கென்டிம்மா
என் பால்யவயது
கிராமத்து
ஏழை செவிலித்தாய்!
விவரம் தெரியா வயதில்
உன்னை மதித்ததில்லை
விவரம் தெரிகிறது
மதிக்க நீ இல்லை
அஞ்சு பைசா
அதிகம் செலவழித்ததற்காக
அம்மா அடித்துவிட
நீ அழைத்து
கண்ணீர் துடைத்தாய்!
கையில் காசு கொடுத்தாய்!
உன் தகுதியை மீறிய ஒரு
பத்துபைசா!
புளி ரசம்
பிடிக்குமென்று
உன் வீடு தேடி வருவேன்!
என் வருகை எதிர்பார்த்து
உனக்குண்டான கவளத்தை
எனக்கு கொடுத்தாய்!
நீ
இடம்மாறி போய்விட்டதறிந்து
அடம்பிடித்து அழுதேனாம்
அம்மா சொல்லியிருக்கிறாள்!
மாறிப்போனதோடு...
மரித்துவிட்டது பாசமும்!
உன்
மூத்த மகனால் நீ
வீதிக்கு வந்த செய்தியை
இளையமகன் மூலம்
கேள்விப்பட்டேன்.
உதவ நினைக்கையிலோ...
நாகரீகத்தில் வந்த
நாய்க்குணம் என்னை
தடுத்துவிட்டது கென்டிம்மா!
வேதனையோடு
வேண்டிக்கொண்டேன்
இறைவா!
தாயை விரட்டும்
மகன்களுக்கெல்லாம்
மரண தண்டனை கொடு!
செவிலித்தாயை மறந்த
மகன்களுக்கு
சிறை தண்டனையாவது கொடு!
என்றோ ஒருநாள்
உன் சாவுச்செய்தி
கேள்விபட்டு கூட - நான்
சங்கடப்படவில்லை கென்டிம்மா!
என்
தலைக்கணம் என்னை
தடுத்துவிட்டது
மறுஜென்மத்தில்
நம்பிக்கை இல்லை
முடிந்தால்
மறுமையில்...
மன்னிப்பு கேட்கிறேன்!
எதிர்பார்த்துக்கொண்டிரு!
-------------
மைம்பாத்தும்மா
என்
சொந்தக்கார கிழவி!
ஒருகாலத்தில்
வீட்டுக்குச்
சொந்தக்காரியாயிருந்திருப்பாள்!
இப்பொழுது
திண்ணை மட்டும்தான்...
விட்டம்பார்ப்பதுதான்...
அவளின் பொழுதுபொக்கு!
ஒரு வெத்தலை இடிப்பான்...
கொஞ்சம் அழுக்குத்துணிகள்...
சில காகிதங்கள்...
இதுதான்
அவளின் கடேசி கால சொத்து!
கடந்து செல்லும் எல்லோரையும்
தெருவில் கிடக்கும்
காகிதம் பொறுக்கிதரச் சொல்லுவாள்!
காகிதத்தை பொறுக்கி - என்
இதயம் சேகரித்தாள்!
அவளிடம்
காகிதம் வாங்கி
காசு கொடுத்த கடைக்காரன்தான்...
அவளது மரணத்தில்
முதலில் நின்றான்!
இன்றைய கவிதிறமை
அன்றே இருந்திருந்தால்
பத்திரிக்கையில் இருந்து திரும்பிய
கவிதை காகிதத்தை எல்லாம்
அவளிடமே கொடுத்திருப்பேன்!
ஒரு கவிதை காசாவது ஆகட்டுமே?
--------------
கொழும்பார்
பக்கத்து வீட்டு
வீரர்;
இருட்டை கடந்து செல்ல...
பெரும் கற்களை புரட்ட...
கல்வெடி வெடிக்க...
அவரைத்தான் அழைப்பதுண்டு
ஆகவே
எங்கள் வீதியின்
ஏழை அலெக்ஸாண்டர் அவர்;தான்!
என்மீது
பாசம் வைத்தாரா?
ஞாபகத்திலில்லை...
கிண்டலடித்திருக்கிறார்
மானத்தை டவுசரோடு
முட்செடியில் மாட்டிவிட்டு
கத்தரிக்கா தோட்டத்தை
கழிப்பறையாக்கிவிட்டு...
கால்சட்டை
நனையக்கூடாதென்று
ஒதுக்கிவிட்டபடி வந்த...
பால்ய வயதில்இ
" ஏய்
அரைப்பூலா இ அரைப்பூலா "
என
கிண்டலடிப்பார்!
அப்பொழுதெல்லாம்
அழுகை இ அழுகையாக வரும்
இப்பொழுதுதான்
கவிதை வருகிறது!
நினைத்துப் பார்க்கிறேன்
அப்படியும் வாழ்ந்திருக்கிறோம்
காலங்கள் ஞாபகங்களை
தின்றுகொண்டிருக்கிறது!
---------------
- ரசிகவ் ஞானியார்
No comments:
Post a Comment