Thursday, December 22, 2005

கண்களை நனைத்துவிடாதே கடலே!





தூங்கியவன் தூங்கியபடியே
உண்டவன் உண்டபடியே - கனவு
கண்டவன் கண்டபடியே...

கரையில் தூங்கியவர்களை...
கடலில் விழிக்கவைத்துவிட்டாயே ?

விதைக்க நீர் கேட்டால்...
புதைக்க வந்து விட்டாயே..?
கடலே! நீ அடங்கு! - உன்னால்
காணுமிடமெல்லாம் சவகிடங்கு!

மீன்களோடு விளையாடி...
மரத்துபோய்விட்டதால்
மனிதனோடு விளையாட...
மண்ணுக்கு வந்துவிட்டாயோ ?

ஜமீன்தாரர்கள் எவருடனாவது
சகவாசம் வைத்துக்கொண்டாயா?
பின் எப்படி வந்தது ...
மொத்தமாய் நிலம்பறிக்கும்
ஜமீன்தாரர்களின் புத்தி?

ஒரு
சுனாமி அலையிலே
எங்களை
பிணங்களுக்கு
பினாமி ஆக்கிவிட்டாயே ?

தாகத்தை நிறுத்தச் சொன்னால்
மூச்சை நிறுத்திவிட்டாயே ?

உன்னைப்பார்ப்பதற்குத்தான்...
தேடி வருகிறோமே!
கட்டாயப்படுத்தி ஏன்...
களவாடிச்செல்கிறாய்?

இனிமேல் நீ
கல்லெறிந்தால் கூட...
அலையெழுப்ப கூடாது!

சுண்டுவிரல் நனைக்கவந்து...
சிணுங்கி திரும்பும் பெண்கள்

திருப்பி தந்துவிடுவாய் என்று...
செருப்பு வீசும் சிறுவர்கள்

சிப்பியென நினைத்து
நண்டு எடுக்கும் குழந்தைகள் - என

எல்லோருக்கும்...
களிப்பூட்டிய கடலே!

நெடுநேரம் காத்துக்கொண்டிருந்த காதலி..
அடம்பிடித்து அழும் சிறுவன்..
லாபமில்லாத சுண்டல் வியாபாரி..
சோகம் சொல்லும் நண்பன்..
இப்படி
எல்லோருக்கும்...
ஆறுதல் சொல்லிய அலையே!

இப்பொழுது
கொலை செய்யும் வெறியோடு
கொந்தளித்ததேனோ?

நீ
கால்பிடித்து இழுத்துச்சென்றவர்களின்
கதறல் சப்தத்தில்...
விவேகானந்தர் அங்கே
விழித்துக் கொண்டாராம்...

கடல்காண ஆசைப்பட்டது போதும்
கடலே!
கரைகாண ஆசைப்படுகிறோம்
திருப்பி அனுப்பிவிடு!

மீன்பிடிக்க கடல்வந்தது
போதுமென்றா நீ
மனிதனை பிடிக்க...
நகர் வந்தாய்!

இப்பொழுது
மீன் கிடைத்துவிட்டது
மனிதர்கள்தான் கிடைக்கவில்லை...

கடல்மாமா! கடல்மாமா!
அம்மாவை அப்பாவை
முதலில் அழைத்தாய்!

அண்ணனை தங்கையை...
மீண்டும் அழைத்தாய்!

உன்னோடு விளையாட ...
எல்லோரும் வந்துவிட
வீதியிலே நான்மட்டும்
தனியாக நிற்கின்றேன்!

அடுத்தமுறை வரும்போது
என்னையும் கூட்டிப்போ கடல் மாமா!

இப்போதைக்கு திருப்பிஅனுப்பேன்
அந்த கஞ்சி சட்டியை...?


- கரையில் புலம்பும் சிறுவனின்
கால்களைமட்டும் நனைக்க வா !
தயவுசெய்து
கண்களை நனைத்துவிடாதே கடலே!


- ரசிகவ் கே. ஞானியார்

5 comments:

நண்பன் said...

ரசிகவ்

கவிதை நன்றாக இருந்தது.

ஒரு வருட நினைவாஞ்சலியா?

பாராட்டுகள்...

Gnaniyar @ நிலவு நண்பன் said...

ஆம்..நண்பரே..

நினைவாஞ்சலிதான் சோகமான நினைவாஞ்சலி

தங்களின் கோகத்தையும் இங்கு பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி

சிங். செயகுமார். said...

ஆண்டொன்று ஆகியும்
அழுகுரல் என் காதில் இன்னும்
மாண்டவர் பாடு ஒருநாள் பொழுது
கண்ட காட்சி இன்றளவும் மனதில்
மறந்துடுமோ மனித குவியல்
இனியாவது வேண்டும் இனிய வாழ்வு

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//இனியாவது வேண்டும் இனிய வாழ்வு //

எத்தனை பேரை அனாதையாக்கி விட்டுச் சென்றது..?

இனிமேல் இந்தச் சோகம் நம் எதிரிக்குக் கூட வர வேண்டாம்..

உங்கள் எண்ணம் போலவே நடக்க இறைவனை பிரார்த்திப்போம் நண்பா..

நிகழ் பிடித்தான் பாவைபிரியன் said...

அஞ்சலி செலுத்தும் உங்கள் வரிகள் எங்களை அழவைத்து விட்டது.

தேன் கூடு