Monday, February 05, 2007

மண்நேசர்கள்

Photobucket - Video and Image Hosting



கொல்லைப்புறத்தில்
காய்கின்ற துணிகள்,

சேகரித்து வைத்த
பழைய கடிதங்கள்,

கல்லூரி ஞாபகக்குறிப்பேடு,

அத்தாட்சிகளே இல்லாமல்போன
நண்பர்களின் ..
முகவரி கிழிசல்கள்,

நேற்று இரவு
அம்மா இட்ட
மருதாணிப் பிசிறுகள்,

தந்தையின் ஞாபகமாய்
இரத்தம் சிதறிய
தோள் துண்டுகள்,

தாயின் ஞாபகமாய்
குண்டுகளால் துளைத்தெடுக்கப்பட்ட..
சேலை முந்தானைகள்,

இவற்றோடு
அதிகமான கவலைகள்,

எல்லாம் சேகரித்து
அகதி வந்திருக்கின்றேன்...
அகதி வந்திருக்கின்றோம்!

சீதையை மீட்க..
கடல் தாண்டி வந்தான் அனுமன்!
நாங்களும் அனுமர்கள்தான்
எங்கள்
உயிரையும் கற்பையும் மீட்க...
பல உடல்தாண்டி வந்திருக்கின்றோம்!

கடலோரம் பொறுக்கி வந்த ..
சங்குகளில் எல்லாம்
கடல் ஓசையல்ல,
எங்கள்
தலைமுறைகளின் ..
வெற்றிச்சப்தம் மட்டுமே
ஒலித்துக்கொண்டேயிருக்கின்றது!

கால் கடித்துவிட்டு
மண்ணுக்குள் மறைந்துபோகும்..
நண்டுகள் எல்லாம்
நம்பிக்கையூட்டிக் கொண்டிருக்கின்றது!

உதிக்கும் சூரியன்
எங்கள்
கண்களின் வெறிக்கு முன்னால்
கற்பிழந்து போகின்றது!

வானத்துப்பறவைகள்தான்
எங்கள்
எதிர்கால எடுத்துக்காட்டு!


நம்பிக்கையிருக்கிறது
ஒரு விடியலில் சேதி வரும்!
விட்டுச்சென்ற படகுகள் எல்லாம்..
ஒருநாள் திரும்பகூடும்
சுதந்திரக்காற்றை ரொப்பிக்கொண்டு..

அகதிகளாய் அல்ல..
சொந்தங்களாய் திரும்புவோம்!

காத்திருக்கின்றோம்
இராமேஸ்வரம்
மற்றும்
நம்பிக்கைகளின் கரையோரங்களில்..



- ரசிகவ் ஞானியார்

10 comments:

Anonymous said...

Pray for that day.

very nice rasikav

Anonymous said...

வலிக்கின்றது... :(

ஜி said...

அருமையான கவிதை ரசிகவ்...

சமுதாய சிந்தனை உங்கள் எழுத்துக்களில் வெகுவாக வெளிப்படுகிறது... வாழ்த்துக்கள்...

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// ஜி said...
அருமையான கவிதை ரசிகவ்...

சமுதாய சிந்தனை உங்கள் எழுத்துக்களில் வெகுவாக வெளிப்படுகிறது... வாழ்த்துக்கள்... //


விமர்சனத்திற்கு நன்றி ஜி...

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//kumar said...
Pray for that day.

very nice rasikav //

நன்றி குமார்

சிறில் அலெக்ஸ் said...

மற்றுமொரு தரமான படைப்பு.

வாழ்த்துக்கள்.

சீனு said...

arumaiyena pathivu...

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//சிறில் அலெக்ஸ் said...
மற்றுமொரு தரமான படைப்பு.

வாழ்த்துக்கள். //

//Seenu said...
arumaiyena pathivu...
//

நன்றி சீனு மற்றும் சிறில் அலெக்ஸ் அவர்களுக்கு

Anonymous said...

ஈழத்தமிழர்கள் மீது பரிவுகொண்டு, மிகுந்த அக்கறையுடன் எழுதியுள்ளீர்கள். ஈழத்தமிழர்மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்புக்கு நாம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம். தமிழர்களாக ஒன்றுபடுவோம்.

மிக்க நன்றி நண்பரே.

Anonymous said...

//ஒரு தமிழ் முஸ்லிமின் படைப்பின் சுட்டியை உங்களுக்குத் தர விழைகிறேன்.//

நிலவுநண்பன்,

///கடலோரம் பொறுக்கி வந்த ..
சங்குகளில் எல்லாம்
கடல் ஓசையல்ல,
எங்கள்
தலைமுறைகளின் ..
வெற்றிச்சப்தம் மட்டுமே
ஒலித்துக்கொண்டேயிருக்கின்றது//

அருமையான கவிதை, அழகான வரிகள். உண்மையில் உங்களின் தமிழுணர்வின், ஈழத்தமிழ்ச் சகோதரர்களில் உங்களுக்குள்ள உணர்வுகளின் வெளிப்பாடு தான் இந்தக்கவிதை என்பதை நினைக்கும் போது உள்ளம் பூரிக்கிறது. நன்றி.

அன்புடன்
ஆரூரன்

தேன் கூடு