Wednesday, December 28, 2005

மீண்டும் வா சுனாமியே..





முத்தெடுத்ததற்காகவா நீ
மூச்சையெடுத்தாய் கடலே..!
தத்தெடுப்பதற்கு யாருமின்றியே
தவிக்கின்றோமே..?

காற்று வாங்க வந்தோம் - மூச்சுக்
காற்றை புடுங்கிவிட்டாய்!
கால் நனைக்கத்தானே வந்தோம் - ஏன்
இதயம் பிழிந்து விட்டாய்..?

பொங்கு கடலே! - மீண்டும்
பொங்கு..

எடுத்துச் சென்ற சொந்தங்களை ..
திருப்பி அழைத்துவர
மீண்டுமொருமுறை பொங்கு!

இனிமேல்
உப்பெடுக்கக் கூட..
உன் பக்கம் வரமாட்டோம்!

மீண்டும் வா சுனாமியே! - சொந்தங்களை
மீட்டு வா!

- ரசிகவ் ஞானியார்

14 comments:

முத்துகுமரன் said...

ரசிகவ் மிகவும் தவறான தலைப்பு இது.

கவிஞன் சில நேரங்களில் புத்திக்கும் வேலை கொடுக்க வேண்டும். வெறும் உணர்ச்சிகளை கொண்டுவருதாக அதிர்ச்சியான நிகழ்வுகளின் மீது மென்மையை ஒட்ட வைக்க முயற்ச்சி செய்யக்கூடாது. கவிதை வடிவம் நன்றாக இருந்தாலும் பொருளில் உடன்பாடு இல்லை. முதன்முறையாக உங்கள் பதிவுக்கு ஒரு -

சிங். செயகுமார். said...

ஞானிக்கு என்னாச்சு?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

நண்பா முத்துக்குமரா

வாசகர்கள் எப்போதும் கவிதையின் தலைப்பை மட்டும் படித்து விமர்சிப்பது புத்திசாலித்தனமல்ல
உள்ளடக்கத்தை கவனியுங்கள். சுனாமியில் தன் சொந்தங்களை இழந்த சிறுவன் கடற்கரையில் நின்றுகொண்டு சுனாமியே மறுபடியும் வந்து என் சொந்தங்களை திருப்பித் தா என்று வேண்டுகிறான்.

இதில் ஒன்றும் தவறிருப்பதாய் எனக்குத் தெரியவில்லை.

இருந்தாலும் தங்களின் - க்கும் ஒரு நன்றி

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//சிங். செயகுமார். said...
ஞானிக்கு என்னாச்சு? //

ஒன்றும் ஆகவில்லை நண்பா

முத்துகுமரன் said...

இன்னொரு சுனாமி வந்தால் அவன் சொந்தங்கள் திரும்பி வரமாட்டார்கள். சொந்தங்களிடம் தான் இவன் போய் விடுவான்.
கவிதையை படிக்காமல் விமர்சனம் செய்வதில்லை ரசிகவ்.

நான் தெளிவாகவே குறிப்பிட்டு இருக்கிறேன். சில துயரங்களின் மீது மென்மையை ஏற்ற வேண்டாம் என்று. உங்கள் கவிதை உங்கள் குழந்தை. அதனால் இதற்கு மேல் விமர்சிக்க விரும்பவில்லை

Gnaniyar @ நிலவு நண்பன் said...

கண்டிப்பாக அவனது சொந்தங்கள் திரும்பி வரமாட்டார்கள் நண்பா. ஆனால் அந்தச் சிறுவனின் ஏக்கமாக உள்ள ஒரு கற்பனைதான் அது


//உங்கள் கவிதை உங்கள் குழந்தை. அதனால் இதற்கு மேல் விமர்சிக்க விரும்பவில்லை //

நன்றி நண்பா.

Anonymous said...

Muthukumaran you are right, bad title for good poem

Gnaniyar @ நிலவு நண்பன் said...

சுட்டிக்காட்டியதற்குண்டான விளக்கத்தைத்தான் தந்தேனே தவிர நான் தர்க்கம் செய்ய விரும்பவில்லை சரவணா..

நான் வைத்த தலைப்பையும் உற்றுநோக்கும் முத்துக்குமரனின் தனிப்பட்ட பார்வை எனக்கு மகிழ்ச்சியையே அளிக்கிறது.

புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன். நன்றி

கீதா said...

கவிதை நன்று

தலைப்பு கொஞ்சம் நெருடலாகத்தான் இருக்கிறது. மீண்டும் வா சுனாமியே என்பது ஒரு பேரழிவை மீண்டும் அழைப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.. சிறுவனின் பார்வையில் இந்த அழைப்பு ஞாயமானதாகவே படுகிறது..

இருந்தாலும் "மீட்டுத் தா சுனாமியே.." என்றிருந்திருந்தால்.. தலைப்பை பார்த்ததும் மனதில் ஏற்படும் ஒரு மெல்லிய அதிர்வை தடுத்திருக்கலாமோ...

அன்புடன்
கீதா

முத்துகுமரன் said...

ரசிகவ்,

நன்றி. இந்த கவிதை ஒரு பிஞ்சுப் பிள்ளையின் பார்வையில் அமைந்திருக்கும் கற்பனை என்பது புரிகிறது. அப்படி என்றால் அவன் கேள்வியில் ஒரு மழலைத் தனம் இருக்க வேண்டும்.அவனது ஏக்கம் மிகத் தெளிவாக, நேரடியாக இருக்கக் வாய்ப்பு இல்லை. இறுதி வரிகள் ஒரு சிறுவனின் பார்வையாக இல்லை.

உங்கள் இளகிய மனதை பல கவிதைகளில் அறிந்திருக்கிறேன். அந்த உரிமையில்தான் விமர்சித்தேன்.

உங்கள் தொலைபேசி எண்னை தனிமடலில் அனுப்புங்களேன்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//சிறுவனின் பார்வையில் இந்த அழைப்பு ஞாயமானதாகவே படுகிறது..
இருந்தாலும் "மீட்டுத் தா சுனாமியே.." என்றிருந்திருந்தால்.. //


விமர்சனத்திற்கு நன்றி கீதா .

மீட்டு வா சுனாமியே ம் இதுவும் அருமை

//ரசிகவ் மிகவும் தவறான தலைப்பு இது.//

//ஞானிக்கு என்னாச்சு? //

//சில துயரங்களின் மீது மென்மையை ஏற்ற வேண்டாம் //

//தாங்கள் மற்றவர்களை கவரும்படி தலைப்பு அமைய வேண்டும் என எண்ணிவிட்டீர்களோ //

//Muthukumaran you are right, bad title for good poem //

//தலைப்பு கொஞ்சம் நெருடலாகத்தான் இருக்கிறது//



இப்படி எல்லோருடைய பார்வையிலும் என் கவிதையின் தலைப்பு மனம் பாதிக்கும் படி இருந்தால் கண்டிப்பாக மாற்றி விடுகிறேன். பிறர் மனம் புண்படும்படி தலைப்பு வைத்ததற்காய் வருந்துகிறேன்.



//உங்கள் தொலைபேசி எண்னை தனிமடலில் அனுப்புங்களேன் //
கண்டிப்பாக தருகிறேன் முத்துக்குமரா..

நண்பன் said...

ஒரு கவிதைக்கு வைக்கும் தலைப்பு என்பது கவிஞனின் தனிப்பட்ட விருப்பம்.

இதைவிட அதிர்ச்சி அளிக்கக் கூடிய தலைப்புகளை இன்று பலரும் கையாள்கிறார்கள்.

மீண்டும் வா சுனாமியே என தலைப்பு வைப்பதால், மீண்டும் ஒரு முறை சுனாமியே வந்துவிட்டால் என்ற ஊகத்தின் அடிப்படையிலான அஞ்சுதல் தனிப்பட்ட மனிதர்களின் அஞ்சுதல்களே அன்றி, கவிஞனும் அத்தகைய அஞ்சுதல்களுக்கு இரையாகவேண்டும் என்ற எண்ணம் கூடாது.

கவிஞனின் - படைப்பாளியின் மனம் திடகாத்திரமாக இருக்க வேண்டும்.

பாரதி பாடினாரே - காலா, அருகே வா, உன்னைக் காலால் உதைக்கிறேன் என்ற பொழுது - அதை யாரும் எதிர்மறையாகவா விமர்சித்தார்கள்?

ஏன், அண்ணன் அறிவுமதியின் நீலம் குறும்படம் கூட, கடலை நோக்கி இறைஞ்சும் சிறுவனைத்தானே மையமாகக் கொண்டுள்ளது.! திருப்பித் தா என்று வேண்டுகோள் வைக்கும் பொழுதே திருப்பித் வா என்ற பொருளும் வந்து விடுகிறதே?

திருப்பி வராமல், எங்கனம் திருப்பித் தரமுடியும்? ஆக, இழந்த சொந்தங்களைத் திருப்பித் தா என கேட்கும் பொழுதே, நிகழ்ந்த முடிந்த துக்கத்தின் உள்ளாகப் பயணம் செய்து, அது நிகழாத கணத்தில் போய் நின்று கொள்ள மனம் விழைவது இயல்பு தானே? அது இயலாது - கடந்த காலத்தினுள் பயணம் செய்ய?

அப்பொழுது என்ன செய்ய இயலும்? கடந்த காலத்திற்குள் நாங்கள் வர இயலாது. ஆனால், வருங்காலத்திற்குள் நீ வா - அள்ளிச் சென்ற சொந்தங்களைத் திருப்பித் தா என்று தானே கோரிக்கை வைக்க முடியும்?

ஒரு அதிர்வு நிறைந்த செயலில் இருந்து பாடங்கள் கற்றுக் கொள்ளத் தான் வேண்டுமே தவிர, மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடந்து விடுமோ என்ற அச்சத்தில், அதைப் பற்றிய சிந்தனைகளையேத் தவிர்த்து விட்டு, கண்ணை மூடிக் கோண்ட பூனையாய் ஒளிந்து கொள்வது, நிதர்சனத்தைக் கண்டு அஞ்சி ஓடி ஒளிந்து கொள்வது போலாகுமே அன்றி, கவிஞனின் அஞ்சா நெஞ்சத்தைப் பிரதிபலிப்பதாய் அமையாது.

மீண்டும் சுனாமி வராது என்று கூற இயலாது. இந்திய துணைக்கண்டம் - ஆசிய கண்டத்தை இடித்துக் கொண்டே உள்நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. அந்தப் பயணம் நிற்கும் வரையிலும், சுனாமிகள், நிலநடுக்கங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

இத்தகைய இயற்கையின் அழிவுகளிலிருந்து தன்னைக் காத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனமே தவிர, sentiment காட்டி உணர்ச்சி வயப்படுவது தேவையற்றது.

நண்பன் said...

புத்தாண்டு வாழ்த்துகள் , ரசிகவ் ஞானியார்!!!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//இத்தகைய இயற்கையின் அழிவுகளிலிருந்து தன்னைக் காத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனமே தவிர, sentiment காட்டி உணர்ச்சி வயப்படுவது தேவையற்றது. //


புரிந்துணர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பா..

தங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

தேன் கூடு