Thursday, January 25, 2007

ஒரு நிஜ எம்டன்

"எனது தந்தை இருக்கின்றாரே அவர் வீரப்பன் மாதிரி. தான் தவறுகள் செய்துவந்தாலும் தன்னை பிடிக்க தேடி வந்த காவலர்களை சுட்டுக்கொன்றுவிட்டு தன்மீது தவறு இல்லாதவனாய் காட்டிக்கொண்ட வீரப்பன் போலத்தான் என் தந்தையும். இது சரியல்ல என்று தெரிந்தும் அந்த தவறை தெரிந்தே செய்பவன் "


என்னடா பெற்றெடுத்த தந்தையை ஒருமையில் வெறுப்பில் அழைக்கும் அந்த நபர் யார்?


ஒரு பதிவில் ( ஏதாவது செய்யணும் சார்) மகன்களால் விரட்டப்பட்ட தந்தையின் பரிதாப நிலையைப்பற்றி மனம் வருந்தி எழுதியிருந்தேன். அதற்கு எதிர்மாறாக தனது தந்தையின் கொடுமையாலும் ஆதிக்க மனப்பான்மையாலும் வீட்டை விட்டு வெளியேறி வாழ்க்கையோடும் போராடிக்கொண்டிருக்கும் மனிதரைப்பற்றியது இது..?


அவர் பெயர் காஜாமைதீன். வயது 32க்குள் இருக்கும். நல்ல திடகாத்திரமான உடல் அமைப்பு. படிப்பில் ஆர்வமின்றி எட்டாம் வகுப்போடு பள்ளியை முடித்துவிட்டு தந்தையோடு தொழிலில் ஈடுபட்டார். கல்வியறிவுதான் இல்லையென்றாலும் உலக அறிவு அனுபவங்கள் ஏராளம்.


கவிதை இலக்கியத்தில் ஆர்வம் அதிகம். நல்ல கவிதைகளை படித்து பாராட்டும் குணம் உடையவர். மனிதநேயம் பற்றிய கவிதைகள் வாசித்துக் காட்டினால் இவர் கண்களில் கண்ணீர் திரள்கள் வந்துவிடும்


எந்தப்பிரச்சனை என்றாலும் இவரை அணுகினால் அதற்கு ஒரு தீர்வு சொல்லுவார். சட்டரீதியாக எந்த எந்த பிரச்சனைக்கு யார் யார் முறையாக அணுகுவது

அதிகாரத்தில் உள்ளவர்கள் தவறு செய்யும்பொழுது அதனை உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பது

இளைஞர் நல மன்றம் விளையாட்டுத் திடல் சிறுவர் பூங்கா அமைப்பது

இரத்ததான முகாம், இலவச மருத்துவ பரிசோதனை என்று எல்லாவிதமான சமூக சேவைகளும் மக்கள் மனிதநேய அமைப்பு என்ற பெயரில் சமூகத்திற்காக சேவைபுரிந்துகொண்டிருக்கின்றார். இவர் மற்றவர்களுக்கு உதவுகின்ற அளவுக்கு வசதியானவர் அல்ல இருந்தாலும் தன்னால் முடிந்தவரை உதவுபவர்.


யாருக்கேனும் இரத்தம் தேவைப்பட்டால் என்னுடைய தொலைபேசி அழைக்கின்ற முதல் நபர் இவர்தான். உடனே தன்னுடைய குடும்பத்தில் உள்ள அவசரம் போல பம்பரமாய் இயங்குபவர்.


சாலையில் நடந்து செல்லும்பொழுது எந்தப்பகுதியிலாவது அசுத்தமாகி ,துப்புரவு செய்யாமல், கழிவுநீர் ஓடிக்கொண்டிருந்தால், உடனே பேப்பரும் பேனாவும் எடுத்து அதற்குண்டானஅதிகாரிகளிடம் தெரிவிப்பது அல்லது புகைப்படம் எடுத்து பத்திரிக்கைகளுக்கு குறையாக சுட்டிக்காட்டி அனுப்பி வைப்பார்


எந்த விசயத்தைப் பற்றி கேட்டாலும் அழகாய் பதிலளிப்பார். இவர் மட்டும் படித்திருந்தால் இவரின் சேவையால் அவரைச்சுற்றியுள்ள சமூகத்திற்கு இதைவிடவும் ஒரு முக்கிய பங்கு கிடைத்திருக்கும்.


இப்படி சுற்றியுள்ள மக்களால் அன்புக்குரியவராக கருதப்படுகின்ற இவர்தான் சொல்கின்றார் தனது தந்தையைப் பற்றி.


"எனது தந்தை வீரப்பன் மாதிரி... .................................."சுற்றியுள்ள மக்கள் எல்லாரும் மதிக்கின்றார்கள் ஆனால் பெற்றெடுத்த தந்தையால் புரிந்துகொள்ளமுடியவில்லை. தவறு யார் மீது?


பக்கத்தில் உள்ள பொருளின் மதிப்பை நாம் என்றுமே உணர்வதில்லை. அது நம்மை விட்டு விலகிய பிறகுதான் இழப்பின் வலியை உணருவோம்.


தன்னை அடிமையாகவே வளர்க்க ஆசைப்பட்ட தந்தையின் அடிமைத்தனத்திலிருந்து மீண்டு சுதந்திரமாய் தனிவியாபாரத்தில் ஈடுபட்டு வாழ்க்கையில் வெற்றிக்காக போராடிக்கொண்டிருப்பவர்.


"எங்க அப்பா இருக்காரே ஒரு சாடிஸ்ட்..யாரும் சந்தோஷமா இருக்குறது அவருக்கு பிடிக்காது..ஒரு உதாரணம் சொல்றேன் கேட்டுக்கோங்க.. "

"எனது தங்கையின் கணவர் வெளிநாடு சென்று விட்டு 2 வருடம் கழித்து வந்திருக்கின்றார். அவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கின்றது. எனது தங்கையின் குழந்தை என் வீட்டில் இருக்கின்றது. எனது தங்கை கணவர் வீட்டில் இருந்தாள்.அப்பொழுது எனது தந்தை சொல்லுகின்றார்.. :"


"இந்த குழந்தையை கொண்டு போய் அவர்கிட்டேயே போய் விடுங்க..அப்பத்தான் குழந்தை வளர்ப்போட கஷ்டம் அவருக்கும் தெரியும்.. "


"நல்ல தகப்பனா இருந்தா என்னங்க செய்யணும்? சரி 2 வருடம் கழிச்சி மாப்பிள்ளை வந்துறுக்காரே - மகளும் மாப்பிள்ளையும் சந்தோஷமா இருக்கணும் குழந்தையை கொஞ்சநேரம் நாம வச்சிருப்போங்கிற எண்ணம் வருதா..? "

"யாரும் சந்தோஷமா இருக்குறது அவருக்கு பிடிக்காது.. "

"நம்ம குழந்தை யார் வீட்டு பிள்ளையையோ அடிச்சிட்டு வந்திருக்கு. அடிபட்ட குழந்தையின் சொந்தக்காரங்க வந்தா என்ன பண்ணுவோம் நாம? "

"நம்ம குழந்தையை கண்டிப்போம். இல்லைனா நாம அடிப்போம். இல்லை வலி அதிகம் உணராதபடி அடிப்போம்.ஆனா எங்கப்பன் என்ன பண்ணுனான்னு தெரியுமா.. அடிபட்ட குழந்தைக்கு சொந்தக்காரங்களை விட்டே என்னை அடிக்க வைச்சான்.. இது எங்கேயாவது நடக்குமாங்க..? "


"என்னை இதுநாள் வரைக்கும் ஒரு அடிமைமாதிரிதான் நடத்துனான். எனக்குன்னு ஒரு தனிப்பட்ட முடிவு எடுக்க முடியாது. நல்லதோ கெட்டதோ வியாபாரத்துல அவர் சொல்றபடிதான் கேக்கணும். நான் ஒரு முடிவு சொன்னா அதை அலட்சியப்படுத்திவிடுவார். "

"வியாபார முன்னேற்த்திற்காக நான் சில வழிகள் சொன்னால் அதனை அலட்சியப்படுத்திவிடுவார். "


"எனக்கு கல்யாணமான பிறகு கூட என் பொண்டாட்டிக்கு வடை கூட என்னால வாங்கிக்கொடுக்க முடியாது. அதற்காகவே அவனுக்கு தெரியாம மறைச்சி மறைச்சி கொண்டு வருவேன். மீறி பார்த்துட்டான்னா சத்தம் போட ஆரம்பிச்சுடுவான்.. "


"அது மட்டுமல்ல என்னோட மனைவியை மதிக்கிறதே கிடையாது. வீட்டுக்கு வாழ வந்தவகிட்ட மரியாதையா நடந்துக்க வேண்டாமா..? அவளும் மனுஷிதானுங்க.. "


"இதையெல்லாம் எதிர்த்து கேட்டா வீட்டை விட்டு போகச்சொல்றாரு. நான் ஏன் வீட்டை விட்டு போகணும்? "

"என்னுடைய அம்மாவின் தங்கை திருமணம் ஆகி விவாகரத்து பெற்றுவிட்டார்கள். அவர்களுக்கு இவன் ஒரு இடத்தில் இரண்டாவது திருமணம் செய்து வைக்க முயற்சி செய்தான்."

"சரி நல்லதுதான் பண்றானுன்னு பார்த்தா.. கல்யாணம் பண்ணி வச்சிட்டு எனது அம்மாவின் தங்கைக்கு, தற்போதைய கணவர் தந்த வீட்டை தனது பெயருக்கு மாற்ற முயற்சிக்கின்றார். இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.? "


தந்தையின் தவறான போக்கை எண்ணி மனம் குமுறுகின்றார். தன்னை அடக்கி வைத்த தந்தையின் ஆளுமைக்குள் இருந்து வெளிவரத்துடிப்பவர் தந்தையின் தவறை தட்டிக்கேட்க நினைத்ததால் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டவர்.


"நான் செத்து என்னுடைய பாடிதான் இந்த வீட்டை விட்டு போகும். அதுவரைக்கும் இங்கதான் இருப்பேன்னு" ஒரு தடவ ஒரு பையனை விட்டு அவங்க அப்பாகிட்ட சொல்லச்சொன்னாரு.

அந்தப்பையன் போய் சொல்லிட்டு முகம் வெளிறிப்போய் வந்து சொன்னான்


உங்கப்பா சொல்றாரு.:
"செத்தபிறகு வேணுமின்னா உங்க பாடியை வீட்டுக்கு கொண்டுவந்துட்டு அடக்கம் பண்ண அனுப்பலாம்னு சொல்றாருங்க என்று அந்தப்பையன் கூற எனக்கு அவரது தந்தையின் மீது பெரும் வெறுப்பு கிளம்பிற்று. அப்படி என்ன மகன் மீது அந்த அளவிற்கு வெறுப்பு? "
எந்த தந்தையாவது மகனை இப்படிச் சொல்வாங்களாங்க..? என்னு என்னிடம் புலம்பினார் .

உங்க மேல உங்க தந்தைக்கு அப்படியென்னங்க கோவம்?


"என் மேலயா...அய்யய்யோ அவனுடைய குணமே அப்படித்தான்ங்க.. "

"உங்களுக்கு அவனைப்பற்றி தெரியாது "

"என்னை வீட்டை விட்டு போகச்சொன்னான். நான் போகமாட்டேன்னு சொன்னதால எலெக்ட்ரிக் ஆபிஸ் சென்று எங்க வீட்டுல கரண்டை கட் பண்ண வச்சுட்டான்னா பாருங்களேன் எந்த அளவுக்கு மோசமா இருக்கான்னு.? "

ஏன் கரண்ட் போனா அவருக்கும் இடைஞ்சல்தானே..?


"அதான்ங்க..தான் கொசுக்கடியில் இருந்தாலும் சரி நான் சந்தோஷமா இருக்க கூடாது.. அதற்குத்தான் நான் வச்சேன் பாரங்க ஆப்பு.. "

"பக்கத்து வீட்டுல இருந்து என்னுடைய அறைக்கு மட்டும் தனியா கரண்ட் கொடுத்துட்டேன். அது அவனுக்கு எரிச்சலாகி மறுபடியும் புகார் கொடுத்துறுக்கான்.நான் திருட்டுத்தனமா பக்கத்து வீட்டுல இருந்து கரண்ட் எடுக்குறேன்னு.. "

"நான் உடனே எலெக்ட்ரிக் ஆபிஸ் சென்று இது தந்தை - மகன் பிரச்சனைதான் என்று விளக்க வேண்டியதாகிப்போய்விட்டது "


இப்படியெல்லாமாங்க செய்வார் ஒரு தந்தை?


"நிறைய இருக்கு சொல்றதுக்கு. அவர் தீயை பஞ்சை போட்டு அணைக்கும் முயற்சியி-ல் ஈடுபடுறாரு.. தான் போலியாய் வாழ்றதை பெருமையா நினைக்கிறாரு.. "

நான் வேணுமின்னா உங்கப்பாகிட்ட பேசிப்பார்க்கவா..?

"இல்லை வேண்டாம் எனக்காக என்னுடைய நண்பர்கள் அவமானப்படறது எனக்குப்பிடிக்காது "

அவருடை கடைசிகாலத்துல பணத்தை எங்கோ கொண்டுபோகப்போறாரு . நீங்க அவருக்கு ஒரே ஆண்மகன்தானே பின்ன ஏன் இப்படி பண்றாரு?


"அவனுக்கு மகன் தேவையில்லை ஒரு அடிமை தேவை. ஆனால் என்னால் அடிமையாக இருக்க முடியாது. "

என்னை என்னவெல்லாம் சொல்லியிருக்காரு தெரியுமா. ?

"எனக்கு மரியாதை இல்லை. என்னுடைய மனைவிக்கு மரியாதை இல்லை.

அவருடைய ஆளுமைக்குள் அவரைச் சார்ந்து இருக்கிறதால நான் தனியே போய் என்ன பண்ணிறமுடியுமுன்னு கர்வத்துல இருக்காரு. "

"அவர் சொன்ன வார்த்தைகள்தான் என்னை வளர்த்துக் கொண்டிருக்கின்றது. கண்டிப்பா என்னுடைய உழைப்பால நான் முன்னேறிக்காட்டுவேன்" என்று தன் உழைப்பின்மீது உள்ள நம்பிக்கையில் கூறினார்.

அப்பொழுது எனக்கு ஞாபகம் இருந்த பாவிஜய்யின் சில கவிதைகளை சொன்னேன்.


தோல்வியைச் சந்திக்காத யாரையும்

வெற்றிவந்து சந்திக்காதுதோல்வியே அடையாத ஒருவன்

இதுவரை இருந்ததில்லை

தோல்வியோடு மட்டுமே ஒருவன்

இதுவரை இருந்ததில்லைஉனக்குப் பத்துபேரில்

ஒரு எதிரியும் இல்லையென்றால்

நீ முன்னேறவே இல்லை


இந்த தன்னம்பிக்கை வரிகளை நான் எடுத்துச் சொல்லியபொழுது மிகவும் ரசித்தார்.

"போலிஸ்ல போய் புகார் கொடுத்துட்டாரு. அவங்க வந்து என்னய சமாதானப்படுத்தி வீட்டை காலிபண்ணச்சொல்றாங்க.. "

"முன்னாடி ஒரு தடைவை தெரியாத்தனமா பினாமி பெயர்ல வாங்குவதற்குப் பதிலா என் பெயர்ல வீடு வாங்குனதால இப்போ அந்த வீட்டுக்கு நான் போயிட்டேன். "

"இப்போ நான் என் மனைவியையும் என் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தனியே சென்றாலும் என்னுடைய ரேஷன்கார்டை வைத்து பொருட்கள் வாங்கி விற்று வருகின்றார். என்னுடைய ரேஷன்கார்டை திருப்பி தர மறுக்கிறார். "


"நான் உடனே அந்த ரேஷன் கார்டை அவருக்கு தெரியாமல் எடுத்து கேஸ் சிலிண்டர் எனக்கு கேட்டு எழுதி மண்ணெண்ணெய் வேண்டாம்னு சொல்லிட்டேன். இது கூட அவருக்கு சரியான கடுப்பு "


"என்னுடைய நிலைமை என் குழந்தைக்கு வரக்கூடாது. நான் எனது தந்தையை பார்த்து கேட்ட கேள்விகளை என் பையன் என்னைப்பார்த்து கேட்கக்கூடாது. அப்படித்தான் என்னுடைய பையனை நான் வளர்க்கின்றேன் "


"இப்ப நான் என்னுடைய மனைவிக்கு தைரியமா வடை வாங்கி கொண்டுபோக முடியுது "

"வியாபாரத்துல தனிப்பட்ட முடிவு எடுத்து வெற்றிகரமா கொண்டு செல்ல முடியுது "

"அவர விட்டு வரும்பொழுது என்னுடைய பணம் 0 சதவிகிதம் இப்போ கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிட்டு வருகின்றேன். "

"உங்களுக்கு தவளை கதை தெரியுமா ?" என்று ஒரு தவளைக் கதையை சொல்ல ஆரும்பித்தார்


இரண்டு தவளைங்க ஒரு பால் கிண்ணத்துல தவறி விழுந்துடுச்சாம். ஒரு தவளை நினைச்சிதாம் நாம அவ்வளவுதான் இதுல இருந்து வெளியே வரவே முடியாது. இதுலேயே இருந்து செத்துறுவோம். அப்படின்னு நினைச்சு நினைச்சே இறந்துபோயிடுச்சாம்.


இன்னொரு தவளை என்ன பண்ணுச்சாம்..? அந்தப்பால்ல தனது கால்களால அடிச்சி அடிச்சி போராடிக்கொண்டிருந்துச்சாம். அது கால்களால் அடிக்க அடிக்க அந்தப் பால் எல்லாம் வெண்ணெயாய் மாற அந்த வெண்ணெயில் ஏறி தப்பிச்சுடுச்சாம்.


"நானும் அந்த இரண்டாவது தவளை மாதிரி.. போராடிக்கொண்டு இருக்கின்றேன். "

என்று ஒரு அருமையான கதையை அவர் சொல்லி முடித்து தன்னுடைய போராட்டத்தின் வீரியத்தை உணர்த்தியிருக்கிறார் பாருங்களேன்.

இப்பொழுது இவர் தனது தந்தையின் தொழிலான ஜவுளிக்கடையில் இருந்து பிரிந்து தந்தையின் கடை அருகில் தனியாக ஒரு ஜவுளிக்கடையை நடத்திவருகின்றார்.

"இப்ப கூட என்னை அழைத்து நாம ஒண்ணா தொழில் செய்வோம் வா என்று அழைத்தால் சந்தோஷமாக ஒரு நல்ல மகனா நடந்து பொறுப்பை நான் சுமந்து வியாபாரத்தை பெருக்க என்னால் முடியும். ஆனா அவனுக்கு என்னை அடிமைப்படுத்தாத வாழ்க்கை பிடிக்காது. "

சமீபத்தில் வெளியான எம்டன் மகன் படத்தின் கதையை கேட்டு கூட இவர் ஆதங்கப்பட்டார்.

" நாசர் மாதிரி கதாபாத்திரங்கள் ஏன்தான் இருக்காங்களோ? பெத்த மகனை மத்தவங்களுக்கு முன்னால அவமானப்படுத்துறாங்க. ஏன் இப்படி செய்யுறாங்க..? "

இவருடைய தற்போதைய குறிக்கோள் :வியாபாரம் - வெற்றி - முன்னேற்றம் மட்டும்தான்.

அடிமையாக வாழப்பிடிக்கவில்லை என சுயமரியாதையை விட்டுவிடக்கூடாது என்று வாதிட்டு தந்தையால் விரட்டப்பட்டு வாழ்க்கையில் போராடிக்கொண்டிருக்கும் காஜா போன்றவர்களின் போராட்டம் மற்ற இளைஞர்களுக்கு ஒரு நம்பிக்கை.

அவர் வாழ்க்கையில் வெற்றிபெற நாமும் பிரார்த்தித்துக் கொள்வோம்.


- ரசிகவ் ஞானியார்

8 comments:

வடுவூர் குமார் said...

இரண்டு வாரங்களுக்கு முன்பு இங்கு தொலைக்காட்சியில் "எம்.மகன்" போட்டார்கள்.அதில் அப்படியே 80% எனக்கு நேர்ந்தது.
வலி நமக்கு தானே?

Anonymous said...

Gnaniyar...am ashwin from Muneerpallam..I thoroughly enjoyed your blog...Your commmand over tamizh is good....

I write in tamizh too...but the font softwares are so tough that i have stopped using them

Is there an easy way to write in tamizh

check my blog at ashwinramasamy.blogspot.com

ஜி said...

அருமையான கட்டுரை ஞானியார்....

இப்படி அப்பன்களும் நூற்றில் ஒருத்தர் இருக்கிறார் என்று நினைக்கையில் வலிக்கத்தான் செய்கிறது...

சமுதாய விசயங்களை அருமையாக படம்பிடித்துக் காட்டுகிறீர்கள்... உங்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...

நிலவு நண்பன் said...

// வடுவூர் குமார் said...
இரண்டு வாரங்களுக்கு முன்பு இங்கு தொலைக்காட்சியில் "எம்.மகன்" போட்டார்கள்.அதில் அப்படியே 80% எனக்கு நேர்ந்தது.
வலி நமக்கு தானே? //

ம் வேதனையாக இருக்கிறது நண்பா..

நிலவு நண்பன் said...

//Anonymous said...
Gnaniyar...am ashwin from Muneerpallam..I thoroughly enjoyed your blog...Your commmand over tamizh is good..../

நன்றி அஸ்வின்

நிலவு நண்பன் said...

//ஜி said...
அருமையான கட்டுரை ஞானியார்....//

நன்றி ஜி

சிறில் அலெக்ஸ் said...

நீங்கள் புலம்பெயர்ந்து வாழ்வதுபற்றி எழுதிய கவிதை ஒன்றை நண்பர் மெயிலில் அனுப்பியிருந்தார்.
அவர் சும்மா அனுப்பிய மெயில் அது.

எதோச்சையாய் கீழே பெயர் பார்த்ததும் மகிழ்ந்தேன்.

வாழ்த்துக்கள்

நிலவு நண்பன் said...

// சிறில் அலெக்ஸ் said...
நீங்கள் புலம்பெயர்ந்து வாழ்வதுபற்றி எழுதிய கவிதை ஒன்றை நண்பர் மெயிலில் அனுப்பியிருந்தார்.
எதோச்சையாய் கீழே பெயர் பார்த்ததும் மகிழ்ந்தேன்.

வாழ்த்துக்கள் //


நன்றி சிறில்..

அந்தக் கவிதையின் பெயர் தூக்கம் விற்ற காசுகள்.. என்னுடைய இந்த வலைப்பதிவின் முதல் கவிதையும் . என்னால் மறக்க முடியாத கவிதையும் அதுதான்.

தேன் கூடு