரின் எண்ணெய்க்கிடங்கை நிரப்பினோம்.


ஒருநாள் காலையில் செக்கிழுத்தும் முப்பது பவுண்ட் எண்ணெய் ஆட்ட முடியவில்லை. கைகள் அயர்ந்து கண்கள் சொக்கி தலை சுற்றி கீழே விழுந்துவிடுவேன் போல இருந்தது,

சரியாகச் செய்யாததற்கு ஜெயிலரிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர் என்னை கெட்ட கெட்ட வார்த்தைகள் திட்டினார். என் குண்டியில் பிரம்பால் அடிப்பதாக மிரட்டினார். என்னால் அவர் திட்டினை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவமானமாக இருந்தது.


நான் திரும்பி வந்து சாப்பிட அமர்ந்தால் சாப்பாடு இறங்கவில்லை அப்போது ஒரு இந்துக் காவலாளி என்னிடம் இரக்கப்பட்டு பாபு ரொம்ப கஷ்டப்பட்டிருக்கார் அவருக்கு நல்லா சாப்பாடு போடு

இதைக் கேட்டதும் எனக்கு அழுகை வந்துவிடும் போல இருந்தது.இந்த மாதிரி சமயத்தில் அடி உதையைக் கூட பொறுத்துக் கொள்ளலாம் ஆனால் அனுதாபத்தை பொறுத்துக் கொள்ள முடியாது.

(தொடரும்)

- ரசிகவ் ஞானியார்

No comments:

தேன் கூடு