
இதோ இந்தப் படத்தில் தெரியும் பெண் திருநெல்வேலி ஜங்ஷன் பேருந்து நிலையம் அருகே ஆதரவற்ற நிலையில் அலங்கோலமாக சுற்றிக்கொண்டிருந்தார். மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் கிடைப்பதை சாப்பிட்டுக்கொண்டு அநாதையாய் வலம் வந்துகொண்டிருந்தார்.
இந்நிலையில் பேருந்து நிலையம் அருகே உடனிருந்த ஒரு பிச்சைக்காரர் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட, இந்தப்பெண் உடனே ஒரு பேப்பர் எடுத்து ஏதோ எழுதி அந்தப்பிச்சைக்காரனிடம் கொடுத்து பக்கத்தில் உள்ள மருந்துகடையில் சென்று கொடுக்குமாறு சொல்ல, அந்த மருந்து கடைக்காரர் உட்பட அந்தப்பகுதியில் உள்ள அனைவருக்கும் ஆச்சர்யம்.
அந்த பேப்பரில் ஒரு தரமான மருத்துவர் எழுதிக்கொடுக்கும் மாத்திரைகள் போலவே எழுதப்பட்டிருந்தது. ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட பெண் இப்படி எழுதிக்கொடுத்தது அந்தக் கடைக்காரருக்கு சந்தேகம் வரவே , மெல்ல அந்தப்பெண்ணிடம் பேச்சுக்கொடுத்தார். அந்தப்பெண்ணும் அந்தக்கடைக்காரரிடம் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடுவதைக் கண்டு அவர் மேலும் ஆச்சர்யமடைந்தார்.
அந்தப்பெண் தன் பெயர் புஷ்பலதா என்றும் தான் ஒரு டாக்டர் என்றும் கூறியிருக்கின்றார். அதுமட்டுமல்ல தான் சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்ததாகவும் சொல்லியிருக்கின்றார். அத்துடன் தன்னுடைய குடும்பத்தினரின் தொலைபேசி எண்களையும் கொடுத்திருக்கின்றார். அதில் தொடர்பு கொண்டு பேசியபொழுது யாரும் சரியாக பதிலளிக்கவில்லை.
இந்தச்சம்பவம் உள்ளுர் பத்திரிக்கையில் வெளிவந்தவுடன் இந்தப்பெண்ணிற்கு உதவிசெய்ய பல தன்னார்வு தொண்ட நிறுவனங்களும் மற்றும் பலரும் உதவ முன்வந்திருக்கின்றனர். ஆனால் இந்தப்பெண் எவருடனும் செல்ல மறுத்துவிட்டார். அந்தப்பெண்ணின் அலங்கோலமான நிலையைக்கண்டு பரிதாப்பட்ட போலிஸார்கள் அவரை நெல்லை சமூக சேவை அமைப்பான சரணாலயத்தில் ஒப்படைத்தனர்.
பின் நெல்லை மாவட்ட மருத்துவ சங்கத்தின் செயலாளர் டாக்டர் அன்புராஜன், அந்தப்பெண்ணை தனது மருத்துவமனையில் வைத்து தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தினார். அதனைத்தொடர்ந்து அந்தப்பெண் முழுவதுமாக குணமடைந்தார்.
தற்பொழுது அந்தப்பெண் பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பீஸ் டிரஸ்ட் மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றார். அதுமட்டுமல்ல அங்கு வரும் நோயாளிகளுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து வருகின்றார்.
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் புஷ்பலதா :

அவர் தனது வாழ்க்கையில் என்ன நடந்தது ஏன் அவருக்கு மனநிலை பாதிக்கப்ட்டது? யார் சென்னையில் இருந்து இங்கு அழைத்துவந்தார்? என்ற தகவல்களை கேட்டபொழுது,
"எனக்கு கடந்த கால வாழ்க்கையில் ஏற்பட்ட துயரமான சம்பவங்கள் இப்பொழுது தெரிய வருகின்றது. அது ஒரு சோகமான நிகழ்வு. எனக்குத் தெரியாமலையே அச்சம்பவம் நடைபெற்றுவிட்டது . நான் இப்பொழுது முழுமையாக குணமடைந்துவிட்டேன். இந்த மருத்துவமனையில் டூட்டி டாக்டராக பணிபுரிகின்றேன்."
"எனக்கு சமூகசேவையிலும் ஆர்வம் அதிகம். ஆகவே பக்கத்து கிராமங்களான நாலுமாவடி பாவூர்சத்திரம் - எட்டயபுரம் - கடையநல்லூர் போன்ற பகுதிகளுக்குச் சென்று இலவசமாக மருத்துவமுகாம்கள் ஏற்படுத்தி சிகிச்சை அளிக்க விரும்புகின்றேன். "
"வீட்டிற்கு தொலைபேசி செய்தும் பேசிவிட்டேன். எனது அண்ணன் விசயம் கேள்விப்பட்டு என்னைப் பார்க்க வந்துள்ளார். நான் எனது குடும்பத்தினரை காண விரும்புகின்றேன். ஆகவே அடுத்தவாரம் சென்னை செல்கின்றேன்.இது எனக்கு கிடைத்த மறுவாழ்வு..என்னால் மறக்கவே முடியாது"
என்று மிகத்தெளிவாக அவர் பேட்டியளித்தார்.
மனநிலை சரியில்லாமல் சுற்றிக்கொண்டு திடீரென்று டாக்டரான இந்தப்பெண்ணைப்பற்றித்தான் நெல்லை மக்கள் பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.
நானும் இதுபோன்ற மனநிலை சரியில்லாதவர்களை இந்தப்பகுதியில் கண்டிருக்கின்றேன். அதிலும் வருத்தத்திற்குரிய விசயம் என்னவென்றால் வயதானவர்கள்தான் அதிகம் காணப்படுவார்கள்.
நான் சென்றமாதம் கூட இந்தப்பகுதியில் சுற்றிக்கொண்டிருக்கும் மனநிலை சரியில்லாவர்களிடம் மெல்ல விசாரித்து, அவர்களின் நிலைக்கு காரணத்தை ஆராயலாமா? என்று ஹைகிரவுண்ட்டில் உள்ள ஒரு மனநிலை சரியில்லாதவரை எனது நண்பருடன் பின்தொடர்ந்தேன்.
அவருக்கு வயது சுமார் 25 முதல் 30 க்குள் இருக்கும். கைகளில் ஒரு அழுக்குப்பையோடு தாடியை தடவிக்கொண்டே சென்றார். அருகில் உள்ள கடைக்காரர் ஒருவரிடம் விசாரித்தபொழுது "அந்தநபர் ஒருவார காலமாகத்தான் இந்தப்பகுதியில் சுற்றிக்கொண்டிருக்கின்றார்" என்று கூறினார்.
பக்கத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்த அந்த நபர் எங்களைப்பார்த்து திடீரென்று முனக ஆரம்பித்தார். பின் நாங்கள் பக்கத்தில் வருகிறோம் எனத்தெரிந்ததும் பயந்து போய் அங்கிருந்து விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தார்.
அவரைப் பின்தொடர்வதை யாராவது பார்த்து ஏதாவது தவறாக நினைத்துக்கொள்வார்களோ என நினைத்து பின் தொடர்வதை விட்டுவிட்டோம். பின் எங்கேயாவது நான் பைக்கில் செல்லும்பொழுது கண்ணில் தென்படுவார். இன்னமும் மனது உறுத்திக்கொண்டுதான் இருக்கின்றது. அந்த இளைஞருக்கு என்ன ஆகியிருக்கும் ஏன் மனநிலை சரியில்லாமல் போனது என்று.
இதுபோன்று மனநிலை சரியில்லாவர்களை விசாரித்து அவர்களைப் பற்றி எழுதி தெருவில் சுற்றிக்கொண்டிருக்கும் அவர்களை ஏதாவது காப்பகத்தில் சேர்க்கலாமே என்று நான் எனக்குத் தெரிந்த பிரபல வாரப்பத்திரிக்கை நிருபர் ஒருவரிடமும் இதுபற்றிக் கூறினேன். அவரும் எழுதுவதாக வாக்களித்துள்ளார். இந்தப்புஷ்பலதா போன்று எத்தனை புஷ்பலதாக்கள் மனநிலைசரியில்லாமல் சுற்றிக்கொண்டிருக்கின்றார்களோ..?
வாழுகின்ற காலத்தில் நல்லபடியாக வாழ்த்திருப்பார்கள். ஆனால் ஏதோ ஒரு
சூழ்நிலை அவர்களை இப்படி மனநிலை சரியில்லாவர்களாக ஆக்கியிருக்கின்றது. அவர்களை பாதுகாக்க வேண்டியதும் அரசாங்கத்தின் கடமைதான். ஆகவே அரசாங்கமும் இவர்கள் விசயத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமா..?
- ரசிகவ் ஞானியார்
10 comments:
ரசிகவ்,
நிஜமாகவே கவலைப் பட வேண்டியா ஒரு விஷயம் தான்.
எங்க வீட்டு முனாடியும் ஒரு இளைஞன், கிழிந்த துணிமணிகளோடு எப்போதுமே
நடைபாதையிலெ படுத்து இருப்பான்.
வெளியே பொக வர சங்கடமாக இருக்கும்.
ஒரு சைக்கிள் ரிக்ஷாஓட்டி (கிழவர் ) திடீரென மயக்கமாக,,
வண்டியில் ஏறி.மிதித்து ஓட்டி அவர் வீட்டில் கொண்டு சேர்த்ததாகச் சொன்னார்கள்.
இதை எந்த ரகத்தில் சேர்ப்பது?
// வல்லிசிம்ஹன் said...
ரசிகவ்,
நிஜமாகவே கவலைப் பட வேண்டியா ஒரு விஷயம் தான்.
எங்க வீட்டு முனாடியும் ஒரு இளைஞன், கிழிந்த துணிமணிகளோடு எப்போதுமே
நடைபாதையிலெ படுத்து இருப்பான்.
வெளியே பொக வர சங்கடமாக இருக்கும்.
இதை எந்த ரகத்தில் சேர்ப்பது? //
இதுபோனறு பிளாட்பாரத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் ஒவ்வொவருக்குள்ளும் ஒரு சோகக்கதை இருககலாம். நம்மால் ஆன உதவி அவர்களை பக்கத்தில் உள்ள தொண்டு நிறுவனம் அலலது தன்னார்வ சமூக சேவை நிறுவனங்களிடமோ தகவல் தெரிவிக்கலாம்.
படித்தவுடன் எனக்கு மனநிலை சரியில்லாமல் போய்விட்டது
- குமார்
//Kumar said...
படித்தவுடன் எனக்கு மனநிலை சரியில்லாமல் போய்விட்டது
- குமார் //
மனநிலை சரிலலாததால் தங்களின் மனிதநேயம் சரியாக இருக்கின்றது
rasigav kekumpothe manasukku romba kashtama irukku :( naadu enga poguthune teriayala
//Anonymous said...
rasigav kekumpothe manasukku romba kashtama irukku :( naadu enga poguthune teriayala //
nanri nanpa
nanba illa nilavu nanbi :))
vanakam,
ungal pathivai padiththum manam kanakirathu...
ela urlaum ipadi mananilai badikapatavanga irukanga, eathavathu seyanum nanba..
barathi
உங்கள் பதிவைப் படித்ததும் ஒரு வகையில் சந்தோஷம் ஒரு பக்கம் வருத்தம்.எப்படியோ ஒரு புஷ்பலதாவைக் குணப் படுத்தி விட்டார்கள்.இவரைப் போல இன்னும் பலர் உள்ளார்கள்.இவர்களை அய்யோ பாவம் என்று வருத்தப் பட்டு போகின்றவர் உண்டு.சிலர் அது கூட செய்யமால் போவது உண்டு.ஏதோ ஒரு சில நல்ல நெஞ்சங்கள் இவர்களூக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து தர முயற்சி செய்வர்கள்.உங்கள் பதிவைப் படித்த பின் நான் முதல் ரகமாக இருக்க விரும்பவில்லை.கண்டிப்பாக இவர்களைப் போல யாரவது இருந்தால் உதவி செய்வேன்.இவர்களைப் பார்த்து பாரிதபம் பட்டால் மட்டும் போதாது என்பது எனது தாழ்மையான கருத்து.
நல்ல பதிவு நிலவு நண்பன்.நன்றி
//Anonymous said...
nanba illa nilavu nanbi :)) //
sari nanbi
//barathi said...
vanakam,
ungal pathivai padiththum manam kanakirathu...
ela urlaum ipadi mananilai badikapatavanga irukanga, eathavathu seyanum nanba..
barathi //
//துர்கா said...
உங்கள் பதிவைப் படித்ததும் ஒரு வகையில் சந்தோஷம் ஒரு பக்கம் வருத்தம்.எப்படியோ ஒரு புஷ்பலதாவைக் குணப் படுத்தி விட்டார்கள்.இவரைப் போல இன்னும் பலர் உள்ளார்கள்.இவர்களை அய்யோ பாவம் என்று வருத்தப் பட்டு போகின்றவர் உண்டு.//
தங்களின் மனிதநேய உணர்வுக்கு நன்றி பாரதி மற்றும் துர்காவுக்கு
Post a Comment