
இதோ இந்தப் படத்தில் இருக்கின்ற நபர் ஒரு முன்னால் ரவுடி. கட்டப்பஞ்சாயத்து என்றாலே இவர் பெயர்தான் அடிபடும். சுமார் 12 வருடங்களுக்கு முன்பு பலரை மிரட்டியே காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தார்.
கடன் பிரச்சனை - நிலத்தகறாறு - என்று எல்லாப் பிரச்சனைகள் நடக்குமிடத்திலும் இவர் பிரவேசிப்பார். காசுக்காக அப்பாவிகளை அடித்து , உதைத்து, துன்புறுத்துவது என்று பாதிக்கபட்டவர்களின் சாபத்தை வாங்கியிருக்கின்றார்.
இவர் கையில் எப்பொழுதும் பணம் அதிகமாக புரளும். நண்பர்கள் கூட்டத்திற்கோ கேட்கவே வேண்டாம். தன்னுடன் இருக்கின்ற நண்பர்களுக்காக எதையும் செய்ய வல்லவர். தினமும் நண்பர்களுக்கு பிரியாணி – தண்ணி என்று விருந்து வைத்து அமர்களப்படுத்திவிடுவார்.
ஒருமுறை நண்பர்களுடன் கட்டப்பஞ்சாயத்து செய்துவிட்டு தனது வாகனத்தில் திரும்பிகொண்டிருக்கும் பொழுது பெரிய கல்லில் மோதி தடுக்கி விழுந்து பலமாக அடிபட்டது. இவருடன் கட்டப்பஞ்சாயத்திற்கு சென்ற நண்பர்களோ பயந்து போய் ஓடிவிட்டனர். அப்பொழுதே அவருக்குத் தெரிந்திருக்கும் தன் சுற்றி இருக்கின்ற நண்பர்களின் உண்மையான முகம்.
பின்னர் எங்கள் பகுதியைச் சார்ந்த அவருடைய நண்பர்கள் சிலர் அவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அந்த விபத்தில் அவரது ஒரு கால் ஊனமாகி விட்டது. அவரால் சரியாக நடக்கமுடியாது. சில வருடங்கள் தடியின் துணையோடு நடமாடி வந்தார். தடியாக இருக்கவேண்டிய அவரது தடி நண்பர்கள் எல்லாம் எங்கு போனார்களோ தெரியாது? அவரிடம் பணப்புழக்கம் குறைவதைக் கண்டதும் விலகி ஓட ஆரம்பித்தனர்.
அவரது கால்கள் ஊனமாகி விட்டதால் யாரும் கட்டப்பஞ்சாயத்து செய்ய அவரை அழைக்கவும் இல்லை. அதனைத் தவிர வேறு தொழிலும் அவருக்குத் தெரியாததால் அவருடைய பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில் சென்றுவிட்டது.
ஆஜானுபாகுவான மார்புடன் கம்பீரமாக அதட்டி பயமுறுத்திக் கொண்டிருந்தவர் எங்களிடம், "தம்பி ஒரு 10 ரூ இருந்தா கொடுங்களேன்" என்று கெஞ்சும் பொழுது அவரது நிலையை நினைத்து வேதனையடையாமல் இருக்க முடியவில்லை.
இப்படி 5 க்கும் 10 க்குமாய் அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கின்றார். அவ்வப்போது நாங்களும் எங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றோம்.
பாருங்களேன் காலம் மனிதர்களை எப்படியெல்லாம் சுருட்டிப் போடுகின்றது என்று?.
"ஆடாதடா! ஆடாதடா! மனிதா!
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவே மனிதா!.. "
என்ற பாடல் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
எனக்கு என்ன வருத்தமெனில் அவருடன் அன்று தோள்மீது கை போட்டபடி சுற்றிய நண்பர்கள் இப்பொழுது நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவர் வந்தவுடனையே ஒதுங்கவும், சிலநேரம் அவமதித்தும் அனுப்பி விடுகின்றனர்.
என்னிடமே இவர் சிலமுறை புலம்பியிருக்கின்றார்
"நான் நல்லா இருந்தப்ப என்கூட எப்படி இருந்தாங்க தெரியுமா இவங்க..? ச்சே பணம் இல்லைன்னு தெரிஞ்சவுடனே ஒதுங்க ஆரம்பிச்சுட்டாங்க.. "
இப்பொழுதெல்லாம் கண்ணுக்கு முன்னாடியே அநியாயத்திற்கான தண்டனைகள் கிடைத்துவிடுகின்றன. அவர் எத்தனை பேரின் வாழ்க்கையை சீரழித்திருப்பார் அதற்கான கடவுள் கொடுத்த தண்டனையாக கூட இது இருக்கலாம்.
பணம் மட்டும் இல்லைனா ஒரு ஜல்லி பைசாவுக்கு நம்மை மதிக்க மாட்டாங்க. சொந்தங்கள் கூட பணம் இருந்தால்தான் நம்மை சொந்தமென்றே பறைசாற்றிக்கொள்ளும்
இப்பொழுது இவர் மனம் திருந்தி, உழைத்து வாழ ஆசைப்பட்டாலும் அவரது உடல்வாகு அவருக்கு ஒத்துழைப்பதில்லை.
அதையும் மீறி எங்கேனும் வேலை கேட்டாலும் அவரது முந்தைய நடவடிக்கைகளை சொல்லியே அவரை ஒதுக்கிவிடுகின்றனர். அவருடன் முன்பு ஒட்டி இருந்த நண்பர்கள் கூட அவரது முந்தைய நடவடிக்கைகளை காரணம் காட்டி ஒதுக்குவதுதான் வேதனைக்குரியது.
நீ மேலே உயரும்பொழுது நீ யார் என்று நண்பர்கள் அறிவார்கள்.?
நீ கீழே போகும்போது உண்மையான நண்பர்களை நீ அறிவாய்
யாரோ எழுதிய இந்த வரிகள் எத்துணை நிதர்சனமானது என்பது இவரது வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொண்டேன்.
இந்த புகைப்படத்தில் மட்டுமல்ல இவரது நிஜ வாழ்க்கையுமே இருட்டில் மாட்டிக்கொண்டது
- ரசிகவ் ஞானியார்
6 comments:
நல்ல கருத்தும், படிப்பினையும்.
பழையதை நினைத்து மருகுவதை காட்டிலும் அதை மறந்து புதிதாக ஏதாவது செய்து பிழைக்க வேண்டியது தான்.
//நீ கீழே போகும்போது உண்மையான நண்பர்களை நீ அறிவாய்///
உண்மைதான்...:)
திருந்தி வாழ நினைப்பவர்களுக்கு மறுமலர்ச்சி இயக்கம் எதுவும் நம்ம ஊரில் இல்லையா??
//ILA(a)இளா said...
நல்ல கருத்தும், படிப்பினையும்.//
நன்றி இளா
//வடுவூர் குமார் said...
பழையதை நினைத்து மருகுவதை காட்டிலும் அதை மறந்து புதிதாக ஏதாவது செய்து பிழைக்க வேண்டியது தான்.//
ம் ஆனால் திருந்தி வாழ நினைத்தாலும் இச்சமூகம் விடமாட்டேன்கிறதே நண்பா
//மல்லிகை said...
திருந்தி வாழ நினைப்பவர்களுக்கு மறுமலர்ச்சி இயக்கம் எதுவும் நம்ம ஊரில் இல்லையா??//
இதற்கு அரசாங்கமே முன் வந்து அவர்களுக்கு உதவிடவேண்டும்
Post a Comment