Thursday, October 13, 2005
காந்'தீ' பிறந்த மண்(?)
இறைவா – நாங்கள்
இருட்டில் இருப்பினும்...
பரவாயில்லை!
நெருப்பை ஞாபகப்படுத்தும்...
அந்த சூரியனை
நிறுத்திவிடு!
வாக்களித்து விளையாடும்
அரசியல்வாதியைப்போல...
தீக்குளித்து விளையாடும்
தீண்டத்தகாதவர்களே!
நீங்கள்
போகிப்பண்டிகை கொண்டாட
மனிதர்கள்தான் கிடைத்தார்களா,,,?
காந்தியின்
சத்தியாகிரகப்பூமியில் என்ன
சாம்பலின் வாசனை...?
வேறு ஒன்றுமில்லை
மனிதர்களை எரிக்கிறார்களாம்...
அவ்வளவுதான் !
சிகரெட் சூட்டிற்கே
கையை உதறும்...
எம் இந்தியன்
சரீரச்சூட்டை எப்படிப்
பொறுத்தானோ?
இறந்தால் எரிக்கவையுங்கள்
இப்படி
எரித்தே இறக்கவைப்பதில்
என்னடா நியாயம்?
"இந்தியா ஒரு
மதச்சார்பற்ற நாடு"
அட
பாடபுத்தகத்தில் எப்படி
பொய்யான தகவல்?
தயவுசெய்து
அந்தப்பக்கத்தை...
கிழித்துவிடுங்கள் !
சுதந்திரத்தின் கால்கள்
சூம்பிப் போய்விட்டதால்...
நியாயங்கள் இங்கே
நொண்டி நடக்கிறது!
சட்டம் இங்கே
ஆண்மையை இழந்து...
அவதிப்படுகிறது!
தர்மம் எவருடனோ
தகாத உறவு கொண்டுவிட்டதால்...
எய்ட்ஸ் நோயால்
தத்தளிக்கிறது!
குரங்கிலிருந்து மனிதன்
பிறந்தானா...?
ஆராய்ச்சியை நிறுத்துங்கள்....
இதோ நிருபித்துவிட்டான்!
குடும்பம் குடும்பமாய்
கொளுத்துகின்ற அவசரத்தில்...
எவனோ ஒருவன்
மாற்று மதக்காரியோ என நினைத்து
பாரதமாதாவையும்
கொளுத்திவிட்டான்!
இந்தியாவின்
கைகளை நெருப்பிலே
கருக்கிவிட்டு...
மனிதநேயத்திற்கு
டாட்டா காட்டுகிறார்கள்...
மிருகங்கள்!
இதென்ன
கல்வியாளர்களின் தேசமா?
இல்லை
காட்டுமிராண்டிகளின் தேசமா?
திசைகாட்டிகள் கூட...
குஜராத்தின்
திசைகாட்ட மறுக்கிறதாம் ?
அகமதாபாத்தின்
அலறல் சத்தத்தில்...
கன்னியாகுமரிக் குடிமகனின்
காதுகள் செவிடாகிப்போனதாமே?
அட ராமா
நீ
கால்பட்டதால்...
கல்கூட பெண்ணாணதாமே
உன்னை
உம் பக்தர்கள் மிஞ்சிவிட்டார்கள்!
ஆம் அவர்கள்
கை பட்டவுடன்...
மனிதர்கள் சாம்பலாகிறார்கள்!
சீதையைக் காப்பாற்ற
அனுமன் நெருப்புவைத்தான்
இங்கே அனுமர்கள்
சீதைக்கே நெருப்புவைக்கிறார்கள்
பல வரங்கள் கொடுப்பவன்தான்...
பகவான்!
கலவரங்கள் கொடுப்பவனெல்லாம்...
கடவுளல்ல!
ஆம்!
இன்னொரு ஆலயத்தை
இடித்துவிட்டு..
தனக்கொரு ஆலயம் கட்ட
எந்தக்கடவுளும் விரும்பமாட்டான் !
மீறி விரும்பினால்...
தவறேயில்லை
கடவுளை இடியுங்கள்!
இது
காந்தி பிறந்த மண்ணாமே?
மடையர்களே!
மார்தட்டிக்கொள்ளாதீர்கள்.
இதோ
காந்தியின் வாரிசுகள்
இந்தியாவிடம்...
இரத்தக்கடன் கேட்கிறார்கள்
-குஜராத்
இங்கே
நெருப்புகளுக்கு கூட...
நடுக்கம் வந்துவிட்டதாம்!
ஆம்
இதுவரை
இத்தனை மனிதர்களை எரித்து...
அதற்குப்
பழக்கமில்லையாம்!
அதிகமாய் செத்தது
முஸ்லிமா?
இந்துவா?
பட்டிமன்றம் வைக்கும் முன்...
புரிந்து கொள்ளுங்கள்!
அதிகமாய் செத்தது
மனிதர்கள்தாம்!
இனியும் எரியுங்கள்
மனிதர்களை அல்ல...
மதவெறிகளை!
இறைவா இனிமேல்
நெருப்பின் சக்தியை
கொஞ்சம் மாற்று!
ஆம்
கொளுத்தப்படுபவனையன்றி ...
கொளுத்துபவனுக்கு வேதனைகொடு!
இறைவா நான்
துக்கம் தாங்காமல்
தூங்கப்போகிறேன்...
தூங்கி விழிக்கும்பொழுது...
இப்படியொரு சம்பவம்
இந்தியாவில் நடைபெறவேயில்லை...
இதுவெறும் கனவுதான்
என்று
என்னைச் சமாதானப்படுத்து!
இதயம் அழுகையுடன்
ரசிகவ் ஞானியார்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
காந்தி பிறந்த மண்ணிலேதான் பிறந்தான் மோடி. சங்க இலக்கியம் பிறந்த மண்ணிலே பிறக்கலாமோ இந்த காமெடி? ரசிக உவ்வே ஞானியார்.
natural sprit from your heart nanba....really nice thoughts...
keep it up
>> கொளுத்துகின்ற அவசரத்தில்...
>> எவனோ ஒருவன்
>> மாற்று மதக்காரியோ என நினைத்து
>> பாரதமாதாவையும்
>> கொளுத்திவிட்டான்
சரியாய்ச்சொன்னீர்கள்
"அதிகமாய் செத்தது
முஸ்லிமா?
இந்துவா?
பட்டிமன்றம் வைக்கும் முன்...
புரிந்து கொள்ளுங்கள்!
அதிகமாய் செத்தது
மனிதர்கள்தாம்!"
அருமை!!
நண்பா, இந்த உண்மையை அனைவரும் உணர்ந்திடும் காலம் எப்போது வரும்?
"சுதந்திரத்தின் கால்கள்
சூம்பிப் போய்விட்டதால்..."
சூம்பிவிட்டதா அல்லது சிறைபட்டுக்கிடக்கிறதா?
ஏதோ ஒரு கொடுமையான மதக்கலவரம் நிகழ்ந்துவிட்ட காரணத்தினால் 'மதச்சார்பற்ற நாடு' என்பதெல்லாம் பொய்யான தகவலாகிவிடாது என்பது அடியேனின் எண்ணம். கவிதை நல்லாத்தான் இருக்குது. ஆனா, காந்தியை குஜராத்துக்குள்ளேயே சுருக்கி வட்டத்தை போட்டுடாதீங்க... அதுவும் காந்தியின் வாரிசுகள் அது, இதுன்னு சொல்லி, வேணாம் ஸார்.. அந்த பெரிசை நிம்மதியா விட்டுடலாம்!
Post a Comment