Thursday, December 15, 2005

காதலித்துப்பார்




காதலித்துப்பார்!
பாக்கெட்டில் புதிதாய்ச்
சீப்பு முளைக்கும்.

காதலித்துப்பார்!
கழுத்துக் கைக்குட்டை
பாக்கெட்டில் நுழையும்

காதலித்துப்பார்!
பேருந்து நிலையமும்
தாஜ்மஹாலாகும்

காதலித்துப்பார்!
திலோத்தமையைக் கூட - வீட்டுத்
திண்ணையில் வைப்பாய்

காதலித்துப்பார்!
அவள் வந்தால்
உடைந்த பேருந்தும்
உயர்வாய்த் தெரியும்

காதலித்துப்பார்!
ஜன்னலோர சீட்டிற்கு
ஜனாதிபதி அந்தஸ்து கொடுப்பாய்

காதலித்துப்பார்!
கிழிந்து போனாலும்
ஜீன்ஸ்தான் போடுவாய்

காதலித்துப்பார்!
மல்லிச் செடியில்
ரோஜா முளைக்கும்

காதலித்துப்பார்!
சொட்டைத் தலையில்
முடிவளரும்

காதலித்துப்பார்!
பாதசாரியைக் கண்டுகூடப்
பயந்து போவாய்

காதலித்துப்பார்!
பூங்கா இல்லாத ஊரில்
பூகம்பம் வரட்டுமென்பாய்

காதலித்துப்பார்!
கடன் வாங்கியாவது
பைக்கில் சுற்றுவாய்

காதலித்துப்பார்!
வாழ்த்து அட்டை
வாங்கியே பிச்சைக்காரனாவாய்

காதலித்துப்பார்!
நோட்டுப் புத்தகங்கள்
கவிதைத் தொகுப்பாகும்

காதலித்துப்பார்!
யாரைக் கூப்பிட்டாலும்
நீதான் திரும்புவாய்

உன்னைக் கூப்பிட்டால்
திரும்பவே மாட்டாய்
வேறு ஞாபகத்திலிருப்பாய்

காதலித்துப்பார்!
எவனைப் பார்த்தாலும்
அவள் அண்ணணாய்த் தெரியும்

காதலித்துப்பார்!
நீயும் தாடி வைப்பாய்
எனத் தெரியாமல்
தாடி வைத்தவனையெல்லாம்
கருணையோடு பார்ப்பாய்

காதலித்துப்பார்!
மனசுக்கு அப்புறம்தான்
மதம் தெரியும்

காதலித்துப்பார்!
நகங்களின் அழுக்கோடு-சாதியையும்
நறுக்கி விடுவாய்

காதலித்துப்பார்!
தொலைபேசி அழைத்தால்
ஓடிப்போய் எடுப்பாய்

காதலித்துப்பார்!
தொலைபேசி கட்டணம் உன்
தந்தையை நஷ்டப்படுத்தும்

காதலித்துப்பார்!
வைரமுத்துவை விடப்
பெரியகவிஞனாவாய்

காதலித்துப்பார்!
காற்றுப்பட்டால் கூடச்
சட்டையை உதறுவாய்


காதலித்துப்பார்!
பார்க்கும் படத்திலெல்லாம்
நீயே கதாநாயகன்

பார்க்கும் படத்திலெல்லாம்
அவளே கதாநாயகி

பார்க்கும் படத்திலெல்லாம்
அவள் தந்தையே வில்லன்

காதலித்துப்பார்!
ஆன்மீகப்பக்தி
அதிகமாகும்

காதலித்துப்பார்!
அவளுக்கு
மெட்ராஸ் ஐ என்றால் கூட
மெண்டல் ஆகிவிடுவாய்

காதலித்துப்பார்!
அவள்
தலைகுனிந்து சென்றால் கூடத்
தற்கொலை செய்து கொள்வாய்

காதலித்துப்பார்!
அவள்
படிக்கும் பத்திரிக்கைக்கு
நீயே முதல் வாசகன்

காதலித்துப்பார்!
நெப்போலியன் ( ? )
இல்லாமலேயே
தடுமாற ஆரம்பிப்பாய்

காதலித்துப்பார்!
அவள்
காலிலணியும் செருப்புக்
கம்பெனி கூடஉனக்குத் தெரியும்

காதலித்துப்பார்!
காதலியின் பெயர்
பாஸ்வேர்ட் ஆகும்.

காதலித்துப்பார்!
அவளை
ஈ கடித்தால் கூட
ஈட்டியை எடுப்பாய்


காதலித்துப்பார்!
ஒரே வருடத்தில்
இரண்டு டைரி தேவைப்படும்
உன்னைப்பற்றி எழுத
ஒரு டைரியில் கூட
இடமிருக்காது

காதலித்துப்பார்!
காற்றில் அவள்
துப்பட்டா கலைந்தால் கூடத்
துக்கப்படுவாய்


காதலித்துப்பார்!
அவள்
தொட்டுப்பார்ப்பாளென்றே
எனக்குக் காய்ச்சல் என்பாய்

காதலித்துப்பார்!
மாதமொருமுறை
மாறிக் கொண்டேயிருக்கும்
ஹேர்ஸ்டைல்
ஆனால்
கடைசியில் மொட்டைதான்

காதலித்துப்பார்!
தலா ஒரு செமஸ்டர்
ஒரு அரியர்

காதலித்துப்பார்!
அவளுக்குடிக்கெட் கொடுத்த
கண்டக்டரைக் கூட முறைப்பாய்

காதலித்துப்பார்!
நண்பர்களையெல்லாம்
அனுமாராக்குவாய்

காதலித்துப்பார்!
ரிஜிஸ்டர் ஆபிஸை
விசாரித்து வைப்பாய்

காதலித்துப்பார்!
உன் தாடியின் காரணம்
ஊருக்குப் புரியும்

- ரசிகவ் ஞானியார்

5 comments:

யாத்ரீகன் said...

காதலித்துப்பார் உங்கள் இருவர் பெற்றோர் படும் மனவேதனையை..
அதுவே நீ உன் மகனோ/மகளோ காதலிக்கும்போது படப்போவதின் முன்னோட்டம்

-
செந்தில்/Senthil

சிங். செயகுமார். said...

ஞானியின் தாடிக்கு
பின்னே இத்துனை ரகசியமா?
எனக்கும் தாடி வைக்க ஆசைதான்
என்னவளை எங்கே போய் தேட!

J S Gnanasekar said...

//காதலியின் பெயர்
பாஸ்வேர்ட் ஆகும்//

முதல்முறை log-in ஆகும்போது சில இடங்களில் இப்படி ஒரு வாசகம் வரும்.

"In your first log-in, you must change your password. And it should not be revealed to anybody. The new password must contain least 7 letters. It must contain at least 1 capital letter, 1 small letter and a numeric."

"You should change your password once in 90 days for the security purpose."

Password வைத்துக்கொண்டு
Username இல்லாமல் அலையும்
ஒருதலைக்காதலர்கள்!

-ஞானசேகர்

Anonymous said...

I am SreeNiSha here. your poem is nice. Try in other style. My e-mail is ess8_vee17@yahoo.co.in

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//காதலித்துப்பார் உங்கள் இருவர் பெற்றோர் படும் மனவேதனையை..//


யாத்ரீகா தாங்கள் சொன்னது உண்மைதான். தனக்கென்று வரும்போது தெரியாது கஷ்டம்..

காதலித்துப்பார்
யாத்ரீகனைப்போல
விரக்தியில் பேசுவாய்



//எனக்கும் தாடி வைக்க ஆசைதான்
என்னவளை எங்கே போய் தேட! //


என்ன செயக்குமார்;
தாடிவைப்பதற்காய் காதலிக்கப்போகிறீர்களா?
இல்லை
காதலித்து தாடிவைக்கப் போகிறீர்களா..?


//Password வைத்துக்கொண்டு
Username இல்லாமல் அலையும்
ஒருதலைக்காதலர்கள்!//

காதலிக்கும் எல்லோரிடமும் கேட்டுப்பாருங்கள். பெரும்பான்மையாயோர் தங்களின் காதலன் / காதலியின் பெயரைத்தான் பாஸ்வேர்டாக பயன்படுத்துகிறார்கள்.

இது என் அனுபவ உண்மை :)

//I am SreeNiSha here. your poem is nice. .//

விமர்சித்த அனைவருக்கும் என் நன்றி

தேன் கூடு