Sunday, June 26, 2005

கத்தரி வெயிலில் காதல்

சென்னையில் கண்ட ஒரு சுவாரசியமான காதல் காட்சியை உங்களுக்கு தருகிறேன் கேளுங்களேன்.

எனக்கு ஒரு சந்தேகம் காதலர்கள் சந்தித்துகொண்டால் அப்படி என்னதான் நேரம்போவது தெரியாமல் பேசிக்கொள்வார்களோ?

காலை 10.30 மணி அந்த நுங்கம்பாக்கம் மின்சார இரயில் நிறுத்துமிடம்..
அதோ ஒரு காதல் ஜோடி..அவன் அறிமுக நாயகர்களின் சாயலில் இருந்தான்..அவள் நவநாகரீக சென்னை பெண்..கண்ணாடி அணிந்த குஷ்பு மாதிரி இருந்தாள். தொட்டுப் பேசுகின்ற நாகரீகத்திலேயே தெரிந்தது அவர்கள் காதலர்களாம்.

சென்னை சென்டிரல் - தாம்பரம் இரயில்களும் கடந்துகொண்டிருக்கிறது

சென்னை தாம்பரம் - சென்டிரல் இரயில்களும் கடந்துகொண்டிருக்கிறது

அவர்கள் கிளம்பவதாய் தெரியவில்லை. மெல்ல பக்கம் சென்றேன்.புத்தகத்தை கையில் வைத்து படிப்பது போன்ற பாவ்லாவுடன் என்ன பேசுகிறார்கள் காதைதீட்டி கவனிக்க ஆரம்பித்தேன்.

அட என்னப்பா மௌனமாக இருக்கிறார்கள்..பேச்சையே காணோம்..அவன் அவள் கண்கள் பார்க்கின்றான்..அவள் சிரிக்கிறாள். அட போராடிச்சுட்டுப்பா
( லூசா இருக்குமோ?...லூசாப்பா நீ )

காதலும் ஒரு செஸ் விளையாட்டுதான்.
விளையாடுபவர்களுக்கு
மட்டும்தான்
லாபம்.
பார்த்துக்கொண்டிருப்பவர்கள்தான்
பாவம்.

அட ஏதோ பேசுகிறார்கள்... கவனிக்க ஆரம்பித்தேன்.

நீருக்கு அணைக்கட்டு
பார்த்திருக்கிறோம்.
காற்றுக்கு அணைக்கட்டு யாரேனும்
கண்டதுண்டா?
நான் கண்டுவிட்டேன். இதோ இருவரின் கை கைகளின் பின்னுதல்தான் அது.

இதா இருவரின் கைகளின் பின்னுதலில் காற்று நுழையமுயன்று தோற்றுபோய் திருப்பி என் முகத்தில் வந்தது பலமாய் வீசியது.


( என்ன அசிங்கண்டா இது தொடுதல் இல்லாவிட்டால் காதல் என்ன செத்துவிடுமா?..)

"டேய் உன் செல்போனை கொஞ்சம் கொடு" - அவள்



"எதுக்குடி " - அவன்

"நான் ஒண்ணும் போன் பண்ணமாட்டேன்..தாடா கஞ்சப்பிஸ்னாரி.."- பறித்துவிடுகிறாள்

டயல்டு காலை நோண்டுகிறாள்...

"எப்பவுமே டயல்டு கால்ல முத கால் என்கால்தான் "- செல்லமாய் கேட்கிறாள்

அவன் மௌனமாய் சிரிக்கிறான்.

( அட மடப்பயலே நான் உன் நிலையில் இருந்தா என்ன சொல்லுவேன் தெரியுமா?

காதலித்துப்பார்
முதல் டயல்டுகாலும் அவள்தான்
முதல் மிஸ்டு காலும் அவள்தான்

என்று வழிந்துவிட்டு விடுவேன் ஒரு டயலாக்

என்
சிம்கார்டுக்கு
ஜீவன் கொடுப்பதே
உன் அழைப்புகள்தான்டி


என்று சொல்லி காதலை தீவிரப்படுத்துவேன்.. என்னடா காதலிக்கிறீங்க போங்கடா )


"நான்காவது டயல்டு நம்பர்ல டேய் யாருடா அது ப்ரியா "- அவள்
( ஆரம்பிச்சாச்சுப்பா சந்தேகம் )

"அட அது என் கலிக் மா.. போன் போடுறேன் பேசுறியா? "
- செல்ல கோபத்துடன் அவன் போன் போட முயற்சிக்க

"வேண்டாம்டா ...சாரி சும்மாதான் கேட்டேன் "- அவள் தடுக்க முயற்சிக்க

ஒரே ஜாலிதான் போங்க...

"என்னடா நகத்துல இவ்வளவு அழுக்கு இருக்கு..."

"கையை கொடு..."

"வேண்டாம் மா..நான் நாளைக்கு எடுக்குறேன்.."

ஹேண்ட் பேக்கிலிருந்து ஒரு சிறு ஆயுதம் எடுத்து நக அழுக்கை எடுக்கிறாள்.

காதல்
அழகை கொடுக்கும்
அழுக்கையும் எடுக்கும்
( அழுகையும் கொடுக்குமுங்கோ )


( முதல்ல நகத்துல அழுக்கை எடுப்பாங்க - அப்புறம் முகத்தையே மறந்திடுவாங்கடோய் )

நான் கவனிப்பதை அவள் கவனித்துவிட்டாள் போல...ஒரு மாதிரியாய் ஏறிட்டு பார்க்க...நாகரீகம் கருதி நான் கொஞ்சம் ஒதுங்கிகொண்டேன்....

அட அடிக்கிற வெயில்ல எப்படிப்பா உங்களுக்கு காதல் வருது..

எனக்கு ஒரு சந்தேகம் சூரியன் காதலர்களை மட்டும் கவனிக்க மாட்டானோ?
அந்த நெருப்பு இருக்கைகள் எப்படித்தான் அவர்களுக்கு மட்டும் பூங்காவாய் தெரிகிறதோ தெரியவில்லை?


சென்னையில் காதல்தான் எத்துணை விதமாய்

இரயில்பெட்டியின்
கடைசி இருக்கையில்
இடித்துக்கொண்டு
ஒரு காதல்

பீச்சில் கடும்வெயிலில்
குடைகளால் மறைத்துக்கொண்டு
ஒரு காதல்

பேருந்து நிலையத்தில்
ஒரு ஓரமாய்
ஒளிந்துகொண்டு
ஒரு காதல்

பைக்கில்
முக்காடு போட்டுக்கொண்டு
ஒரு காதல்


அட இந்த
கத்தரி வெயிலில் - எப்படியப்பா
காதல் வருகிறது?


யாராவது சொல்லுங்கப்பா..? அப்படி என்னதான் பேசுவாங்க வெயிலடிக்கறது கூட தெரியாம..யாருக்காவது காதல் அனுபவம் இருக்கும்னு நினைக்கிறேன்..தெரிஞ்சா சொல்லுங்ககககககககககககககககககககககககக


இதயம் நெகிழ்வுடன்

ரசிகவ் ஞானியார்

3 comments:

முகமூடி said...

யோவ் என்னதான்யா நினைச்சிக்கறீங்க உங்க மனசுல.... அண்ணா நகர் டவர் பக்கம் லவ் பண்ணலாம்னா கமிஷனர் புடிச்சிக்கிறார்... காசு போனாலும் சரி, ஸ்ரீ தியேட்டர்ல லவ் பண்ணலாம்னா நாய்க்காதல்ங்கறீங்க... வெயிலா இருந்தாலும் பரவாயில்லன்னு பீச்க்கு போனா பத்திரிக்க காரனுங்க போட்டோ போட்டு கிண்டல் பண்றாங்க.... சரி நிம்மதியா ரயில்வே ஸ்டேஷன்ல லவ் பண்லாம்னு பாத்தா தன் சந்தேகத்த சரி பண்ரேன்ற சாக்குல வலைப்பதிவு திடீர் கவிஞர்கள் சங்கத்தில இருந்து வந்து நாங்க காது கொடயரது, மூக்கு நோண்டுறது எல்லாத்தையும் கவிதயா எழுதி, நாங்க பேசறத வேற ஒட்டு கேட்டா, ப்ரைவஸிக்கு நாங்க எங்கதான்யா போவேம்

- பாதிக்கப்பட்ட காதலர்கள்

பி.கு:: காதல் அனுபவம் எப்படி இருக்கும்னு தெரியனும்னா, மணிமேகலை பிரசுரத்திற்கு ரிடர்ன் அட்ரஸ் கார்டு ஒன்னு போட்டு 'காதல் அனுபவம் பார்ட்1, பார்ட் 2' புஸ்தகம் வேணும்னு கேளுங்க...

tamil said...

"அட இந்த
கத்தரி வெயிலில் - எப்படியப்பா
காதல் வருகிறது?

யாராவது சொல்லுங்கப்பா..? அப்படி என்னதான் பேசுவாங்க வெயிலடிக்கறது கூட தெரியாம..யாருக்காவது காதல் அனுபவம் இருக்கும்னு நினைக்கிறேன்..தெரிஞ்சா சொல்லுங்ககககககககககககககககககககககககக"
கொஞ்சம்பொறுங்கோ காதலித்துவிட்டு வந்து சொல்றன்.

Anonymous said...

காதலர்கள் பேசுவதை ஒட்டு கேட்கும் இந்த புத்தி எப்போ போகும் இந்த நாட்டில் ?

தேன் கூடு