Tuesday, December 06, 2005

எழுகிறது ஒரு புரட்சியின் குரல்



என்னுடய சிநேகிதன் ராஜாவின் கவிதை இது :


மசூதியை இடிப்பவர்களே!
சிலையை தகர்ப்பவர்களே!
தேவாலயத்தை எரிப்பவர்களே!
உங்களின் முன்னே
எழுகிறது ஓர்
புரட்சியின் குரல்!

***
மினராவை எழுப்பியதில்...
ஓர்
இந்துப்பொறியாளன் பங்கு இல்லையா?

கோயில் கட்டியதில் ஒரு...
கிறித்துவக் கொத்தன்
இருந்ததில்லையா?

தேவாலயத்திற்கு காணிக்கை...
ஓரு
இஸ்லாமியன்
கொடுக்காமல் இருந்திருப்பானா..?

ஒரு
மாற்று மதச்சகோதரனின்
பங்களிப்பில்லாமல் ஒரு
மணற்மேட்டைக் கூட...
இந்தியத்தேசத்தில்

நீ
உருவாக்கியிருக்க முடியாது!


நீ கட்டிய கட்டிடத்தைத்தானே..
நீயே இடித்துக் கொள்கிறாய்!
நீ சேர்த்த
கல்லையும் மண்ணையும்
நீயே பிரித்தெடுக்கிறாய்
கடவுளையல்லவே..!
***
துண்டு நிலத்தில்
தொழுகை நடத்தும்
இஸ்லாமியனும் இருக்கின்றான்!

பரமபதத்தை மனதால்
பூஜிக்கும் இந்துமிருக்கிறான்!

கர்த்தரின் வழியில்
கண்ணியத்தைக் காக்கும்
கிறித்தவனுமிருக்கிறான்!

உங்களின் இரத்தப்வெறிக்குப்
பலியானது
இந்த அப்பாவிகள்தானே...
?

***
அஸ்ஸலாமு அலைக்கும்
- சாந்தியும் சமாதானமும் உண்டாகுவதாக

சம்பவாமி யுகே யுகே
- தருமமே வெல்லும்

"ஒரு கன்னத்தில் அறைந்தால்
மறு கன்னத்தைக் காட்டு"


எந்த மதம் உனக்கு
இடிக்கவும்...
எரிக்கவும்...
கற்றுத்தந்தது?

***
அஸ்திவாரமே இல்லாமல்
எந்தக் கட்டிடத்தை
நீ கட்டப்போகிறாய்..?

அடிப்படையே தெரியாத நீ
எந்த மதத்திலிருக்கிறாய்?

***

தொப்பி அணிந்து கொண்டதால்...
நீ
இஸ்லாமியனாகிவிடமுடியாது!

பட்டையும் நாமமும்...
போட்டுக்கொள்வதால் நீ
இந்துவாகிவிடமுடியாது!

குருசு போட்டுக்கொண்டதால்...
நீ
கிறித்துவனாகி விட முடியாது!

மனிதத்தை நேசிக்கின்ற
பொழுதுதான்
இதுவெல்லாமாக நீ மாறமுடியும்!


***
பிறைக்கொடியை பறக்கவிட்டு
இஸ்லாமியன் என
காட்டிக்கொள்ளாமல்...

காவிக்கொடியைகட்டி
இந்துவென
காட்டிக்கொள்ளாமல்...

வெறுங்கடமையாய்
பைபிளைத் தூக்கும்
கிறித்துவனாய் இல்லாமல்...

அடிப்படையிலிருந்து ...
உன் மதத்தைத் துவங்கு!

***
உன் மதத்தைக்
கற்றுத்தீரக்கவே
ஓராயுள் வேண்டும்!

இதில் எந்த மதத்தை
இடித்து தகர்க்க
உனக்க நேரமிருக்கும்.?

- ராஜா

6 comments:

சந்திப்பு said...

மனிதத்தை உணர்த்தி
மதவாதிகளின் பிணவாசைக்கு
கல்லறை எழுப்பிய
ராஜ கவிதை...

ரத்த வெறியர்களின்
ரணமாகிப்போன இதயங்களை
குணமாக்கிட....

புரட்சிக்கொடி உயர்த்தும்
கவிதைகள் ஆயிரமாயிரமாய் எழுக!

வாத்துக்கள்
கே. செல்வப்பெருமாள்

Anonymous said...

நல்ல ஆழமான உணர்வு ரசிகவ்.

தங்கள் நண்பருக்கு என் பாராட்டுக்கள்.

இதுபோன்ற சிந்தைகள் எல்லோருக்கும் மலர்ந்தால் மனிதம் மலரும்
- பாலாஜி

Anonymous said...

//வாத்துக்கள்//

:)

Anonymous said...

//வாத்துக்கள்//

:) :-))))))))

கலை said...

அருமையான கவிதை. உங்கள் நண்பர் ராஜாவுக்கு வாழ்த்துக்கள்.

யாத்ரீகன் said...

கடவுள் இல்லையென்பவர்கள் வழிபாட்டுத்தளங்களை இடிப்பதில்லை

-
செந்தில்/Senthil

தேன் கூடு