Tuesday, January 03, 2006

படம் பார்க்க வாரீயளா - தொடர்ச்சி

கணவன் வேலைக்குச்சென்று வரும்பொழுது கண்டிப்பாக கையில் ஒரு பெட்டி இருக்கும். அவன் வீட்டினுள் நுழைந்தவுடன் அவன் மனைவி அவன் அணிந்துள்ள கோட்டை கழற்றுவாள்.

சினிமாவில் இஸ்லாமிய கதாபாத்திரத்தை காட்டுபோது கைலி உடுத்திக்கொண்டு தலையில் ஒரு தொப்பி அணிந்து கொண்டு கழுத்தில் புலிப்பல் வடிவில் ஒரு தாயத்து அணிந்துகொண்டு அச்சாக்கே பச்சா என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகித்து கொண்டு இருப்பார்.

கதாநாயகன் செண்டிமென்டாக கழுத்திலோ அல்லது கையிலோ
786 என்ற எண் அணிந்த பட்டையை அணிந்திருப்பான். இந்தியாவில் எந்த முஸ்லிமும் அப்படி அணிந்திருப்பதாக நான் பார்த்ததும் இல்லை கேள்விப்பட்டதுமில்லை.

கோர்ட் சீனில் கதாநாயகனோ அல்லது கதாநாயகனின் வக்கீலோ நகைச்சுவையாக பேச உடனே பார்வையாளர்கள் பகுதியில் இருந்து சிரிப்பலை கிளம்பும். உடனே நீதிபதி அந்த இத்துப்போன கட்டையால் ஆர்டர் ஆர்டர் என்று மேஜையைத் தட்டுவார்.

கிராமத்திலிருந்து சென்னைக்கு வரும் கதநாயகன் கண்டிப்பாக ஒரு மஞ்சள் பையை கையில் வைத்துக்கொண்டு எல்ஐசி பில்டிங்கையோ அல்லது சென்டிரல் இரயில் நிலையத்தையோ கடந்து செல்வான்.

பெண்ணின் கழுத்திலிருந்து தாலியை வில்லன் புடுங்கும்போது கடலலைகள் எல்லாம் அப்படியே பாறைகளில் தெறித்து நிற்கும்,பறவைகள் அப்படியே ஸ்தம்பித்துப் போய் பறந்த நிலையிலேயே நின்றுவிடும், பலமான சூறைக்காற்றில் தென்னை மரங்கள் ஆடும்.

ஏதாவது பெண் கெடுக்கப்படுகின்ற காட்சியில் அதனை நேரடியாக காட்டினால் ஆபாசமாக இருக்கும் என நினைத்து ஒரு புலி மானை துரத்துவது போன்று அல்லது கிளி ஒன்று கூண்டக்குள் அங்குமிங்கும் சிதறி ஓடி படபடப்பதுபோலவும் காட்டுவார்கள். பாருங்கனே; வித்தியாசமான சிந்தனையை ..உண்மையில் இந்தக்காட்சிதான் மிகவும் ஆபாசமாக இருப்பது போல தோன்றும்.

பின்னர் அந்தப் பெண் தலைமுடி கலைந்து ஆடைகள் ஆங்காங்கே கிழிக்கப்பட்டு குங்குமங்கள் கலைந்து மூலையில் குத்த வைத்துக்கொண்டு அழுதுகொண்டிருப்பாள்.

கிராமத்து முரட்டு பண்ணையாரின் எல்லா பையன்களும் பம்புசெட்டில் ஏழைப் பெண்ணை தூக்கிச்சென்று கெடுத்துவிடுவார்கள்.

மற்றும் சில நண்பர்களிடமிருந்து:

கைப்புள்ளை : 1960 - 70 களில் வரும் பழைய படங்களில் வரும் ஒரு பிரபலமான வசனம் குறிச்சிட்டு வாங்க டிபன் சாப்பிடலாம். ஏன் குளிக்காம வந்தா விரட்டி விடுவாங்களா என்ன..?

கதாநாயகி கிறிஸ்த்துவ மதமாக இருந்தாலோ அல்லது கிறிஸ்த்துவ கதாநாயகனை மணக்கிறாள் என்றாலோ ஒரு பெரிய வெள்ளை நிற கவுன் அணிந்து கையில் குளோஸ் அணிந்து கொண்டு இருப்பாள். நான் இதுவரை பார்த்த தமிழ்நாட்டு கிறித்துவ முறை திருமணங்களில் மணப்பெண் புடவைதான் அணிந்திருப்பாள்.

கோர்ட் சீனில் வரும் நீதிபதி கறுப்பு நிற கோட் அணிந்துகொண்டு அந்த கோட்டில் ஒரு சிவப்பு நிற ரிப்பன் சுற்றப்பட்டடிருக்கும். எனக்கு தெரிந்தவரை எந்த ஒரு நீதிபதியும் இப்படி சிவப்பு ரிப்பன் சுற்றியிருப்பதாக நான் கேள்விப்பட்டதில்லை. இந்த விசயத்தில் தெளிவாக இருக்கிற நம்ம ஊர் விருமாண்டி நீதிபதி கூட சிவப்பு ரிப்பன்தான் அணிந்திருந்தார்.

கதாநாயகனோ கதாநாயகிளோ அல்லது அவர்களது நண்பர்களோ உறவினர்களோ கத்தி குத்திப்பட்டோ குண்டடிப்பட்டோ கிடக்கும்போது 5 நிமிடம் வசனம் பேசிவிட்டுத்தான் மண்டையைப் போடுவார்கள். அதுவே வில்லனோ அல்லது வில்லன் ஆட்களாகவோ இருந்தால் உடனே மண்டையைப்போட்டுவிடுவார்கள்.

தமிழ்படத்தில் வரும் அரபு நாட்டு சேக் கூட இந்தியில் பேசுவான்


நிலா : மாறு வேடத்தை மறந்திட்டீங்களே? கன்னத்தில ஒரு மச்சம் மட்டும் வச்சிக்கிட்டு எம்.ஜி.ஆர். மாறு வேடத்தில வருவாராம்! நம்ம டெண்டு கொட்டாயில படம் பாக்கற வாண்டுக்குக் கூடத் தெரியும் அது வாத்தியாருன்னு. ஆனா வில்லனுக்கு மட்டும் தெரியாமப் போயிரும்!


பூங்குழலி : முதலிரவுக் கதாநாயகியோ அல்லது சோரம்போன பெண்ணோ அறையில் இருந்து வெளியே வரும்போது அவர்கள் என்னதான் புதுமைப் பெண்ணாக இருந்தாலும், அவர்களின் முகத்தில் குங்குமம் ஈஷிக்கொண்டு இருக்கும்



- ரசிகவ் ஞானியார்

2 comments:

மகேஸ் said...

இன்னும் ஒன்று,
மோப்ப நாய் பிடித்து வரும் போலீஸ்காரர், தொந்தியுடன் ஒரு காக்கி டவுசரும் ஒரு வெள்ளைப் பனியனும் அணிந்து வருவார்கள்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

ம் இதுமாதிரி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம் மகேஸ்..

தேன் கூடு