Thursday, March 08, 2007

ஒரு நாடு கடத்தப்பட்டவனின் தன் வரலாறு( தொடர் 16 )

எங்கள் வேலை சம்பந்தமாக ஒரு உறுதியான நிலைப்பாடு எடுக்கவில்லை என்றால் செக்கிழுத்தே நாங்கள் செத்துவிடுவோம் என்று தோன்றியதால் நாங்கள் செக்கிழுக்க மறுத்து போராடினோம்.

அதிகாரிகள் கொதித்தெழுந்து நான்கு நாள் கஞ்சி - நிற்க வைத்து கை விலங்கிடுவது - என்று தண்டனைக்கு மேல் தண்டனை கொடுத்தார்கள். 12 - 13 நாட்கள் வரையிலும் வெறுங்கஞ்சி கொடுக்கப்பட்டது.


பின் தனிதனித்தனியே சிறையில் அடைத்து வைக்கப்பட்டு யாருடனும் பேச அனுமதி மறுக்கப்பட்டது. இந்த சமயத்தில் பலரது உடல்நலமும் கெட்டுப்போனது.



ஒருநாள் வருந்ததக்க நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஆம் இந்துபூஷண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டான். அவனால் சிறையில் நடக்கின்ற சிறு சிறு அவமானங்களை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவன் இடைஇடையே சொல்லுவான் இந்த நரகத்தில் பத்து வருடம் தங்கியிருக்க என்னால் முடியாது என்று. அப்படியே செய்துவிட்டான்.


தனது சட்டையை கிழித்து கயிறாக முறுக்கி அறையின் பின்புறமுள்ள ஜன்னலில் தூக்குப்போட்டுக்கொண்டான்.


இதனிடையே உல்லாஸ்கர் கடுமையான வேலை காரணமாக அவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அவன் வேலை செய்ய மறுத்து எங்களிடம் சொன்னான்

கொடுமைக்கு பயந்து வேலை செய்வது மனித தன்மைக்கு அவமானம் என்று.


அவன் வேலை செய்ய மறுத்ததால் 7 நாட்கள் நின்ற நிலையில் கைவிலங்கு பூட்டப்பட்டான். ஆனால் முதல்நாளே அவன் நினைவிழந்து கை விலங்கோடு தொங்கிக்கொண்டிருந்தான். உடனே அவனை மருத்துமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அவனுக்கு கடுமையான காய்ச்சல். 106 டிகிரி காய்ச்சல். மறுநாள் காலை காய்ச்சல் இறங்கி விட்டது. ஆனால் உல்லாஸ்கர் பைத்தியம் பிடித் நிலைக்கு மாறிவிட்டான்.


மனஉறுதியுடன் இருந்த உல்லாஸா இப்படி ஆகிவிட்டான் என்று நினைத்தபொழுது சிறையின் உண்மை உருவம் தெரிய ஆரம்பித்தது எங்களுக்கு. நாங்கள் பிழைத்து ஊர் திரும்ப முடியாது. ஒன்று தூக்கில் சாவோம் அல்லது பைத்தியம் பிடிக்கும் ஆகவே மனஉறுதியுடன் எங்களுக்காக ஏதாவது ஏற்பாடு செய்யப்படும் வரை எந்த வேலையும் செய்யமாட்டோம் என்று தீர்மானத்திற்கு வந்தோம்.


வேலை நிறுத்தத்தை தொடர்ந்தோம். நான்கு நாள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு அனைவரும் நம்பிக்கை இழந்து வேலைக்கு திரும்பிவிட்டனர் நனிகோபால் மட்டும் பிடிவாதமாக உண்ணாவிரதம் இருந்து எலும்பும் தோலுமாய் ஆகிவிட்டான். பின் நண்பர்களின் அறிவுரைப்படி வேலை நிறுத்தத்தை கைவிட்டான்.


இந்த நிலையில் இந்தியாவில் உள்ள பத்திரிக்கைகளில் இந்து பூஷண் , உல்லாஸ்கர், நனிகோபால், ஆகியோரின் செய்தி வந்ததால் சிறை நிர்வாகத்திற்கு கெட்ட பெயர் ஏற்பட்டது.ஆகவே விசாரணையின் பலனாக உலஜலாஜ்கர் மனநோய் மருத்துமனைக்கு அனுப்பப்பட்டான்.


பின் மறுபடியும் நிர்வாகத்தின் கொடுமைகளை தாங்க முடியாமல் நனிகோபால் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தான். அதற்குத் தண்டனையாக அவனுக்கு சாக்குத்துணியை அணிய கொடுத்தார்கள். அதிகாரிகள் வலுக்கட்டாயமாக அவனை நிர்வாணமாக்கி அவனை சாக்குத்துணியை அணியச்சொல்லி அறைக்குள் அடைத்தார்கள்.


"அவனோ நாம் அம்மணமாகவே அம்மாவின் வயிற்றிலிருந்து வந்தோம். அம்மணமாகவே திரும்பிப் போகின்றோம்" என்று சொல்லிவிட்டு உள்ளாடைகளைத் தூக்கி எறிந்து விட்டானாம். தலைமைக் கமிஷனர் வந்தால் சலாம் சொல்வதில்லை. "என்ன வேணும்? "என்று கேட்டால் "ஒண்ணும் வேணாம்" என்று பதில் சொல்கிறான் என்கிறானாம்.

அவன் பைத்தியமாகி விட்டானோ என்ற கவலைதான் எங்களுக்குள் எழுந்தது, பின்னர் கேட்டால் அவன் பைத்தியமாகவில்லை பிரிட்டாஷாரின் தண்டனையை நாம் ஏன் ஏற்க வேண்டும் அவர்கள் இஷ்டத்திற்கு சட்டம் இயற்ற அவர்கள் யார் என்று கேட்கின்றான்.


பின் நனிகோபாலுக்கு ஆறுதல் கூறுவதைத் தவிர எங்களால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.


இதற்குப் பின் சிறையில் சில சில சச்சரவுகள் வாக்குவாதங்கள் கைகலப்புகள் தோன்றியது. சிலர் காசநோய் தாக்கப்பட்டு இறந்து போனார்கள். சிலர் இனி விடுதலை கிடைக்காது என்று ஈயத்தை தின்று இறந்து போனார்கள். சிலர் உண்ணாவிரதம் இருந்தே இறந்து போனார்கள். சிலருக்கு பைத்தியம் பிடித்தது.

சிலர் காவலாளிகளோடு மோதி அவர்கள் அடித்து இறந்து போனார்கள்.

இம்மாதிரி நிகழ்ச்சிகள் பல பல எவற்றை விடுவது எவற்றை விவரிப்பது?

(தொடரும்)



- ரசிகவ் ஞானியார்

No comments:

தேன் கூடு