
பழைய படங்களில் பார்த்தோமென்றால் கதாநாயகனுக்கும் வில்லன் ஆட்களுக்கும் பெரும் சண்டை நடந்து கொண்டிருக்கும். சண்டை முடிகின்ற கடைசித்தருவாயில் டவுசரோடு காவலர்கள் சில கூட்டங்களோடு ஓடிவருவார்கள். (அது மலை உச்சியிலோ இல்லை அடர்ந்த காட்டுக்குள்ளே நடந்தாலும் சரி சரியாக கண்டுபிடித்து வந்துவிடுவார்கள். )
தலைமைக்காவலர் மட்டும் பேண்ட் அணிந்திருப்பார். அவர் வானத்தை நோக்கி டமீல் என்று சுட அனைவரும் அப்படியே கையை தூக்கி கொண்டு நின்றுவிடுவார்கள். ( சுட்டா கையை தூக்கணும்னு யாருங்க சொல்லிக்கொடுத்தா)
காவலர்கள் சரியாக வில்லன் ஆட்களை மட்டும் அடையாளம் கண்டுபிடித்து கைது செய்து அழைத்துச் செல்வார்கள்.
(ஜோசியம் தெரிஞ்ச காவலர்கள்)
காவலர்களை அழைத்து வரும் பொறுப்பு பெரும்பாலும் நகைச்சுவை கதாப்பாத்திரங்களாகத்தான் இருக்கும். (அவ்வளவு பெரிய சண்டை நடக்கும் போது அவன் மட்டும் ஓடிப்போய் போலிஸை கூப்பிடப்போறானாம்.)
ரவுடிகளின் முகத்தில் பெரும்பாலும் ஒரு கறுப்பு நிற மச்சம் இருக்கும். கழுத்தில் ஒரு கைக்குட்டை. நெற்றியில் ஒரு வெட்டுக்காயம் இருக்கும் ( ஆனால் இப்பொழுது ரவுடிகள் எல்லாம் டை கட்டித்தான் திரியுறாங்க )
படம் முடியும்போது எங்கெங்கோ இருக்கின்ற கதாபாத்திரங்கள் எல்லாம் சொல்லிவைத்தாற் போன்று சண்டை நடக்கின்ற இடத்திற்கு வந்து விடுவார்கள். (கடைசியில் சிரித்துக்கொண்டே போட்டோ பிடிப்பதற்காக. )
கதாநாயகியையோ இல்லை கதாநாயகனின் அம்மா அல்லது தங்கை கதாபாத்திரத்தையோ யாரவது காரில் கடத்திச் செல்லும் பொது தூரத்தில் ஏதாவது சிறுவனோ ( அந்த சிறுவனின் தாய் மிகுந்த ஏழை அந்த குடும்பத்திற்கு இவர் முன்பு உதவியிருப்பார் ) இல்லை கதாநாயகனுக்கு தெரிந்தவர்களோ மறைந்து இருந்து பார்த்து விட்டு அவரிடம் ஓடி ஓடி ஓடி வந்து சொல்வார்கள் ( கன்னியாகுமரியில் வைத்து கடத்தினாலும் சரி காஷ்மீரில் இருக்கும் கதாநாயகனுக்கு வந்து சொல்லிவிடுவார்கள் )
எம்ஜி ஆரை வில்லன் முதல் தடவை அடிக்கும் போது அவர் தரையில் போய் விழுவார். மறுபடியும் வில்லன் அடிக்க மறுபடியும் அங்கு தயாராக வைக்கப்பட்டுள்ள காலிடப்பாவில் சென்று விழுவார் மூன்றாவது முறையும் அடிக்க அவர் வாயில் இருந்து இரத்தம் வர கீழே விழுவார். உடனே ஒரு கையால் வாயைத் துடைத்துப்பார்ப்பார் அது ஜொள்ளா இல்லை இரத்தமா என்று கண்டுபிடிக்க, அது இரத்தம் எனத் தெரிந்தவுடன் கோபத்தில் முகம் சிவக்க ஆ என்று கத்திக்கொண்டே வில்லனை நோக்கிப் பாய்வார். (அது எப்படிங்க 3 வது முறை அடிக்கும்போது மட்டும் இரத்தம் வருகிறது. )
கதாநாயகியை அவளது வீட்டில் வந்து வில்லன் கும்பல் கடத்தும் போது குறுக்கே வரும் அவளது அம்மாவை வில்லன் ஆட்கள் ஒரு தள்ளு தள்ளி விட உடனே ஆ என்று கத்திக்கொண்டே விழுந்து மயக்கமடைந்து விடுவாள். (ஒரே தள்ளுல மயக்கமடைகிற காட்சி மிகவும் வித்தியாசமான சிந்தனைங்க. கடைசிவரை யாருக்குமே தெரியாது அவளை யார் வந்து எழுப்புவார்கள் என்று. )
பிரசவ நேரத்தில் கதாநாயகிக்கு பிரசவம் இல்லையென்றால் ஏதாவது ஆபரேஷன் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் நர்சுகள் பதட்டத்துடன் அங்கும் இங்கும் ஓடுவார்கள். (ஆபரேஷன் தியேட்டர்லதான் ஆபரேஷன் பண்றதுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகள் செய்துவிடுவார்களே. அப்புறம் ஏன் அவங்க அங்கேயும் இங்கேயும் பதட்டத்தோட ஓடணும்? )
பின் டாக்டர் வெளியே வந்து இது ஒரு மெடிக்கல் மிராக்கில் என்று தவறாமல் சொல்லிவிடுவார்.
கதாநாயகி அல்லது கதாநாயகனின் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்றால் உடனே முடும்ப டாக்டருக்கு தொலைபேசி செய்வார்கள். விறுவிறு வென்று டாக்டர் உள்ளே நுழைவார் ஸ்டெதஸ்கோப்பை கழுத்தில் அணிந்துகொண்டு.( ஏதோ ஸ்டெதஸ்கோப்போடு பிறந்தமாதிரி )
அது மட்டுமல்ல எப்போதுமே வெள்ளைச்சட்டை அணிந்து கொண்டும் கையில் ஒரு பெட்டியோடும் வருவார்.
வில்லன் ஆட்களை துரத்திக்கொண்டு கதாநாயகன் காரில் செல்லும்போது வழியில் யாராவது இரண்டு பேர் கண்ணாடியைச் சுமந்துகொண்டு சாலையின் குறுக்கேச் செல்வது, ரோட்டுக்கு நடுவில் முட்டைக்கடை, பூக்கடை என்று வைத்திருப்பார்கள் அது பைபாஸ் ரோடு என்றாலும் கூட.
அந்தக்கார் கண்டிப்பாக டிராபிக் விதிமுறைகளை பின்பற்றாமல் தடுமாறிச் சென்று கண்ணாடியை உடைத்து- முட்டையை நொறுககி - பூக்கடைக்குள் நுழைந்து பூக்களை சிதறடித்துதான் செல்லும். (ஏன் வழியில தங்கக்கடை வைக்க வேண்டியதுதானே.. பட்ஜெட் எகிறிப்போயிருமோ? )
வில்லன் கும்பல் ஏதாவது வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும்போது அவர்களை துரத்திச் செல்லும் கதாநாயகன் வழியில் ஒண்ணுக்கு அடித்துக்கொண்டிருக்கும் அப்பாவிகளின் கார் அல்லது ஸ்கூட்டரை திருடிக்கொண்டு செல்வார். (அவன்கிட்ட கேட்டு வாங்கிட்டு போக வேண்டியதுதானே :) )
இப்படி பல வழக்கமான பாணிகளை பார்த்து அலுக்க வைத்த தமிழ் இயக்குநர்களின் உங்களுக்கு தெரிஞ்ச மசாலாக்களையும் எழுதுங்களேன்..?
- ரசிகவ் ஞானியார்