சென்ற பதிவில்தான் ஒரு குடிமகனைப் பற்றி எழுதியிருந்தேன். அதன் ஈரம் காய்வதற்குள் இன்னொரு குடிமகன் . இந்த வாரம் என்ன குடிமகன் ஸ்பெஷலா..?
இன்று (08-09-07) மதியம் சுமார் 2 மணி இருக்கும். திருநெல்வேலி , பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நாகர்கோவில் செல்கின்ற மிகவும் பரபரப்பான சாலை அது. குறுகலான ரோடு என்பதால் சிலநேரம் சாலையை விட்டு வாகனங்கள் இறங்கி செல்ல நேரிடும். அந்தச் சாலையில் "விபத்துக்கள் அடிக்கடி நடக்கும் பகுதி" என்ற எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருக்கும்
அப்படிப்பட்ட சாலையில் இப்படி கால்நீட்டி படுத்திருந்தால் யாருக்குத்தாங்க பதறாம இருக்கும். அந்த நபர் அப்படியே படுத்திருந்தால் சிறிது நேரத்தில் காலே இல்லாமல் போய்விடக்கூடும். பாருங்க எப்படி ஹாயா கால்நீட்டி படுத்திருக்கின்றார் .
தண்ணியடிச்சா தைரியம் தானா வரும் சொல்வாங்க அது உண்மைதான் என்பதை நிருபித்துவிட்டார்.
தடுக்கி விழுந்தவரா? இல்லை உண்மையிலையே தண்ணியா? என்று சந்தேகமாகவே இருக்க பக்கத்தில் சென்று பார்த்தேன். லேசாக பூனையைப் போன்று கண்ணைத் திறந்து திறந்து மூடினார். அதே சாராய நெடி. புரிந்துவிட்டது தலைவர் குடிமகன்தான் என்று.
அவரைக் கடந்து செல்லும் வாகனங்கள் எல்லாம் அந்த இடத்தில் தடுமாறி சென்று கொண்டிருக்கின்றன...சரி என்ன செய்ய..? ஏதாவது வாகனம் சாலை ஓரத்தில் நகர்ந்தால் கூட அவர் கால் மீதுதான் ஏறும். ஆகவே சாலையில் நீட்டிக்கொண்டிருக்கும் கால்களை பிடித்து அப்படியே ஓரத்தில் வைக்கலாமென்று நினைத்தேன். மெல்ல கால்களைப் பிடித்தேன். சட்டென்று கண் திறந்து விட்டார்.
"என்னடா ஏதாவது திட்டப்போகின்றாரா" என்று சந்தேகத்துடன் அப்படியே கால்களை வைத்துவிட்டேன். மறுபடியும் மயக்க நிலைக்கு சென்று விட்டார். அப்படியே கால்கள் இரண்டையும் பிடித்து சாலை ஓரத்தில் வைத்து விட்டேன்.
அவருடைய சட்டைப்பையில் அவரது குடும்ப முகவரியோ அல்லது ஏதாவது தகவல்கள் இருந்தால் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கலாமே என்று உற்று நோக்கினேன்.
கீழே விழுந்து அடிபட்டது போல காயந்து போன இரத்தக்கறைகள். பாக்கெட்டில் கொஞ்சம் பணமும், சில்லறைகளுமாக இருந்தது.
"சரி நமக்கெதுக்கு வம்பு? அப்புறம் ஏதும் பிரச்சனையாயிட்டா சிக்கல்" என்று அவரை சாலையோரத்தில் படுக்க வைத்துவிட்டு சென்றுவிட்டேன்.
மறுபடியும் திரும்பி பார்த்தேன் . கண்ணியத்தை இழந்துவிட்டாலும் , கால்களாவது காப்பாற்றப்படும் என்ற நிம்மதியில் சென்றுகொண்டிருக்க, அவரது கால்கள் மறுபடியும் சாலையை நோக்கி அசைந்து கொண்டிருந்தது.
உடனே 100 க்கு தெலைபேசி செய்து தகவல் தெரிவித்துவிட்டேன். பரவாயில்லை நமது காவல்துறை, படு வேகமாகத்தான் இருக்கின்றார்கள்
15 நிமிடத்தில் போலிஸ் வேன் வந்து நின்றது.
ஒரே ஒரு போலிஸ்காரர் மட்டும் இறங்கி அந்த நபரை அங்கையும் இங்கேயுமாக புரட்டினார். அவர் அசைவதாக தெரியவில்லை. பின் அந்த போலிஸ்காரர் முதுகில் வசமாக சாத்தினார். அந்த பலமான அறையில் திடுக்கிட்டு விழித்த, குடிமகனை பிடித்து சாலையின் மறுபக்கம் கொண்டு போய் விட்டனர்.
"யப்பாடா இனி நிம்மதியா இருக்கலாம்ல… "
இரண்டு நிமிடத்தில் அந்தச் சாலையில் சுமார் 50 வாகனங்களாவது கடந்திருக்கும். ஆனால் எல்லாருமே அந்த குடிமகன் படுத்திருந்த இடத்தை வேடிக்கை பார்ப்பதற்காக நிறுத்தி, தலையை வெளியே நீட்டி பரிதாபப்பட்டு செல்கிறார்களே தவிர யாரும் இறங்கி உதவ முன்வருவதாய் தெரியவில்லை.
உறவினர்கள் , நண்பர்கள் என்றால் எப்படி பதறிப்போவோம்..? மனிதர்கள் அனைவரையுமே உறவினர்களாய் நினைக்க கூடாதா..?
- ரசிகவ் ஞானியார்
6 comments:
எல்லாம் நீர் சொன்ன அந்த பயம்தான்.
உண்மையான ஆக்ஷன் ஹீரோ நீங்கள் தான் ... பாராட்டுக்கள் நண்பா!(உங்க ஊரு 100 நல்லா வேலை செய்யுது , இங்கே 4,அ 5 பேர் தண்ணியடித்துவிட்டு செம சண்டை 100க்கு போன் செய்தேன் , யாரும் வருவார்களா என காத்திருந்தது தான் மிச்சம்)
//இலவசக்கொத்தனார் said...
எல்லாம் நீர் சொன்ன அந்த பயம்தான். //
ம் பயம் பயமறிய ஆவல்
//வவ்வால் said...
உண்மையான ஆக்ஷன் ஹீரோ நீங்கள் தான் ... பாராட்டுக்கள் நண்பா!(உங்க ஊரு 100 நல்லா வேலை செய்யுது , இங்கே 4,அ 5 பேர் தண்ணியடித்துவிட்டு செம சண்டை 100க்கு போன் செய்தேன் , யாரும் வருவார்களா என காத்திருந்தது தான் மிச்சம்) //
தண்ணியடிச்சதாலே சண்டை போடுறாங்கன்னு சொல்லாதீங்க...சிலர் சேர்ந்து கொண்டு சண்டை போடுறாங்கன்னு சொல்லுங்க... அப்படியும் வரலைன்னா நம்பரை மாத்துங்க. :)
சரி இப்படி வைத்துக்கொள்ளுங்கள் சண்டை போட்டவங்க எல்லாம் தண்ணி அடிச்சு இருந்தாங்க :-))
யாராவது விலக்க போனா அவங்களையும் உதைக்க வந்தாங்க, நான் வேற வடிவேலு போல என்னப்பா சண்டை போட்டுக்கிறாங்க வேடிக்கை பார்க்கறிங்க விலக்கி விடலாமேனு கேட்டேன், அப்போ தான் அங்கே இருந்தவங்க சொன்னாங்க மப்புல அடிச்சுகிறாங்க , விலக்க போன நம்மளையும் அடிக்கிறாங்க , இன்னும் கொஞ்சம் நேரம் போனா ஒருத்தன ஒருத்தம் பங்காளினு கட்டிப்பிச்சிப்பாங்கனு கிண்டலா சொன்னார், அதர்கு பிறகு தான் நான் 100க்கு முயற்சி செய்தேன்.
//அப்படியும் வரலைன்னா நம்பரை மாத்துங்க. :)//
100க்கு பதிலா 101 போடனுமா அப்போ! :-))
//விலக்க போன நம்மளையும் அடிக்கிறாங்க , இன்னும் கொஞ்சம் நேரம் போனா ஒருத்தன ஒருத்தம் பங்காளினு கட்டிப்பிச்சிப்பாங்கனு//
அப்படின்னா தண்ணி தெளிச்ச பார்ட்டின்னு சொல்லுங்க... :)
//100க்கு பதிலா 101 போடனுமா அப்போ! :-)) //
ஆமா அடிப்பட்டா தூக்கிட்டு போயிடுவாங்களே... :)
Post a Comment