நேற்று நானும் கல்லூரி நண்பன் காஜாவும் ஒரு புத்தகம் வாங்குவது சம்பந்தமாக நாங்கள் படித்த கல்லூரி சென்று பைக்கில் திரும்பிகொண்டிருந்தோம்.
தன் மனைவியை பின் சீட்டில் வைத்துக்கொண்டு குழந்தையை முன்னால் வைத்துக்கொண்டு சென்று கொண்டிருக்கிறான் அந்த கணவன். எங்களை கடந்து செல்ல முற்பட்டது அந்த பைக்…..தற்செயலாய் கவனித்தேன் ….
அட நம்ம சீமா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) எங்கள் கல்லூரி தோழி… நன்றாக முகத்தை ஏறிட்டுப்பார்த்தேன்..அவளேதான்..புன்சிரிப்பு செய்யலாமா என்று நினைக்கையில்- அவளோ பார்த்துவிட்டு சட்டென்று பயந்தபடியே முகத்தை திருப்பிக்கொண்டாள்..
எனக்கு சூழ்நிலை புரிந்து கொண்டது.
நான் காஜாவிடம் "டேய் வண்டியை ஸ்லோ பண்ணுடா"
"எதுக்குடா"
"பண்ணுடா சொல்றேன்…"
அவன் பைக்கை மெதுவாக்கி "எதுக்குடா " என கேட்டான்
"இல்லடா நம்ம கூட படிச்சாள சீமா ஞாபகமிருக்கா"
"ஆமாடா ஞாபகமிருக்கு..அதுக்கு என்ன?"
"அவதான் அதோபோய்க்கிட்டு இருக்கா அவ புருஷனோட…"
"டேய் சொல்லவேண்டியதுதானேடா " என்று கூறி பைக்கை விரட்டினான்
"டேய் டேய் ஸ்லே பண்ணுடா வேண்டாம்டா..பாவம் அவ புருஷனோட போறா..அவ புருஷன் எதையும் சாதாரணமா எடுத்துக்கிற ஆளா இருந்தா நம்மை பார்த்து விஷ் பண்ணியிருப்பா
ஆனா பயந்து பயந்து போறாடா… நாம் விஷ் பண்ண அதை அவ புருஷன் பார்க்க..தப்பா நினைச்சுட்டான்னா…பாவம்டா அவ லைஃப் வம்பா போயிரும்…" - நான்
"ஓ அதான் ஸ்லோ பண்ண சொன்னியா…சரி சரி எனக்கு தெரியாதுடா.. சரி பார்த்து சுமார் 6 வருஷம் ஆயிருக்குமே…இப்ப எப்படியிருப்பான்னு பார்க்கலாம்னு பார்த்தேன் " - என்று வண்டியின் வேகத்தை குறைத்தான்
"கல்லூரியில் எவ்வளவு கலகல வென்று சிரித்து மாடர்னா இருப்பாள்….இப்பொழுது கிராமத்து பொண்ணு மாதிரி இருக்காடா…"
அதோ .. எங்களை விட்டு தூரத்தில் சென்று திரும்பிபார்த்தாள் லேசாக...
திரும்பி பார்த்தது அவள் மட்டுமல்ல என் நினைவுகளும்தான்…
யாரோ எழுதிய கவிதை ஒன்று ஞாபகத்தில் வந்து போனது..
நாம் காதலர்களல்ல
ஆனால்
நட்பை காதலித்தோம்
- யாரோ……………..நினைவுகள் பின்னோக்கி ஓடியது…
அவளது கைப்பையில் இருந்து ஒரு கடிதத்தை மஸ்தான் எடுத்தான்;.
"டேய் வேண்டான்டா பர்ஸனலா இருக்கம் வச்சுருடா..அவ வந்துற போறாடா "– நான்
"டேய் பயப்படாத…இந்த இந்த லட்டரை படி..நான் வேற ஏதாவது இருக்கான்னு தேடுறேன்.."
- மஸ்தான்
அது அவளுடைய காதலனால் அவளுக்கு எழுதப்பட்ட கடிதம். காதல் உருக்கத்தில் வழிந்து எழுதப்பட்ட கடிதம் அது..
( அந்த காதலனைத்தான் இப்போது கைப்பிடித்திருக்காளான்னு தெரியாது )
படித்துவிட்டு அப்படியே பிரித்தது தெரியாமல் வைத்தோம்..அவள் வகுப்பறைக்கு வந்து தன் கைப்பையை பார்த்து உடனே எங்கள் பக்கம் திரும்பி ஒரு முறை முறைத்தாள்..வேறு எதுவும் கேட்கவில்லை…பின் எனது ஆட்டோகிராப் நோட்டில் எழுதினாள்..
"நீ என்னுடைய பர்ஸனல் விஷயத்தில் தலையிட்டாய்..நான் எதை சொல்ல வருகிறேன் என்று நீ புரிந்திருப்பாய் என நினைக்கிறேன். அந்த விஷயம் மட்டும்தான் உன்மீது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஆனால் இப்பொழது எனக்கு உன்னுடைய நட்பு கடைசிவரை வேண்டும். "
என்று எழுதியிருந்தாள்….இப்படி கடைசிவரை நட்பு வேண்டும் என எழுதியவளா? இப்படி
பாதிவழியில் பைக்கில் செல்லும்போதே கழட்டிவிட்டுவிட்டாள்…?
நானும் நண்பன் செய்யதலியும் கடைசி நாளில் அவளது வீட்டிற்கு போனபோது கூட அவள் வருத்தத்தோடு கூறினாள்…
"எவ்வளவு ஜாலியா போச்சுது காலேஜ் லைஃப்…...? நேத்துதான் தயங்கிதயங்கி காலேஜ் வந்தது மாதிரி இருந்துச்சு..இப்ப பார் கடைசி நாளில் வந்து நிற்கிறோம்…ம் என்ன செய்ய …எப்படியும் இந்த ஊருக்குள்ளதானே இருக்கபோறோம்…எப்பவாது சந்தித்துக்கொள்ளலாம்.. "
என்று கூறியவள் இப்பொழுது பாருங்கள்….அவள் என்ன செய்வாள் பாவம்…?
"என்னடா இப்படி கண்டுக்காம போறா "– காஜா
"அவ சூழ்நிலை அப்படி இருக்கலாம்.அவ என்னடா செய்வா "– நான்
"எத்தனை கணவன்மார்களுக்கு தங்கள் மனைவியின் தோழர்களை சாதாரணமாய் எடுத்துக்கொள்ள முடிகிறது? "– நான்
"நாம காலேஜ்ல படிக்கும்போது நமக்கும் எத்தனை கேர்ள்ப்ரண்ட்ஸ் இருந்திருக்கும்…அது மாதிரிதான அவளுக்கும்…இத ஏன்டா புரிஞ்சிக்க மாட்டேன்கிறாங்க…ம்ம்"
-ஒரு பெருமூச்சோடு கூறினான் காஜா..
நீ
புன்னகைக்காமல் சென்றாய்
நட்பு அழுதுகொண்டிருக்கிறதுசீமா தூரத்தில் சென்று ஏக்கத்தோடு திரும்பிபார்த்தது என் மனசை ஏதோ செய்தது.
"ஞானி என்னை மன்னிச்சுருடா…நாம காலேஜ்ல நட்போட இருந்திருக்கலாம்..ஆனா இப்ப எனக்கு கல்யாணம் ஆயிருச்சு..இப்ப நான் உன்னய விஷ் பண்ணினா எம் புருஷன் யதேச்சயா பார்த்து..அது யாருடி ரோட்டுல போறவன பார்த்து கை காட்டுற… அப்படின்னு கேட்டான்னா நான் என்ன சொல்ல முடியும்…? "
என்று அவளின் அந்த தூரத்து பார்வை என் இதயத்தில் வந்து கெஞ்சி மன்னிப்பு கேட்பதுபோல இருந்தது.
இப்படி இந்தியாவில் எத்தனை சீமாக்களோ…..? தோழமையை தவளாக நினைக்கும் எத்துணை கணவன்களோ…?
என் இனிய தோழியே!
உன்
பிறந்த நாளுக்கு
வாழ்த்து அட்டை அனுப்புவதை
இரண்டு விஷயங்கள் தடுக்கலாம்
ஒன்று உன் திருமணம்
மற்றொன்று என் மரணம் இதயம் நெகிழ்வுடன்
ரசிகவ் ஞானியார்