சென்ற ஆண்டு ஏப்பிரல் மாதம் இந்த வலைப்பூவினை ஆரம்பித்தேன். அதற்குள் ஒரு வருடம் ஓடிவிட்டது. அதனைப்பற்றிய பதிவு ஒன்று போடலாம் என்று நினைத்திருந்தேன் நண்பர் பிரசன்னா அவர்கள் ஞாபகப்படுத்திவிட்டார்கள். ஆகவே இந்த முதலாம் ஆண்டில் இதுவரை கடந்து வந்த நிகழ்வுகளை பற்றிய ஒரு ஞாபகத்தை பதிவாக போடுவதுதான் சிறப்பு என்று கொஞ்சம் பழசை கிண்டுகிறேன்.
2005 ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் மாலை வேளையில் தற்செயலாக இணையத்தை நோண்டிக்கொண்டு இருந்தபொழுதுதான் இந்த தமிழ்மணத்தை கண்டறிந்தேன். அதில் சுவாரஸ்மாக வரும் பதிவுகளை படிக்க ஆரம்பித்தேன்.
பின் நாமும் ஒரு வலைப்பூ ஆரம்பித்தால்தான் என்ன எனத் தோன்றிற்று. பின்னர் ப்ளாக் ஸ்பாட்டில் தேட ஆரம்பித்தேன்.
நிலவு நண்பன் - பெயர்க்காரணம்
என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபொழுதுதான் நண்பர் நிலா ரசிகனின் கவிதை ஒன்று இணைத்தில் உலா வந்து கொண்டிருந்தது. எனக்கு நண்பர்களுடன் மொட்டை மாடியில் நிலாவை ரசித்துக்கொண்டிருப்பது பிடிக்கும். சின்ன வயதில் இருந்து நண்பர்களுடன் நண்பனின் வீட்டு மொட்டைமாடியில் சுற்றி இருந்துகொண்டு நிலாவை ரசித்துக்கொண்டே எதாவாது கொறித்துக்கொண்டிருப்போம். ஆகவே நிலா சம்பந்தமாக ஏதாவது பெயரிடுவோம் எனத்தோன்றிற்று
நிலா ரசிகன் என வைத்தால் நண்பர் கோபித்துக்கொள்ளக்கூடும் என நினைத்து அது சம்பந்தமாக வேறு பெயர் தேடிக்கொண்டிருந்தேன். நிலா காதலன் என வைக்கலாமா என்று முடிவெடுத்தேன்.
யார் வேண்டுமானாலும்
காதலிக்கலாம்
ஆனால்
ஒருதலைக்காதல்தான்
அந்தப்பெயரில் உடன்பாடில்லாமல் இருந்தபொழுதுதான் எனது ஊரில் நான் நண்பருடன் இணைந்து உங்கள் நண்பன் என்ற பத்திரிக்கையை நடத்தி வந்துகொண்டிருந்தேன்.. அந்தப்புத்தகம் அப்பொழுது என்னிடம் இருந்தது. அதனால் நிலவையும் நண்பனையும் இணைத்துவிடலாம் என முடிவெடுத்து நிலவுநண்பன் என்று பெயரிட்டேன்.
பதிவுகள்
ஆரம்பித்த உடன் முதல் பதிவாக என்ன வெளியிடலாம் என நினைத்தபொழுது கனடாவில் இருக்கும் நண்பர் புகாரி அவர்கள் என்னுடைய தூக்கம் விற்ற காசுகள் என்ற கவிதையை அன்புடன் என்ற குழுமத்தில் வெளியிட்டு என்னை அறிமுகப்படுத்தினார் ஆகவே அந்தக்கவிதையை முதலில் வெளியிட்டேன். என்னுடைய கவிதை நானே எனது வலைப்பூவில் வெளியிட்டாலும் இணையத்தில் அது வெளி வந்ததைக் கண்டும் அதற்குரிய விமர்சனங்களைக் கண்டும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
அன்புடன் உறுப்பினர்களின் விமர்சனமும் மற்றும் வலைப்பூவில் முதல் விமர்சனம் தந்த முத்து மற்றும் நளாயினி தாமரைச்செல்வன் ஆகியோர்களின் விமர்சனம்தான் என்னை அதிகமாய் எழுதுவதற்குத் தூண்டியது.
முதன்முதலாய் தன் கவிதை பத்திரிக்கையில் வெளிவந்ததைக் கண்டு மகிழ்ச்சியடையும் கவிஞனின் சந்தோஷம் எனக்கும் வந்தது. ஏதோ நாமே ஒரு பத்திரிக்கை ஆரம்பித்தது போன்ற உணர்வு. இது என்னுடைய பத்திரிக்கை எது வேண்டுமானாலும் பதிவு செய்யலாம் என்ற ஒரு கர்வம் வர ஆரம்பித்தது.
பின்னர் எழுதுகின்ற எல்லா படைப்புகைளயும் அன்புடன் குழுமத்திலும் - நிலவு நண்பனிலும் இட ஆரம்பித்தேன். இப்படியாக பிறை நிலவு முழநிலவாய் வளர்ச்சிப் பெற்றது
வளர்ச்சிகள்
என்னுடைய புகைப்படத்தை எப்படி இணைப்பது என்று தெரியவில்லை. தேடி கண்டுபிடிக்கும் அவகாசமும் எனக்கு இல்லை. யாரிடமாவது உதவி கேட்கலாமென நினைத்தேன். அப்பொழுது தமிழ்மணத்தில் சந்திரவதனா அவர்களின் வலைப்பதிவு ஒன்று திரட்டப்பட்டது. அவர்கள் வலைப்பூவைக் கண்டபொழுது அசந்து போய்விட்டேன்.
உடனே எனக்கு விளக்கமாக பதில் அனுப்பினார்கள். அதிலிருந்து அறிமுகப்பகுதியில் என்னுடைய புகைப்படத்தையும் ஒவ்வொரு படைப்புகளுக்கும் கூகுளிலிருந்து படம் தேர்வு செய்தும் பதிய ஆரம்பித்தேன்.
பின்னர் தமிழ்மணத்தில் திரட்டப்படுவதற்கான வழிமுறைகளை கண்டுபிடித்து அதன்படி செய்தேன்.
நிலவு நண்பனுக்கு ஏற்றவாறு ஏதாவது புகைப்படம் இட்டால் நன்றாக இருக்குமே என யோசித்து சென்னையில் வெப்டிசைனராக பணிபுரியும் நண்பர் செய்யதலியிடம் நிலவை பார்த்துக்கொண்டு ஒரு சின்னப் பையன் நின்று கொண்டிருப்பது போலவும் அந்தநேரத்தில் சிறு சிறு மழைத்துளிகள் விழுவதைப்போலவும் ஒரு படம் வேண்டும் என்றேன். நண்பரும் அழகாய் அருமையான புகைப்படத்தை வடிவமைத்து தந்தார்.
பின் வருகின்றவர்களின் எண்ணிக்கையை அறிந்து கொள்வதற்காக வெப் கவுன்டர் வைக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு நாளும் எண்ணிக்கையை அதிகரிக்க அதிகரிக்க ஆகஸ்ட் 15 ல் மிட்டாய் வாங்கிவிட்டு திரும்புகின்ற குழந்தைகளைப்போல ஆனந்தப்படுவேன்.
பின்னர் எந்தெந்த நாடுகளிலிருந்து வாசகர்கள் வருகிறார்கள் என அறிந்துகொள்ள வழிசெய்தேன்.
யுஏஇ 3
அமெரிக்கா 2
கனடா 1
தாய்லாந்து 1
சிங்கப்பூர் 2
சுவிட்சர்லாந்து 1
என்று வரிசையாக நாடுகளின் பெயர்களைக் காணும்பொழுது அட நம்ம படைப்புகளை இத்தனை நாடுகளிலிருந்து வாசிக்கிறார்களே என்று நினைத்து பெருமையாக இருக்கும் .
சிலநேரம் பெயர் வாயில் நுழையாத சில நாடுகள் கூட பட்டியலில் வரும். என்னுடைய பதிவை இவர்கள் வாசிக்கிறார்களே என்ற ஆனந்தத்தை விடவும், இத்தனை நாடுகளில் தமிழர்கள் வசிக்கிறார்களே என்பதைக் கண்டுதான் பெருமையாக இருக்கும்.
நண்பர்களிடம் பெருமையாக சொல்லிக்கொள்வேன். "டேய் நமக்கு இப்போ எல்லா நாட்டிலும் நண்பர்கள் இருக்காங்கடா" என்று
எனது வலைப்பூவினைப்பற்றி தினமலரில் குறிப்பிட்டு எழுத, "அட நாம் பத்திரிக்கை உலகத்தின் மூலமும் கவனிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம்" என்ற ஆச்சர்யத்தையும் நல்ல பதிவுகள் தரவேண்டும் என ஊக்கத்தையும் கொடுத்தது.
பின்னர் கவிதை - கல்லூரி ஞாபகங்கள் - சேட்டைகள் - நண்பர்களின் திருமணம் - பசியோடு பார்க்கின்ற பூனை - விபத்து - காதல் என்று அனைத்து விசயங்களைப்பற்றியும் எழுத ஆரம்பித்தேன்.
"டேய் நம்ம காலேஜ் மேட்டரைப்பத்தி ஞானியார் அவனுடைய சைட்ல போட்டிருக்கான்டா" என்று நண்பர்கள் மத்தியில் பேச ஆரம்பிக்க எனக்கு இன்னமும் உற்சாகம் கூடிற்று.
நண்பர்கள் எங்கெங்கோ பிரிந்து இருந்தாலும் மீண்டும் சந்திக்கும்பொழுது தங்களுடைய பழைய கல்லூரி நாட்களை பகிர்ந்து கொள்வார்களே அதுபோல மகிழ்ச்சி இணையத்தில் அந்த கல்லூரி நாட்களைபற்றி எழுதும்பொழுது தோன்றிற்று.
வேலைவாய்ப்பு சம்பந்தமாக இன்னொரு வலைப்பூ ஆரம்பிக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கின்றேன். காலம் சம்மதித்தால் தங்களின் ஆதரவோடு இறைவனின் அருளோடு வெகு விரைவில் ஆரம்பிக்க கூடும்.
விமர்சனங்கள்
ஆரம்பத்தில் என்னுடைய பதிவுகளுக்கு வருகின்ற விமர்சனங்களை கண்டு கொள்ளவே மாட்டேன். பின்னர் நான் சரியாக விமர்சனத்திற்கு பதில் தருவதில்லை என்று சிங்கப்பூரிலிருந்து நண்பர் சிங் செயக்குமார் வருத்தப்பட்டு கூறினார்.
விமர்சிப்பவர்கள் பதில் தந்துவிட்டு அதற்குண்டான பதிலை எதிர்பார்த்து நம்முடைய வலைப்பூபக்கம் வருவார்கள். நாம் பதில் ஏதும் தரவில்லை என்றால் நாம் கவனிக்கவில்லையோ என்று நினைத்து நம் வலைப்பக்கம் வருவதைக் குறைத்துக்கொள்வார்கள் அது மட்டுமல்ல விமர்சனங்களும் தரமாட்டார்கள் என்று உணர்ந்தேன்.
அதிலிருந்து என்னால் முடிந்தவரை அனைத்து விமர்சனங்களுக்கும் பதில் அனுப்ப ஆரம்பித்தேன்.
மறக்கமுடியாத நிகழ்வுகள்
நான் என்னுடைய கல்லூரி நேரத்தில் கல்லூரித்தோழியின் டிபன் பாக்ஸிலிருந்து உணவினைத்திருடி சாப்பிட்டகதையை எழுதியபொழுது அந்தப்பெண்ணின் சகோதரி கனடாவிலிருந்து எனக்கு மின்னஞ்சல் அனுப்பி அந்தக் கதையை கேட்க வசமாக மாட்டிக்கொண்டேன். திருநெல்வேலியில் நடந்ததைப்பற்றி துபாயில் இருந்து எழுதுகிறேன் ஆனால் கனடாவில் இருந்து பதில் வருகிறதே என்று உலகம் இவ்வளவு சுருங்கி விட்டதே என எண்ணி ஆச்சர்யப்பட்டேன்
என்னைச்சுற்றி நிகழ்ந்த காதல் நிகழ்வுகளைப்பற்றி நான் படித்த சதக்கத்துல்லா கல்லூரியில் நடந்த சின்னசின்ன சம்பவங்கள்பற்றி எழுதியதை படித்த சில நண்பர்கள் திருநெல்வேலியில் அந்தக்கல்லூரியை கடந்து சென்றபொழுது என்னுடைய ஞாபகம் வந்ததாக கூறியபொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
யாருக்கேனும் உபயோகமாக இருக்குமே என்று நான் ஆரம்பித்த விதைகள் என்னும் இன்னொரு வலைப்பூவானது ஆரம்பித்த 1 மாதத்திற்குள்ளாகவே நான் உதவி கேட்டு குறிப்பிட்ட அந்த நபர்களுக்கு உதவிகள் கிடைத்துக்கொண்டிருப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.
தனது அம்மாவை யாரோ கொலை பண்ணிட்டாங்க என்று என்னிடம் அந்த நபர் வந்து சொல்லி ஊரில் உள்ள பஞ்சாயத்து தலைவருக்கு கடிதம் எழுதி கேட்ட நிகழ்வுகளைப்பற்றியும், எனது நண்பரின் மனைவி முதல் பிரசவத்தில் இறந்ததைப்பற்றி "சொர்க்கத்தில் பாலூட்டும் தாய்" பதிவாக எழுதியதும்தான் நான் அழுதுகொண்டே எழுதிய பதிவாக இருக்ககூடும். அந்த அளவிற்கு மனதை பாதித்த சம்பவங்கள் அவைகள்.
வலைப்பதிவில் நண்பர் ஒருவர் இறந்து போனதைக் கேள்விப்பட்டபொழுது மிகவும் வருத்தப்பட்டேன். அந்த நண்பரை நான் இதுவரை கண்டதுமில்லை ஆனாலும் அவர் இறந்த செய்தி என்னை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியது. அவரது பதிவுகள் புதிப்பிக்கப்படாமல் அனாதையாய் இருக்கும்பொழுது எனக்குள் மிகுந்த மனக்கவலையை கொடுத்தது. நமக்கும் ஒருநாள் இந்தநிலை வரக்கூடும் என்ற அச்சப்பட்டுக்கொண்டே இருப்பேன். யாரிடமாவது நமது பாஸ்வேர்டை கொடுத்து நாம் இறந்து போனால் அனைவருக்கும் தகவல் தெரிவிக்கலாமே என்று கூட நினைத்திருந்தேன். "நான் இறந்து போனால்" என்ற பதிவு கூட ஆரம்பிக்கலாமென இருந்தேன். ஆனால் நெருங்கியவர்களின் மனம் புண்படக்கூடும் என்று அந்த முயற்சியை விட்டுவிட்டேன்.
சொந்தப் பத்திரிக்கை நடத்துவது போன்ற உணர்வுடன் என் மனம் போக்கில் எழுதிகொண்டிருக்கின்றேன்.
இந்த பாலை வாழ்க்கையில் உறவினர்கள் நண்பர்களை விட்டு பிரிந்து இருந்தாலும், நான் சோகப்பட்டால் - ஆறுதல் தந்து, மகிழ்ச்சியடைந்தால் - என்னோடு மகிழச்சியடைந்து, எனது பால்ய வயது மொட்டை மாடி நண்பர்களுடன் சுற்றியிருந்து அரட்டை அடிப்பது போல உணர்வுகளை தந்து எனக்கு எப்போதும் ஆறுதல் கொடுத்துக்கொண்டிருக்கும் குழும நண்பர்களுக்கும், வலைப்பதிவு வாசகர்களுக்கும் முதலாண்டில் அடியெடுத்துவைக்கும் இந்த நாளில் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டு, இந்த கீழுள்ள கேக்கை சண்டைபோடாமல் எல்லாரும் பிரித்து சாப்பிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.. :)
36 comments:
வாழ்த்துக்கள்.
இன்று தான் உங்கள் பதிவினைப் படிக்கும் வாய்ப்பு கிட்டியது.
நன்றி
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
அய்யா!!! ரொம்ப நன்றி. நான் தமிழ்மணத்தில் இணையவில்லை. நீங்க மற்றும் பாலபாரதி குடுக்கும் சுட்டிகள் என் வலைப்பூவிற்கு நிறைய வாசகர்களை உருவாக்கும். மீண்டும் நன்றி. நீங்க இன்னும் நிறைய நாட்கள் உபயோகமான தகவல் பல தரணும். வாழ்த்துக்கள்!!!
வாழ்த்துகள் நண்பரே!
முதலாண்டு நிறைவுக்கு என் வாழ்த்துகள்.
பல்லாண்டு பல்லாண்டு பல நூறாண்டு உங்கள் பதிவுகள் இணையத்தில் நிலைத்திருக்க என் வாழ்த்துகள்.
//Prasanna said...
அய்யா!!! ரொம்ப நன்றி. நான் தமிழ்மணத்தில் இணையவில்லை. நீங்க மற்றும் பாலபாரதி குடுக்கும் சுட்டிகள் என் வலைப்பூவிற்கு நிறைய வாசகர்களை உருவாக்கும். மீண்டும் நன்றி. நீங்க இன்னும் நிறைய நாட்கள் உபயோகமான தகவல் பல தரணும். வாழ்த்துக்கள்!!! //
என்ன அய்யாவா.. என்ன நக்கலா ..திருநெல்வேலிக்காரன்னு காட்டிட்டீங்களே மக்கா...
நன்றி பிரசன்னா .. ஊக்குவிப்பவர்கள் இருக்கும் வரை நான் ஊக்கு விற்றுக்கொண்டே இருப்பேன்..
அன்புடன்
ரசிகவ் ஞானியார்
//தமிழ்மணத்தில் இணையவில்லை. நீங்க மற்றும் பாலபாரதி குடுக்கும் சுட்டிகள் என் வலைப்பூவிற்கு நிறைய வாசகர்களை உருவாக்கும். மீண்டும் நன்றி. நீங்க இன்னும் நிறைய நாட்கள் உபயோகமான தகவல் பல தரணும். வாழ்த்துக்கள்!!! //
நன்றி பரஞ்சோதி அவர்களே..
தங்களின் வாழ்த்தக்கள் மென்மேலும் எழுத தூண்டும்
//ஸ்ருசல் said...
வாழ்த்துக்கள்.
இன்று தான் உங்கள் பதிவினைப் படிக்கும் வாய்ப்பு கிட்டியது.//
நன்றி
இன்றுதான் தங்களின் முதல் விமர்சனம் கிடைத்தது
// மகேஸ் said...
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.//
நன்றி மகேஷ்
( பரிசு தராம வாழ்த்து சொல்றீங்களே நியாயமா..? )
நான் முதன் முதலில் படித்தது உங்கள் பதிவுகளைத்தான். தமிழ்மணமும், தேன்கூடும் அறிமுகமானதே உங்களால் தான். உங்களை அறிமுகப்படுத்திய பெருமை என் நண்பர் நாகுவைச் சேரும். இத்தனை நாள் வீணாக்கிவிட்டோமே என வருந்தியதுண்டு.
உங்களுக்கும், நண்பர் நாகுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல.
தொடரட்டும் உங்கள் அசத்தல்.
ப்ரியமுடன்,
மணி
வாழ்த்துக்கள் நண்பா.. தொடர்ந்து எழுதுங்கள்.. முடிந்தால் சந்திப்போம்..
முதலாண்டு நிறைவுக்கு என் வாழ்த்துகள்.
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
உங்கள் பதிவுகள் போல உங்கள் இனிபான கேக் சுவையாக இருந்தது,
பதிவுகள் தொடரட்டும்
"வலைப்பதிவில் நண்பர் ஒருவர் இறந்து போனதைக் கேள்விப்பட்டபொழுது மிகவும் வருத்தப்பட்டேன். அந்த நண்பரை நான் இதுவரை கண்டதுமில்லை ஆனாலும் அவர் இறந்த செய்தி என்னை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியது. அவரது பதிவுகள் புதிப்பிக்கப்படாமல் அனாதையாய் இருக்கும்பொழுது "
அவரது பதிவுகள் ஐயா ஞானவெட்டியான் அவர்களால் தொடர்ந்து நடத்த படுகின்றது.
"எனக்குள் மிகுந்த மனக்கவலையை கொடுத்தது. நமக்கும் ஒருநாள் இந்தநிலை வரக்கூடும் என்ற அச்சப்பட்டுக்கொண்டே இருப்பேன். யாரிடமாவது நமது பாஸ்வேர்டை கொடுத்து நாம் இறந்து போனால் அனைவருக்கும் தகவல் தெரிவிக்கலாமே என்று கூட நினைத்திருந்தேன். "நான் இறந்து போனால்" என்ற பதிவு கூட ஆரம்பிக்கலாமென இருந்தேன். ஆனால் நெருங்கியவர்களின் மனம் புண்படக்கூடும் என்று அந்த முயற்சியை விட்டுவிட்டேன். "
பிறந்த உயிர்களுக்கெல்லாம் இறப்பு ஒன்று உண்டு. வேண்டாத எண்ணங்கள் வேண்டாமே. விளையாட்டாய்கூட இந்த பதிவை கொஞ்சம் பாருங்கள்....
http://thulasidhalam.blogspot.com/2006/03/blog-post_114307759042437042.html
இன்று முதலாமாண்டு வாழ்த்து இன்னும் ஐம்பதாண்டு கழித்தும் வாழ்த்து சொல்வேன்.. அதற்குள் தனிதளம் வந்து விடும். ஆயிரம் மாற்றங்கள்
என்றும் அதே நேசம்
அன்புடன்
சிங்.செயகுமார்.
//Saran.C said...
முதலாண்டு நிறைவுக்கு என் வாழ்த்துகள்.
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
உங்கள் பதிவுகள் போல உங்கள் இனிபான கேக் சுவையாக இருந்தது,
பதிவுகள் தொடரட்டும் //
வாழ்த்துக்கு நன்றி சரண்..
அட கே;கை எல்லாருக்கும் பிரிச்சு கொடுத்தீங்களா என்ன..?
//அரையணா said...
நல்லது! வாழ்த்துக்கள்!
//நான் ஹீரோவா.. இல்லை காமெடியனா.. என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. //
ஆனா feeling குடுத்து குணசித்திரன் ஆகிட்டிங்களே! //
வாழ்த்துக்கு நன்றி அரையணா..
நன்றி தங்களது குணச்சித்திர பட்டத்திற்கு..
//Mani said...
நான் முதன் முதலில் படித்தது உங்கள் பதிவுகளைத்தான். தமிழ்மணமும், தேன்கூடும் அறிமுகமானதே உங்களால் தான். உங்களை அறிமுகப்படுத்திய பெருமை என் நண்பர் நாகுவைச் சேரும். இத்தனை நாள் வீணாக்கிவிட்டோமே என வருந்தியதுண்டு.
உங்களுக்கும், நண்பர் நாகுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல.
தொடரட்டும் உங்கள் அசத்தல்.//
தங்களுக்கும் என்னை தங்களுக்கு அறிமுகப்படுத்தி நண்பர் நாகுவுக்கும்
நன்றி மணி
தொடர்ந்து உங்கள் ஆதரவைத்தாருங்கள் ..ச்சே.தேர்தல் நேரம்னால அப்படி வந்திருச்சுப்பா.. :)
முதலாண்டு நிறைவுக்கு என் வாழ்த்துகள்
//jansi said...
Vazhthukkal...............
Thodarum ungal payanathil vazhiyengum vanna pookal poothida.......VAZHTHUKKAL........!!!!!!!!!!!!!!! //
நன்றி ஜான்ஸி.. வண்ணப்பூக்களுக்கு தங்களின் தொடர் நீரூற்றல் கண்டிப்பாய் தேவை..
//ஜீவா said...
வாழ்த்துக்கள் நண்பா.. தொடர்ந்து எழுதுங்கள்.. முடிந்தால் சந்திப்போம்.. //
நன்றி ஜீவா..
முடிந்தால் சந்திப்போம்..
இல்லை இல்லை
கண்டிப்பாய் சந்திக்க முயல்வோம் உலகத்தில் எங்காவது ஒரு மூலையிலாவது..
//நான் முதன் முதலில் படித்தது உங்கள் பதிவுகளைத்தான். தமிழ்மணமும், தேன்கூடும் அறிமுகமானதே உங்களால் தான். //
மொதல்லயே மணி சொல்லிட்டாரு.. ஆனா நானும் இதைத் தான் சொல்ல விரும்புகிறேன்.. உங்க, துளசி அக்கா பதிவுகள் பாத்து தான் எனக்கும் பதிவு எழுதணும்னு ஆசை வந்தது.. நீங்க வலைப்பதிவில் எழுத ஆரம்பிச்சு ஒரு வருஷம் தான் ஆகுதுன்னு நம்பவே முடியலை :)
வாழ்த்துக்கள்
// நாகு said...
முதலாண்டு நிறைவுக்கு என் வாழ்த்துகள் //
வாழ்த்துக்கும் என்னுடைய வலைப்பதிலை நண்பர் மணிக்கு அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி நாகு...
//பொன்ஸ் said...
//நான் முதன் முதலில் படித்தது உங்கள் பதிவுகளைத்தான். தமிழ்மணமும், தேன்கூடும் அறிமுகமானதே உங்களால் தான். //
மொதல்லயே மணி சொல்லிட்டாரு.. ஆனா நானும் இதைத் தான் சொல்ல விரும்புகிறேன்.. உங்க, துளசி அக்கா பதிவுகள் பாத்து தான் எனக்கும் பதிவு எழுதணும்னு ஆசை வந்தது.. நீங்க வலைப்பதிவில் எழுத ஆரம்பிச்சு ஒரு வருஷம் தான் ஆகுதுன்னு நம்பவே முடியலை :)
வாழ்த்துக்கள் //
நன்றி பொன்ஸ்..
எப்பொழுதுமே சார்புதான் வாழ்க்கையின் சுழற்சி.. என்னுடைய பதிவு உங்களுக்கு ஊக்கம்..எனக்கு மற்றவர்களின் பதிவுகள் ஊக்கமாக இருந்தது.. உங்களுடைய பதிவுகளும் யாருக்கேனும் ஒருவருக்கு ஊக்கமாகக் கூடும்.. வாழ்த்துக்கள்..
// சிங். செயகுமார். said...
பிறந்த உயிர்களுக்கெல்லாம் இறப்பு ஒன்று உண்டு. வேண்டாத எண்ணங்கள் வேண்டாமே. விளையாட்டாய்கூட//
தங்களின் தொடர் நட்புக்கும் பாசத்திற்கும் நன்றி சிங். ஜெயக்குமாhர்
என்றும் இதே நட்போடு இருப்பதற்காக பிரார்த்திக்கின்றேன்..
வாழ்த்துக்கள்.
// மணியன் said...
வாழ்த்துக்கள்.//
நன்றி மணியன்.
வாழ்த்துக்கள் நண்பன்!
வாழ்த்துக்கள் ஞானியாரே!
//
ஜொள்ளுப்பாண்டி said...
வாழ்த்துக்கள் ஞானியாரே!
//
நன்றி ஜொள்ளுப்பாண்டி..(அட பேரு நல்லாயிருக்கே பா.. )
//அருட்பெருங்கோ said...
வாழ்த்துக்கள் நண்பன்! //
நன்றி அருட்பெருங்கோ.. அழகிய தமிழ்ப்பெயர்;... ஆனா உச்சரிப்பதற்குத்தான் கொஞ்சம் கஷ்டப்பட்டுட்டேன்பா..
அய்ய்ய்ய்ய்ய்ய்ய்...
ஒரு வருசம் ஆகிடுச்சா?
அப்போ நீங்க தான் சீரியர்.. :)
வாழ்த்துக்கள்... நண்ப!
// எஸ்.பாலபாரதி said...
அய்ய்ய்ய்ய்ய்ய்ய்...
ஒரு வருசம் ஆகிடுச்சா?
அப்போ நீங்க தான் சீரியர்.. :)
வாழ்த்துக்கள்... நண்ப! //
சீனியர் ஆகிவிட்ட ஞானியாரை வாழ்த்திதற்கு நன்றி நண்பா..
நிலவு "நண்பனுக்கு" என் மனம் கனிந்த வாழ்த்துக்கள் !
வித்தியாசமான பதிவுகளாகக் கொடுத்து அசத்திக் கொண்டிருக்கும் ஞானியாரே.. இன்னும் பல ஆண்டுகள் பதிவுகள் கொடுத்து பொன் விழா கொண்டாடி, நிஜ கேக்கை எங்கள் எல்லாருக்கும் அனுப்பி வைக்க எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்.
//Pot"tea" kadai said...
நிலவு "நண்பனுக்கு" என் மனம் கனிந்த வாழ்த்துக்கள் ! //
நன்றி பொட்டிக்கடை..
இப்பல்லாம் பொட்டிக்கடையில் கூட்டம் அலைமோதுது போல இருக்குது..
// மாயவரத்தான்... said...
வித்தியாசமான பதிவுகளாகக் கொடுத்து அசத்திக் கொண்டிருக்கும் ஞானியாரே.. இன்னும் பல ஆண்டுகள் பதிவுகள் கொடுத்து பொன் விழா கொண்டாடி, நிஜ கேக்கை எங்கள் எல்லாருக்கும் அனுப்பி வைக்க எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன். //
நன்றி மாயவரத்தானே..
தங்களின் வாழ்த்துக்களும் ஆசரிவாதங்களும் என்னை நீண்ட நாள் எழுத வைக்கும்
( என்ன செய்ய நீங்களெல்லாம் என்னோட பதிவை படித்து கஷ்டப்படவேண்டும்னு தலையெழுத்து )
வாழ்த்துக்கள் ரசிகவ்!
//சேதுக்கரசி said...
வாழ்த்துக்கள் ரசிகவ்!
//
நன்றி சேது..
Post a Comment