Wednesday, December 20, 2006

புதுமைப்பித்தன் நூற்றாண்டு விழா


இடம் : தேவநேயப்பாவாணர் நூலக அரங்கம் - மௌண்ட் ரோடு -
சென்னை
நாள் : 10.09.2006 ஞாயிற்றுக்கிழமை

நேரம் : 3.30 மணி


தமிழ்நாடு கலை இலக்கியப்பேரவை நடத்தும் "புதுமைப்பித்தன் நூற்றாண்டு விழா "

என்ற அறிவிப்பை திணமணியில் கண்டதும் நண்பர் ஷாபியும் நானும் அந்த விழாவுக்கு செல்ல வேண்டும் என திட்டமிட்டோம்.

சென்னையில் சுற்றிப்பார்க்க அல்லது பொழுதுபோக்க எத்தனையோ இடங்கள் இருக்க நாங்கள் இந்த விழாவுக்கு செல்ல முடிவெடுத்தது சென்னை இரைச்சல்களிலிருந்து தப்பித்து இதயத்திற்கு அமைதி கொடுப்பதற்கும் முக்காடு போட்டு தன்னை மறைத்துக்கொண்டு பைக்கில் பறக்கின்ற பார்த்துப் பார்த்துச் சலித்துப் போன சில புனிதமான காதல் காட்சிகளை விட்டு தப்பிப்பதற்கும் மன அமைதிக்காகவும் மற்றும் அந்த விழாவுக்கு வரப்போகின்ற முதுபெரும் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்களைச் சந்திப்பதற்காகவும்தான்.

ரியாக 3.30 மணிக்கு தேவநேயப்பாவாணர் நூலக அரங்கத்தை அடைந்ததும் விழா ஏற்பாடுகளை கவனித்துக்கொண்டு இருந்த சில முதியவர்கள் எங்களை வித்தியாசமாய் பார்த்தார்கள். "என்னடா இலக்கிய விழாவுக்கு இளைஞர்களா? " என்ற ஆச்சர்யத்தில் பார்த்தார்களோ என்னவோ? அல்லது எங்களைப்போன்ற இளைஞர்களை அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கின்றேன்


மெல்ல சென்று முன்னால் சென்று அமர்ந்தோம். கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் வர ஆரம்பித்தார்கள். ஆச்சர்யமாக இருந்தது இளைஞர்களும் வயதானவர்களுக்கு சம எண்ணிக்கையில் வர ஆரம்பித்தார்கள்.

வைரமுத்து ஒரு கவிதையில் சொல்லியது போல பாரதியாரின் இறுதி ஊர்வலத்தில் ஈக்களின் எண்ணிக்கையை விட ஆட்களின் எண்ணிக்கை குறைவு என்று. அதுபோல இருக்கைகளின் எண்ணிக்கையானது ஆட்களின் எண்ணிக்கைவிட அதிகமாக இருந்தது. வாழும்காலத்தில் எந்த இலக்கியவாதிகளும் சரியாக மதிக்கப்படவில்லை என்பார்கள் ஆனால் வாழ்ந்து முடிந்தாலும் மதிப்புகள் சரியாக கிடைக்கவில்லையோ?

சிறுகதைக்கு ஒரு வடிவம் கொடுத்து தமிழ் சிறுகதை வளர்ச்சிக்கு ஒரு முக்கிய அங்கமாக விளங்கிய புதுமைப்பித்தனின் நூற்றாண்டு விழா எவ்வளவு பெரிய விழாவாக கொண்டாடப்பட்டிருக்கவேண்டும். ஆனால் சென்னையில் ஒரு மூலையில் யாருக்கும் தெரியாமல் நடந்து கொண்டிருக்கின்றது.

தனை எழுதிக்கொண்டிருக்கும் இடைவெளியில் "வாழ்க ஒழிக" என்ற கோஷமின்றி எந்தவித ஆரவாரமின்று முதுபெரும் எழுத்தாளர் திரு வல்லிக்கண்ணன் அவர்கள் என் இருக்கையை கடந்து சென்றார்கள்.

ப்பொழுது விழாவுக்கு வந்த கண்தெரியாத மாணவர் ஒருவரிடம் இருந்து விழா பற்றிய குறிப்புகளை எழுதுவதற்கு சில காகிதங்களை கடன் வாங்கினேன்.


முன் வரிசையில் அமர்ந்திருந்த வல்லிக்கண்ணன் அவர்களிடம் சென்று மரியாதை நிமித்தமாக பார்த்து விட்டு வரலாம் என்று அவர் அருகே சென்று ,

"ஐயா..ஞாபகம் இருக்கிறதா"

"தெரியலையே யாரு..நீங்க.."

"பானிபட் இதயங்கள் புத்தகம்" என்று ஆரம்பித்தவுடனையே கண்டுபிடித்துவிட்டார்..

"என்ன தம்பி நல்லாயிருக்கீங்களா..? உங்க நண்பர் நல்லாயிருக்காரா? "என்று விசாரித்தார்.

நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு விழாவுக்கு வருகிறவர்களை நோட்டமிட ஆரம்பித்தேன்.

யார் யாரையோ எங்கை எங்கையோ பார்த்த மாதிரி ஞாபகம்..

மக்குத் தெரிந்த அல்லது நம்மைத் தெரிந்த வலைப்பூ நண்பர்கள் எவரேனும் வந்திருக்க கூடுமோ? என்று திரும்பி திரும்பி பார்த்தேன்.

அதோ தூரத்தில் ஜோல்னாப்பையோடு ஒருவர் வந்துகொண்டிருந்தார். அவரையோ ஏதோ பத்திரிக்கையில் பார்த்ததாக ஞாபகம்.

நீண்ட தாடியோடும் கையில் குறிப்பெடுக்க காகிதங்களும் பேனாவோடும் ஒரு வயதானவர் முன் இருக்கையில் வந்து அமர்கின்றார். பத்திரிக்கையாளரா அல்லது வலைப்பதிவாளரா என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

பின்னால் திரும்பி பார்த்து ஆச்சர்யப்பட்டேன். 40 சதவிகித இளைஞர்கள் ஆக்ரமித்து இருந்தார்கள். தான் வாழும்காலத்தில் இல்லாத அல்லது தான் பிறக்கும் பொழுது இல்வுலகில் இல்லாத ஒரு இலக்கியவாதியின் நூற்றாண்டு விழாவுக்கு வந்திருக்கிறார்கள் என்றால் அது அவரது எழுத்துக்கு கிடைத்த மரியாதை.

காதுக்கு இரைச்சலாக ஏதோ ஒரு பாட்டு ஒலிபரப்பிக்கொண்டிருந்தார்கள். நான் ஷாபியின் காதில் கிசுகிசுத்தேன்.. "பேசாமல் இதற்கு வாளமீனு பாட்டையாவது போட்டுவிடலாம் "என்று கூற பின்னால் இருந்த அந்தப்பெரியவர் நான் கிசுகிசுத்ததை காதில் வாங்கினாரோ என்னவோ சிரிக்க ஆரம்பித்தார்.

ப்பொழுது விழாவுக்கு வந்திருந்தவர்களை வாழ்த்திவிட்டு வந்திருந்த முக்கியமானவர்களை அழைத்து மேடையில் உள்ள இருக்கையில் அமர வைத்தார்கள்.

அப்பொழுது

14.08.06 அன்று இலங்கையில் நடந்த தாக்குதலில் 61 மாணவிகள் இறந்ததற்காகவும்

கடந்த வாரம் இயற்கை எய்திய தமிழ்த்திரு டி எஸ் மணி அவர்களுக்காகவும் மற்றும்

20.06.06 அன்று இறந்து போன சுரதா அவர்களுக்காகவும் 5 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.ருத்தரங்க தலைமை உரையை முனைவர் ராஜபாண்டியன் அவர்கள் ஆரம்பித்தார். இவரைப்பற்றி குறிப்பிடும்பொழுது ,

தமிழ் ஆசிரியர்கள்
இலக்கியம் படிப்பார்கள்
இலக்கியம் படிப்பார்கள்
இலக்கியம் படிப்பார்கள்
ஆனால் இவர் இலக்கியம் படைப்பார்
என்று புகழ்ந்து கூறினார்கள்

"3000 ஆண்டு பழமை வாய்ந்த காலாக கவிதை விளங்குகின்றது. மேல்நாட்டின் நூல்களின் வாயிலாக வந்த சிறுகதையை புதுமைப்பித்தன் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார் "

"வவெசு அய்யரின் "குளத்தங்கரை அரசமரம் " சிறுகதைக்கு ஒரு தடத்தைக் கொடுத்தது. "

"புதுமைப்பித்தனின் சமகால எழுத்தாளர்கள் அனைவருமே சிறுகதையில் தடம் பதித்தார்கள். "

"இனி அய்யா
நான் செத்தபிறகு
நிதி திரட்டாதீர்கள்
நினைவை செதுக்கி
கல்லில் வடித்து காக்காதீர்கள்

என்று புதுமைப்பித்தனே தனது கவிதை ஒன்றில் குறிப்பிட்டிருக்கின்றார். பின் எதற்கு இந்த விழா.? இதனைப்பார்த்து மற்றவர்கள் சாதிக்க வேண்டும் என்பதும் வாழும் தலைமுறையினர்கள் புதுமைப்பித்தனை மறந்துவிடக்கூடாது என்பதற்காகவும்தான். "

"வாழும்பொழுது பாராட்டமாட்டார்கள். இல்லாதபோதுதான் பாராட்டுவோம். புதுமைப்பித்தனின் நிழலில் ஒதுங்கி நாம் சாதிக்க வேண்டும். "

"42 ஆண்டு காலம் வாழ்ந்த படைப்பாளி 92 சிறுகதைகள் படைத்திருக்கின்றார். ( கட்டுரை - மொழிப்பெயர்ப்பு தவிர்த்து)

உப்பு புளி கணக்கைப்பார்த்தால்
எப்போ எழுதுவது சமுதாயத்திற்கு?
- பாரதி

இப்படி சமுதாயத்திற்காக கவலைப்பட்டவர்களுள் பாரதிக்கு அடுத்து புதுமைப்பித்தன்தான். "

""எங்க அப்பா எப்போதும் புகையிலை போடுவார்" என்று அவரது அவர் மகள் கூறினார். அவர் புகைப்பழக்கத்திற்கு அடிமை இல்லை. பசியை மறப்பதற்காக புகையிலை போடும் பழக்கத்தை ஆரம்பித்தார். "

புதுமைப்பித்தனைப்பற்றி நிறைய தகவல்கள் அக்கூட்டத்தில் பரிமாறப்பட்டன . மேலும் கனாசு என்பவர் மிகவம் மேன்மைபடுத்தி கூறியதாவது

சிவனுக்கு நாயன்மார்கள் தமிழ் செய்தது போல
சிறுகதைக்கு புதுமைப்பித்தன் தமிழ் செய்தார்


தி.க.சி யை ஒருவர் கடுமையாக விமர்சித்தார். இவர் மட்டும் சிறுகதைக்கு ஒருவர் என்று எப்படி சொல்லலாம். பன்றி பல குட்டிகள் போடும் ஆனால் யானை ஒரு குட்டிதான் போடும் ஆகவே சிறுகதைக்கு புதுமைப்பித்தன் ஒருவர்தான் என்று மோசமான உதாரணம் ஒன்றை எடுத்து விட்டார்


திருநெல்வேலியில் உள்ள ம.தி.தா இந்துக்கல்லூரியில் புதுமைப்பித்தன் தனது பி.ஏ பட்டத்தை படித்தவர். இதே கல்லூரியில்தான் வ.உ.சி மற்றும் பாரதி அவர்களும் படித்தார்கள். இது அக்கல்லூரிக்கே உள்ள பெருமை. அந்த திருநெல்வேலியில் நானும் வசிக்கின்றேன் என்பது எனக்குப்பெருமை.


புதுமைப்பித்தன் கதையில் மட்டுமல்ல கவிதையிலும் பேச்சுத்தமிழையே கையாண்டார். அவர் பிறந்த ஊர் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஆகும். மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய இலக்கிய ஆர்வத்திற்கு அவரது பெற்றோர்களும் ஆதரவு தரவில்லை.

"தமிழ்ச்சிறுகதையை உலகப்பார்வைக்கு கொண்டவந்த பெருமை புதுமைப்பித்தனைச் சாரும் "என்று புதுமைப்பித்தனை பாராட்டினார்.

பின் நெய்வேலி பாலு என்பவர் தனது தொடக்க உரையில் கூறியதாவது

சிறுகதை வடிவம் ஐரோப்பியாவில் இருந்து வந்தது. பெரும்பாலும் நடுத்தரவர்க்கத்து பகுதிகள்தான் சிறுகதைக்கு தோற்றுவாயாகவும் வடிகாலாகவும் இருந்திருக்கின்றது.

முதலாம் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் அச்சு இயந்திரம் இந்தியாவுக்கு வந்தபிறகு சிறுகதையின் வடிவம் மேலும் பலம் பெற ஆரம்பித்தது

இந்து முஸ்லிம் ஒற்றுமை, வெள்ளைனை விரட்டுதல், காந்தீயச் சிந்தனையை வலியுறுத்துதல்,
சம்பந்தமான சிறுகதைகள் வெளிவரஆரம்பித்தன.

மொழிப்பெயர்ப்பு கதைகளும் யதார்த்தமான மக்கள் வாழ்வியல் கதைகளும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது

ஜெயகாந்தன், அசோகமித்ரன், ஆதவன் போன்றோர்களின் தனிமனித முக்கியத்துவம் பெற்ற கதைகள் வெளிவந்தன.

ஞ்சை மாவட்ட பண்ணை அடிமைகளின் துன்பத்தை மையமாக எழுதிய இந்திரா பார்;த்தசாரதியின் "குருதிப்புனல்" கதை மிகவும் சர்ச்சையை உண்டாக்கியது.

பின்னர் ஒரு காலகட்டத்தில் யதார்த்தம் - நம்பிக்கை - நம்பிக்கை மறுப்பு - அவநம்பிக்கை கதைகள் வந்துகொண்டிருந்தன.

ந்தக்களத்திலிருந்து அப்படியே மாறி தலித்தியம் - பெண்ணியம் - சுற்றுச்சூழல் - தமிழ் தேசியம் சம்பந்தமான கதைகள் வெளிவந்தன.

தற்பொழுதுள்ள நிலையில் நல்ல தமிழ் எங்கும் இல்லை. மின் ஊடகம் பத்திரிக்கைகளின்; ஆங்கில மோகத்தால் தமிழ் களை இழந்து வருகின்றது. நல்ல படைப்புகள் முற்போக்கு சிந்தனைகள் உள்ள கதைகள் வரவேண்டும்.

பின் புதுச்சேரி பஞ்சாங்கம் என்பவர் பேசும்பொழுது புதுமைப்பித்தனின் 'கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்' என்ற கதையைப்பற்றி குறிப்பிடும்பொழுது,

டவுளை தெருவுக்கு அழைத்துவந்து கேள்விகேட்கின்றார் புதுமைப்பித்தன்.
"பெண்ணைத் தீக்குளிக்க வைத்த
அவர் கால்பட்டா
நான் பெண்ணாகவேண்டும்
நான் மீண்டும் கல்லாவேன்"
என்று இராமனைப்பார்த்து அகலிகை கேட்பதாக கதை இருக்கின்றது.

இது மிகுந்த சர்ச்சைக்குள்ளாக்கப்;பட்டது. ஆனால் சர்ச்சைகளுக்குப் பயந்தால் பாரதியார் புதுமைப்பித்தன் தோன்றியிருக்கமுடியாது.

தாய்மொழியின் அவசியத்தைப்பற்றி பேசினார். நமது கண்களுக்கும் மூளைக்கும் இடையே மொழி வந்து நிற்கின்றது.

நாம் மொழியைக் கையாள்கின்றோம் என நினைத்துக்கொண்டிருக்கின்றோம் ஆனால் உண்மையில் மொழிதான் நம்மைக் கையாள்கின்றது.தாய்மொழிக்கல்வி இல்லாமல் தமிழன் முன்னேறவே முடியாது.

வெளிநாட்டிற்கு தனது அறிவை விற்றுவிட்டு வெறும் நுகர்வோராக நாம் மாறி வருகின்றோம் என்று பின் நவீனத்துவம் பேசுகின்றது.

சினிமாக்களில் கதாநாயகர்களை உச்சத்திற்கு சென்று காட்டுகின்றார்கள். ஏன் இந்த பெருங்கதையாக்கம்? மனிதர்களை மனிதர்களாக காட்டுங்களேன்.

சின்னவயதில் நிலாவெளிச்சத்தில் ஆற்றுப்படுகையில் விளையாடியது எல்லாம் கனவாகத்தான் இருக்கின்றது. இப்பொழுதுள்ள தலைமுறைகள் கேமிராவில் மட்டும்தான் நிலாவை பார்க்கின்றார்கள்.

என்று நிறைய பேசிவிட்டு "இன்னும் முடிக்கலையா?" என்று யாரோ கேட்பது புரிகின்றது." இதோ முடித்துக்கொள்கின்றேன் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள் " என்று தனது உரையை ஆர்வத்தில் தொடர்ந்தார்.


பின் நவீனத்துவம் பாதிக்கப்பட்டவர்கள் பக்கமே பயன்படுகின்றது. பெண்ணிம் தலித்திய சிந்தனை மேலாதிக்கம் பெற்றிருக்கிறது என்றால் பின் நவீனத்துவ சிந்தனையால்தான்.

என்று பல கருத்துக்களை பேசிவிட்டு உரையை முடித்துக்கொண்டார்.


பின்பு காட்டேறி என்பவர் வந்து சிறுகதைகள் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கவேண்டும் என்று கூறி "நந்தனார் தெரு" என்ற சிறுகதையைப்பற்றி குறிப்பிடும்பொழுது

நகராட்சியில் கழிப்பறை வேண்டி மனுகொடுத்து மனுகொடுத்து ஓய்ந்து போய்விட்டனர். பின் நகராட்சி அலுவலகம் முன்பு மலம் கழித்து விட்டனர். ஒரு பலகையில்

"இந்த நிலை தொடரவேண்டுமா? இப்படிக்கு நந்தனார் தெரு மக்கள்" என்று எழுதியிருக்கின்றார்.

இப்படி சிறுகதையின் மூலம் தங்கள் உணர்வுகளை வெளிக்கொணர விரும்புகின்றார்கள்.

பின்பு புதுமைப்பித்தன் நினைவுநாளில் அவர்கள் நடத்திய சிறுகதைப்போட்டிக்கு வந்த சிறுகதைகள் குறித்து பீர் முகம்மது என்பவர் பேசினார்.

ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு விவசாயி இறந்து கொண்டிருக்கின்றான் இதனைத் தடுக்க வேண்டும்.

திராவிட இலக்கியங்களை சாகடிப்பதே திராவிட இயக்கங்களின் சாதனை என்ற அதிரடியாக கூறினார்.

பின் வல்லிக்கண்ணன் அவர்கள் பேச வந்தார்.

புதுமைப்பித்தனின் 100 ஆண்டுவிழாவினை திருநெல்வேலியில் 5 அமைப்புகள் தனித்தனியே விழா எடுத்திருக்கின்றார்கள்.

மனிதன் மற்றும் அவனது வாழ்க்கை இதுவே சிறுகதையின் மூலம். இதனை மையமாக கொண்டுதான் எல்லா சிறுகதைகளும் அமைகின்றன. இந்தப்போட்டிக்கு வந்த சிறுகதைகளும் அப்படியே.

போட்டிக்கு வந்த சிறுகதையில் தமிழ் அடிப்படை தவறுகள் நிறைய உள்ளன.

புதுமைப்பித்தனின் நினைவு சிறுகதைப்போட்டிக்கு ஒருவர் புதுமைப்பித்தனின் கதையையே காப்பியடித்து எழுதி அனுப்பியிருக்கின்றார் என்று அவர் கூறியபோது கூட்டத்தில் சிரிப்பலை.

தனித்துவம் - சொல்லாற்றல் - வாழ்க்கையை பார்க்கும் சுயபார்வை - தனி நடை - தத்துவ நோக்கு மற்றும் ஆழ்ந்த அழகான கருத்துக்கள் படைப்பில் தெரியவேண்டும்

கதையின் மூலம் பிரச்சாரத்தை வெளிப்படுத்தலாம் ஆனால் பிரச்சாரம் செய்வதாய் தெரியக்கூடாது. கதையில் பிரச்சாரம் வெளியிட்ட கந்தர்வனின் கதைகளை முன்னோடிகளாச் சொல்லலாம்.

புதிதாக கதை எழுதுபவர்கள் முன்னோடிகளின் கதைகளை நன்கு படித்து எழுத ஆரம்பித்தது பின் அவர்களையும் மிஞ்சும் வண்ணம் எழுதவேண்டும்.

ண்மைகளை சரியாகவும் தைரியமாகவும் தாக்கம் ஏற்படுத்தும் விதமாக படைப்புகள் இருக்க வேண்டும்

ஆழமாக படித்தால் என்றுமே கதைக்கு பஞ்சமே கிடையாது. என்று தனது உரையை முடித்தார்.

பின் நாடகம் நடத்தும் முன் அதன் கதையை காவல்துறையிடனிரிடம் காட்டி அனுமதி பெறவேண்டும் என்கிற ஆங்கிலேய அடக்குமறை சட்டம் தொடரும் நிலையை ரத்துசெய்யவேண்டும் என்றும்

தேவநேயப்பாவாணர் அரங்கை குளிர் சாதன அரங்காக மாற்றி இன்னும் பல அரங்குகள் ஏற்படுத்தவேண்டும் என்றும் தீர்மானங்கள் கொண்டுவந்தனர்.

விழா முடிந்ததும் வல்லிக்கண்ணன் அவர்கள் அரங்கை விட்டு வெளியே வந்து ஆட்டோவுக்காக தனியாக காத்திருந்தது மனசை என்னவோ செய்தது.
இப்பொழுது புதுமைப்பித்தன் மற்றும் வல்லிக்கண்ணன் ஆகியோர்கள் இறந்து
விட்டாலும் அவர்களுடைய எழுத்துக்கள்மூலம் இன்றைய தலைமுறையினர்கள் அவரைப்பற்றி கண்டிப்பாக தெரிந்துகொள்ளவேண்டும்.


- ரசிகவ் ஞானியார்

4 comments:

Anonymous said...

பதிவிட வேண்டிய விஷயம். பதிவிற்க்கு நன்றி..

Anonymous said...

Romba arumai nanbare... Nanum antha vizhvil kalanthu kondathu pol oru unarvu :) "Pennai thee kulikka vaitha avar kaal patta nan penn aga vendum? Naan meendum kal aaven" miga arumaiyana Puthumaipithan varigal :) ammu

நிலவு நண்பன் said...

//Naan meendum kal aaven" miga arumaiyana Puthumaipithan varigal :) ammu //

நன்றி அம்மு...கண்டிப்பாக புதுமைப்பித்தன் பற்றி வருங்காலத் தலைமுறையினர்கள் அறிந்து கொள்ளவேண்டும்

நிலவு நண்பன் said...

//Anonymous said...
பதிவிட வேண்டிய விஷயம். பதிவிற்க்கு நன்றி.. //

நன்றி நண்பா

தேன் கூடு