Wednesday, August 13, 2008

ஆனந்தவிகடனும் அவர் ஞாபகங்களும்




டீவியின் மீது, டீப்பாயின் மீது, சோபாவுக்கு கீழே, என்று ஒவ்வொரு முறை அவள் வீட்டிற்குள் நுழையும்பொழுது அவளை விடவும் ஆனந்தவிகடனைத்தான் தேடுவேன்

"அப்பா படிச்சிட்டிருக்கிறார்"

நான் ஆனந்தவிகடன் கேட்கும்பொழுதெல்லாம் எனக்கு என் மனைவி தருகின்ற பதில் இதுதான். எப்பொழுது அவள் வீட்டுக்குச் சென்றாலும் இது வழக்கமான பதிலாகவே இருந்தது.

எனக்கு முன் அந்தத் தகவலையெல்லாம் யாரோ தெரிந்து கொள்ளப்போகின்றார்கள் என்ற எண்ணமே எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது ஆனந்தவிகடன் மீதும் அவள் அப்பா மீதும்.

எங்கள் வீட்டில் புத்தகம் வாங்கினாலும் அப்படித்தான். யாரும் எனக்கு முன்பு அப்புத்தகத்தின் தகவல்களை தெரிந்துவிடக்கூடாது என்ற எண்ணம் எனக்கு.

எனக்கு எப்பொழுதுமே இந்த பழக்கம் இருக்கின்றது. சில சமயம் 2 அல்லது 3 புத்தகம் வாங்கிக்கொண்டு வந்தாலும் அவற்றையெல்லாம் நான் படித்து முடித்தபிறகே வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுப்பேன்.

ஒரு பத்தகம் படிக்கும்பொழுது மற்ற புத்தகத்தையேனும் கொடுக்கலாம். ஆனால் தலையணைக்கு கீழே ஒளித்து வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாய் முடித்தபிறகு தான் கொடுப்பேன். சில சமயம் தங்கை வந்து தேடிப்பார்த்து எடுத்துக்கொள்ளுவாள்.

அதுபோலவே எனது மனைவி வீட்டிலும் எதிர்பார்ப்பது அதிகம்தான் எனினும் ஏனோ என்னால் தவிர்க்க முடியாமல் இருக்கின்றது இந்தப் பழக்கம்

என் மாமனார் படித்துக்கொண்டிருக்கின்றார் என்று தெரிந்தால் நான் பெரும்பாலும் கேட்பதில்லை. சிலசமயம் அவர் படித்துக்கொண்டிருக்கின்றார் என்பதை, நான் அறியாதவனாய் நடித்துக்கொண்டு, மனைவியிடம் கேட்பேன் அவர் காதுகளில் விழும்வண்ணம். ஒருவேளை எனக்காக தரக்கூடும் என நினைத்து. ஆனால் பெரும்பாலும் ஏமாற்றம்தான்.

நான் படித்துக்கொண்டிருக்கும்பொழுது அவர் கேட்டாலும் நான் முடிக்கும்வரை கொடுப்பதில்லை அல்லது அவசர அவசரமாய் எல்லாப் பக்கங்களையும் கண்களால் உறிஞ்சுக்கொண்டு கொடுத்துவிடுவேன்.

சென்றவாரத்தின் ஒரு மாலைநேரத்தில் உறங்கிக்கொண்டு இருக்கும்பொழுதே சலனமில்லாமல் அவர் கண்மூடிப்போனார்.


வெளிநாட்டில் அகதிகளாய் மாட்டிக்கொண்டு, பெற்றோர்களின் மரணத்திற்கு கூட வரமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் ஆண்பிள்ளைகளுக்கு மத்தியில், தந்தையின் மரணச்செய்தி கேட்டு, இன்னொரு கண்டத்திலிருந்து கூட மறுநாளே வரும் அளவிற்கு தனது பெண்களை வளர்த்திருக்கின்றார்.

தனது நான்கு மகள்களையும் சமுதாயத்தில் பிறர் மதிக்கும்படியாக உயர்ந்த கல்வி கொடுத்திருக்கின்றார்.


ஆஸ்திரேலியாவில் ஒரு மகள்
கனடாவில் ஒரு மகள்
இந்தியாவில் ஒரு மகள் மிக உயர்ந்த கல்லூரியின் லெக்சரர்
இன்னொரு பெண் மத்திய அரசு ஊழியர்
என்று அவர்களுக்கு பெரிய அந்தஸ்து கொடுத்திருக்கின்றார்.


நான்கு பெண்பிள்ளைகள் பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்கிற குருட்டுத்தனமான பழமொழியை உடைத்த பெருமை அவரைச் சாரும்.

வயதுக்கு வந்துவிட்டால் பெண்களின் படிப்பை பாதியிலையே நிறுத்திவிடும் அன்றைய இஸ்லாமிய சமூக சூழலிருந்து விடுபட்டு, தனது பெண்களை இந்த அளவிற்கு படிக்கவைத்து , சமூகத்தில் பிறர் மதிக்கும்படியாக வாழவிட்டுச் சென்ற அவருடைய மரணத்தை

கடும் பனியிலும் மழையிலும் எல்லையில் நமக்காக காத்திருந்து தாய்நாட்டை காக்கின்ற ஒரு இராணுவவீரனின் மரணத்தோடு சமப்படுத்துகின்றேன்
.


இப்பொழுது டீப்பாயின் மீது ஆனந்தவிகடன் அப்படியே கிடக்கின்றது. அவர் விரும்பிப் படிக்கின்ற சத்குரு ஜக்கி வாசுதேவின் கட்டுரை இன்னமும் ஆனந்தவிகடனில் வந்துகொண்டிதானிருக்கின்றது.

நான் கேட்காமலையே அல்லது போட்டியில்லாமல் எனக்கு கிடைக்கின்ற இந்த ஆனந்தவிகடனைப் பார்க்கும்பொழுதெல்லாம் ஒரு இனம்புரியாத வலி தோன்றுகின்றது. அதனைப் படித்துவிடவேண்டுமென்கிற ஆர்வமும் முன்பைபோல் இல்லை.

எப்பொழுதுமே போட்டியில்லாமல் கிடைக்கின்ற எதுவுமே வாழ்க்கையில் சுவாரசியத்தை தருவதில்லை.

-ரசிகவ் ஞானியார்

8 comments:

Senthil Nathan said...

Nice post ....

ஜோசப் பால்ராஜ் said...

மாமனாரின் மறைவுக்கு நீங்கள் இவ்வளவு வருந்துவது, உங்கள் மனைவியின் மேல் உள்ள பாசத்தையும் காட்டுகின்றது.

எங்கள் ஆழ்ந்த அனுபதாங்கள். அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்திக்கிறேன்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Blogger Senthil Nathan said...

Nice post ....//

நன்றி செந்தில்நாதன்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Blogger ஜோசப் பால்ராஜ் said...

மாமனாரின் மறைவுக்கு நீங்கள் இவ்வளவு வருந்துவது, உங்கள் மனைவியின் மேல் உள்ள பாசத்தையும் காட்டுகின்றது.

எங்கள் ஆழ்ந்த அனுபதாங்கள். அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்திக்கிறேன்.//

தங்களின் பிரார்த்தனைக்கு நன்றி ஜோசப்

ஜியா said...

:(((

அமிர்தவர்ஷினி அம்மா said...

பிரசவித்த குழந்தைகள் அனைத்தும் அழகாய் இருக்கின்றன. வெளிர் நிற வண்ணங்கள் மிக மென்மையாய் உங்கள் கவிதைகளுக்கு மேலும் வண்ணம் சேர்க்கின்றது.

மாமனாரின் மறைவுக்கு வருந்திய முதல் தமிழ் ம(ரு)மகன். (எனக்கு தெரிந்த வரையில்) உம்மை நினைத்து எனக்கு பெருமையாய் இருக்கிறது.

நிகழ் பிடித்தான் பாவைபிரியன் said...

தங்களின் கவிதைகள் மட்டும்தான் என் இதயத்தை கூர் தீட்டும் என நினைத்தேன். தாங்களின் இந்த சாதாராண வரிகளும் உங்களின் எழுத்துப் புலமையையும் இதயத்தில் உள்ளதை இனிமையாக சொல்வதையும் நினைத்து பிரமிக்க வைக்கின்றன. தாங்களின் கவிதை வரிகளைப் படித்து கண்ணீர் வடிக்கும் உங்கள் நண்பனாகத் துடிக்கும் பாவைப் பிரியன்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

nanri paavai priyan

தேன் கூடு