Tuesday, March 06, 2007

ஒரு நாடு கடத்தப்பட்டவனின் தன் வரலாறு( தொடர் 13 )

இங்கே இந்துக்களும் முஸ்லிம்களும் ஏறக்குறைய சம எண்ணிக்கையில் இருந்தனர். இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை இந்துக்களின் எண்ணிக்கையில் கால் பங்குதான். ஆனாலும் இங்கு அவர்கள் சம அளவில் இருந்தது அவர்களின் போராட்டக் குணத்தைக் காட்டியது.

சிறையில் அனைத்து அதிகாரிகளுக்கும் சிறையின் வருமானத்தை எப்படி பெருக்குவது என்பதுதான் கவலை. கைதி செத்தானா? உயிருடன் இருக்கிறானா? என்பது பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. கைதிகள் நார் உரிக்கும் வேலை செக்கிழுக்கும் வேலை என ஈடுபடுத்தப்பட்டார்கள்.


சிறையில் ஒருநாள் ஒரு பைத்தியத்தைப் பார்த்தேன். அவன் வர்த்தமான் மாவட்டத்துக்காரன். சிறையில் துப்புறவு பணி செய்து வந்தான். அவனுக்கு தன் சொந்த குடும்பத்தைப் பற்றி தெளிவாக நினைவில்லை.?"நீங்கள் எத்தனை அண்ணன் தம்பிகள்?"என்று கேட்டால் " 7 " என்று சொன்னான்

அவர்களுடைய பெயரைக் கேட்டபொழுது விரல்விட்டு எண்ணி யோசித்து யோசித்து 5 பேரைச் சொன்னான்.. அவன் சோறு ,துணி பற்றி அதிகமாய் கவலைப்படுவதில்லை. சிலநேரம் பேசாமல் உட்கார்ந்திருப்பான்.


அவனைப் ஒருமுறை பார்க்கின்றவர்களே சொல்லிவிடுவார்கள் இவன் பைத்தியக்காரன் என்று. ஆனால் இவனுக்கும் நாடு கடத்துதலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறான். எந்த புண்ணியவான் தண்டனை கொடுத்தானே?.


சிலர் தந்திரமாய் வேலையிலிருந்து தப்பிப்பதற்காக பைத்தியம் போல் நாடகம் ஆடுவதுண்டு. இப்படிப்பட்ட வங்காளி ஒருவனைப் பார்த்தேன். துணியைக் கட்டிக்கொண்டு பைத்தியம் போல் கத்தினான். சுண்ணாம்புத் தூளை கண்களில் தூவி கண்களை சிவப்பாக்கி உளறினான். சோறு சாப்பிடும் பொழுது முகத்தை திருப்பிக்கொண்டு உட்கார்ந்திருந்தான். அவனை காவலர்கள் ஜெயிலரிடம் இழுத்துச் சென்றார்கள்.


ஜெயிலர் இவனைச் சோதிப்பதற்காக வாழைப்பழம் ஒன்றைக் கொடுத்தார். இவன் வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டு தோலையும் சாப்பிட்டுவிட்டான். உடனே ஜெயிலர் பைத்தியமில்லாவிட்டால் தோலைத்தின்பானா? ஆகவே இவன் பைத்தியம்தான் என முடிவு செய்தார்.


அவன் திரும்பி வந்ததும் அவனிடம் கேட்டேன் "ஏன் தோலைத் தின்றாய்? "


என்ன செய்யுறது பாபு அந்த ஆளை முட்டாளாக்கணுமே கஷ்டமே படாம பைத்தியமாக முடியுமா..?


வங்காளத்தில் ஒரு பழமொழி உண்டு எழுந்திருந்தால் தடியடி உட்கார்ந்திருந்தால் பிரம்படி.

இதன் அர்தத்தை சிறையில் உணர்ந்து கொண்டேன்.


சிறையில் தருகின்ற உணவுமுறைகளைப் பார்த்தால் ரொம்ப கேவலமாக இருக்கும். தண்டு ,இலை, தோல் சீவப்படாத வாழைக்காய், புளிக்கீரை, சிறு கற்கள், எலிப்புழுக்கை, இவற்றை ஒன்றாக வேக வைத்து உணவாக தருவதை எந்த கண்ணியமா வங்காள இளைஞனும் சாப்பிடமாட்டான் பஞ்சகாலத்தில் கூட.


கைதிகளுக்கு கடுமையான வேலைகள் தரப்பட்டன.


தேங்காய் மட்டையை நன்றாகப் பிரித்து கயிறு திரித்தல்

தேங்காய் எண்ணையும் கடுகு எண்ணையும் தயாரித்தல்

தேங்காய் கொட்டாங்குச்சியைக் கொண்டு குடுவை தயாரித்தல்


இவைதவிர சிறையில் உள்ள பிரம்பு தொழிற்சாலையில் வயது குறைந்தவர்கள் மட்டும் வேலை செய்வார்கள்.


செக்கிழுப்பதும் நார் உரிப்பதும்தான் மிகவம் கடுமையான வேலைகள். பாரீனும் அவிநாசும் வலிமையானவர்கள் ஆகவே அவர்களுக்கு கயிறு திரிக்கும் வேலை தரப்பட்டது. மற்றவர்களுக்கு நார் உரிக்கும் வேலை.


காலைக்கடன்களை முடித்துக்கொண்டு சிறிது நேரத்துக்குப் பிறகு எல்லோரும் சோறோ கஞ்சியோ விழுங்கிவிட்டுக் கோவணத்தை இறுக்கி கட்டிக்கொண்டு தேங்காய் மட்டையை உரிக்க உட்கார்ந்து விடுவோம்.


ஒவ்வொருவருக்கும் 20 தேங்காய் மட்டைகள் தரப்படும். பலமான கட்டையின் மீது வைத்து அதனை அடிக்க அடிக்க அது மிருதுவாகிவிடும். பின் மட்டையின் மேல்தோலை பிரித்துவிட்டு அதனை தண்ணீரில் நனைத்துவிட்டு மறுபடியும் கட்டையால் அடிக்க வேண்டும். அப்பொது பொடியெல்லாம் உரிந்து நார் மட்டும் எஞ்சியிருக்கும். இந்த நாரை வெயிலில் வைத்து காயவைத்து சுத்தம் செய்து ஒவ்வொரு நாளும் ஒரு சேர் எடையுள்ள நார் தயாரிக்க வேண்டும்.



முதல் நாள் மட்டும் புரிந்து கொள்ள சிரமம் ஏற்பட்டது. பின் பழகி விட்டது. அடித்து அடித்து கையில் கொப்புளங்கள் வந்துவிட்டன.


நாரை உரித்து பலியிடப்பட வேண்டிய ஆடுகளைப் போல நடுங்கிக் கொண்டே அதிகாரிகளிடம் கொடுக்கச் சென்றால் அதிகாரியோ நற நற வென்று பற்களை கடித்துக்கொண்டு கெட்ட வார்த்தைகளால் எங்களை கண்டபடி திட்டுவார்.


என்னால் எப்போதுமே திட்டுக்களை பொறுத்துக்கொள்ள முடியாது. ஆனால் அந்த சூழ்நிலையில் பொறுத்துதான் ஆகவேண்டும்.


எல்லா மொழிகளையும் கலந்து அவர்கள் திட்டுவதை கேட்கவேண்டுமே "ஆகா என்னே அருமை". ஒருமுறை அந்த திட்டை கேட்பவன் அதிலே மயங்கிப்போய்விடுவான். பல மொழிகள் அந்த திட்டில் கலந்து காதுகளை குளிர வைக்கும்.

(தொடரும்)



- ரசிகவ் ஞானியார்

No comments:

தேன் கூடு