Thursday, March 01, 2007

ஒரு நாடு கடத்தப்பட்டவனின் தன் வரலாறு( தொடர் 8)

இதனைக்கோட்டு பாரீன் கொதித்து எழுந்து இன்ஸ்பெக்டரிடம்," ஐயா எங்களை தூக்கிலே போடணுமோ வேற என்ன செய்யணுமோ செய்யுங்க ஆனா இந்தப்பசங்கள ஏன் இப்படி வதைக்கிறீங்க "

உடனே இன்ஸ்பெக்டர், ஒரு சப் இன்ஸ்பெக்டரை அழைத்து இதை வாங்கிட்டு வா அதை வாங்கிட்டு வா என்று ஆணையிட்டார். சப் இன்ஸ்பெக்டரோ, சில போலிஸ்கார்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு நகர்ந்து விட்டார். திரும்ப திரும்ப நாங்கள் கேட்ட பிறகு ஒரு தம்ளர் தண்ணீர் மட்டும்தான் கிடைத்தது.

பின் போலிஸ் கோர்ட் நாடகம் முடிந்தபிறகு எங்களை அலிபூர் மாஜிஸ்திரேடிடம் ஒப்படைத்தார்கள். அவர்களுக்கு முன்னால் வாக்குமூலம் கொடுக்கு போது மட்டும் அவர்கள் ஆளுக்கொரு டம்ளர் தண்ணீர் கொடுத்தார்கள் என்பதை தர்ம நியாயப்படி ஒப்புக்கொண்டாக வேண்டும்.

சலவைக்கல்லால் செதுக்கப்பட்ட முகம் போல உள்ள நீதிபதி கேட்டார். உங்களாலே இந்தியாவை ஆள முடியும் என்று நினைக்கின்றீர்களா?

இவ்வளவு கஷ்டத்திற்கு நடுவிலும் எனக்கு சிரிப்பு வந்து விட்டது. நான் கேட்டேன்

துரையே 150 ஆண்டுகளுக்கு முன்னால் நீங்க இந்தியாவை ஆண்டுகிட்டிருந்தீங்களா? அல்லது நாங்க எங்களை ஆளுறதுக்கு உங்க நாட்டுல இருந்து ஆட்களை அழைத்து வந்தோமா..?


நான் பேசியது அவருக்கு பிடிக்கவில்லை. மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டோம். அப்பொழுது ஜெயில் பாபு தந்த சோறு கொடுத்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைத்த அந்த சோற்றுப்பருக்கைகள் அமிர்தமாக இருந்தது.


சிறையில் எனக்கு என்னவெல்லாமோ ஞாபகம் வந்தது. கடந்த கால நினைவுகளை மெல்ல மெல்ல அசை போட்டேன். 4 மாதங்கள் அலைந்து திரிந்து மெலிந்து போய் களைத்து வீடு திரும்பிபொழுது அம்மா சொன்னாள்


என் பிள்ளைக்கு இப்போ என் சமையல் பிடிக்கலை..ஏழை – அனாதை மாதிரி எங்கேப்பா அலைஞ்சு திரியறே? நீ கண்ணியமான குடும்பத்து பையன்.. கடைசியில் போலிசில பிடிச்சி அவமானப்படுத்திடுவாங்கப்பா..


இன்று உண்மையிலேயே போலிஸ் என்னைப் பிடித்து அவமானப்படுத்திவிட்டார்கள். எங்களை பிடிக்க வந்த போலிஸ்காரன் சொன்னது ஞாபகம் வந்தது. நாங்கள் வரும்பொழுது நீங்கள் ரெண்டு மூணு குண்டு வீசியிருந்தால் கூட நாங்கள் ஓடிப்போயிருப்போம் என்று.

ஒரு சார்ஜெண்ட் வேடிக்கையாக கூறினான் "இந்தப்பசங்க அப்பாவிப் பசங்க வாசல்ல கூட காவல் வைக்கல என்று "

இந்த கூற்றுகள் உண்மையென்று உரைத்தது. இந்த வருத்தம் செத்தாலும் போகாது.

எங்கள் மாணிக்தலா தோட்டத்தை கடந்து சென்றவர்கள் நாங்கள் குண்டுகள் மறைத்து வைத்த இடத்தில் தங்கியிருந்தவர்கள் என்று பல அப்பாவிகளை அவர்கள் கைது செய்திருந்தனர்.

பல்வேறு மாவட்டங்களிலிருந்து எங்கள் இளைஞர்கள் பலரை கைது செய்து கொண்டு வந்திருந்தார்கள். அதில் என்னுடைய பழைய நண்பன் பண்டித் ரிஷிகேசும் வந்து சேர்ந்தான்

அவன் என்னுடன் கல்லூரியில் படித்தவன் நான் இங்கிலிஷ் சரஸ்வதியை வேண்டாமென்று கல்லூரியைவிட்டு வெளியே வந்தபொழுது அவன் என்னுடன் கங்கைத்தண்ணீரை கையில் எடுத்து சபதம் செய்தான் எல்லாக் காரியங்களிலும் என்னுடன் இருக்கப் போவதாக.


கங்கையம்மன் எந்த கெட்ட வேளையில் அப்படியே ஆகட்டும் என்று அவனுக்கு சொன்னாளோ தெரியாது. இப்பொழுது என்னுடனே ஒட்டிவிட்டான்.


விழாக்காலத்தில் ,ஆபத்து நேரும்பொழுது, பஞ்சகாலத்தில், நாட்டுக் கலகத்தில், அரண்மனை வாயிலில், மயானத்தில் கூட இருப்பவனே உண்மையான நண்பன் என்று சாத்திரம் கூறுகின்றது. அதுபோல என்னுடன் எல்லா நிலைகளிலும் இருப்பவன் இந்த ரிஷிகேஷ்.


துறவிகளாக - வாத்தியார் வேலை- பஞ்ச காலத்தில் - அவனுடைய திருமண விழா இப்படி எல்லா நலைகளிலும் மட்டுமல்ல இப்பொழுது துன்ப காலத்திலம் ஒன்று சேர்ந்திருக்கின்றோம். மயானத்தை தவிர.

எங்கள் தோட்டத்தில் உள்ள நோட்டுப்புத்தகத்தில் நாங்கள் எழுதி வைத்த பெயரை வைத்து அந்த பெயர் இருப்பவர்களை எங்களுடன் சம்பந்தமில்லாதவர்களாக இருந்தால் கூட கைது செய்துவிட்டார்கள்

சுமார் 7 முழநீளம் 5 ஆழ அகலமுள்ள சிறையில் நாங்கள் 3 ஜீவன்கள் அடைக்கப்பட்டிருந்தோம் என்னுடன் இரண்டு பையன்கள்.

முதலாமவன் நளினி காந்தகுப்தா இவனுக்கு வயது 20 காந்தக்குப்தா மாபஷநிலக் கல்லூரியில் 4ம் ஆண்டு மாணவன்


இரண்டாமவன் சுசீந்திநாத் சென் மிகவம் அமைதியானவன். தேசியக் கல்லூரியிலிருந்து ஓடி வந்தவன். குழந்தை என்று கூடச் சொல்லலாம்

அறையின் மூலையில் சிறுநீர் மற்றும் மலங்கழிக்க இரண்டு தொட்டிகள். அவற்றைதான் நாங்கள் மூவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒருவர் உள்ளே செல்லும்பொழுது மற்றவர்கள் கண்களை மூடித்தான் ஆகவேண்டும்.


அறைக்கு முன்னால் ஒரு சிறிய வராந்தா.அங்குதான் குளிக்க கை கால் கழுவ சாப்பிட என்று எல்லாமும்.


வராந்தாவுக்கு முன்னால் ஒரு முற்றம். அதற்குப்பிறகு வானளாவிய சுவர். அந்த சுவரானது, நீங்க கைதிகள் நீங்க கைதிகள் என்கிட்டே மாட்டிக்கிட்டீங்க இனிமேல் உங்களுக்கு விடுதலை இல்லை என்று அது எப்போமு; கத்திக்கொண்டிருப்பதாக எங்களுக்குத் தோன்றியது.

அந்தச்சுவருக்குப் பின்னால் ஒரு சிறிய மரம் மற்றும் தெரிகின்ற வானமும்தான் எங்கள் கவிதை தன்மைக்கு ஊற்று. பாக்கியெல்லாம் உரைநடைதான்.


இதில் கடினமான உரைநடை எங்கள் உணவுக்கான ஏற்பாடுதான். முதல்நாள் வந்த உணவைப்பார்த்து சிரிப்பு வந்தது. மறுநாள் கோபம் வந்தது. மூன்றாம் நாள் அழுகை வந்தது.

(தொடரும்)

- ரசிகவ் ஞானியார்

No comments:

தேன் கூடு