Monday, June 06, 2005

கால் நனைத்தவர்கள்- II

வாப்மா


என்னைப் பெற்ற
தந்தையைப்பெற்றவள்!


வாப்மா
உப்புமா மாதிரி இருக்கிறதா
அப்படித்தான் கூப்பிடுவோம்


அவள்
உயிர்விட்டுப்போன
கட்டிலருகே
தொட்டுப்பிடித்து
விளையாடிய ஞாபகம்!

ஒவ்வொரு பெருநாளையிலும்
அண்ணனுக்கு 50 பைசா
எனக்கு 25 பைசா
தங்கைக்கு 10 பைசா

சின்னப்பையன் என்பதால்
தம்பியை ஏமாற்றிவிடுவாள்

அவள் கொடுத்தகாசை
சுட்டிக்காட்டி
கிண்டலடித்து சிரித்திருக்கிறோம்

சம்பாத்தியமே இல்லாமல்
அவள் கொடுத்த
25 காசின் மதிப்பு
எத்தனை மதிப்பென்று...

இப்பொழுது
சொந்தமாய்...
சம்பாதிக்கும்போதுதான் தெரிகிறது!

------------



ஸலாவுத்தீன்


என் சொந்தக்கார
அம்மாவின் குழந்தை!

தாமரையிலிருந்து
நழுவி நழுவி வருகின்ற
தண்ணீர்த்துளியைப்போலவே...

திண்ணையில் இருந்து
தவழ்ந்து தவழ்ந்து
நுனிக்கு வருகின்ற சமயத்தில்...

விழுந்து விடும்...
என் இதயம்

விளையாட்டையும் மறந்து
அவனை தூக்கி
வீட்டினுள் விட்டுவிட்டு வருவேன்!

மறுபடியும் தொடர்வான்!

நானே
கொஞ்சும் வயதில் இருந்ததால்...
அவனை யாரும் கொஞ்ச விடவில்லை!

அவன் மரணச்செய்தி கேட்டு
வருத்தப்படவில்லை...
ஆச்சரியப்பட்டேன்!

குழந்தையும் இறக்குமோ என்று?

உலகத்தில் மனிதர்களை
வாழவிட்டு ...
அவர்களின்
நன்மை தீமைக்கேற்ப
கூலி கொடுக்கும் இறைiவா!

தவறாயிருந்தால் மன்னித்துக்கொள்!
உன்னிடம் ஒரு கேள்வி

எந்த வாழ்க்கையுமே வாழாமல்
குழந்தைகள் இறப்பதன் காரணம் என்ன?

------------



மீரான் மாமா


ஒரு மாலைநேரம்
பள்ளிமுடித்து வருகையில் நீ
கண்மூடிக்கிடந்தாய்
மீரான் மாமா!

கண்ணீர் வரவில்லையென்றால்
தவறாக நினைப்பார்களோ என்று
கண்ணீர் வடித்தேன்
இல்லை நடித்தேன்

சொந்தங்கள்...
கண்ணீர் மட்டும்தான் பார்க்கும்!

ஆனால்
விவரம் தெரிகிறது இப்பொழுது
நிஜமாகவே கண்ணீர் வருகிறது

தந்தை கொடுப்பார் என்ற திமிரில்
ஒரு
வாடிக்கை உணவகத்தில் - நான்
வயிற்றையும் மீறி சாப்பிட்டுக்கொண்டிருப்பேன்

நீயோ எதிர்மேசையில்
காசை மீறி உண்ணமுடியாமல்
ஒரு அப்பம் ...
ஒரு தேநீரோடு முடித்துக்கொள்கையில்இ

அப்பொழுது
எனக்கு தோணவில்லையே?
உனக்கும்
ஒரு அப்பம் பரிந்துரை செய்யவேண்டுமென்று!



அப்பொழுது
காசு இருந்தது
மனசு இல்லை

இப்பொழுது
காசும் இருக்கிறது
மனசும் இருக்கிறது

யாருக்கு கொடுப்பது அப்பத்தை?

உன்
மரணத்திற்கு நான்
மதிப்பு கொடுக்கவில்லை
மீரான் மாமா!
ஆம்
நான்
மரணத்தை மதிக்கத் தவறியன்!

வீட்டுக்குள்ளே நீ
விழிமூடி கிடக்க
சின்னப்பையன் நான்
சீட்டு விளையாடி கொண்டிருந்தேன்!

பக்கத்து வீட்டு பெரிசு ஒன்று
ஆதங்கத்தில் திட்டியது!

" டேய் உங்களுக்கும் ஒரு
நேரம் வரும்டா "

இதோ அந்த நேரம்
உணர்கிறேன்

ஆம்!
நான்
மரணத்தை மதிக்கத் தவறியன்!

ஆகவே
எல்லா மரணத்தொழுகையிலும்...
கலந்து கொள்கிறேன்!
என்
மரணத்திற்கு...
ஆள் சேர்ப்பதற்காக!

------------


- ரசிகவ் ஞானியார்

1 comment:

சினேகிதி said...

25 காசின் மதிப்பு
எத்தனை மதிப்பென்று...

இப்பொழுது
சொந்தமாய்...
சம்பாதிக்கும்போதுதான் தெரிகிறது

Rasikow engada appakoda solluvar appa thara kasu antha nale selavayidum athuve nanga summer job seithu vantha ksa iruntha kavanam selavu seivom.Ungada "Kaal Nanithavargal " thogupu nall iruku thodarnthu ellunga.

Snegethy

தேன் கூடு